நீல மலைகளினிடையே – நீலகிரி

மலைகள் என்பது குறிஞ்சித் திணை கொண்டு காலத்திற்கும் தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்ட பாடுபொருள். மலைகளும், மலைவாழ் மக்களும் என்றும் என்னுள் குதூகலத்தை ஏற்படுத்த தவறியதே இல்லை. மலைச்சரிவில் இருந்து, தொலைதூர உச்சிகளில் தெரியும் இரவு நேர மின்விளக்குகளை நட்சத்திரங்களாய் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றோம். சாலைகள், போக்குவரத்து வசதிகள் எல்லாம் மக்களை புத்தம் புது காலைகளுடன், பரவசமூட்டும் மலைக்காடுகளுடன் இணைத்துவிடுகின்றன. இந்தியாவின் மூன்று மாநிலங்களின் இயற்கை அரணாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சாலைகளும் அப்படித்தான். உயரமாக வளர்ந்திருக்கும் நீலமலைகளின் சாலைகள் எங்களை வரலாற்றில் பயணிக்க வைத்தது.

நீலகிரியின் அழகிய தோற்றம் (toehold.in)

தமிழகத்தில் பழங்குடிகளின் தாயகம் என்றால் அது நீலமலைத் தொடர்கள்தான். தோடர்கள், கோத்தர்கள், படுகர்கள், இருளர்கள், குறும்பர்கள், காட்டு நாயக்கர்கள், பனியர்கள் என்று தன் பிள்ளைகளை தன்னுள்ளே பாதுகாத்து வளர்க்கின்றன இம்மலைகள். ஒருபுறம் இயற்கையோடு இயற்கையாக வாழும் ஆதிக்குடிகள் நீலகிரியின் தொன்மையை அடையாளப்படுத்துகின்றார்கள். மற்றொருபுறம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தேயிலைக் காடுகளில் வேலை செய்வதற்காக தென் மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்டு, அடிமைகளாக்கப்பட்ட  தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், இன்று நீலகிரியின் பொருளாதார மாற்றத்தின் அடையாளங்களாக இருக்கின்றார்கள்.

இருவேறு கோணங்களில் பயணத்தை முன்நிறுத்தினால், எங்களை இணைத்த ஒரு புள்ளி கோவையின் முன்னாள் ஆங்கிலேய ஆட்சியாளர், திரு. ஜான் சலீவன் அவர்கள். நவீன நீலகிரியின் உருவாக்கத்திற்கு இவர் அளித்த பங்களிப்பானது அளப்பரியது. கோத்தகிரி வழியாக நீலகிரியை அடைந்த முதல் வெளிநாட்டவர் இவர்தான். நீலகிரியில் வாழ்ந்த முதல் ஆங்கிலேயக் குடும்பம் இவருடையது தான். 1788, ஜூன் மாதம், 15ம் தேதி இலண்டனில் பிறந்த இவர், பிரித்தானிய இந்தியாவில் இருந்த மதராஸ் ப்ரசிடென்ஸியில், குடியுரிமைப் பிரிவில் எழுத்தாளராக பணியில் அமர்த்தப்பட்டார்.

நீலகிரியின் ஆதிவாசிகள் (sarmaya.in)

1814இல் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியாளராக பொறுப்பேற்றார். 1815இல் கோவை மண்டலத்தின் ஆட்சியாளராக பதவியேற்றார். அவரின் நினைவாக, செல்வபுரம் செல்லும் வழியில் ஒரு வீதிக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆணைக்கிணங்க நீலகிரி பழங்குடிகள் பற்றிய அறிக்கையினை தயார் செய்வதற்காக 1819இல் தன்னுடைய முதல் நீலகிரி பயணத்தை தொடங்கினார். பல்வேறு அலுவலக பணிகளுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் தனக்கான வசிப்பிடத்தை, தன்னுடைய இரண்டாவது பயணத்தின்போது, கோத்தகிரியில் உருவாக்கினார். இன்று உதகை மாவட்டத்தின் ஆவணப் பாதுகாப்பு மையமாக இருக்கின்றது அக்கட்டிடம்.

ஆதிக்குடிகள் தங்களுக்கென தனித்தனி அமைவிடங்களையும், வாழ்வியலையும், தொழில் முறைகளையும், மொழிகளையும் (பேச்சு மொழி மட்டுமே.. எழுத்துருக்கள் இல்லை), சமூக கட்டமைப்புகளையும் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வாழும் பகுதிக்கு செல்வதற்கு ஏகப்பட்ட தடைகளும், விதிமுறைகளும் இருக்கின்றன. அவர்களைக் காண்பதற்கு முன்பு அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்வின் காலக்கோடுகளை அறிந்து கொள்வதும், அவர்களைப் பற்றிய தெளிவான வரலாற்றுப் பதிவுகளை அறிந்து கொள்வதும் முக்கியம் எனப்பட்டதால் நாங்கள் கோத்தகிரிக்கு எங்களுடைய முதல் பயணத்தை மேற்கொண்டோம்.

