T20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும்
நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத் தொடர் ஒரு வழியாக நிறைவடையும் தருவாயில் உள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அன்றோடு இம்முறை கிண்ணத்தை சுவீகரிக்கப்போவது யார் என்றும் தெரிந்துவிடும். முன்னதாக இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது யார் என்ற போட்டியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுடன் மோதியது அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குதெரிவானது. அதேபோல் மற்றுமோர் போட்டியில், இந்தியாவும், இங்கிலாந்தும் மோதியது இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது, வென்றவர்களுக்கு இடையேயான இறுதிப் போட்டிக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சாதனை படைத்தார் விராட் கோஹ்லி
டி20 உலகக்கிண்ணத் தொடரில் இறுதிப்போட்டிக்கான பலப்பரீட்சையில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இதில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரா் விராட் கோஹ்லி 40 பந்துகளில் 50 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இது அவருடைய டி20 போட்டிகளின் 37 ஆவது அரைச்சதம். அதேபோன்று டி20 உலகக் கிண்ணத் தொடரில் மட்டும் 100 பௌண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும், டி20 உலகக் கிண்ணத்தில் 100 பௌண்டரிகளை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கும் அவரே சொந்தமானார்.
மேலும், டி20 உலகக் கிண்ணத் தொடர்களில் நொக்ஆவுட் சுற்றில் கோஹ்லி தனது நான்காவது அரைச்சதத்தை பெற்றதன் மூலம், டி20 உலகக் கிண்ண அரையிறுதி போட்டிகளில் மூன்று அரைச்சதங்களை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையும் இவர் வசமானது. அது மட்டுமல்லாது, ஐசிசியின் டி20, ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களின் அரை மற்றும் இறுதிப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கையின் குமார் சங்கக்காரவின் சாதனையை விராட் கோஹ்லி அதே போட்டியில் முறியடித்தார். 16 இன்னிங்ஸ்களில் 531 ஓட்டங்கள் குவித்து சங்கக்கார இதுவரையில் முன்னணியில் இருந்தார். அதனை 12 இன்னிங்ஸ்களில் 536 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் கோஹ்லி முறியடித்தார்.
தரவரிசையில் முன்னேறினார் வனிந்து ஹசரங்க
அண்மைக்காலத்தில் சிறப்பான சுழல்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளவர் இலங்கையில் வனிந்து ஹசரங்க. இவரது பந்துவீச்சை கிரிக்கெட் உலகினர் பாராட்டி வருகின்றனர். அதன்படியே ஐசிசியின் பந்து வீச்சு தரவரிசையில் தற்போது முதலிடத்தை இவர் பிடித்துள்ளார். டி20 உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3/13 என்றும் இங்கிலாந்துக்கு எதிராக 2/23 என்ற அடிப்படையிலும் பந்து வீசி இவர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சிவிப்பாளர் மாற்றம்
நடைபெற்றுவரும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி மீதான விமர்சனங்களும் ஏராளம் இருக்கத்தான் செய்தது. அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்ததும் இதற்கு முக்கிய காரணம். இதன் காரணமாக பயிற்றுவிப்பாளர்களில் மாற்றத்தை ஏற்படுத்த இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட் நியூசிலாந்து தொடரில் அணியுடன் இணையமாட்டார் எனப்பதோடு, விவிஎஸ் லக்ஷ்மன் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியூசிலாந்து தொடருக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக விவிஎஸ் லக்ஷ்மனும், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ரிஷிகேஷ் கனிட்கர் மற்றும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சாய்ராஜ் பஹுதலே ஆகியோரையும் இந்திய கிரிக்கெட் சபையானது நியமித்துள்ளது.
