Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கொழும்பு ஒரு பூரண சுற்றுலா தளமா ?

இலங்கை தற்போது சுற்றுலாத்துறையை நோக்கிய பொருளாதார சூழலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு நாடாக மாறியுள்ளது. போர் முடிவுக்கு வந்ததன் பின்பாக, இலங்கையின் பொருளாதாரமும் சரி, அதனது நன்மதிப்பும் சரி சுற்றுலாத்துறையின் ஊடாகவே மீளக்கட்டியமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து செல்லும் உல்லாச பிரயாணிகளின் வருகையும் அதற்க்கு சான்றாகவே உள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை

சுற்றுலா பயணிகளின் வருகையை பதிவு செய்யும் தரவுகள் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா,சீனா போன்ற நாடுகளையும் உள்ளடக்கியதாக இலங்கையும் சுற்றுலா பயணிகளை கவருவதில் முன்னின்றிபதனையே சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவ்வாறு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளை இலங்கை போன்ற நாடுகள் நகர்புற மையத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத் தளங்களில் தக்கவைத்துக்கொள்ளுவதில் சிக்கல் உள்ளமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்ட நாடுகளில், அதன் தலைநகரம் மிகப்பாரிய பங்களிப்பை சுற்றுலாத்துறையில் கொண்டிருக்கும். ஆனால், இலங்கை தொடர்பான சுற்றுலா பங்களிப்பில் கொழும்பு மாநகரத்தின் பங்களிப்பு மிக சொற்பளவில் இருப்பதானது, கொழும்பு ஒரு பூரண சுற்றுலா தளமாக மாறவில்லை என்பதையும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தன்மையை அடையவில்லை என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.

இலங்கையில் சுற்றுலா பயணிகள் பயணிக்க வேண்டிய மிக முக்கிய 5 இடங்களுக்குள் கொழும்பு நகரத்தினை பிரபலமான சுற்றுலா இணையத்தளங்களும் சரி, சுற்றுலா ஆர்வலர்களும் சரி பரிந்துரைப்பதாகவில்லை. இதற்கு இரண்டு பிரதான காரணங்களை முன்வைக்க முடியும்.

1.       இலங்கைக்குள் உள்நுழையும் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு நகரத்தினை தமது போக்குவரத்து நோக்கங்களுக்காக மாத்திரமே பயன்படுத்திக் கொள்ளுகின்ற நிலை தொடர்ந்தும் காணப்படுகிறது.

2.       இலங்கையின் இன்னபிற இடங்களுடன் ஒப்பிடுமிடத்து, கொழும்பு மாநகரானது சுற்றுலா பயணிகளால் ஒரு சிறந்த சுற்றுலா இடமாக ஏற்றுக்கொள்ளப்படாத தன்மை சுற்றுலா பயணிகள் மத்தியில் இருக்கிறது.

அப்படியாயின், இலங்கையின் தலைநகரான கொழும்பு எந்தவகையில் சுற்றுலாத்துறையில் பங்களிப்பினை கொண்டிருக்கிறது. அதன் பங்களிப்பினை எந்தவகையில் அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பனவற்றை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா!

Srilankan Tourism (Pic: phonecardsrilanka)

கொழும்பும், சுற்றுலா பயணிகளின் தரவும்

இலங்கைக்குள் உள்நுழையும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏதோவொருவகையில் கொழும்புக்குள் உள்நுழைந்தே இலங்கையின் ஏனைய பாகங்களுக்குள் செல்லவேண்டி இருக்கிறது. இதற்கு பிரதான காரணமாக, விமான நிலையம் மற்றும் பிரதான போக்குவரத்து வழிமுறையான பேரூந்து போக்குவரத்து என்பன கொழும்பு மாநகரில் அமைந்திருப்பதே ஆகும். ஆனால், இதற்காக கொழும்புக்குள் உள்நுழையும் சுற்றுலா பயணிகளை இன்ன பிற காரணங்களின் ஊடாக தக்கவைப்பதில்தான் கொழும்பு ஒரு சுற்றுலாத் தளமாக வெற்றியடையவில்லை எனக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலேயுள்ள வரைபுகளின் பிரகாரம், கொழும்பில் தங்கி செல்லும் அல்லது கொழும்பில் சுற்றுலாப் பயணிகள் செலவிடும் நேரமானது குறைவடைந்து செல்வது பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இலங்கையில் ஒரு சுற்றுலாப் பயணி சராசரியாக 10 நாட்களை செலவிடும்போது, கொழும்பில் வெறும் 2 நாட்களை செலவிடும் நிலையே உள்ளது. அதுவும், போக்குவரத்து காரணங்களுக்காக இலங்கைக்குள் உள்நுழையும், வெளியேறும் நாடகளாகவே அவை அமைகின்றன.

