யாழ்ப்பாணத்தை தொழில் நுட்ப நிறுவனங்களின் மையமாக (அமெரிக்காவின் சிலிக்கான்வலி போல) உருவாக்கவேண்டும் என்ற நோக்கோடு Yarl IT Hub போன்ற சமூக அமைப்புக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல்கலைக்கழக மட்டத்திலும், பாடசாலை மட்டத்திலும் பயிற்சிப் பட்டறைகளையும், தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொழில் முயற்சிகளையும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடாத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த வருடமும் யாழ் கீக் சாலன்ஜ் (Yarl Geek Challenge) என்ற போட்டி ஐந்தாவது முறையாக கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது. ஏராளமான மாணவ மாணவிகள் தங்களது புத்தாக்கங்களை, புதிய தொழில் முயற்சிகளை கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற போட்டிகளில் சமர்ப்பித்தது மட்டும் அல்லாமல், அதற்கு தேவையான ஆலோசனைகளையும் தகுந்த தொழில் வல்லுனர்களினூடாக பெற்றுக்கொண்டனர்
யாழ் நோக்கி குவியும் எதிர்பார்ப்பு
சில இளைஞர்களின் தூர நோக்குடைய முயற்சியின் காரணமாக, அவர்கள் யாழ்ப்பாணத்தை தொழில்நுட்பத் தொழில் துறைக்கான களமாகக்காட்டியதன் பயனாக, ICTA போன்ற அரசாங்க அமைப்புக்களும், SLASSCOM போன்ற தனியார் அமைப்புக்களும் கூட யாழ்ப்பாணத்தை தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாகவும், கொழும்புக்கு அடுத்தபடியாக தகவல் தொழில் நுட்பத்துறைக்கு சரியான இடமாகவும் அடையாளம் கண்டு கண்காட்சிகளையும், வேறு பல நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றன. ஏன் கொழும்பில் இருக்கும் சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், கிளை அலுவலகங்களையும் ஆரம்பித்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழிநுட்பத்துறை போன்ற மாற்றீட்டின் அவசியம்
வட மாகாணத்திலும் இளைஞர்களிடையே தொழில்நுட்பத்துறை தொடர்பான ஆர்வமும், திறனும் கடந்த வருடங்களில் அதிகரித்து வருவதாகவே அதில் தொடர்ந்தும் பங்களித்து வரும் தொழில் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். பாடசாலை மட்டத்தில் மாணவர்களிடையே அதிகப்படியான ஆர்வம் காணப்படுகிறது. இந்த ஆர்வத்தை முதலீடாகக்கொண்டு, அதை மேலும் மெருகூட்டி, சிறு சிறு முயற்சியாண்மைகளை வளர்த்து யாழ்ப்பாணத்தை ஒரு தொழில்நுட்ப நகரமாக்கவேண்டிய தேவையும் அவசரமும் சகல மட்டங்களிலும் உணரப்படல் வேண்டும். இளைய தலைமுறையினரிடையே வேலையில்லாப்பிரச்சனை அதிகரித்து காணப்படும் சூழலில், அடுத்த தலைமுறை விவசாயத்தையோ மீன்பிடித் தொழிலையோ விரும்பாத ஒரு சந்தர்ப்பத்தில், வடக்கில் புதிய தொழிற்துறைகள் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இந்திய நகரங்களில் இது எப்படி சாத்தியமானது
எந்த வித வளங்களும் இல்லாத இந்தியாவின் ஹைதராபாத் நகரத்துக்கு, சந்திரபாபு நாயுடு மைக்ரோசாப்ட், Oracle போன்ற பெரு நிறுவனங்களை அழைத்து வந்தார், அவர்களுக்கு வேண்டிய வளங்களை ஏற்படுத்திக்கொடுத்தார். பிறகு ஹைதராபாத்துக்கு நடந்தது வரலாற்று மாற்றம். இன்று ஹைதராபாத் என்ற நகரத்தின் தொழில்நுட்ப பொருட்கள்/சேவைகளின் ஏற்றுமதி மட்டும் பதினொரு பில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையின் தேயிலை, தைத்த ஆடைகள் உள்ளிட்ட மொத்த ஏற்றுமதியை விட ஹைதராபாத் என்ற நகரத்தின் தொழில்நுட்ப ஏற்றுமதி அதிகம். அங்கு ஐந்து லட்சம் பேர் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறார்கள். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் ஹைதராபாத்தில் உண்டு. பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்கள் கூட தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன.
