
இலங்கையின் எட்டாவது உத்தியோகபூர்வ ஜனாதிபதியை நியமிப்பதற்கான தேர்தல் நடைபெற இன்னும் ஒரிரு நாட்களஏ மீதமுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு தமது வாக்குகளை நியாயமான முறையில் வழங்குவற்கு இடமளிப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஏறக்குறைய 16 மில்லியன் வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கவுள்ளனர். 1982 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஜனாதிபதி ஒருவரை நியமிக்க முதன்முதலில் நடந்த தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களை விட இது இரு மடங்கு அதிகமாகும்.
இது மெய்யாக இருந்தபோதிலும், இலங்கையில் பலர் இன்னும் ‘வாக்களிக்க உரிமையற்றவர்களாகவும்’ மேலும் பல்வேறு காரணங்களால் இந்த அரசியல் செயற்பாட்டில் பங்கேற்று ‘வாக்களிக்க முடியாதவர்களாகவும்‘ இருக்கிறார்கள்.
இத் தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து விலக்கப்பட்ட, மறக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களைப் பற்றிய தகவல்கள் இங்கே.
18+

இலங்கை அரசியலமைப்பின் படி இலங்கை பிரஜை ஒருவர் 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் வாக்களிக்கும் தகுதியைப் பெறுகிறார் (தகுதி நீக்கம் செய்யப்படாத வரை). இருப்பினும், தேர்தல் பதிவுகள் ஒவ்வொரு வருடமும் அவ் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு முன்பு 18 வயது பூர்த்தியாகும் வாக்காளர்களின் விபரங்களுடன் ஒக்டோபர் மாதமே புதுப்பிக்கப்படுகின்றன. இதனடிப்படையில் ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 18 வயதைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் தற்போது 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியவர்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதியை பெறுகிறார்கள் என்பதனால் ‘வாக்களிக்கும் உரிமை’ பெறும் புதிய வாக்காளர்கள் பலருக்கு தங்கள் உரிமையைப் பயன்படுத்துவது சாத்தியமற்றுப் போகிறது.
இம் மாதம் (நவம்பர்) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்த ஆண்டு இப் பிரச்சினை மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. கால அவகாசமின்மை காரணமாக, புதிதாகத் பதியப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கு பதிலாக, 2018 ஆண்டிற்கான தேர்தல் பதிவுகள் பயன்படுத்தப்படும். அதாவது, 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2018 அக்டோபருக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட முதல் முறையாக வாக்காளர்கள் மட்டுமே இத் தேர்தலின் போது வாக்களிக்கும் தகுதியைப் பெறுவார்கள்.
கட்டுப்படுத்தப்பட்டவர்கள்

சட்ட ரீதியாக வாக்களிக்க தகுதியிருந்தும், பல்வேறு நடைமுறை காரணங்களுக்காக தங்கள் உரிமையைப் பயன்படுத்த முடியாத ஒரு பிரிவினரும் மக்கள் தொகையில் உள்ளனர். அருகிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியாத நடமாற்றத் திறன் குறைந்த விசேட தேவையுடையவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் வயோதிபர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர்.
உதாரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. மற்றும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் பல முதியவர்கள் அநேகமாக மறக்க மற்றும் புறக்கணிக்கப்படுகிறார்கள். குறிப்பாக அவர்கள் வாழும் பராமரிப்பு இல்லம், அவர்களது வாக்குப் பதிவு செய்யப்பட்ட வசிப்பிடம் என்பன வெவ்வேறு பிரதேசங்களில் காணப்படுவதாலும் இந்நிலைமை உருவாகிறது.
அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளில் கடமையாற்றுபவர்கள்

அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவதனால் பலருக்கு தேர்தல் நாளில் வாக்களிக்க முடிவதில்லை மற்றும் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள வாக்குச் சாவடிக்குச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்காத வேறு முக்கிய பணிகளில் ஈடுபடுவர்களும் உள்ளனர்.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அன்றாட மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், நேரப்பட்டியலின் படி பணிபுரியும் பாதுகாப்புப் பணியாளர்கள், சுங்க அதிகாரிகள் மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், புகையிரத மற்றும் பேருந்து சேவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் என்பவர்கள் உள்ளடங்குவர்.
சிறைச்சாலை ஊழியர்கள், பொலிஸ் படை மற்றும் ஊர்காவற் பாதுகாப்புப் படை (CDF) உறுப்பினர்கள், தேர்தல் கடமைகள் மற்றும் அவதானிப்புகளில் ஈடுபடும் அதிகாரிகள், தேர்தல் களங்களில் நேரடியாக பணிபுரியும் ஊடகப் பணியாளர்கள் ஆகியோருக்கும் வாக்களிப்பது கடினமாக அமைகிறது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மட்டுமே அஞ்சல் மூலம் தமது வாக்குகளை வழங்க முடியும். இவ் ஆண்டு ஒக்டோபர் 31ம் திகதி மற்றும் நவம்பர் முதலாம் திகதி ஆகிய தினங்களில் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெற்றது. இதன் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நவம்பர் 7ம் திகதி வரை தொடரும். இருப்பினும், தபால் வாக்களிப்புக்கு தகுதி பெறுவது எதனையும் உறுதிப்படுத்தாது ஏனெனில் இன்னும் பலருக்கு தங்களது தபால் மூல வாக்களிப்பு உரிமைகளை சரிவர பயன்படுத்த முடிவதில்லை.
மேலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. வாக்காளர் ஒருவருக்கு அவரது பணியிலிருந்து விடுப்பு தேவைப்படும் கால அவகாசம் மற்றும் அதன் விளைவாக அவருக்கு ஏற்படும் ஊதிய இழப்பு என்பனவும் இதில் அடங்கும். மேலும் நிறுவன முகாமைத்துவமும் நிறுவன உரிமையாளர்களும் அவர்களது ஊழியர்களுக்கு, அவர்களது வாக்குகளை வழங்க, அவர்களது வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மாவட்டங்களுக்கும் பிரதேசங்களுக்கும் பயணம் செய்வதற்கும் வாக்களிப்பதற்கும் தேவைப்படும் நேர அடிப்படையில் அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் எனினும் பல சந்தர்பங்களில் அது அவ்வாறு நடைபெறுவதில்லை.
புலம் பெயர்ந்த பணியாளர்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும் கல்விகற்கும் பிரஜைகள், பாதுகாப்பு உறுப்பினர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்கள் அல்லது அமைதி காக்கும் படையினர் உள்ளிட்டோர் இலங்கையில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலிலும் வாக்களிப்பு நடவடிக்கைகளில் உள்ளடக்கப்படுவதில்லை.
மற்ற நாடுகள் வாக்குப் பதிவுக்கான பௌதீக தடைகளை கடக்க பேச்சுவார்த்தை நடாத்தி அதன் விளைவாக அந் நாடுகளின் தூதரகங்களில் அல்லது அதற்கென நியமிக்கப்பட்ட பிற இடங்களில் வாக்களிப்பு, இணைய வாக்களிப்பு, தொலை நகல், பிரதிநிதி வாக்களிப்பு அல்லது அஞ்சல் மூலம் வாக்களிப்பு போன்ற பல சந்தர்ப்பங்களை அவர்களது பிரஜைகளுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நிலையில் இலங்கை அவ்வாறான வாக்காளர்களை தேர்தலில் உள்ளடக்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.
2017 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக பயணம் செய்தவர்களில் 55 சதவீதமானவர்கள் தேர்ச்சியற்ற தொழிலாளர் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் பிரிவுகளுக்குள் உள்ளடங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மதிப்பிட்டுள்ளது. இதில் அண்ணளவாக 200,000 க்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய கிழக்கு, ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக பயணம் செய்கிறார்கள்.
வதிவிடமற்றவர்கள் மற்றும் உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள்

1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இல. வாக்காளர் பதிவுச் சட்டத்தின்படி, குடியிருப்பு முகவரி இல்லாதவர் வாக்களிக்க தகுதி பெறமாட்டார்கள். இதனடிப்படையில் , தேர்தல் ஆண்டில் ஜூன் முதலாம் திகதிக்கு முன் வதிவிடமற்ற பிரஜையென அறியப்படும் எவரும் தேர்தல் பதிவேட்டில் இருந்து விலக்கப்படுவர்.
இக் காலகட்டத்தில் வதிவிடமற்றவர்களைப் போல் சில சந்தர்ப்பங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களும், பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கில் பிரதேசங்களில் அதிகமாக வாழும் இவர்கள், நில இழப்பு (முகவரிகள்), தேசிய அடையாள அட்டை இன்மை, போக்குவரத்துச் சிக்கல் போன்றவற்றால் வாக்களிப்பதில் சிக்கல்களை எதிநோக்கிறார்கள்.
இலகுவாக வாக்குப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், வாக்களிப்புக்கு சமூகமளிக்க போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்வதன் மூலமும், புதிய வாக்காளர்களாக நபர்களை பதிவு செய்வதன் மூலம் புதிய குடியிருப்பு முகவரிகளை வழங்குவதன் மூலமும் இடம்பெயர்ந்தோரை இத் தேர்தலில் இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், இடம்பெயர்ந்தோருக்கு தமது வாக்குகளை வழங்குவது இன்னும் பெரும் பிரயார்த்தனமாகவே உள்ளது.
இதற்கிடையில், வதிவிடமற்ற நபர்களை தேர்தல் பதிவேட்டில் சேர்க்க இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
மேலும் இந் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் பொறுப்புகளுக்கு அப்பாற்பட்டது, இதற்கு சட்டத்தில் மாற்றமும், கிராம அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.
வாக்களிப்பு நடவடிக்கைகள் முறையாக நடைபெறாவிடின் குடிமக்கள் அவர்களுக்குரிய மாவட்ட அதிகாரிக்கு அல்லது தேர்தல் செயலகத்திற்கு தங்களது புகார்களை வழங்கலாம்.
ஆனால் ஏற்கனவே அங்கீகரிக்கப்படாத வாழ்வொன்றை வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது கேள்விக்குரிய விடயமாகும்.
திருநங்கையர்