அப்படியாயின், இலங்கையின் தலைநகரான கொழும்பில் பார்வையிடக்கூடிய சுற்றுலாத்தளங்கள் இல்லையா ? கொழும்பு போன்ற நகர்களில் சுற்றுலாவுக்காக அரசு செலவிடும் பெரும்தொகை வளம் வீணாக்கப்படுகிறதா ? என்பதனை அறியவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இலங்கை தொடர்பான தகவல்களை மக்களுக்கு வழங்கும் பிரதான சுற்றுலா இணையத்தளங்களை ஆய்வு செய்கின்றபோது, அவற்றின் பிரதான இடங்களுக்குள் கொழும்பு இடம்பெற்று இருக்கவில்லை. இதற்க்கு பிரதான காரணம், சுற்றுலா சந்தையில் தொடர்ச்சியாக இலங்கையின் இயற்கை எழில்சார்ந்த இடங்கள் சந்தைப்படுத்தப்பட்டுவருவதுடன், புறநகர்பகுதிசார் சுற்றுலா மையங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதும், புறநகர்சார் பகுதியில் உள்ள இடங்கள் தொடர்பில் சுவாரசியத்தன்மையை வழங்காமையும் ஆகும்.

பிரபல சுற்றுலா இணையத்தளங்களில் சிபாரிசு செய்யப்பட்ட இலங்கையின் சுற்றுலாத்தளங்கள்
சிகிரியா குன்று
பொலநறுவை
அனுராதபுரம்
சிவனொளிபாதமலை
அனுராதபுரம்
அறுகம்பே
ஹப்புத்தளை
ஹோர்ட்டன் பிரதேசம்
சிவனொளிபாதமலை
பெரதேனியா பூந்தோட்டம்
வெள்ளவாய
மட்டக்களப்பு
திருகோணமலை
தங்கால
பெந்தோட்ட

கொழும்பில் உள்ள சுற்றுலாத் தளங்கள்

வரலாற்று இடங்கள்

·         சுதந்திர சதுக்கம்

·         கொழும்பு அருங்காட்சியகம்

·         கொழும்பு கோட்டை

·         கொழும்பு வெளிச்ச வீடு.

மதரீதியான இடங்கள்

·         கங்காராம விகாரை

·         களனி ரஜ மகா விகாரை.

·         பொன்னம்பலவானேஸ்வரர் கோவில்.

·         வோல்வேண்டல் தேவாலயம், (Wolvendaal church)

·         ஜமி-உல்-அல்வார் பள்ளிவாசல் (Jami-Ul-Alfar Mosque)

பொழுதுபோக்கு இடங்கள்

·         விகாரமாதேவி பூங்கா

·         காலிமுகத்திடல்.

·         Waters Edge பூங்கா

·         சுதந்திர சதுக்கத்தை அண்டிய பூங்கா

Water Edge Park (Pic: youtube)

சந்தைப்படுத்துதல்

மேற்கூறிய அனைத்துமே, கொழும்பு மாநகரில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடியத் தன்மையைக் கொண்ட சுற்றுலாத் தளங்கள் ஆகும். ஆனால், இவை தொடர்பான சந்தைப்படுத்தல்களும், இவற்றுக்காக இலங்கை அரசு மேற்கொண்ட முதலீடுகள் தொடர்பில் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை. இதன்காரணமாக, கொழும்பு சுற்றுலா பிரதேசமாக அல்லது சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் ஊர் இடமாக தன்னை முத்திரை பதித்துக்கொள்ளுவதில் சிக்கல்நிலையை எதிர்கொள்ளுகிறது. அதுமட்டுமல்லாது, இலங்கையின் ஏனைய பாகங்களை போலல்லாது இரவுநேர உல்லாச/மகிழ்வான வாழ்க்கைக்கு (Night Life) கொழும்பு உகந்த இடமாகவுள்ளபோதிலும், அதுதொடர்பில் எங்குமே சரியான தகவல்களோ, சந்தைபடுத்தலோ இல்லை. இதனை, கண்டறிந்த சுற்றுலா பயணிகளே மீள மீள இதனை பயன்படுத்திக் கொள்ளுபவர்களாக இருக்க, ஏனையவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளாமலே செல்லுகிறார்கள்.

