Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கை சுற்றுலாத்துறையின் எதிர்காலம்

இலங்கையின் சுற்றுலாத்துறை போருக்கு பின்னான காலங்களில் மீளவும் புத்துயிர் பெற்று, படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் சுற்றுலாத்துறையின் வெவ்வேறு பரிணாமங்களான கடற்கரைகள், அழகிய மலைகள், காடும் காடுசார்ந்த உயிர்பல்வகமைகள், கலாச்சார மற்றும் வரலாற்று நினைவிடங்கள் என்பவற்றை உல்லாச பயணிகள் குறுகியகாலத்தில் பார்வையிட கூடியனதாக உள்ளது ஓர் வரப்பிரசாதமாகும்.. இது உல்லாசபயணிகளுக்கு தங்களது பயணங்களை வினைத்திறனாக வடிவமைத்துக்கொள்ள பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை - 2014/2015

சுற்றுலா பயணிகளின் வருகை – 2014/2015

இதன் அடிப்படையில், 2015ம் ஆண்டு ஏறத்தாழ 1.8 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளார்கள். இது 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 17.8% அதிகரிப்பாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இலங்கை மத்தியவங்கியின் அறிக்கைகளின் படி குறைந்தது 2.4 பில்லியன் சுற்றுலாத்துறை மூலமாக வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 42% வருமான அதிகரிப்பை இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ளது.

இத்தகைய மதிப்பீடுகளையும், அளவுகோல்களையும் அடிப்படையாகக்கொண்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 4.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை 2020ல் இலங்கைக்கு கொண்டுவரும் திட்டங்களை வகுத்து வருகிறது. ஆனால், பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை முறையாக கையாள போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க திட்டங்களை வகுத்துள்ளதா? என்பது விவாதத்திற்குரியதாகவே உள்ளது.

விடுதி மற்றும் உணவகத்துறை (Hotel & Restaurant Sector)

இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, விடுதி மற்றும் உணவகத்துறையின் வளர்ச்சியில் எதிர்பாராத அபரித மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறவேண்டும். இதற்கு உதாரணமாக, 2014ம் ஆண்டில் மாத்திரம் புதிதாக 18,100 சுற்றுலா அறைகள் இலங்கையில் புதிதாக கட்டியெழுப்பபட்டதை குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாது, தற்போதுவரை கணக்கெடுப்பில் சுமார் 28,000 சுற்றுலா அறைகள் இனம்காணப்பட்டுள்ளது. இவற்றுள் முறைசாரா வகையில், சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தடுகின்ற சுற்றுலா விடுதிகள் கணக்கில்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய முறைசாரா சுற்றுலா அறைகள் கொண்ட விடுதிகளின் வளர்ச்சி, வளர்ச்சியடைந்த பிரபல விடுதிகளுக்கு சவால்மிக்க வகையில் வளர்ச்சியடைந்து வருவதுடன், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் கேள்விநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அரசின் சார்பில், சுற்றுலா விடுதிகள் தொடர்பிலான பொருத்தமான கண்காணிப்பு இன்மை, விலைக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தபடாமை, என்பன இதற்க்கு காரணமாக அமைந்துள்ளது.

orienttourssrilanka.com

orienttourssrilanka.com

இதற்கு மேலதிகமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளுடன் உருவாகின்ற உயர்ரக விடுதிகளும், அடுக்குமாடி குடியிருப்புக்களும் எதிர்காலத்தில் இந்த கணிப்பீட்டில் இணைந்துகொள்ள இருக்கின்றன. இதனால், இலங்கை அரசு இவை தொடர்பில் பொருத்தமான கோட்பாடுகளையும், சட்ட விதிமுறைகளையும் நடைமுறைபடுத்த வேண்டியது அவசியமாகிறது.