கோத்தகிரி வழியாக நீலகிரியை அடைந்த முதல் வெளிநாட்டவர் ஜான் சலீவன் (chennaifirst.in)

உதகை மாவட்டத்தின் ஆவணப் பாதுகாப்பு மையம் (ஜான் சலீவன் பங்களா) ஹம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்திருக்கின்றது. அரவேனுவில் இருந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு பேருந்தும், கோத்தகிரியில் இருந்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றது. கன்னேரிமுக்கு என்பது படுகர் இன மக்கள் வாழும் ஹட்டியாகும். (படுகர்கள் வாழும் பகுதியின் பெயர்). தனியார் நிறுவனத்தாலும், தமிழக அரசாலும் கோத்தகிரிப்பகுதியில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நடத்துநர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும்  இந்த அருங்காட்சியகம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் இருந்தது ஆச்சரியமளித்தது. பேருந்தில் அமர்ந்து படுகமொழிப் பாடல்களைக் கேட்டவாறு 25 நிமிட நேரத் தொலைவில் ஹம்பட்டி பள்ளத்தாக்கில் இருக்கும் கன்னேரிமுக்கு பேருந்து நிறுத்ததில் இறங்கி அங்கிருக்கும் மக்களின் வழிநடத்துதலின்படி ஜான் சலீவன் அருங்காட்சியகத்தை அடைந்தோம்.

ஞாயிறு என்பதாலும், காலைப் பொழுது என்பதாலும் அருங்காட்சியகம் திறந்திருக்கவில்லை. வரும் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துவிடாமல் இருப்பதற்காக அருங்காட்சியகத்தின் காப்பாளர் அவர்களின் அலைபேசி எண் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவரை அழைத்து பேசிவிட்டு அங்கே சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். சலீவன் அவர்களின் 229வது பிறந்தநாளினை முன்னிட்டு, உதகையின் தற்போதைய ஆட்சியாளர் திரு.சங்கர் அவர்கள் சலீவனின் திருவுருவச் சிலையினை அங்கு நிறுவியிருந்தார். அதன் கீழும் சலீவன் அவர்களைப் பற்றிய குறிப்பு பொறிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அலுவலக பணிகளுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் தனக்கான வசிப்பிடத்தை, தன்னுடைய இரண்டாவது பயணத்தின்போது, கோத்தகிரியில் உருவாக்கினார். இன்று உதகை மாவட்டத்தின் ஆவணப் பாதுகாப்பு மையமாக இருக்கின்றது அக்கட்டிடம். (traveholicsdotcom.files.wordpress.com)

200 வருட வரலாற்றினைப் பேசும் கட்டிடத்திற்கும் வாழ்க்கைக் குறிப்பு இருக்கும் என்பதை, அருங்காட்சியகத்தின் காப்பாளர் திருமதி. காயத்ரி ரவி அவர்கள் வந்து கூறும் வரை நாங்கள் அறிந்திருக்கவில்லை. உள்ளூர்வாசிகளால் ஹெத்தக்கல் (பெத்தக்கல்) பங்களா என்று அழைக்கப்படும் இக்கட்டிடம்  எந்த வருடத்தில் கட்டப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. சலீவனிற்கும் அவருடைய  நண்பர்களுக்கும் முகாம் அலுவலகமாக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்திருக்கின்றது இக்கட்டிடம். பின்பு இவருடைய அலுவலகம் மற்றும் வீடு உதகையில் அமைக்கப்பட்டுவிட்டதால் இந்த அலுவலகத்தின் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது. 1900 வரையில் இது அலுவலகமாக செயல்பட்டதற்கான சான்றாக ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே கிடைக்கப்பற்ற  நிலையில், 2000ஆம் ஆண்டில் இக்கட்டிடம் முழுமையாக சேதாரம் அடைந்து, அங்கு இருக்கும் மக்களால் மாட்டுக் கொட்டகையாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. 2000ஆம் ஆண்டு உதகையின் ஆட்சியாளராக இருந்த திருமதி. சுப்ரியா சஹூ அவர்களின் முயற்சியால், இக்கட்டிடம் மீள் வடிவம் பெற்றது.