இலங்கையில், பாலினத்தை மாற்றுவதற்கான தெளிவானதொரு சட்ட அமுலாக்கம் நடைமுறையில் இல்லை. மற்றும் திருநங்கைகள் தமக்கு விருப்பமான பெயர் மற்றும் பாலினத்தை பிரதிபலிக்கும் வண்ணமான தேசிய அடையாள அட்டையையோ அல்லது பிற உத்தியோகபூர்வ ஆவணங்களையோ அரிதாகவே பெற்றுக்கொள்கின்றனர்.
இதனடிப்படையில் தேர்தலொன்றின் போது திருநங்கைகள் தங்களின் அசல் தேசிய அடையாள அட்டைகளுடன் வாக்களிக்க வேண்டும். மேலும் அவர்கள் பெரும்பாலும் தேர்தல் அதிகாரிகளின் தன்னிச்சையான, தனிப்பட்ட கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் – இதன் விளைவாக பலர் தேர்தல் செயற்பாடுகளில் பங்கேற்பதிலிருந்தும் தங்கள் உரிமையைப் பயன்படுத்துவதிலிருந்தும் விலகுகிறார்கள்.
இலங்கையில் மனித உரிமைகள் ஆணையத்தினால் (HRCSL) சுகாதார அமைச்சகத்திற்கு முன்மொழியப்பட்ட ‘பாலின அங்கீகார சான்றிதழ்’ இன்னும் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் ஒப்புதலைப் பெறவில்லை.
பங்களாதேஷ் தனது வாக்காளர் பட்டியலில் ‘மூன்றாம் பாலினம்’ வகையை அங்கீகரித்துள்ள நிலையிலும், இந்தியாவின் டெல்லியானது, திருநங்கைகளை அரசியல் செயற்பாடுகளில் சேர்க்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கை இன்னமும் இந்த நீண்டகால பாகுபாடுகளைச் சமாளிக்க விரிவான சீர்திருத்தங்கள் எவற்றையும் கொண்டு வரவில்லை.
பிக்குணிகள் (பௌத்த பெண் துறவிகள்)

இலங்கையில் உள்ள மதகுருமார்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு ஆட்பதிவு திணைக்களத்திற்கு அவர்களுக்குரிய தனி சான்றிதழை வழங்க வேண்டும். இதில் புத்த பிக்குகள் சமனேரா சான்றிதழை அல்லது உபசம்பதா சான்றிதழை வழங்க வேண்டும்.
இருப்பினும், இலங்கையில் பெண் துறவிகளுக்கான துறவற ஒழுங்கு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் அவர்களது இருப்பை எவரும் எந்தவித நோக்கத்திற்காகவும் பொறுட்டுத்துவதில்லை. இதனால் பிக்குனிகளுக்கு தேசிய அடையாள அட்டை ஒன்றை பெறுவதும் சிரமமான விடயமாகும்.
இவ்வாறு இச் சமூகம் பாரியளவில் புறக்கணிக்கப்படுவதாலும், பரீட்சை மையங்களில் பொருத்தமான அடையாளத்தை சமர்ப்பிக்க முடியாததாலும், கல்வியை முடிக்க முடியாதவர்களாகவும் , கடவுச்சீட்டு ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாவும் மற்றும் வாக்களிப்பதன் மூலம் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்க முடியாதவர்களாகவும் வாழ்கின்றனர்.
ஏதிலிகள்

பாதுகாப்பு கோரி பிறநாடுகளில் ஏதிலிகளாக புகலிடம் கோரிச் சென்று ஆனால் தஞ்சம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையற்ற நிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களின் சொந்த நாட்டின் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.
ஆனால் சில நாடுகள் இந்த ஏதிலிகளை ஏற்றுக் கொண்ட போதிலும், இந்தியாவைப் போன்ற சில நாடுகள் இவர்களை இன்னும் தற்காலிக முகாம்களிலும் தங்குமிடங்களிலும் தங்கவைத்துள்ளன.
இலங்கைத் தமிழ் ஏதிலிகள் சிலர் – தற்போதும் 90,00 – 100,000 பேர் வரையிலானவர்கள் பிரதானமாக தமிழ்நாட்டில் (மற்றும் கேரளாவிலும்) வாழ்கின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் ஏதிலிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் அவர்களின் சொந்த நாட்டு அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்க முடியாத நிலை நீடிக்கின்றது.
இவ் ஏதிலிகள் படிப்படியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டாலும், திரும்பி வந்தவர்கள் நிரந்தரமனதொரு குடியிருப்பு இல்லாமை, தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்குத் தேவையான பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களைப் பெற இயலாமை மற்றும் பிற பிரச்சினைகள் என்பனவற்றால் தங்களது வாக்குகளை பதிவு செய்ய போராடவேண்டியுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்கள்

