
இதோ மற்றுமொரு தேர்தல் களம் நம்மை நெருங்கி வருகிறது, விரைவில் நாடெங்கும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கி, மேலும் அரசியல்வாதிகளின் புன்னகையை தங்கிய சுவரொட்டிகளும் விளம்பர பதாதைகளும் நாட்டின் அனைத்து சுவர்களையும் பாதைகளையும் பாரபட்சமின்றி அலங்கரிக்க காத்திருக்கின்றன.
பிரபலமான இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், வெட்கக்கேடான மகத்தான தற்பெருமை பேச்சுகள், அரசியல் சொல்லாட்சி ஆகியவற்றைக் கொண்ட வண்ணமயமான பொதுப் பேரணிகள் மற்றும் இத்தனை நாள் சாமானியர்களாக நடாத்தப்பட்ட வாக்காளர்களை ஆட்சியை நியமிக்கும் கடவுள்களாக நோக்கும் தருணங்கள் வெகு தொலைவில் இல்லை.
தேர்தல் காலங்களின் போது இவ்வாறு நடப்பது ஒன்றும் புதுமையானோதோ அல்லது வழக்கத்திற்கு மாறானதோ அல்ல, ஆனால் அரசியல்வாதிகளின் இந்தத் தாராள மனப்பான்மைக்கும் ஓர் விலையுண்டு: மேலும் இந்த விலைப்பட்டியல்கள் பெரும்பாலும் இருண்ட நிழல்களின் பின்னே மறைக்கப்பட்ட பெரும் பண முதலைகளின் கரங்களினாலேயே வரையப்படுகிறது.
மறைக்கப்பட்ட கரங்கள்
இவர்கள்தான் தமது சொந்த நலன்களுக்காகவும் சுய இலாபங்களுக்காகவும் பந்தய குதிரை மேல் பணம் கட்டுவது போல் தமக்கு வேண்டப்பட்ட ஆட்சிக்கு வந்தபின் தமது தேவைகளை பூர்த்தி செய்ய உதவக்கூடிய வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதி உதவி செய்பவர்கள். இது பல உலக நாடுகளில் சர்வ சாதாரணமாக இடம்பெரும் ஓர் விடயமாகும், இதற்கு இலங்கை திருநாடு மட்டும் விதிவிலக்காகி விடுமா?
உதாரணமாக,ஐக்கிய அமெரிக்காவில் மில்லியன் கணக்கான டாலர்களை பிரச்சாரங்களின் போது செலவுசெய்கின்றனர், அதுவும் கோச் சகோதரர்கள் என்ற தனியார் நன்கொடையாளர்கள் பல ஆண்டுகளாக குடியரசுக் கட்சியின் கொள்கை மாற்றங்களிலும் ஆட்சி அமைப்புகளிலும் பெரிதும் செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர்.
எண்ணெய் வளங்களில் அதிக முதலீடு செய்யும் கோச் சகோதரர்கள் குற்றவியல் நீதி சீர்திருத்தம் மற்றும் ஐக்கிய கறுப்பின கல்லூரி நிதியம் உள்ளிட்ட நல்ல காரணங்களுக்காக தங்களின் பரந்த செல்வத்தை பயன்படுத்திக் கொண்டாலும், சுற்றுச்சூழல் மற்றும் வணிக ஒழுங்குமுறைக்கு எதிரான பல சர்ச்சைக்குரிய விடயங்களில் தசாப்த காலமக அவர்களுக்கு பாரிய பங்குண்டு என்று நன்கு அறியப்பட்டவர்கள் (ஐக்கிய அமெரிக்காவில் காலநிலை மாற்ற மறுப்புக்கு முதன்மை ஆதரவாளர்களாக இருப்பதும் மற்றும் இந்த விடயத்தில் அரசாங்க நடவடிக்கைகளை முடக்குவதற்கு செல்வாக்கு செலுத்துவதும் இதில் உள்ளடங்கும்).
ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் மற்றும் தேர்தலில் செல்வாக்குமிக்க மற்றொரு நன்கொடையாளர்கள் எவர்கள் எனின், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி முதலீட்டாளர்கள் ஆவர். குறிப்பாக அமெரிக்காவின் தேசிய துப்பாக்கி சங்கம் (என்.ஆர்.ஏ), இவர்களின் பங்கே அமெரிக்காவில் துப்பாக்கித் தடை சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்கள் நீண்டகாலமாக எதிர்ப்பதற்கு ஆதரவளிக்கக் காரணமாகும். உண்மையில், 2018 இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் போது, அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இக் குழுவினால் பாரிய அளவில் பயனடைபவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது மேலும் பலர் பல ஆண்டுகளாக இவர்களின் நிதி உதவிகளை அனுபவித்து வருகின்றனர் எனவும் இனங்காக்கணப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, அமெரிக்காவில் துப்பாக்கி ஒழுங்குமுறைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை, வெகுவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பிறகும் கூட.
ஐக்கிய அமெரிக்காவின் தேர்தல் நிதித் தகவல்கள் தேசிய தேர்தல் ஆணையத்தின் (எஃப்.இ.சி) இணையத்தளத்தில் வெளிப்படையாக கிடைத்தாலும், இலங்கையில் அவ்வாறான வெளிப்படைத்தன்மை, தேர்தல் செலவினங்களில் கட்டுப்பாடுகள், நியாயமான பொறுப்புக்கூறல்கள் என்பன இல்லாமையினால் இங்கு இந் நிதி உதவிகளை பெற்றுக்கொள்வதிலும் அதற்கு பகரமாக செய்யப்படும் விடயங்களிலும் அரசியல் கையாள்தல்களும் சூழ்ச்சிகளும் பாரிய அளவில் நடைபெறும்.

இலங்கையில் சர்வசாதனமாகிவிட்ட ஓர் விடயமாகும்.
புகைப்பட வடிவமைப்பு – thestranger.com & Roar / ஜேமி அல்போன்சஸ்
இலங்கை
உண்மையிலேயே வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், பிரச்சார நிதிக்கான கணக்குகள் மற்றும் நிலுவைகள் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் (1964) சேர்க்கப்பட்டன, ஆனால் 1978ம் ஆண்டு குடியரசு சட்ட அரசியலமைப்பின் போது அவை அவ் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழிருந்து அகற்றப்பட்டன.
1978 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அரசியலமைப்பு தான் விகிதாசார பிரதிநிதித்துவம் (பிஆர்) முறையைக் கொண்டு வந்தது, இதன் விளைவாக வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதி செய்வதற்காக அதிகளவில் செலவு செய்தனர் – ஐக்கிய அமெரிக்க தேர்தல் பிரச்சார ஆய்வாளர் ஜி. அலெக்சாண்டர் ஹியர்டின் வார்த்தைகளில், இது “சனநாயகத்தின் செலவு”.
ஒரு தேர்தலைத் எவ்வித தடையுமின்றி, பெரும் தொகை பணத்தை செலவு செய்து அத் தேர்தலை தந்திரமாக கையாள முயற்சிப்பது இன்று இலங்கையில் சாதாரண விடயமாகிவிட்டது, மேலும் தமது வாக்குகளுக்காக உலர் உணவுகள், மின்சார உபகரணங்கள் போன்ற இலவச பரிசுகளை பெற்றுக்கொள்வதை வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் அது இத்துடன் முடிவடையவில்லை சில தேர்தல் பிரச்சாரங்களின் போது சில அபத்தமான நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன: உதாரணமாக 2010 ஆம் ஆண்டில், (அப்போதைய) துணை மந்திரி ஒருவர் வானவூர்தி ஒன்றை 4,000 அமெரிக்க டாலர் செலவில் இரண்டு மணிநேரங்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகிக்கப் பயன்படுத்தினார், மேலும் 2014 ஆம் ஆண்டில், புடவைகளில் (மத அனுசரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் வெள்ளைத் துணி) வேட்பாளர் ஒருவரின் தேர்தல் முன்னுரிமை எண்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
மோசடிகள் மற்றும் முறைகேடுகள்
வரலாற்று ரீதியாக, இலங்கை அரசியலில் பெரும் இரு காட்சிகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும் இவ்விரு கட்சிகளுமே பாரிய தேர்தல் பிரச்சார நிதி மோசடி மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் என்பனவற்றில் இருந்து விதிவிலக்கு பெற்றவை அல்ல.
