இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வணிகமொன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக இயக்குவது எளிதான காரியமல்ல. அதிலும், தொடக்கநிலை வணிகங்களை வேகமாக மாறிவரும் சூழுலுக்கு மத்தியில் ஆரம்பித்து வெற்றிகரமாக இயக்குவது ஒரு சாதனை என்றே சொல்லலாம்.
வேகமாக மாற்றமடையும் பொருளாதார கொள்கைகள், விரைவாக புதியனவற்றுக்கு மாற்றமடையாத சமூகம், தொடக்கநிலை வணிகங்களுக்கே உரித்தான வேகமான புதிய தொழில்விருத்தி சுழற்சி என்கிற பல்வேறு புறக்காரணிகள் சவாலாக உள்ளன. அவற்றுக்கு மேதிகமாக, பல தொடக்கநிலை வணிகங்கள் தன்னகத்தே கொண்டுள்ள அடிப்படை பிரச்சனைகள் சந்தையில் அவர்களை வெற்றியாளர்களாக நிலைநிறுத்துவதற்கு தடையாக உள்ளது.
வர்த்தக அடிப்படைகளை புரிந்துகொள்ளுதல் (Business Basics)
தொடக்கநிலை வணிகங்கள் எப்போதுமே புத்தாக்க சிந்தனையின் அடிப்படையில் கட்டியெழுப்பபடுகிறது. ஆனால், அந்த சிந்தனைகள் முறையான வர்த்தகத்தின் அடிப்படையில் மாத்திரமே வெற்றிகரமான வணிகமாக மக்களை சென்றடைய முடியும்.
தொடக்கநிலை வணிகங்களுக்கான புத்தாக்க சிந்தனையை கொண்டிருக்கும் பல வணிகங்கள் கொண்டிருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை இதுவாகும். புத்தாக்க சிந்தனையை எப்படி வியாபாரமாக மாற்றுவது என்கிற சிக்கலே முதன்மையாக உள்ளது. அடிப்படையில் எவ்வாறு வணிகத்தை தொழிற்படச் செய்வது? எப்படி பாதீட்டை கையாள்வது? எப்படி வாடிக்கையாளர்கள் மற்றும் வழங்குனர்களை கையாள்வது? சரியான முடிவுகளை எவ்வாறு மேற்கொள்வது? என்கிற வணிகங்களுக்கு உரித்தான அடிப்படை விடயங்களில் மேற்கொள்ளும் தவறுகள் ஒட்டுமொத்த வணிகத்தையுமே சந்தையிலிருந்து ஓரம்கட்டிவிடும்.
எனவே, தொடக்கநிலை வணிக முயற்சியாளர்கள் வணிகத்தை ஆரம்பிக்க முன்னரே, வணிகத்தை அடிப்படை தன்மைகளையும், சந்தை தொடர்பிலும் சரியாக புரிந்துகொள்வது அவசியமாகிறது. இது வளப்பயன்பாட்டில் வினைத்திறன் தன்மையை அதிகரிப்பதுடன், தொடர்ச்சியாக சந்தையில் தொடக்கநிலை வணிகம் நிலைத்திருப்பதையும் உறுதி செய்கிறது.
புத்தாக்க சிந்தனைகள்/எண்ணங்கள்
தொடக்கநிலை வணிகத்தினை ஆரம்பிக்க விரும்பும் எவருக்குமே அல்லது புத்தாக்க சிந்தனை கொண்ட எவருக்குமே உள்ள குறைபாடுகளில் இதுவும் ஒன்று. அதாவது, தங்களுடைய புத்தாக்க எண்ணமே மிகசிறந்ததும், வேற்றிகரமானதும் என நம்புகின்ற தன்மையாகும். நிச்சயம் ஒவ்வரு முயற்சியாளருக்கும் தன்னுடைய புத்தாக்க எண்ணங்கள் மீது நம்பிக்கை இருக்கவேண்டும். ஆனால், அதுவே அதீதநம்பிக்கையாக மாற்றம்பெற்று வணிகத்தையே அழித்துவிடவும் கூடாது.
இலங்கையில் வணிக முயற்சியாளர்களுக்குள் இருக்கக்கூடிய மிகப்பெரிய பயமும், பலவீனமும் தமது எண்ணங்களை ஏனையவருடன் பகிர்ந்துகொள்வதில்தான் உள்ளது. எங்கே, அடுத்தவர் தமது புத்தாக்க சிந்தனையை வியாபாரமாக மாற்றி, தம்மிடமிருந்து களவாடிகொண்டு போய்விடுவார்களோ என்கிற பயமே இதற்கு முதல் காரணமாகும். ஆனால், வணிகத்தின் மீது முதலீடு செய்ய விரும்பும் எவருமே, முயற்சியாளர்களின் எண்ணங்களை திருட விரும்புவதில்லை. மாறாக, அதில் முதலீடு செய்து உச்சமான இலாபத்தை பெற்றுக்கொள்ளவே எதிர்பார்ப்பார்கள். எனவே, புத்தாக்க சிந்தனையாளர்கள் சிறந்த முதலீட்டாளர்களை இனம்கண்டு தமது எண்ணங்களை பகிர்ந்துகொள்வதன்மூலம், தமது எண்ணங்களை மீளவும் உறுதிசெய்து (Validate) கொள்ள முடியும்.