பொருளாதார திட்டங்களை ஓரளவேனும் புரிந்து கொள்வோம்
பிரதமர், ரணில் விக்கிரமசிங்க இந்திய பொருளாதார மகாநாட்டில் கடந்த மாதம் உரையாற்றும் போது, கேரளா, தமிழ் நாடு, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுடன் இலங்கையையும் பொருளாதார ரீதியாக இணைக்க வேண்டும் என்றும், இந்த நான்கு மாநிலங்களுடன், இலங்கையின் பொருளாதாரமும் சேர்க்கப்படடால் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பிராந்திய பொருளாதாரம் உருவாகும் என்றும் இந்த ஐந்து பொருளாதாரங்களுக்கு இடையில் சுதந்திரமான வர்த்தகத்தை ஊக்குவித்து பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகரவேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தியாவுடன் செய்யப்படும் ECTA போன்ற உடன்படிக்கைகளும் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தின் சில கருவிகள் மட்டுமே. ஏன் 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் பாதீட்டில், வடக்கில் தொடங்கப்படும் தொழில் முயற்சிகளுக்காக வட்டியில்லாத இலகு கடன்களும், இருநூறு வீதம் என்ற அதிகளவிலான மூலதன சலுகையும் (Capital Allowance) வழங்கப்பட்டிருக்கின்றது. மூலதனச் சலுகை என்பது நிறுவனங்கள் இலாபத்தில் இருந்து வரி செலுத்தும் போது கழிக்கக்கூடிய தொகை ஆகும். எனவே அதிக மூலதன சலுகை இருக்கும் பொது நிறுவனங்கள் அதிக வரியைச் செலுத்த வேண்டியதில்லை. இருநூறு வீத மூலதன சலுகை என்பது போனஸ் போல நிறுவனகளுக்கு வடக்கில் தொழில் தொடங்க ஊக்குவிப்பை வழங்கும்.
எதிர்காலத்தை நோக்கி திட்டமிடலாம்
இப்படியான திட்டங்கள் எதிர்காலத்தில் இருக்கும் போது, யாழ்ப்பாணம் போன்ற நகரங்கள் சடுதியான ஏற்றத்துக்கு தயார்படுத்தப்பட வேண்டும். அதற்கான பொருளாதார சமூக உட்கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியதோடு, தொழில் துறையும் தமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ECTA போன்ற உடன்படிக்கைகள் வரும் போது, புதிய முதலீடுகளை இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கும் போது, அது தென் இலங்கையை விடவும் வட மாகாணத்துக்கு அதிகம் நன்மை பயக்கும். அவர்களுக்கும் எமக்கும் இடையேயான ஒரே மொழி, கலாச்சாரம், இந்திய நகரங்களுக்கான தூரம் என்பவை சில காரணங்கள் மட்டுமே. இதை தவிரவும் வேறு அரசியல் பொருளாதார சமூக காரணங்களும் இருக்கலாம்.
ஒன்றிணைந்த உறுதியான பயணத்துக்கான தேவை
இப்போது தொழில்நுட்பத் துறையில் மாணர்வர்களிடம் ஏற்படும் மாற்றம் போல, பெற்றோர்கள், ஆசிரியர்கள், புலம்பெயர் சமூகம் போன்ற சகல தரப்பிலிருந்தும் மாற்றம் ஏற்பட வேண்டும். எத்தனையோ மாணவர்கள் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க எத்தனிகும்போது பெற்றோர்களால் தடுக்கப்பட்டு அவர்களின் முயற்சி எனும் தளிர் சருகாக்கப்படுகிறது. இதற்கு நிச்சயமற்ற தன்மை, துணிந்து ஈடுபடுவது குறித்தான பயம் (risk avoiding society), முயற்சியாண்மையை பற்றிய எதிர்மரையான எண்ணங்கள், பெரிய நிறுவனம் அல்லது அரசபணி புரிவதே சிறந்தது என்ற காலாகாலமாக ஆழ வேரூன்றியுள்ள எண்ணப்பாங்கு போன்றன நமது சமூகத்தின் தயக்கத்திற்கும் பெற்றோர்கள் விடுக்கும் தடைக்கும் பெரிதும் காரணமாகியுள்ளன. தவிரவும் தொழில் முயற்சிக்கான எந்தவொரு முதலீடும் மற்றைய சமூகங்களில் உள்ளது போன்று பெற்றோர்களால் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்துவது வடக்கில் மிகவும் குறைவு. முயற்சியாண்மை பற்றிய புரிதல் அவர்களிடம் சிறிதளவேனும் இல்லாது இருப்பதாகவே இளம் தொழில் முயற்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பெற்றோர்களும், உறவினர்களும் அவர்களது தொழில் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பார்களானால் நிச்சயமாக முயற்சியாளர்களால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.
தவிரவும் புலம்பெயர் சமூகம், இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் பற்றி வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டும் இல்லாது அவர்களது பணபலம் மற்றும் அறிவினை முதலிட்டு ஆக்கபூர்வமான பிராந்திய பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கைகொடுக்க வேண்டும். ஒரு சிலரே இங்கு வந்து முதலிடுவதிலும், பிராந்தியத்தின் அபிவிருந்தியிலும் ஆர்வம் செலுத்துகிறார்கள். வட மாகாணத்தில் இப்போது இருக்கின்ற மக்கள் தொகையை காட்டிலும் அதிகமான மக்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
மிகப்பெரிய மாற்றங்களுக்கான ஆரம்பம் எம் எண்ணங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது.வெறும் சம்பவங்களுக்காக போராடுவதைத் தவிர்த்து கனவுகளுக்காகப் போராடுவோம் . யாழ்ப்பாணத்தை ஒரு தொழிநுட்ப நகரமாக்கி எம் எதிர்கால சந்ததிக்கு வளம் சேர்க்க எண்ணங்களை விதைப்போம் வளர்ப்போம். மாற்றம் எம்மிடம் இருந்தே ஆரம்பிக்கட்டும்.