.jpg?w=1200)
ஓசோன் படலம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் திகதியை உலக ஓசோன் தினமாக கொண்டாடுகிறது. “32 வருடமும் குணப்படுத்தலும்” என்பதே இந்த வருடத்திற்கான கருப்பொருளாக அமைந்துள்ளது. நாம் உயிர்வாழ காரணமாக இருக்கும் ஓசோன் படலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தகவல்கள் இதோ:
ஓசோன்…

இந்த வார்த்தையை நாம் அனைவரும் அறிவோம். ஓசோன் வளிமண்டலத்தை சுற்றியுள்ள ஒரு படலம். ஓசோன் படலம் தரையில் இருந்து 10 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையுள்ள காற்றுமண்டலத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது. பிரஞ்சு இயற்பியல் வல்லுனர்கள் சார்லஸ் பேப்ரி, ஹென்றி புய்சன் ஆகியோர் (1913-ல்) ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர். `சிட்னி சேப்மேன்’ என்ற இங்கிலாந்து விஞ்ஞானி (1930-ல்) இரு அணுநிலை ஆக்சிஜனும், ஒரு முழு ஆக்சிஜனும் இணைந்ததே ஓசோன் (O3) என்று கண்டுபிடித்தார். சூரியஒளியில் உள்ள புற ஊதாக்கதிர் தாக்குவதால் ஆக்சிஜன் அணுக்களில் ஏற்படும் மாற்றமே ஓசோனை தோற்றுவிக்கிறது என்றார். மற்றொரு இங்கிலாந்து ஆய்வாளர் டோப்சன், ஓசோனின் அடர்த்தியை அளவிடும் `ஸ்பெக்ட்ரோபோட்டோ` மீட்டரை (டோப்சான் மீட்டர்) உருவாக்கினார்.
ஓசோன் படலம் / படை

நாம் உயிர் வாழ இன்றியமையாத, நமக்கு சுவாச வாயுவாக திகழும் ஒட்சிசனின் (O2) மற்றொரு வடிவம்தான் ஓசோன். இது இரண்டு ஒட்சிசன் மூலக்கூறுகளை கொண்டது. ஓசோன் வாயுப் படலம் பூமியிலிருந்து 60 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது. ஓசோன் வாயு படலமாக பூமியிலிருந்து 50கிமீ உயரம் வரை பரவி, 20லிருந்து 25கிமீ வரை அடர்த்தியாக பரவியுள்ளது. இதன் மிக முக்கிய பணி, சூரியன் அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என இரு வகையான கதிர்களை வெளியிடுகிறது. இதில் அகச்சிவப்பு கதிர்கள் பூமிக்கு வெப்பத்தை கொண்டு செல்கின்றது. புற ஊதாக் கதிர்களிடமிருந்து வரும் கதிர்களை 99% ஈர்த்து, பூமியை பாதுகாத்து நம்மை நோயிலிருந்து காப்பாற்றும் பணியை ஓசோன் செய்து வருகிறது. இது ஒரு வேதிவினை போல நடைபெறுகிறது.
ஓசோனின் சிதைவு

ஓசோனில் ஓட்டை இருப்பது அமெரிக்காவில் 1985ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. 1978ம் ஆண்டில் அமெரிக்கா, கனடா மற்றும் நார்வே போன்ற நாடுகள் குளோரோபுளோரோ கார்பன் உள்ள பல பொருட்களை பயன்படுத்த தடை விதித்தன. குளிர்பதனம் மற்றும் தொழிலகத் தூய்மை பணிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. `த மோன்ட்ரியல் புரோட்டோக்கால்’ என்ற சர்வதேச உடன்பாட்டின் படி 1987 முதல் சிதிசி உற்பத்தி கடுமையாகக் குறைக்கப்பட்டு 1996-ம் ஆண்டு பெருமளவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஓசோன் ஓட்டை பெரிதாவது தடுக்கப்பட்டுள்ளது.
ஓசோன் மண்டலம் அழிவதால் ஏற்படும் விளைவுகள்

ஓசோன் வாயுக்கள் அழியும் நிலை உருவானால், பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து, நில பரப்பு அழிந்து, அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்க ஆரம்பிக்கும். மிகவும் முக்கியமாக ஓசோன் வாயுக்கள் அழிந்தால் மனிதர்களையும், விலங்குகளையும் புற ஊதாக் கதிர்கள் எளிதில் நேரடியாகத் தாக்கும். இதனால் தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும்.
இது மனிதர்களை மட்டுமல்ல, தாவரங்களையும் விட்டு வைக்காது. தாவரங்களின் உற்பத்தி திறனை குறைத்து தாவரங்களை மலடாக்கிவிடும். கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களும் இதனால் இறக்கும் அபாயம் உள்ளது.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் சொல்கிறது. இதற்கு காரணம் ஓசோன் மண்டலம் சிறிது சிறிதாக வலுவிழந்து வருவதே ஆகும்.
இலங்கையும் ஓசோனும்
1989 ஆண்டு முதல் இலங்கை உலகளாவிய ஓசோன் பாதுகாப்பு முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்றது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தேசிய ஓசோன் பிரிவு (NOU) ஓசோன் குறைந்துபோகும் பொருட்களை வெளியேற்றுவதற்கான ஒரு தேசிய மூலோபாயம் மற்றும் செயல் திட்டத்தை மேற்கொண்டது.