ஹம்பட்டி பள்ளத்தாக்குவாழ் மக்களில் யாரோ ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட புகைப்படத்தை (1900ல் எடுத்தது) வைத்து, அதே போன்று இக்கட்டிடத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். மீண்டும் 2002ல் அது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டும் வரலாற்றினைத் தெரிந்து கொள்வதற்காக அடிக்கடி இந்த அருங்காட்சியகம் வருவார்கள். சுற்றுலா வருபவர்களுக்கு நீலகிரி என்றவுடன், உதகையே அவர்களின் முதல் விருப்பமாக இருப்பதால், இது போன்ற வரலாற்றினைக் கொண்ட அருங்காட்சியகத்தை யாரும் காண வருவதில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

தோடர் கூட்டத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் (harattravels.com)

இந்த ஆதிக்குடிகளை ஆவணம் செய்த முதல் புகைப்படத்தில் இருந்து நீலகிரியின் பழங்குடிகள் பற்றிய ஓர் தெளிவான அறிமுகத்தை எங்களுக்குக் கொடுத்தார் திருமதி. காயத்ரி ரவி.  1867ல் நீலகிரியின் ஆணையராக இருந்த ஜேம்ஸ் வில்கின்சன் ப்ரீக்ஸ் அவர்களின் “ஆன் அக்கௌண்ட் ஆப் தி ப்ரிமிடிவ் ட்ரைப்ஸ் அண்ட் மொனமண்ட்ஸ் ஆப் தி நீல்கிரிஸ் (An Account of the Primitive Tribes and Monuments of the Nilgiris)” என்ற படைப்பின் முகப்பு புகைப்படம் அது. அந்த புகைப்படத்தில் கீழ் வரிசையில் ஐந்து ஆண்கள் அமர்ந்தும், மேல்வரிசையில் ஆண்கள் நின்று கொண்டும் இருந்தார்கள். இப்பத்துப் பேர்களின் ஒவ்வொரு இரு இணையும் ஒவ்வொரு இனத்தின் பிரதிநிதிகள். அவர்கள் முறையே இருளர்கள், படுகர்கள், தோடர்கள், கோத்தர்கள், குறும்பர்கள் என வரிசையாக நின்றிருப்பார்கள். அவர்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களை வகைப்படுத்திவிடலாம் என்று கூறினார். இப்புகைப்படம் அன்றைய நாளில் மெட்ராஸ் கலைப் பள்ளியில் படித்த பெயர் தெரியாத ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படம். அப்புகைப்படத் தொகுப்பானது இன்று இந்திய அருங்காட்சியம், இலண்டன், இங்கிலாந்தில் இருக்கின்றது.

பழங்குடி மக்களின் கைவினைப் பொருட்கள், இசைக்கருவிகள், மற்றும் அவர்களைப் பற்றிய புத்தகங்கள் ஆகியவை அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. குறும்பர்களின் பாரம்பரிய தொழிலான தேன் எடுத்தலை விளக்கும் வகையில் அவர்களால் வரையப்பட்ட கண்ணாடிச் சித்திரம் பார்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். ஆதிக்குடிகள்பற்றிய வரலாறு மட்டுமல்லாமல், நவீன உதகைக்கான தொலைநோக்குப் பார்வையானது எவ்வாறாக அன்றைய காலக்கட்டத்தில் இருந்தது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலேயர்களால் வரையப்பட்ட பல்வேறு ஓவியங்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருக்கும் புகைப்படங்கள் இன்றைய நீலகிரியின் வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்பதனை விளக்கும்.

நீலகிரியின் படுகர் இன பழங்குடிகள் (badaga.files.wordpress.com)

ஜான் அவர்களுக்கு எவ்வாறு வரலாறானது கோத்தகிரியில் இருந்து தொடங்கியதோ, எங்களின் வரலாற்றுப் பயணமும் அங்கிருந்துதான் தொடங்கியது. திரு. சலீவன் அவர்களுக்கு இன்னும் இம்மக்கள் நன்றிக்கடன் செலுத்துவதற்கான காரணங்கள் மற்றும் அவர் செய்த நவீன உதகைக்கான அடித்தளங்கள், அதனோடுகூடிய பல்வேறு மக்களின் வாழ்வியல் மாற்றங்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளார்கள் எப்படி இன்றைய நீலகிரியின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகின்றார்கள் என  அனைத்தையும்  கூற எங்களுக்கு ஒரு சூடான சுவையான தேநீர் இடைவேளை தேவைப்படுகின்றது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நீங்கள் உதகை செல்ல விரும்பினால், கோத்தகிரியில் இருந்து உங்களின் பயணத்தை தொடங்குங்கள்.

Related Articles

Exit mobile version