இலங்கையில் விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குரிய வசதி வாய்ப்புக்கள் மிகவும் அரிதாகும், அதைவிட வாக்களிப்பதற்கான வசதிகள் இன்னும் மோசமானவை. பொதுவாக தேசிய பாடசாலைகளே வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும், அங்கு விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் காணப்படுவதில்லை.
பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாற்றுத் திறனாலிகளால் தங்களுக்குரிய வாக்குச் சாவடிகள் அமைந்திருக்கும் பகுதிக்கோ அதன் அருகிலேயோ பயணிக்கும் போது பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். மேலும் வாக்குச் சாவடிகளிலிருந்து அரை கிலோமீட்டருக்குள் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாத காரணத்தால் அவற்றில் பயணம் செய்யக்கூடியவர்களும் பல சிரமங்களுக்கு முகம்கொடுக்கிறார்கள்.
விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்கெடுப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு சிறப்பு வாகன அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் இதற்கு கூடுதல் காகிதப்பணி தேவைப்படுகிறது இதனால் இந்தத் தேர்வுஉரிமை பெரும்பாலும் உதாசீனப்படுத்தப்படுகிறது, இதன் விளைவாக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஓர் சமூகம் மேலும் புறக்கணிக்கப்படுகிறது.
மேலும் விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத் தேர்தல் செயற்பாடுகளில் எவ்வாறு ஈடுபடவேண்டும் என்பதனை தீர்மானிக்க தேவையான தகவல்கள் அவர்களுக்கு இலகுவான முறையில் கிடைக்கப்பெறுவதில்லை. சிறப்பு உதவி சாதனங்கள் பயன்படுத்தல், பிரெயில் பயன்படுத்தல், காட்சி உதவி மற்றும் செவிப்புலன் சாதனங்கள் பயன்படுத்தல், தொடர்பாடல் மற்றும் திரைவாசிப்பு சாதனங்கள் மிக அரிதாகவும் அல்லது முற்றிலுமாக பயன்படுத்தப்டாமலும் உள்ளது.
விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்கு விருப்பமாயின் அவர்களது வாக்குச் சீட்டைக் குறிக்க மற்றொரு நபரின் உதவியைப் நாடலாம், இருப்பினும் இதன் மூலம் ‘ரகசிய’ வாக்கெடுப்பு எனும் கருத்து மாற்றமடைகிறது. விசேட தேவையுடையவர் மற்றும் மாற்றுத் திறனாளி என உறுதிப்படுத்தும் ‘சான்றிதழை’ பெறவும், அவருக்கு துணை புரியப்போகும் நபரை பரிந்துரைக்கவும் தேவையான ஆவணங்களை தயார்செய்வதில் இருக்கும் சிரமத்தினால் இவ் வாய்ப்பு அநேகமானவர்களால் கருத்திற் கொள்ளப்படுவதில்லை.
சிறைக் கைதிகள்

அரசியலமைப்பின் 89 வது பிரிவு, தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட முடியாத கைதிகளைப் பற்றி குறிப்பிடுகிறது உதாரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டோர். எவ்வாறாயினும், ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பு இல்லாததால், வாக்களிக்க உரிமையுள்ளவர்களுக்கு அது சாத்தியமற்றுப்போகிறது. குறிப்பாக அவர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு அமைவதில்லை.
நிர்வாகமுறைச் சிக்கல்கள்

மிக அண்மையில், பொருத்தமான பதிவு முறையைப் பின்பற்றிய போதிலும், பெயர்கள் தேர்தல் பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் பல பதிவு செய்த வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் புகார்கள் வந்துள்ளன.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்த புகார்கள், கிராம சேவக அலுவலக மட்டத்தில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டுகின்றன. மேலும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இதுபோல் இன்னும் பலர் தமது வாக்களிக்கும் உரிமையை இழந்திருக்கக்கூடும், இருப்பினும், அவர்கள் எவரும் எவ்வித கேள்விகளையும் இன்னும் எழுப்பவில்லை.
இந்த சம்பவங்களை ஆராய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆயினும் இந்த வாக்காளர்களுக்கு எவ்விதத்தில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றி தகவல்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.