சுற்றுலாத்துறையில் கவனிக்கபட வேண்டியவை

  1. முதலீட்டு சிக்கல்

உலக வங்கியின் “தொழில் புரிவதற்கு சுலபமான” சுட்டியில் இலங்கை முதல் 100 நாடுகளுக்குள் வகைப்படுத்தபட்டுள்ளது. இது ஏனைய சுற்றுலாத்துறை சார்ந்த ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அபரிதமான வளர்ச்சியாகும். இத்தகைய வளர்ச்சியை இலங்கை கொண்டுள்ளபோதிலும்,  அதனது சமீபத்தயகால முதலீட்டு கொள்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பில் நிலைத்தன்மையை பேண முடியாத நிலை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளை பொருத்தமானவகையில் உள்வாங்கிகொள்வதில் பின்வாங்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2013ம் ஆண்டு வெளிநாட்டு குடியுரிமையாளர்கள் காணிகளை உடமையாக்குதலில் கொண்டுவரப்பட்ட கட்டுபாடுகள், 2014ம் ஆண்டு விவாதத்துக்குள்ளாக்கபட்டு கைவிடப்பட்ட சூதாட்ட விடுதி திட்டம் என்பன உதாரணமாகும். அத்துடன், 2015ம் ஆண்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் என்பன கூட, இலங்கை தொடர்பில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு தயக்கநிலையினை உருவாக்கியுள்ளது. இத்தகைய நிலையினை மாற்றியமைக்க இலங்கை அரசு தனது சட்டங்களை தெளிவாகவும், முதலீட்டாளர்களை உள்வாங்கிக்கொள்ளத்தக்க வகையிலும் வகுப்பதுடன், தனது அரசகொள்கையில் நிலையான தன்மையினை பேணுவதும் அவசியமாகிறது.

  1. உட்கட்டமைப்பு வசதிகள்

இலங்கை அரசு சுற்றுலாத்துறையில் 4.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை 2020க்குள் கொண்டுவருவதற்கு விரைவாக இயங்குவதுபோல, தனது சுற்றுலாத்துறை சார்ந்த உடகட்டமைப்பு வசதிகளான அதிவேக சாலைகள், புகையிரத சேவையிலான மாற்றங்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களிலும் பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. தென்பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடைந்த சுற்றுலா பிரதேசங்களைப் போல, கிழக்கு கடற்கரைகள் மற்றும் வடபகுதி வரலாற்று பகுதிகளையும் கவனத்தில்கொண்டு அபிவிருத்தி அடையச்செய்வது அவசியமாகிறது.

அதுமட்டுமல்லாது தேர்வு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்துமே சந்தை தேவை, வினைத்திறனான நிதிப்பயன்பாடு, உச்சபயன்பாடு என்பவற்றை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும். மாறாக, மத்தள விமானத்தளம் போல தோல்வியடைந்த திட்டமாக அமையக்கூடாது.

  1. மாற்று சுற்றுலாமுறை மற்றும் பயண இலக்கு சந்தைப்படுத்தல் (Alternative Tourism & Destination Marketing)

இலங்கை சுற்றுலாதுறையானது ஏனைய ஆசிய மற்றும் தென்னாசிய சுற்றுலாத்துறை சார்ந்த நாடுகளுடன் போட்டியிட்டு சுற்றுலா பயணிகளை கவரவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்த நிலையில், ஏனைய ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு மாற்று சுற்றுலா ஸ்தலமாக இலங்கை தன்னை சந்தைப்படுத்துவதன் மூலமாக, பெருமளவிலான சுற்றுலாபயணிகளை கவரமுடியும். மேலதிகமாக, இலங்கைகே உரித்தாக வரலாறுகளையும், நினைவுச் சின்னங்களையும் மதம் சார்ந்த ஸ்தலங்களையும் முன்னிறுத்தி சந்தைப்படுத்தலை முன்னெடுப்பதன் மூலமாக, தெற்காசிய நாடுகளின் சுற்றுலா போட்டித்தன்மையை முறையடிக்க கூடியதாக அமையும்.

