
உலகக்கோப்பைக் கால்பந்துப்போட்டிகள் ரஷ்யாவில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கின்றன. பல நாடுகளிலிருந்தும் சிறந்த வீரர்கள் முழுத்திறமையைக் காட்டி விளையாடுகிறார்கள். இவர்களில் யாருக்குக் கோப்பை கிடைக்கும் என்கிற ஆவலுடன் ரசிகர்கள் தொலைக்காட்சிப்பெட்டியின்முன் அமர்ந்திருக்கிறார்கள்.
இந்திய ரசிகர்கள்
இந்தியாவில் மிகப்பிரபலமான விளையாட்டு கிரிக்கெட்தான். ஆங்காங்கே சில மாநிலங்களில் கால்பந்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டாலும், உலகக்கோப்பையில் விளையாடுகிற அளவுக்குச் சிறந்த அணி நம்மிடம் இல்லை. ஆனாலும் நம் ரசிகர்கள் ஏதேனும் ஓர் அணியை ஆதரித்துக்கொண்டு இந்தப்போட்டிகளை விழுந்துவிழுந்து பார்க்கிறார்கள் என்றால், கால்பந்துக்குப் பெரும் முக்கியத்துவம் தருகிற நாடுகளில் பரபரப்பு எப்படியிருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம்.
தீவிரமாகக் கிரிக்கெட் விளையாடுகிற நாடுகளை எண்ணினால் பத்தோ, பதினைந்தோதான் வரும். மற்ற நாடுகளுக்கெல்லாம் கிரிக்கெட் என்றால் என்ன என்றே தெரியாது.
ஆனால், கால்பந்து அப்படியில்லை, உலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேசியக் கால்பந்து அணிகள் இருக்கின்றன. அவை அனைத்தின் கூட்டமைப்பான FIFAதான் இந்த உலகக்கோப்பையை நடத்துகிறது.

அதென்ன FIFA?
‘Fédération Internationale de Football Association’ என்பதன் சுருக்கம்தான் FIFA. இந்த ஃபிரெஞ்சுச் சொற்றொடரின் பொருள், ‘கால்பந்துக்கான சர்வதேசக் கூட்டமைப்பு.’
FIFA உலகக்கோப்பை என்கிறார்கள், உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கிற அமைப்பு என்கிறார்கள், ஆனால் பெயரைமட்டும் ஃபிரெஞ்சு மொழியில் வைத்திருக்கிறார்களே, ஏன்?
1904 மே 21ம்தேதி கால்பந்துக்கான உலகக்கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டது பாரிஸ் நகரத்தில். ஆகவே, அதற்கு ஃபிரெஞ்சு மொழியில் பெயர்சூட்டப்பட்டது. பின்னர் அந்தப்பெயரே உலகம்முழுக்கப் புகழ்பெற்றுவிட்டது.
FIFA உருவாக்கப்பட்டபோது அதில் பெல்ஜியம், டென்மார்க், ஃபிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன. சிறிதுகாலத்துக்குப்பிறகு இங்கிலாந்தும் இதில் இணைந்துகொண்டது.
இப்படியொரு கூட்டமைப்பு உருவாவதற்குமுன்பிருந்தே உலக அளவில் கால்பந்து விளையாட்டு நன்கு புகழ்பெற்றிருந்தது. பல நாடுகளில் அணிகள் உருவாகியிருந்தன, தனிப்பட்ட அமைப்புகளின் அணிகள் இருந்தன. இவற்றினிடையே விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற்றன. இதையெல்லாம் ஒழுங்குபடுத்துவதற்கு ஓர் அமைப்பு வேண்டும் என்றுதான் FIFA உருவாக்கப்பட்டது.

