இலங்கையின் தலைநகர் கொழும்பை பொறுத்தவரையில் மக்களின் அலுவலகப் பணிகள், பள்ளிகள், வியாபாரங்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்துடன் எந்நேரமும் பரபரப்பாக காணப்படுமொரு நகரம் ஆகும். இந்நகரம் அவ்வப்போது சில அரச தேவைகளின் பொருட்டு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதுமுண்டு. இன்று உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ள COVID-19 எனும் வைரஸ் தொற்றினால், நாடெங்கும் செயல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கொழும்பு நகரின் செயற்பாடுகள் அனைத்தும் முடங்கிப்போயுள்ளன.
கொழும்பிலிருந்து காலி செல்லும் பிரதான சாலையை வாகனங்கள் இன்றிப் பார்ப்பது மிக அரிது. ஆனால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக சாலைகள் வெறிச்சோடியுள்ளதை காணமுடிகிறது. அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட சில வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒளிப்படம் கொழும்பு 4 – பம்பலபிட்டியில் எடுக்கப்பட்டது.
சாலையில் ஆங்காங்கே ஒரு சில நபர்கள் மட்டுமே காணப்பட்டனர். படத்தில் உள்ள இந்நபர் மிதிவண்டியில் எரிவாயு சிலிண்டர் ஒன்றை ஏற்றி சென்றுகொண்டிருந்தார்.
கொழும்பு 3 -கொள்ளுப்பிட்டியின் சாலை ஓரத்தில், விற்பனை செய்வதற்காக தேங்காய்களை ஏற்றிச் செல்லும் சிறிய லொரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இருப்பிடமற்று சாலையோரங்களில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக ஒரு சிலர் துணிந்து வெளிவருவதை எங்களால் பார்க்கமுடிந்தது. அவர்கள் தெருவில் பசியோடு உள்ள வாயில்லா ஜீவன்களுக்கும் உணவளித்தனர்.
கொழும்பு 1 -கொம்பெனித் தெருவிலுள்ள தற்காலிக சிறியரக கடையொன்றில் இரண்டு விற்பனையாளர்கள் காய்கறிகளை விற்பனைக்கு தயார் செய்கிறார்கள்.
கொழும்பு 8 , பொரளை பகுதிக்குச்சென்றபோது சிறிய லொரி ஒன்று புதிய மீன்களை அங்குள்ள வீடுகளுக்கு விற்பனை செய்துகொண்டிருந்தது.
விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் காவல்துறைக்கு வலுவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. (இது பற்றிய மேலதிகத் தகவல்களை roar தமிழ் வழங்கும் Live Blog மூலம் அறிந்துகொள்ளலாம்.)
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தாலும், எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருந்தன. அதேசமயம் PickMe இன் மூலம் ஆர்டர்களை ஏற்றுக்கொள்வதற்கும் வழங்குவதற்கும் முச்சக்கர வண்டிகள் பயன்பாட்டிலிருந்தன.
ஊரடங்கு உத்தரவின் போதும் பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணியினை சீராகச் செய்ததை கவனிக்கக் கூடியதாயிருந்தது. – இந்த இக்கட்டான நேரத்திலும் கூட தங்கள் சேவையை சிறப்பாகச் செய்துவரும் அனைத்து தூய்மை பணியாளர்களும் எமது நன்றிக்குரியவர்களே.
கொழும்பு புறக்கோட்டையின் மத்திய வணிகப்பகுதியில் தனியொரு மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் சாலை வெறிச்சோடியுள்ளதை காணமுடியும்.
கொழும்பின் பிரதான சந்தை பகுதியான புறக்கோட்டையில் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமான முறையில் காணப்பட்டது. அங்கு பெரும்பாலான செயல்பாடுகள் தடையின்றி தொடர்ந்தன.
இங்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படாமல், மொத்த சில்லறை கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை நீங்கள் காணலாம்.
அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் லொரிகள் வழக்கம் போல சாலையை தடுத்தபோது, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் விரைவாக உள்நுழைந்தனர்.
அதேசமயம் ஏராளமான மொத்த சில்லறைக் கடைகள் திறந்திருந்ததை காணமுடிந்தது.
ஆனால் மறுபுறம், இந்நேரத்தில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் பல கடைகள் மூடப்பட்டிருந்தன. புறக்கோட்டையின் பிரதான கடைகளின் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது உணவு விநியோகிக்கச்செல்லும் மோட்டார் சைக்கிளொன்றைக் காணக்கிடைத்தது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி தொடர உள்ளது. மேலும் நாட்டின் பிறபகுதிகளில் அவ்வப்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு மறுபடியும் பிறப்பிக்கப்படுகிறது.
Covid-19 இனை முற்றிலும் இல்லாதொழிக்கும் வரை மக்களின் அன்றாட வாழ்வியல் பாதிக்கப்பட்டாலும், இந்த நோய்த்தொற்றிலிருந்து விடுபட அரச விதிகளுக்கும் சுகாதார விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டியது நம் அனைவரினதும் கட்டாயக் கடமையாகும்.