மாண்ட்ரீல் நெறிமுறையை அமுல்படுத்தப் போராடும் வளர்ந்து வரும் ஆசிய நாடுகளில் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளின் மதிப்பை முதன்முதலில் அங்கீகரித்தவர்களில் இலங்கையர்களும் ஒருவராவர்.
1994 ஆம் ஆண்டில் தேசிய ஓசோன் பிரிவு நிறுவப்பட்டதிலிருந்து 2008 ஆம் ஆண்டில் ஓசோன் பாதுகாப்பிற்காக தீவு முழுவதும் சி.எஃப்.சி.களை வெற்றிகரமாக அகற்றுவதற்கான ஓசோன் பாதுகாப்பு முயற்சிகளில் இலங்கை முன்மாதிரியாகக் கருதப்படுகிறது. இதன் ஒரு அடியாக 2015 இல் ஓசோன் படலத்தை சேதப்படுத்தும் 97 இரசாயனங்களில் 54 இராசனயங்களின் பயன்பாட்டை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பு பாராட்டுக்கு நியாயமான பங்கைப் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்துவந்துள்ளது. இதனை பாராட்டும் வகையில் 2007 ஆம் ஆண்டில் மாண்ட்ரீல் புரோட்டோகால் நெறியால் அமுல்படுத்தியவர்களுக்கான விருதை இலங்கை பெற்றது. அதேசமயம் இயற்கை வள அமைச்சரான படாலி சம்பிக ரணவாக்க வியன்னா மாநாட்டின் கட்சிகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கையில் கடந்த வருட ஓசோன் தினம்
இலங்கையில் கடந்த வருட ஓசோன் தினம் செப்டெம்பர் 17ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் தேசிய ஓசோன் பிரிவால் இந்நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது.
தேசிய ஓசோன் பிரிவு( National Ozone Unit )

இப்பிரிவின் தொலைநோக்கு பார்வை – “ஓசோன் படலத்தை அதன் முழு வலிமைக்கு மீட்டல் ..”
நோக்கம் – இலங்கையில் ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருள்களை படிப்படியாக அகற்றுவதன் மூலம் ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான ஓசோன் மாண்ட்ரீல் நெறிமுறையின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்றுவது. இலங்கையில் ஓசோன் அடுக்கு பாதுகாக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். மக்களுக்கு ஓசோன் படலம் பற்றிய விழிப்புணரவை ஏற்படுத்தல்.
குறிக்கோள் – ஓசோன் அடுக்கைப் பாதுகாக்க இலங்கையில் மாண்ட்ரீல் நெறிமுறையை அமல்படுத்துதல்.
ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பது எப்படி?

குளுரோ புளுரோ கார்பன் (CFC) பயன்படுத்துவதை தவிர்த்தாலே நாம் ஓசோன் சேதமடைவதை பாதி நிறுத்தி விடலாம். இதற்கு தடை விதித்த போதிலும், பல நாடுகளில் இன்றும் இதை பயன்படுத்திக்கொண்டுதான் உள்ளனர். இதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தற்போது பருவ நிலை மாறுகிறது. இதன் காரணம் ஓசோன் படலமும் புவி வெப்பமயமாதலுமே ஆகும். மரத்தை வெட்டி, காடுகளை அழித்து, புவிவெப்பமாதலுக்கு வழிவகுக்கின்றனர். மரங்களை அதிகளவில் வளர்த்து காடுகளை காத்தால், புவிவெப்பமயமாதலை தடுப்பதோடு, வளிமண்டலத்தையும் காக்கலாம்.
ஓசோனின் சமீபத்திய நிலை
ஓசோன் சிதைவின் சமீபத்திய அறிவியல் மதிப்பீடு 2018 இல் நிறைவடைந்தது, இதன் விளைவாக, ஓசோன் அடுக்கின் பகுதிகள் 2000 முதல் ஒரு தசாப்தத்திற்கு 1-3% என்ற விகிதத்தில் மீண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. திட்டமிடப்பட்ட விகிதங்களில், வடக்கு அரைக்கோளம் மற்றும் நடு அட்சரேகை ஓசோன் 2030 களில் முழுமையாக குணமாகும். தெற்கு அரைக்கோளம் 2050 களில் மற்றும் 2060 க்குள் துருவ பிராந்தியங்களில் பின்பற்றப்படும். 1990 முதல் 2010 வரை 135 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு சமமான உமிழ்வைத் தவிர்ப்பதன் மூலம் ஓசோன் அடுக்கு பாதுகாப்பு முயற்சிகளும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பங்களித்தன.

ஓசோன் தினத்தன்று நாம் மூன்று தசாப்த கால வெற்றியை கொண்டாடும் அதேவேளை சக்திவாய்ந்த காலநிலை-வெப்பமயமாதல் வாயுக்களாக இருக்கும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களை (எச்.எஃப்.சி) படிப்படியாகக் குறைப்பதன் மூலம் ஓசோன் படலத்தை தொடர்ந்து பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என உறுதிபூணுவோம். ஓசோனை குணப்படுத்தும் பணியைத் தொடருவோம்.