Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

356 மீற்றர் உயரத்தில் வான்தொடும் கொழும்பு!

கொழும்பு மாநகரின் அழகை ரசிக்க 356மீற்றர் உயரத்தில் மலர்ந்தது ஒரு தாமரை கோபுரம். தெற்காசியாவிலேயே மிக உயரமானதும் உலகின் 19ஆவது பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மக்கள் பார்வைக்கு இன்னும் திறக்கப்படாத தாமரை கோபுரத்தை பற்றி இதோ முழுமையான தகவல்கள்.

எப்படி ஆரம்பமானது…

2008ஆம் ஆண்டில் கொழும்பில் தொலைத் தொடர்பை ஒழுங்குபடுத்த பல் செயற்பாட்டு கோபுரம் (Multi Functional Tower) ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்று அப்போதிருந்த மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவிடம் வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டது. 

வேண்டுகோள் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த திட்டத்திற்கான தனித்துவமான வடிவமைப்பு குறித்த தொழில்முறை ஆலோசனைகளை வழங்குவதற்கான வாய்ப்பு, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்திற்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் குறித்த கட்டிடக்கலை பீடம், திட்டத்தினையும் செலவுத்திட்டத்தினையும் மற்றும் செலவு கட்டுப்பாடு குறித்த ஆலோசனைகளையும் வழங்கியது. 

சிரேஷ்ட பேராசிரியர் சமித்த மனவாடு மற்றும் மொரட்டுவை கட்டிடக்கலை பீடம்  

பல்கலைக்கழக ஆலோசகர்கள் குழுவில் ஓய்வுபெற்ற பேராசிரியர் நிமல்.டி.சில்வா, சிரேஷ்ட பேராசிரியர் சமித்த மனவாடு மற்றும் பேராசிரியர் சித்ர வெடிக்கற ஆகியோர் அடங்கியிருந்தனர். இதனை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை அமைச்சு தெரிவித்திருந்தது..     

தாமரை கோபுர இடம்

பெய்ரா ஏரியின் நீர்முனை- D.R. விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10

நாட்டின் பொருளாதார தலைநகரான கொழும்பின் புறநகர்ப் பகுதிக்குள் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப முடிவுக்குப் பிறகு, இலங்கை அரசாங்கம் அந்த இடத்தை நகரின் மையப்பகுதிக்கு மாற்றுவதற்கான திட்டங்களை மேற்கொண்டது. அந்தத் திட்டத்தில் பெய்ரா ஏரியின் நீர்முனை என்று பெயர்பெற்ற கொழும்பு-10, D.R. விஜேவர்தன மாவத்தையில் தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

கட்டுமானப் பணி ஒப்பந்தம் 

சீன தேசிய மின்னணு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கழகம் (China National Electronics Importers & Exporters Corporation மற்றும்  ஏரோஸ்பேஸ் லாங் மார்ச் சர்வதேச வர்த்தக நிறுவனம் ( Aerospace Long March International Trade Co. Ltd. (ALIT) 

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அமைச்சரவை இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை சீன தேசிய மின்னணு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கழகம் (China National Electronics Importers & Exporters Corporation (CEIEC) அதனுடன் ஏரோஸ்பேஸ் லாங் மார்ச் சர்வதேச வர்த்தக நிறுவனம் ( Aerospace Long March International Trade Co. Ltd. (ALIT) ஆகியவற்றுக்கு வழங்கியது.

அடிக்கல் நாட்டல்   

2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழா 

ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவை தொடர்ந்து கொழும்பு தாமரை கோபுர திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அவரது ஆட்சிக் காலத்தில் இருந்த அமைச்சர் பஷில் ராஜபக்ச, அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள், சீன அரச தூதுவர், CEIEC இன் தலைவர் Mr. Chen Xu மற்றும் ALIT நிறுவனத்தின் உப தலைவர் என பலர் இதில் கலந்துகொண்டனர். 