FIFAவின் நேக்கங்கள்
ஆரம்பத்தில் FIFAவின் நோக்கங்கள், வெவ்வேறு நாடுகளில் கால்பந்து விளையாடும் அணிகளை அங்கீகரிப்பது, ஒரு வீரர் ஒரு நேரத்தில் ஒரு நாட்டுக்கு மட்டும் விளையாடுவதை உறுதிசெய்வது, யாராவது தவறான நடத்தையில் ஈடுபட்டு ஒரு நாட்டில் தடைசெய்யப்பட்டால் அந்தத்தடையைப் பிற நாட்டைச் சேர்ந்த அணிகளும் அங்கீகரிப்பது, சர்வதேச விதிமுறைகளின்படி கால்பந்து விளையாடுவது.
சுருக்கமாகச்சொன்னால், கால்பந்து விளையாட்டு உலகம்முழுக்கப் பரவும் நேரத்தில் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வழிநடத்தும் பணியை FIFA செய்தது. ஊரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது போக்குவரத்துக் காவல்துறை வரும், சாலைகள் போடப்படும், போக்குவரத்து நிறுத்தங்கள் வரும், வேகக் கட்டுப்பாடு, சாலை விதிமுறைகளெல்லாம் அமலுக்கு வருமல்லவா? அதுபோல்தான்.
FIFA உருவானபோதே கால்பந்துக்கென்று ஓர் உலகப்போட்டியை நடத்தவேண்டும், அதில் பல நாடுகள் பங்கேற்கவேண்டும், அவர்களில் சிறந்த ஓர் அணியை ‘உலக சாம்பியனாக’ அறிவிக்கவேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தன. ஆனால், ஆரம்பத்தில் அவர்களிடம் அவ்வளவாக உறுப்பினர்கள் இல்லை, பணமும் இல்லை, ஆகவே, அந்தக்கனவைக் கொஞ்சம் தள்ளிப்போட்டார்கள்.
முதல் சில ஆண்டுகள் உறுப்பினர் நாடுகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி எல்லாரையும் சகோதர மனோபாவத்துடன் செயல்படச் செய்வதிலேயே சென்றன. கொஞ்சம்கொஞ்சமாக, சர்வதேசக் கால்பந்துப்போட்டிகள் ஓர் ஒழுங்குக்குள் வந்தன.
இந்த நேரத்தில்தான் (1908) லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அதில் சர்வதேசக் கால்பந்து அணிகளை வைத்து உலகக்கோப்பைபோல் ஒரு போட்டியை நடத்தும் முயற்சிகள் தொடங்கின. 1912 ஒலிம்பிக்ஸிலும் இதே முயற்சி தொடர்ந்தது.
ஆனால், இவற்றையெல்லாம் உண்மையான ‘உலகக்கோப்பை’ என்று சொல்ல இயலாது, ஒலிம்பிக்ஸில் எத்தனையோ போட்டிகளுக்கு நடுவே இவையும் நடைபெற்றன, அவ்வளவுதான்.

FIFAவின் கூடுதல் முன்னெடுப்பு
அதே சமயம், FIFA அமைப்பு சும்மா இருக்கவில்லை. கால்பந்து விளையாட்டை உலக அளவில் ஒழுங்குபடுத்தி முன்னேற்றும் பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டிருந்தது. புதிய நாடுகள் இவ்வமைப்பில் இணைந்தன, ஆகவே, இவர்களில் எந்த அணி சிறந்த அணி என்கிற கேள்வி இயல்பாக எழுந்தது, ஒரு சர்வதேசப்போட்டியை நடத்தவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
ஆனால், அந்த எண்ணம் உண்மையில் நிறைவேறாதபடி, முதல் உலகப்போர் தொடங்கிவிட்டது. FIFAல் மும்முரமாகப் பங்குபெற்ற அணிகளில் பலவும் இப்போரில் பங்கேற்றன. ஆகவே, கால்பந்து சார்ந்த விஷயங்களில் இவர்கள் சேர்ந்து பணியாற்ற இயலாத சூழ்நிலை.
போர் முடிந்தபிறகும், சில நாடுகள் ஒன்றையொன்று முறைத்துக்கொண்டு நின்றன. ‘இதுபோன்ற தனிப்பட்ட கோபங்களை மறந்து விளையாட்டின் நலனுக்காக ஒன்றுசேருங்கள்’ என்று மற்றவர்கள் அறிவுரை சொன்னார்கள், பெரிய பலன் இல்லை.
1921ம் ஆண்டு, FIFAன் புதிய தலைவராக ஜூலெஸ் ரிமெட் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபிரெஞ்சுக் கால்பந்து அமைப்பின் தலைவரான இவர்தான் FIFA உலகக்கோப்பையைக் கற்பனை செய்து நனவாக்கியவர். பின்னர் இந்தக் கோப்பைக்கே அவருடைய பெயர் சூட்டப்பட்டு ‘ஜூலெஸ் ரிமெட் கோப்பை’ என்று அழைக்கப்பட்டது.
ஜூலெஸ் ரிமெட் FIFA தலைவரானபோது அதில் சுமார் இருபது நாடுகள் இருந்தன, 33 வருடங்கள் கழித்து அவர் அந்தப் பதவியை இன்னொருவருக்கு ஒப்படைத்துவிட்டுக் கைதட்டலுடன் ஓய்வுபெற்றபோது அதில் 85 நாடுகள் இருந்தன. இன்றைக்கு அந்த எண்ணிக்கை இருநூற்றைத் தாண்டியிருக்கிறது என்றால், அதற்கான அடித்தளம் ஜூலெஸ் ரிமெட்டின் உழைப்பு.
உருகுவே உலகக்கோப்பை முதல்
ஒலிம்பிக்ஸில் பல நாடுகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்துப்போட்டிகளுக்குக் கிடைத்த தொடர் வரவேற்பால், FIFA மீண்டும் தன்னுடைய உலகக்கோப்பைக் கனவுகளை நனவாக்க முயன்றது. 1928ல் உறுப்பினர் நாடுகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்தன, முதல் உலகக்கோப்பையை நடத்தும் கௌரவம் உருகுவே-வுக்குக் கிடைத்தது.
1930 ஜூலை 18ம்தேதி, FIFA உலகக்கோப்பைப்போட்டிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. அவர்கள் விரும்பியதுபோல் எல்லா நாடுகளும் அதில் பங்கேற்கவில்லை, ஆனாலும் அது ஒரு நல்ல தொடக்கம்.
நான்காண்டுகளுக்கொருமுறை உலகக்கோப்பைப்போட்டிகளை நடத்துவதாக FIFA தீர்மானித்திருந்தது. இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் அவர்கள் அடுத்த மூன்றாண்டுகளை ஓட்டியாகவேண்டும், அவர்களுக்கு வேறு எந்தவழியிலும் வருமானம் கிடையாது. இதன் பொருள், உலகக்கோப்பை என்பது வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும்மட்டுமில்லை, கால்பந்து விளையாட்டைச் சிறப்பாக வளர்த்துச்செல்வதற்கும் அது ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
ஆரம்பத்தில் உலகக்கோப்பை இந்த அளவுக்குப் பளபளப்பாக இல்லை. சொல்லப்போனால், அதில் பங்கேற்ற நாடுகளுக்கிடையிலேயே பல கருத்துவேறுபாடுகள் இருந்தன. ‘என் ஊர்ல நடந்த உலகக்கோப்பைக்கு நீ வரலை, அதனால உன் ஊருக்கு நான் வரமாட்டேன்’ என்றெல்லாம்கூடச் சண்டைபோட்டிருக்கிறார்கள்.
ஆனால், ஜூலெஸ் ரிமெட்டும், அவருக்குப்பின் வந்த தலைவர்களும் விளையாட்டை முதலாவதாக வைத்து, மற்ற அனைத்தையும் பின்னே தள்ளினார்கள். கால்பந்தை வளர்ப்பதற்காகதான் இந்தக் கொண்டாட்டம், அதற்காக நம் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒன்றாகச் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்கள், முரண்டுபிடித்தவர்களைப் பேசிப்பேசி வழிக்குக் கொண்டுவந்தார்கள்.
இதனால், நடுவில் இன்னோர் உலகப்போர் வந்தபோதும், FIFA வழிகாட்டுதலில் கால்பந்து விளையாட்டு தொடர்ந்து வளர்ந்தது, பல புதிய நாடுகள் விளையாட வந்தன, அவற்றுக்கும் இடம் தரும் வகையில் உலகக்கோப்பைப் போட்டிகளின் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டன. ஆனால் எப்போதும் திறமைக்குதான் மரியாதை, உலகக்கோப்பையில் வெல்கிறவர்கள் உண்மையான சாம்பியன்களாக மதிக்கப்படுவது அதனால்தான்.