இலங்கையானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து தொடக்கநிலை வணிகங்களுக்கான சிறிய சந்தையாகவே உள்ளது. எனவே, இங்கு பல சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் திசை திரும்புவது குறைவு என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அது முற்றிலும் தவறு என நிருபிக்கபட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் இடம்பெற்ற புத்தாக்க வணிகங்கள் தொடர்பிலான சர்வதேச நிறுவனங்களால் ஒழுங்கமைக்கபட்ட கூட்டங்களே இதற்கு சான்றாக உள்ளன. எனவே, புத்தாக்க முயற்சியாளர்களும் தனித்து இலங்கையில் நடைமுறைக்கு சாத்தியமான வணிகங்களை மாத்திரம் உருவாக்காமல், அதனையும் தாண்டியதாக வியாபாரங்களை வடிவமைத்துக்கொள்வது மேலும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க உதவுவதாக அமைவதுடன், நிறையவே புதிய வாய்ப்புக்களை திறந்து வைக்கும் திறவுகோலாகவும் அமையும்.
முதலீடு மற்றும் நிதி திரட்டல்
இலங்கையின் தொடக்கநிலை வணிகங்கள் சந்திக்கும் சாதாரணமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. எப்படி வணிகத்தை கொண்டு நடாத்துவதற்கான பணத்தினை பெற்றுகொள்வது? எப்படி முதலீட்டு நிதியை திரட்டுவது? எப்படி மூலதன பங்கினை (Capital Share) முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பவை போன்றனவே ஆகும்.
ஏனைய வணிகங்கள் போலல்லாது, புத்தாக்க வணிகங்கள் வெற்றிகரமான நிலையை அடையும் வரை அல்லது அடைந்த பின்பும் கூட தொடர்ச்சியாக முதலீடுகள் அவசியமாகும். எனவே, ஒவ்வரு முதலீட்டு நிதி திரட்டலின்போதும், மூலதன பங்கினை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்கின்றபோது, ஒரு நிலையில் வணிகத்தினை இழக்கவேண்டிய நிலை கூட ஏற்படலாம். இத்தகைய நிலையினை கையாள இன்றைய வணிக முயற்சியாளர்கள் எவ்வாறு தயாராக இருக்கிறார்கள் என்பதே கேள்விகுறியாக உள்ளது.
முயற்சியாளர்கள் எப்போதுமே தமது வணிகத்தின் வெற்றிக்காக ஆத்மார்த்தமாக செயல்படுவார்கள். அதுவும், வளர்ச்சி நிலையில் அதிக முதலீடு தேவைப்படும்போது, அதனை எவ்வாறாவது பெற்றுக்கொண்டு வணிகத்தில் தொடர்ச்சியாக இயங்கவைக்கவே விரும்புவார்கள். எனவே, அந்தநிலையில் மூலதன பங்கை அதிகளவில் இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இந்தநிலையில், வணிக முயற்சியாளர்கள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டியது அவசியமாகும். இல்லையெனில், வணிகமானது வெற்றிகரமான இலாபத்தை தரும்நிலையில் அதனை அனுபவிக்ககூடிய அதிக முதலீட்டு பங்கினை முயற்சியாளர் கொண்டிருக்கமாட்டார்.
உற்பத்தி, சேவையும், சந்தை தேவையும்
வணிக முயற்சியாளர்களின் சிந்தனையும், வணிகமும் எவ்வளவு உயர்ந்தவையாகவும், தனித்துவத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், அவை சந்தைத் தேவையை பூர்த்தி செய்வதாக அல்லது சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்துகொண்டு அதற்கேற்ற வெளியீடாக அமையவேண்டும்.
பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பிக்கும் போதே, தமக்கான வாடிக்கையாளர் வலையமைப்பை ஆரபம் முதலே கட்டியெழுப்ப வேண்டும் என எண்ணுகின்றது. இதனால், அதற்காக அதிக நேரத்தையும் பணத்தினையும் செலவிடவேண்டியதாக அமைகிறது. பல சந்தர்ப்பங்களில் அது பயனுள்ளதாக உள்ளபோதிலும், சில சந்தர்ப்பங்களில் போட்டியாளர்கள் சந்தையில் சிறிய மாற்றத்துடன், உள்நுழைய அது இலகுவாகிவிடுகிறது.