உதாரணமாக, கடந்த ஆண்டு நியூயார்க் டைம்ஸ், 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, ‘சீனத் துறைமுக கட்டுமான நிதியில் இருந்து பாரியளவு பணம் அப்போது தேர்தலில் இருந்த முக்கிய இரு கட்சிகளில் ஒன்றிலிருந்த ஒரு பிரபலமான அரசியல்வாதியின் பிரச்சார நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது’ என வெளிப்படுத்தியது.
பின்னர், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்த மற்றுமொரு நிறுவனம் (மத்திய வங்கியில் உள் வர்த்தக ஊழலில் சிக்கியுள்ள நிறுவனம்) மற்றுமொரு முகாமில் இருந்த பல அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதியளித்தது.
ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக பகிரங்கப்படுத்தப்பட்ட போதிலும், குற்றவாளிகளை விசாரிப்பதும் அவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதும் மிகவும் அரிதானதே – அதுவும் 2017 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரே கைது – இரு அரசு அதிகாரிகளுக்கு பிரச்சாரத்திற்காக நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதே.
ஒழுங்குமுறைமையின் அவசியம்
இலங்கையில் தேர்தல் நிதிச் சட்டங்கள் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், லஞ்ச ஒழிப்பு சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் உள்ளன இதுபோன்ற அதிகப்படியான விடயங்களை கையாள நடைமுறையில் இருந்தாலும் , இச் சட்டங்கள் போதுமான அளவு பயன்படுத்தபடுவதில்லை.
பொதுமக்களுக்கு இவ் விடயத்தில் அதிகளவு விழிப்புணர்வு இருந்தாலும், அதைவிட அக்கறையின்மை இன்னும் அதிகமாகவே உள்ளது. மேலும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்காக தேர்தல்களின் போது நிதி வெளிப்படைத்தன்மைக்கு சட்ட சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக அழைப்பு விடுத்திருந்தாலும், எந்த பொறுப்பு மிக்க குடிமக்களும், அரசியல்வாதிகளையும் வேட்பாளர்களையும் பொறுப்புக்கூற வைக்க எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை.
தேர்தல் ஆணையம், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பிற தேர்தல் ஆர்வலர்களுடன் கலந்தாலோசித்து தயாரித்த இரு செயல்திட்ட சட்டமுன்வரவுகளில் ‘தேர்தல் பிரச்சார நிதிச் சட்டம் ‘ மற்றும், கருத்துக் கணிப்பு கண்காணிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட மேலும் ஒரு சட்டம் ஆகியன, 2017 ஆம் ஆண்டிலிருந்து எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை – தேர்தல் ஆணையத்தின் தலைவர் திரு. மஹிந்த தேஷபிரியா அவர்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், அடுத்துவரும் பொதுத் தேர்தலுக்குள் அச் சட்டங்களை அமுல்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் எட்டாவது சனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான களம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேளையில், அக் களத்தில் பல புதிய வித்தைகளை வைத்து விளையாட முடிவு செய்துவிட்டனர். அவ்வித்தைகளில் ஒன்று “தூய்மையான”, பிளாஸ்டிக் இல்லாத பிரச்சாரம் ஆகும், ஆனால் பிரச்சாரத்திற்கு அளிக்கப்பட அத் தூய்மை அரசியலுக்கு அளிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.
தேர்தல்கள் உண்மையிலேயே சுதந்திரமாகவும், நியாயமானதாகவும், எவ்வித கையூடல்களும் அற்றதாக இருக்க வேண்டுமென்றால், வாக்குறுதிகள் யதார்த்தமானவையாக மாற வேண்டும், மேலும் தேர்தல் சட்டங்கள் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும், பெரும் பணத்தின் மூலம் மறைக்கப்பட்ட நிழற் கரங்கள் இனி அரசியற் சரங்களை கட்டுப்படுத்தக்கூடாது.