இன்றைய நிலையில் FIFA
தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் FIFA சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டது. போட்டிகள் பல நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இது ரசிகர் எண்ணிக்கையைப் பெருக்கியது, கூடுதல் வருவாயையும் கொண்டுவந்தது.
முதல் FIFA உலகக்கோப்பையில் 13 அணிகள் மோதின, இவற்றினிடையே வெறும் 18ஆட்டங்கள் தான் நடைபெற்றன, இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இப்போது 32 அணிகள் 64 ஆட்டங்களில் மோதுகின்றன. இதற்காகப் பல நாடுகளும் ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டுத் தயார் செய்துகொண்டு வருகிறார்கள், FIFA சாம்பியன் என்கிற கௌரவத்துக்காகப் போராடுகிறார்கள்.
உலகக்கோப்பையை அதிகமுறை வென்றுள்ள அணி, பிரேசில் (5முறை). அடுத்த இடத்தில் இத்தாலி, ஜெர்மனி (தலா 4முறை) உள்ளன. உருகுவே, அர்ஜென்டினா அணிகள் தலா 2முறையும், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் தலா 1 முறையும் வென்றுள்ளன.

FIFA 2018
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல வீரர்கள் உலகக்கோப்பையில் தங்கள் திறமையைக்காட்டி நட்சத்திரங்களாகியுள்ளார்கள். ஜெர்மனியைச்சேர்ந்த மிரோஸ்லவ் க்ளோஸ் 16கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார், அடுத்த இடத்தில் பிரேசிலைச்சேர்ந்த ரொனால்டோ (15கோல்கள்), அதே பிரேசிலைச்சேர்ந்த புகழ்பெற்ற வீரரான பீலெ ஐந்தாவது இடத்தில் (12கோல்கள்) உள்ளார்.

இந்தமுறை வெல்லப்போவது யார்? அதற்கு உதவப்போகும் வீரர்கள் யார்? அவர்களை எதிர்த்து மோதப்போகும் சிறந்த அணிகள் எவை? பெரிய நாடுகளைத் தோற்கடிக்கப்போகும் பொடியர்கள் யார்? ரசிகர்களுடைய நெஞ்சை அள்ளப்போகும் சாதனையாளர்கள் யார்? தெரிந்துகொள்ள உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது!
Web Title: FIFA 2018 World Cup
Featured Image Credit: readersgambit