2020 புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 392,078 குழந்தைகள் பிறந்துள்ளன.
– ஐ.நா சபை
புத்தாண்டு தினத்தன்று உலகில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற தகவலை ஆண்டுதோறும் ஐ.நா. சபை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் எந்தெந்த நாடுகளில் எத்தனை குழந்தைகள் பிறந்தன என்ற தகவலை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. சபையின் கணக்கெடுப்பின்படி புத்தாண்டு தினமான நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் மூன்று லட்சத்து தொண்ணூற்றி இரண்டாயிரத்து எழுபத்தியெட்டு-392,078 குழந்தைகள் பிறந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
சீனாவை பின்தள்ளி முதல் இடத்தில இந்தியா
வழக்கமாக குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் முன்னிலை வகித்து வந்த சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் புத்தாண்டு தினத்தில் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளனர். இது புத்தாண்டு தின குழந்தைகள் பிறப்பு சதவிகிதத்தில் 17 சதவிகிதம் என கணிக்கப்பட்டுள்ளது.
சீனா நாட்டில் 46,299 குழந்தைகள் பிறந்து பிறப்பிடத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. நைஜீரியா 26,039 குழந்தைகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 16,787 குழந்தைகள் பிறப்புடன் 4-வது இடத்திலும், இந்தோனேசியா 13,020 குழந்தைகள் பிறப்புடன் 5-வது இடத்திலும் உள்ளன.
அமெரிக்காவில் 10,452 குழந்தைகள் பிறந்துள்ளன. இது புத்தாண்டு தின குழந்தைகள் பிறப்பில் 6-வது இடத்தில் உள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசில் 10,247 குழந்தைகள் பிறந்து 7வது இடத்திலும் எத்தியோப்பியாவில் 8,493 குழந்தைகள் பிறந்து 8வது இடத்திலும் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் மிக மிக பின் தங்கியுள்ளன என கணக்கிடப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டின் முதல் குழந்தை!
தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு பிஜி. இங்கு தான் 2020ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. 19 வயதான லைஸானி ரைசிலி என்பவருக்கே இக்குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவிற்கு பிறகு பத்து நிமிடங்கள் கழித்து பிறந்துள்ளது. இக்குழந்தை 2.9 கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக பிஜியில் உள்ள Nausori மகப்பேறு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த ஆண் குழந்தைக்கு Mitieli Digitaki என்று பெயர் வைத்துள்ளனர்.
2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளதாக ஐ.நா. சபை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதி புத்தாண்டு தினத்தன்று குழந்தை பிறப்பதை மிகவும் அதிர்ஷ்டகரமானதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் பல்வேறு நாடுகளில் கருதப்படுகிறது. இதனால் சில நாடுகளில் புத்தாண்டு தினத்தன்று சிசேரியன் மூலம் ஏராளமான பெண்கள் குழந்தை பெற்றிருப்பதாக ஐ.நா. சபை கணக்கெடுப்பு அறிவித்துள்ளது.
குழந்தைகளின் இறப்பு வீதம்!
2018 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் பிறந்த குழந்தைகளில் 2.5 மில்லியன் குழந்தைகள் ஒரு மாதம் முடியும் முன்னரே இறந்துவிட்டனவாம். குறை பிரசவம், பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் sepsis என்ற நோய் தொற்று இதற்கு காரணமாய் அமைந்தன என்கின்றது ஐ.நா சபையின் அறிக்கைகள். அதுமட்டுமன்றி ஒவ்வொரு ஆண்டும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்து பிறக்கின்றன என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பதற்கும், பிரசவத்தின் போது நிகழும் தவறுகளை குறைக்கவும், கிருமி தொற்றுகள் போன்ற அனைத்து மகப்பேற்று பிரச்சினைகளையும் தடுப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் கூடிய கவனம் செலுத்தப்படும் என ஐ.நா சபையின் யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதற்காக யுனிசெப் அமைப்பு ஆரம்பித்த பிரச்சார பணிதான் UNICEF’s Every Child Alive. இதன் மூலம் மகப்பேற்றின் போது நிகழும் பிரச்சினைகளை முடிந்தளவு குறைக்க முடியும் என்கின்றது ஐ.நா சபையின் யுனிசெப் அமைப்பு.