Colombo (Pic: mapio)

சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தளமாக கொழும்பை மாற்றுவது எப்படி ?

·         கொழும்பை பொறுத்தவரையில், அரசனானது சுற்றுலா மையங்களை உருவாக்குவதற்கு பொருத்தமான நிதியை ஒதுக்குவததில் முன்னிற்பதனை ஒத்துக்கொள்ளவே வேண்டும். ஆனால், அந்த நிதி எவ்வளவு தூரம் சரியாக பயன்படுத்தப்படுகிறது என்பதே கேள்வியாக நம்முன் நிற்கிறது. எனவே, சந்தைபடுத்தல் தொடங்கி, நடைமுறைபடுத்தல் வரை பொதுநிதியின் பயன்பாட்டை உறுதிசெய்வது அவசியமாகிறது.

·         குறுகியகால மற்றும் நீண்டகால திட்டங்களின் அடிபப்டையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க கூடியதான மூலதன செலவீனங்களை செய்ய அரசும், தனியாரும் முன்வருதல் அவசியமாகும். இதன் விளைவாக, கோலாலம்பூர், பாங்காக் போன்ற தலைநகரங்களுக்கு நிகராக கொழும்பின் தரத்தை உயர்த்த முடியும்.

·         கொழும்பை சுற்றுலாத் தளமாக முன்நிறுத்துவதில் பணரீதியான மூலதனத்துக்கு சமமாக மனித மூலதனமும் அவசியமாகிறது. அதாவது, கொழும்பின் வரலாறு, கொழும்பில் உள்ள பிரதான இடங்களின் வரலாறு, கட்டிட தொழில்நுட்பங்கள், அதன் முக்கியத்துவங்கள் என்பவற்றில் பூரண அறிவை கொண்ட உல்லாச பிரயாண முகவர்கள் உட்பட சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய தகவலை வழங்கும் மனித மூலதனத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

·         கொழும்பின் பிரத்தியேக இடங்கள் மற்றும், போக்குவரத்தில் பிரபலமான இடங்களை சுற்றி அபிவிருத்தி செய்யவேண்டியது அவசியமாகிறது. இதன்போது, குறித்த இடத்துக்கு வருகின்ற உல்லாச பிரயாணிகள் அதனுடன் இணைந்ததாக இலங்கையின்ஏனைய விடயங்களையும் அனுபவிக்க கூடியதாக அமையும். உதாரணமாக, ஏனைய ஆசியநாடுகளில் பிரசித்தமான இடங்களுக்கு செல்லும்போது அங்குள்ள கடைகளில் அந்நாட்டு உணவுவகை (Street Food), கலாச்சார பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதுபோன்ற அமைப்பை கொழும்பும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது.

Tourism (Pic: youtube)

மேற்கூறியவை மட்டுமல்லாது, உல்லாச பயணிகளை கவர்ந்திழுக்கக் கூடிய, அவர்களை தக்கவைத்துக்கொள்ளக்கூடிய விடுதி துறையிலும் (hotel Industry), பொழுதுபோக்கு துறையிலும் (Entertainment Industry) மேலதிக கவனத்தை செலுத்துவதன் விளைவாகவும், கொழும்பை ஒரு முழுமையான புறநகர் சுற்றுலா பிரதேசமாக மாற்றியமைக்க முடிவதுடன், அதன்மூலம் மேலதிக அந்நிய செலவாணியையும், வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

                           Web Title: Colombo As Complete Tourist Spot

                               Featured Image Credit: checkinprice

Related Articles