
கடந்து சென்ற முஸ்லிம்களுக்கான புனித மாதமான ரமழான் மாதம் இவ் வருடம் வழமையாக கொண்டாடப்படுவதை விட மிகவும் வேறுபட்ட முறையில் வித்தியாசமாக அனுசரிக்கப்பட்டது. தொழுகையாளர்களால் நிரம்பிவழியும் பள்ளிவாயில்கள், குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட இஃப்தார்கள், உறவினர்களின் வருகைகள் என்பவற்றுக்கு பதிலாக இவ் வருடம் தங்களது இல்லங்களிலேயே முஸ்லிம்கள், தமது நோன்பினை ஊரடங்கு உத்தரவுடன் பூர்த்தியாக்கினர். COVID-19 தொற்று பற்றிய கவலைகள் மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மைகள் என்பன இருந்தபோதிலும், சமூக உணர்வினை மீண்டும் கட்டியெழுப்பவும், அம் மாதத்திற்கே உரிய ஈகை உணர்வினை நிலைநாட்டி கொள்வதற்கும் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப இந் நோன்பு மாதத்தினை தங்களால் முடிந்தவரை சிறப்பாக கடந்திட இலங்கை முஸ்லிம்கள் புதிய வழி முறைகளை கடைபிடித்தனர்.

தொடர்ந்தும் தொடர்பில் இருத்தல்
அநேகமான முஸ்லிம்கள் இந்த ரமழான் மாதம், சமூக உணர்வு, சிறப்பு கூட்டுத் தொழுகைகள், உறவுகள் மற்றும் நண்பர்களின் ஒன்றுகூடல்கள் என்பன இல்லாமல் போனமை குறித்து ஏங்கிக்கொண்டிருந்தாலும், இத் தனிமைப்படுத்தலினால் இம் மாதத்திற்கே உரிய உணர்வினை அவர்கள் நிச்சயமாக அனுபவித்திருப்பார்கள். “ஒரு வகையில், நபி (ஸல்) அவர்களின் காலத்தை போன்று ரமழான் மாதத்தின் உண்மையான நோக்கத்தினை நாம் அடைந்திருக்கிறோம்” என இஸ்லாமிய அறிஞரும் பேச்சாளருமான ஷேக் முய்ஸ் புகாரி (32) அவர்கள் Roar Media விடம் கருத்துக்கூறினார். “அப்போது, ரமழான் மாதம் தனிமைக்குரிய மாதமாகும். உள-ஆராய்விற்கும் உள்முகச் சிந்தனைக்கும் அல்லாஹ்வுடனான நெருக்கத்தை அதிகரிப்பதற்குமுரிய காலமாகும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களும் தற்போதைய சூழ்நிலைக்கு அமைய எவ்வாறு தம்மை பொருந்திக்கொண்டார்கள் என்பதையும் அவர் விளக்கினார். “உலகம் முழுவதும் நாம், டிஜிட்டல் மயமாக்கலுக்கு உட்பட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். அறிஞர்கள், போதகர்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்கள் என அனைவரும் ஒன்லைன் மூலமாக சமூக உணர்வினை வழங்கிட இணையத்தை நாடியுள்ளனர். ”
வழக்கமாக வெள்ளிக்கிழமை தொழுகையின் போது வழங்கப்படும் சொற்பொழிவுகளை ஷேக் புகாரி அவர்களும் இன்ஸ்டாகிராமில் வேர்ச்சுவலாக நடத்தி வருகிறார். ஆனால் இச் சமூக உணர்வானது சமய ஒன்றுகூடல்களுக்கு அப்பாலும் பரந்து விரிந்துள்ளது. “எனக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உறவினர்கள் உள்ளனர், எனவே ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் இவ் ஒன்லைன் கூடல்கள் பயன்படுகின்றன. இதன்போது சிறு விடயங்களை மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, அதிர்ச்சியான தலைப்புச்செய்திகள் குறித்த மற்றும் அதிகரித்து வரும் எண்ணிக்கை குறித்த கவலைகளிலிருந்து எங்கள் மனதைத் திசைதிருப்ப இத் தொடர்புகளை பேணுகிறோம். ”
ஊரடங்கின் போது வந்த இந்த ரமழானானது நாம் மேம்போக்காக எடுத்துக்கொண்ட பலவிடயங்களை போற்றவும் மதிக்கவும் நம்மை தூண்டியுள்ளது. “பெரும்பாலும் நாம், எமது வெளியுலக நண்பர்களுடனோ அல்லது தொலைவிலிருப்பவர்களுடன் டிஜிட்டல் ஊடகம் வழியாகவோ அதிகளவில் தொடர்பிலிருக்கிறோம் என்பதே உண்மையாகும், ஆனால் எமக்கு அருகிலேயே இருப்பவர்களை விட்டும் மிகவும் தொலைவாகவே வாழ்கிறோம்” என ஷேக் புகாரி மேலும் கூறினார், “அச் சமூக உணர்வை மீண்டும் பலப்படுத்திட, நாம் முதலில் எமது சொந்த குடும்ப உறுப்பினர்களுடன் நாம் செலவழிக்கும் நேரத்தை நெஞ்சாரப் பேண வேண்டும்.”