தாமரை கோபுர அடித்தளம் 

இந்த தனித்துவமான தாமரைக் கோபுர வடிவமைப்பின் கீழ் தளத்தில், பிரதான அடித்தளம் உட்பட நான்கு மாடிகளைக் கொண்டுள்ளது. 

தாமரைக் கோபுர வடிவமைப்பின் பிரதான அடித்தளம்

அடித்தளம் :- பிரதான சமையலறை, காற்றுப் பதன கட்டுப்பாட்டுத் தொகுதி, மின் இயக்கத் தொகுதி, மின் உயர்த்தி இயக்க தொகுதி 

தரைத் தளம் :- விருந்தினர்களுக்கான பிரதான நுழைவு வாயில் அவர்களுக்கான காத்திருப்பு அறை, முக்கிய பிரமுகர்களுக்கான (VIP) நுழைவு வாயில் அவர்களுக்கான காத்திருப்பு அறை, ஷோப்பிங் மால் மற்றும் தகவல் சேவை முகப்பிற்கு இந்த தளம் முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

முதல் தளம் :- இது முழுக்க முழுக்க விற்பனைக்கூட தொகுதியாக அமைந்துள்ளது. 

இரண்டாம் தளம் :- இங்கும் ஒரு ஷோப்பிங் மால் அதனுடன் முக்கிய பிரமுகர்களுக்கான ஒரு சிறப்பு இடம் அமைந்துள்ளது.

மூன்றாம் தளம் :- இதை திறந்தவெளி கூரை அல்லது மாடி எனலாம். திறந்தவெளி நிகழ்ச்சிகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தாமரைக் கோபுர தண்டு 

200m உயரம் கொண்ட பூவின் காம்பு போல் காட்சியளிக்கும் தாமரை கோபுர தண்டு 

பூவின் காம்பு போல் காட்சியளிக்கும் இந்த பகுதி 200m உயரம் கொண்டது. மேல் மாடிகளுக்கு செல்வதற்கான அதிவேக மின் உயர்திகளுக்கும் மற்றும் படிக்கட்டுகளும் இந்த பகுதி அமைந்துள்ளது. கோபுரத்தில் ஐந்து மின் உயர்த்திகள் இயங்குகிறது. இவற்றில் மூன்று மின் உயர்த்திகள் வினாடிக்கு ஏழு மீட்டர் வேகத்தில் செயல்படுமாம். அதாவது ஒரு நபர் 40 விநாடிகளுக்குள் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும். இவை இலங்கையின் அதிவேக மின் உயர்த்திகள் என தெரிவித்துள்ளனர்.  

தாமரை கோபுர மனை – டவர் ஹவுஸ் (Tower House)

டவர் ஹவுஸ் என்பது கோபுரத்தின் மொட்டு வடிவ பகுதியாகும். இது 215 மீ மட்டத்தில் தொடங்கி 260 மீ உயரம் வரை செல்லும் 09 நிலைகளைக் கொண்டுள்ளது. இதன் தாமரை மொட்டு வடிவ பகுதியில் மாறும் வண்ணங்களுடன் கூடிய  LED மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதான் பார்வையாளர்களை கவரப்போகும் மிக முக்கிய பகுதி எனலாம்.  

முதல் நிலை : – வானொலி ஒலிபரப்பு நிலையமும் அதன் கட்டுப்பாடு அறைகளும்.  அதன் மொத்த பரப்பளவு 7670 சதுரடி ஆகும். 

இரண்டாம் நிலை : – தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையமும் அதன் கட்டுப்பட்டு அறைகளும். அதன் மொத்த பரப்பளவு 9960 சதுரடி ஆகும்.

மூன்றாம் நிலை : – விருந்து அரங்கு (banquet hall) ஒரு விழாவில் 250 விருந்தினர்களுக்கு அமரும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த  பரப்பளவு 7350 சதுரடி ஆகும். 

டவர் ஹவுஸ் எனும் தாமரை கோபுரத்தின் மொட்டு வடிவ பகுதி

நான்காம் நிலை : – விருந்து அரங்கு (banquet hall) விழாவில் 280 விருந்தினர்கள் அமரும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதன் மொத்த பரப்பளவு 7850 சதுரடி ஆகும். 