எனவே, புத்தாக்க முயற்சியாளர்கள் தனியே வாடிக்கையாளர் வலையமைப்பை உருவாக்க நேரத்தினையும், பணத்தினையும் செலவிடாது, ஏற்கனவே உருவாக்கப்பட்ட வலையமைப்பில் எவ்வாறு தங்களுடைய உற்பத்திகளையும் சேவைகளையும் சந்தை தேவைக்கு ஏற்றால்போல மாற்றியமைத்துக் கொண்டுக்க முடியும் என அறிந்துகொள்வது அவசியமாகும். இது, மிக இலகுவாக சந்தையில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள உதவும்
பொருத்தமான அணியை கட்டியெழுப்பல் (Build a Team)
தொடக்கநிலை வணிகங்களில் கடினமான பகுதிகளில் ஒன்று, சிந்தையில் உதித்த சரியான எண்ணங்களை (Ideas) எவ்வாறு நிஜத்தில் நிகழ்த்திக்காட்டுவது என்பதேயாகும்.பெரும்பாலான தொடக்கநிலை வணிகமுயற்சிகள் ஆரம்பித்த இடத்திலேயே முடிந்துபோவதற்கு காரணம் முயற்சியாளர்களிடமும் சரி, முதலீட்டாளர்களிடமும் சரி போதிய பொறுமையின்மையே ஆகும். அமுலாக்கும் வணிகத்திட்டங்களுக்கு சந்தை பொருத்தமான சமிக்ஞை காட்டாதபோது, அதற்கேற்ப செயலாற்றாமையானது வணிகத்தின் தோல்வி நிலைக்கு வழிவகுக்கிறது.
இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு, ஒரு முயற்சியாளனாக எத்தகைய திறமைகள் (skill) வணிக எண்ணத்தை (Business Idea) வெற்றிகரமான வணிகமாக (Startup/Business) மாற்றும் என அறிந்திருப்பது அவசியமாகும். குறித்த திறன்கள் முயற்சியாளரான என்னிடம் உள்ளதா? இல்லையெனில் என்னுடைய பங்குதாரர்களிடம் (Partners) உள்ளதா? அல்லது அதற்கேற்ற பொருத்தமான அணியை தேர்வு செய்ய வேண்டுமா? என்பதை கண்டறிய வேண்டும்.
அவ்வாறு தனக்கான அணியை உருவாக்க விரும்பும் முயற்சியாளர்கள் பொருத்தமான திறன் உடையவர்களை கண்டறிவது அவசியமாகும். அதுபோல, தனது அணியை அல்லது ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதும் அவசியமாகும். எப்படி முயற்சியாளர்களின் முயற்சிகள் பெறுமதியானவையோ, அதுபோல ஊழியர்களின் திறனும் (Labour Skill) பெறுமதியானவை. தமது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களின் திறனுக்கு சமரசம் செய்துகொள்ளக்கூடிய மலிவான ஊதியத்தில் (Cheap Incentives) ஊழியர்களை எதிர்பார்ப்பது எதிர்காலத்தில் வணிகத்தையே பாதிக்கும். எந்தவொரு திறமை படைத்த நபரும் வணிகஉலகில் இலவசமாக வேலை செய்ய தயாராக இல்லை. ஆனால், அத்தகைய திறமையாளர்களை தொடக்கநிலை வணிகங்களில் உள்வாங்கும்போது வணிகத்தோடு சேர்ந்து நாமும் வளர்கிறோம் என்கிற உணர்வை முயற்சியாளர்கள் தங்கள் அணிக்கு/ஊழியர்களுக்கு சரியானவிதத்தில் கடத்துவார்களாயின், வெற்றிகரமான வணிகத்தின் ஆணிவேராக அவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.
இலங்கையின் தொடக்கநிலை வணிக கலாச்சாரமனாது, வேகமாக வளர்ந்துவருவதுடன், அது தனக்கென ஒரு பிரத்தியேக தரக்குறியீட்டையும் உருவாக்கி வருவதனை காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஆரம்பகாலத்தில் இவ்வாறு தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பித்தபோது, அனைத்துமே வெற்றிக்கரமாக வலம்வந்ததோ, அதேபோல தற்போதைய நிலையில் ஆரம்பிக்கும் வணிகங்களில் பெரும்பாலானவை குறைந்தது ஒரு வருடத்திற்குள்ளாகவே மூடப்படுகின்றது. இத்தகைய நிலை, எதிர்வரும் காலங்களில் இலங்கையிலும் ஏற்படக்கூடும். இதனை தடுப்பதற்கு, வணிக முயற்சியில் ஆர்வம்கொண்ட முயற்சியாளர்களுக்கு தொடக்கநிலை வணிகங்களின் அடிப்படைகளையும், உண்மைத்தன்மையையும் (Reality) வெளிபடுத்தவேண்டியது அவசியாமாகிறது.