ஒளிப்பட உதவி: sg.theasianparent.com
பன்மடங்காகியுள்ள கொடுப்பினைகள்
ரமழான் மாத நோன்புடன் சேர்ந்து சகாத் எனப்படும் ஈகை என்பதும் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். ஆகையால் இப் புனித மாதத்தில் முஸ்லிம்கள் தாராளமாக கொடை அளிக்க முனைகிறார்கள். ஏனெனில் இம் மாதம் அனைத்து நன்மைகளையும் நற்கூலிகளையும் கொடுப்பினைகளையும் பன்மடங்காக்கிடும். ஆதலால் தான், பாமிலி ரிலீப் (குடும்ப நிவாரணம்) என்ற தொண்டு நிறுவனத்தை நடாத்தி வரும் சாதிகா பவ்ஸுக்கு, இத் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியிலும் என்றைக்கும்விடவும் நன்கொடைகள் நிலையாக கிடைக்கப்பெறுவது பெரும் ஆச்சரியமாக இருக்கின்றது.
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட உடனே, பாமிலி ரிலீப் தொண்டு நிறுவனம் உலர்ப்பொருட்கள் பொதிகளுக்காக மட்டுமே நிதி திரட்டியது. அவர்களால் ஊரடங்கு உத்தரவு அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளவும், உலர்ப்பொருட்களை கொள்வனவு செய்யவும் முடிந்தபோதிலும் முக்கிய நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவதில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “நாங்கள் திட்டமொன்றை செயற்படுத்தும் போது, நன்கொடை வழங்கும் ஒவ்வொரு நன்கொடையாளருக்கும் அத் திட்டம் குறித்த அறிக்கை ஒன்றையும், ரசீது மற்றும் புகைப்படங்கள் இருப்பின் அவற்றையும் அனுப்பிவைப்போம். ஆயினும் இவற்றில் அதிகளவிலான வேலைகள் உள்ளன. மேலும் COVID-19 தொற்றுப்பரவலுக்கு மத்தியில், அவற்றை முழுமையாகச் செய்ய எங்களால் முடியவில்லை. ”
நாடு முடக்கப்பட்ட நிலையில் இருப்பதால், உணவுப் பொதிகளைத் தவிர வேறு எந்த தேவைக்கும் நன்கொடை பெறவில்லை என திருமதி. பவ்ஸ் அவர்கள் கருத்து தெரிவித்தார். “ஆனால், கடந்த சில நாட்களில், நாங்கள் ஏனைய தேவைகளுக்கும் கோரிக்கைகள் வைத்து வருகிறோம், அவற்றிற்கான நன்கொடைகளும் கிடைக்கப்பெறுகின்றன,” எனவும் அவர் தெரிவித்தார். “எனக்கு இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது, இருப்பினும் இதனை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, ஏனெனில் எந்த வியாபாரமும் சரியாக நடைபெறவில்லை. ஆயினும் இது முற்றிலுமாக வேறுபட்டதொரு மாதமல்லவா? இதில் அனைத்தும் பன்மடங்காக்கப்படுகிறது, ஆகவே அல்லாஹ் இதனையும் பன்மடங்காக பெருக்குகிறான், மாஷஹ்-அல்லாஹ்.” என மேலும் அவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கு உத்தரவுடன் அடக்கமான அமைதியான கொண்டாட்டங்கள்
இந்த ரமழான் மாதம் ஏனைய ரமழான்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் ஒருவிதமான சோர்வான மனநிலையுடன் கழிந்தபோதும், அநேகமான முஸ்லிம்கள் மறுபட்டவிதமாக இம் மாதத்தை கழிக்க முடிந்தது என்பதனை பாதகத்திலும் ஒரு சாதகம் எனக் கருதுகின்றனர். “இவ் வருடம் மிகவும் அமைதியாக உணர்கிறோம்” என ‘இஸ்லாமிக் கேர் கவுன்சில்” இன் ஆலோசகரும் மூன்று பிள்ளைகளின் தாயுமான பஸ்லியா உசேன் (52) அவர்கள் கருத்துத் தெரிவித்தார். “நாங்கள் பள்ளிவாயிலுக்குச் சென்று தொழுவதை மிகவும் விரும்புகிறோம், ஆயினும் தற்போது தொழுவதற்கும் திக்ர் [இறைவனை நினைவுகூருவதற்கும்] வைப்பதற்கும் அதிகளவான நேரம் கிடைக்கின்றது. பெரும்பாலான நேரங்களில் எமக்கு அதிகளவான வேலைகள் இருக்கும், ஆனால் இவ் வருடம் இறைவணக்கத்தில் அதிகளவிலான கவனம் செலுத்தப்பட்டது. அது சிறப்பானதாகும்.” என்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் பெரும்பாலான நேரங்களில், உறவினர்களை சந்திப்பார்கள், ரமழானில் அன்பளிப்புகளை வாங்கி வழங்குவார்கள். “எங்களுக்கு அவை மிகவும் விருப்பமானவை. ஆனால் இவ் வருடம், பொருட்கள் வாங்க கடைக்கு செல்லவில்லை ஆகையால் போக்குவரத்து இல்லை இதனால் சூழல் மாசுபாடும் இல்லை, எனவே இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்கள் நிச்சயமற்ற தன்மையுடன் காணப்பட்டபோதிலும், திருமதி. உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈகைப் பெருநாளை அவர்களால் முடிந்தவரை சிறப்பாக கொண்டாடினர். “நாங்கள் எங்களிடம் உள்ள சிறந்த ஆடைகளை அணிந்துகொண்டு, எங்களால் முடிந்தவரை சிறந்த முறையில் அதனை கொண்டாடுவோம், இன்ஷா-அல்லாஹ்,” என அவர் எங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார். “இவ் வருடம் அநேகமானவர்களால் தங்களது பண்டிகைகளை கொண்டாட முடியவில்லை, எனவே நாம் அவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக இந் நேரத்தில், பச்சாதாபம் மிகவும் அவசியமாகும்.”