ஐந்தாம் நிலை : –  சுழலும் உணவகம். உணவருந்தும் போது கொழும்பு நகரத்தைப் பார்த்து ரசிக்க முடியும். இது தனது ஒரு சுழற்சியை முடிக்க 90 நிமிடங்கள் எடுக்கும்.   

ஆறாம் நிலை : –  முக்கிய பிரமுகர்களுக்கான அறைகள். மொத்தமாக 06 விருந்தினர் அறைகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 8330 சதுரடி ஆகும். 

ஏழாம் நிலை : –  இது திறந்தவெளி ஆகும். பார்வையாளர்கள் நின்று கொழும்பு நகர்ப்பகுதியின் பரந்த காட்சியை 245 மீட்டர் உயரத்தில் நின்று ரசிக்கக் கூடியதாக அமையும். இதன் மொத்த பரப்பளவு 3045 சதுரடி ஆகும். 

தாமரை கோபுரத்தின் உச்சி – அலைக்கம்பம் 

இது கொழும்பு தாமரை கோபுரத்தின் முக்கிய அம்சமாகும். இது கோபுரத்தின் மேல்மட்டம். அதாவது 263m முதல் 356m வரை காணப்படுகின்றது. இந்த அலைக்கம்பத்தின் மொத்த நீளம் சுமார் 90m எனக் கூறப்படுகின்றது. 

தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பு சேவைகளுக்கான மையமாக செயற்பட போகும் அலைக்கம்பம்  

அலைக்கம்பத்தின் பின்னணி

உலகின் அனைத்து விருத்தியடைந்த  நாடுகளிலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒளிபரப்புக் கோபுரம் காணப்படுவது ஒரு பொதுவான அம்சமாகும். இத்தகைய கோபுரங்களின் முக்கிய நோக்கம் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பு சேவைகளுக்கான மையமாக செயல்படுவது ஆகும். ஒற்றை அலைக்கம்பத்தை பயன்படுத்தி தெளிவான ஒளி மற்றும் ஒலிப்பரப்புக்களை மக்களுக்கு வழங்க முடியும். இதன் உட்கட்டமைப்பு பகிர்வு காரணமாக ஒளிபரப்பாளர்களுக்கு குறைந்தளவு மூலதனமே செலவாகிறது. இனி கொழும்பு மாநகரின் தொலைக்காட்சி வானலை சேவைகள் இன்னும் தெளிவான முறையில் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நம்புகிறது.

தாமரை கோபுரம் – திறப்பு விழா 

தாமரை கோபுர திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

7 வருட கால உழைப்பு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 16 ஆம் திகதி கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு ஆரம்பமானது நிகழ்வு. மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் Cheng Xueyuan, சபாநாயகர் கரு ஜெயசூரிய அவர்கள் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதி மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.   

தாமரை கோபுர திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை

 

வானவேடிக்கைகளுடன் திறந்து வைக்கப்பட்ட தாமரை கோபுரம்

வானவேடிக்கைகள் பட்டாசுகள் என வண்ணமயமாக தாமரை கோபுரம் மலர்ந்தது. தாமரை கோபுரத்தின் உத்தியோகபூர்வ திறப்பைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.   

வரவு செலவு திட்ட மதிப்பீடு

இந்த கோபுர நிர்மாணத்திற்காக 104.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷமால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சீன அரச வங்கியான எக்சீம் (EXIM) வங்கியினால் வௌிநாட்டு கடன் அடிப்படையில் 67 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவே ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தாமரை கோபுரம் தற்போதைய நிலை 

கொழும்பு தாமரைக் கோபுரம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் பார்வைக்கு அனுமதியை வழங்க இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாமென குறிப்பிடபட்டுள்ளது. தெற்காசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரமான இவ் தாமரை கோபுரம்  சுற்றுலாப் பயணிகளையும் கவரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

Related Articles