அதுமட்டுமல்லாது, MICE (Meetings, Incentives, Conference, Events) சுற்றுலா முறைமையை ஊக்குவிப்பதன் மூலமாகவும் சந்தை போட்டித்தன்மையை வெற்றிக்கொள்ளக்கூடியதாக அமையும். (அண்மைக்காலத்தில் இலங்கை அரசு இத்தகைய சந்தைப்படுத்தலை நோக்கி தன் கவனத்தை திருப்பியுள்ளது.) இதேபோன்று, இலங்கை தனக்கே உரித்தான முக்கிய தனித்துவமான சந்தைகளையும் (திமிங்கலங்களை பார்வையிடல், தேயிலை சுற்றுலா, கப்பல் சுற்றுலா) இனம்கண்டு அவற்றையும் சந்தைப்படுத்துவது அவசியமாகும்.

  1. விடுதிசார் சலுகைகள்

இலங்கையின் விடுதித்துறை (Hotel Industry) வளர்ச்சியானது அபரிதமானது. தற்சமயம், இலங்கையில் சர்வதேச தரம்வாய்ந்த விடுதிகளில் முதலீடு செய்வதானது இலங்கையின் சுற்றுலாத்துறை எவ்வகை வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது. எனவே, இத்தகைய உலகத்தரம் வாய்ந்த விடுதிகள் தனியே விடுதி வசதிகளை மாத்திரம் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்காமல், அவற்றுடன் இணைந்ததாக, சுற்றுலா ஸ்தலங்கள் (Tourist Locations) தொடர்பிலான அனுபவத்தையும் பெற்றுத்தரக் கூடியவகையில், தமது சலுகைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கவேண்டும். இது, தனித்து விடுதிசார் துறையை மாத்திரம் அன்றி, சுற்றுலாதளங்கள் தொடர்பிலான உள்நாட்டு தரத்தினை (Domestic Brand) கட்டியெழுப்புவதிலும் துணைபுரியும். இது சர்வதே நாடுகளில் அமைந்துள்ள விடுதிகளின் வழியாக இலகுவாக சந்தை போட்டியை முறையடித்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்ற கூடியதாக அமையும். இது உலகதரம் வாய்ந்த சுற்றுலா விடுதிகளுடன் இணைத்து, உள்நாட்டு தரத்தினையும் கட்டியெழுப்ப பயன்படும்.

  1. மனிதவள முகாமைத்துவம்

இலங்கையின் தற்போதைய சுற்றுலாத்துறையின் வளர்ச்சியும், அது தொடர்பிலான பேண்தகு அபிவிருத்தி நிலையும் தற்சமயம் காணப்படுகின்ற மனிதவள முகாமைத்துவ குறைப்பாட்டை நிவர்த்திக்காவிடின், போட்டித்தன்மை நிலையினை இழந்து சுற்றுலா பயணிகளை இழக்கின்ற நிலையினை உருவாக்கலாம். குறிப்பாக, புதிய மற்றும் திறமையுடையவர்களுக்கு சர்வதேச தரத்திற்கு சமனான பயிற்சிகளையும், அனுபவத்தையும் வழங்குவதன் மூலமாக மேம்படுத்தபட்ட வினைத்திறனான மனிதவள முகாமைத்துவத்தினை சுற்றுலாத்துறையில் உருவாக்க முடியும். இதற்கான, பொருத்தமான கற்கைநெறிகளையும், வசதி வாய்ப்புக்களையும் தனியே தனியார் துறையினர் மாத்திரம் அன்றி, இலங்கை அரசும் ஏற்புடைய செலவில் ஏற்படுத்தி கொடுப்பது அவசியமாகும்.

சர்வதேச நிலையில், சுற்றுலாத்துறையினை பொறுத்தவரையில் இலங்கை தனக்கான ஒரு பிரத்தியேக இடத்தினை கொண்டுள்ளது. அந்த நிலையின, ஒரு நாமமாக (Brand) மாற்றியமைப்பதில்தான் தற்போதைய இலங்கையின் வெற்றி தங்கியுள்ளது. ஒரு வலுவான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை பொருத்தமானதாகவும், வினைத்திறன் மிக்கவகையிலும் இலங்கை அரசு நடைமுறைபடுத்துவதன் மூலமாக இலங்கைக்கான நாமத்தினை (Brand) ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

Related Articles