பிரான்ஸ் தன் அணியை அறிவித்தது
பலத்த எதிர்பார்ப்புளை கொண்டு, 22ஆவது கால்பந்து உலகக்கிண்ணத் தொடர், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் டிசம்பர் 18ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டவாறு போட்டிகள் நடைபெறும். இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மீது காற்பந்து ரசிகர்களுக்கு தனி ஈடுபாடு உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பையும் இந்த அணி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறை பிரான்ஸ் கிண்ணத்தை வெல்லுமானால், தொடர்ந்து 2ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற 3ஆ வது நாடு என்ற பெருமையை தன்வசப்படுத்தும். ஏற்கனவே இத்தாலி (1934, 1938), பிரேஸில் (1958, 1962) ஆகிய அணிகள் தொடர்ச்சியாக 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன.
இப்படியான பலம் பொருந்திய அணி களமிறங்கப்போகும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் 25 பேர் உள்ளடங்குகின்றனர். அதன்படி கோல்காப்பாளர்களாக, ஹூகோ லோரிஸ், ஸ்டீவ் மன்டான்டா, அல்போன்ஸ் அரோலா ஆகியோரும், பின்கள வீரர்களாக., லூகாஸ் ஹெர்னாண்டஸ், தியோ ஹெர்னாண்டஸ், பிரெஸ்னல் கிம்பெம்பே, இப்ராகிமா கோனேட், ஜூலஸ் கோண்டே, பெஞ்சமின் பவார்ட், வில்லியம் சலிபா, ரபெல் வரேன், டயோட் உபாமிகனோ ஆகியோரும், நடுகள வீரர்களாக ., எடார்டோ கமாவிங்கா, யூசோப் போபனா, மேத்யூ கான்டோசி, அட்ரியன் ரபியாட், அரேலியன் சோவாமெனி, ஜோர்டன் வெரேட்டவுட் மற்றும் முன்கள வீரர்களாக.., கரீம் பென்ஜிமா, கிங்ஸ்லி கோமன், ஓஸ்மானே டெம்பல், ஆலிவர் ஜிரார்ட், கிரிஸ்மேன், கைலியன் எம்பாப்பே, கிறிஸ்டோபர் குன்கு ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
2022 ATP Finals டென்னிஸ் ஆரம்பமாகின்றது
இந்த மாதம், வாரம் கிரிக்கெட்டை சுற்றியே விளையாட்டு உலகம் நகர்ந்த போதிலும், டென்னிஸ் குறித்த செய்திகளும் அதன் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் போட்டி இத்தாலியின் டூரின் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது. தரவரிசையின் படி இத்தொடர் ஆரம்பமானாலும் கிராண்ட்ஸ்லாம் (Grand Slam) பட்டம் வென்றவர்கள் தரவரிசையில், 8 இடங்களுக்குள் இடம்பெறாவிட்டாலும், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதற்கு பிறகே தரவரிசை கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக உலகின் முதல்தர வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு சிறு வருத்தத்தை தருவதாகவே அமைகின்றது.
ஆசிய குத்துச்சண்டை இறுதிப்போட்டி
ஆசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் ஜோர்டானில் நடைபெற்றது. இதில் 75 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சொகிபாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். ஏற்கனவே பதக்கம் வென்ற லவ்லினா ஆரம்பம் முதலாகவே தன் கை ஓங்கியிருக்குமாறு ஆட்டத்தை தொடர்ந்தார். இறுதியில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் தங்கம் வென்றார். அதேபோன்று 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, ஜப்பான் வீரர் கிடோ மாயையுடன் மோதி தங்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ இவ்வாற விளையாட்டு உலகம் டி20 கிரிக்கெட் தொடரையே முன்னிலைப்படுத்துவதாய் அமைந்திருந்தது. நாளைய இறுதிப்போட்டியுடன் அது நிறைவுக்கு வரும். ஆரம்பத்தில் சொன்னது போலவே விளையாட்டு என்றது வன்மங்களை கக்குவதற்கு அல்ல அது மாறுபட்டது என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் கருத்திற் கொள்ளல் அவசியம். என்ற கருத்தோடு தொடருவோம்….