“சீனாவின் ‘Yuan Wang 5’ எனும் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நாளை (ஆகஸ்ட் 11, 2022) வருக்கின்றது” எனும் தகவல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதென்றே கூற வேண்டும். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் சீன கப்பலின் வருகை, இலங்கை மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகலாம் என இந்திய உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW) இலங்கைக்கு எச்சரிக்கை குறிப்பொன்றையும் அனுப்பியுள்ளது.
இந்தியாவிற்கு எவ்வாறு அச்சுறுத்தலாகும்?
இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் கப்பல் என சீன கூறினாலும், இதை ஓர் உளவுக் கப்பலாகவே இந்தியா பார்க்கின்றது. இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும், அதாவது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தவாறு, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் கூடும் என இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தென்கோடி கேந்திர கடலோர பாதுகாப்பு அமைப்புகள், தாக்குதல் வியூகங்கள் போன்ற தகவல்களை துல்லியமாக சீன செயற்கைக்கோள் கப்பலால் பதிவு செய்ய முடியும்.
இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதன் மூலம், ஏவுகணைகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் துல்லியமான ஆற்றல் பற்றிய தகவல்களை சீனாவால் சேகரிக்க முடியும். அதுமட்டுமின்றி இந்திய பெருங்கடலின் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டால், ஒடிஷா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை இந்தக் கப்பலால் கண்காணிக்க முடியும். மேலும் இந்த கப்பல் சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுவதுடன் குறிப்பிடத்தக்க ராணுவ பயன்பாட்டு வசதிகளை இந்த கப்பல் கொண்டுள்ளது. இது போன்ற காரணிகளே இந்தியாவின் பதற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இது தொடர்பில் அம்பந்தோட்டை துறைமுக அதிகாரிகளையும் இலங்கை கடற்படை தென் பிராந்திய தளபதி மற்றும் ராணுவ உயரதிகாரிகளையும் சந்தித்த இந்திய தூதரகத்தினை சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினார்கள்.
இலங்கைக்கு தற்போதைய நிலையில் அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. இலங்கை தனது மொத்த வெளிநாட்டுக் கடனில் 10%இற்கும்அதிமான தொகையினை சீனாவுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையில் கணிசமானவை அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணமானத்திற்கென பயன்படுத்தப்பட்டதுடன் அக்கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றது இலங்கை! பெயருக்கு தான் துறைமுகம் ஆனால் அங்கு எவ்விதமான வர்த்தக நடவடிக்கைகளும் நடைபெறுவதில்லை மாறாக துறைமுகத்தை நிர்வகிப்பதற்காக சீன நிறுவனங்கள் அதனை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளன. மேலும் இத்துறைமுகமானது சீனாவின் ஆயுத கிடங்காக பயன்படுத்தப்படலாம் என ஏற்கனவே அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுவான் வாங் 5 கப்பல் பற்றி..
யுவான் வாங் 5 என்ற கப்பலானது, 2007ம் ஆண்டு சீனாவின் ஜியாங்கனன் கப்பல் நிர்மாண தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆய்வு மற்றும் கண்காணப்பு கப்பலாகும். 222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 11000 MT மெற்றிக் தொன் எடையுடைய பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
சீனா இதனை Long March-5B ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல் சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்கென பயன்படுத்திவருகின்றது. 2000ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையததில் உறுப்பு நாடாக சீனா ஆர்வம் காட்டிவந்த நிலையில், சீனாவின் உறுப்புரிமைக்கான கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்டது. இந்த பின்னணியிலேயே, யுவான் வாங் 5 போன்ற அறிவியல் ஆராய்ச்சி கப்பல் சீனாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இலங்கையின் நிலைப்பாடு என்ன?
சீன அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தும் வரை இந்த கண்காணிப்பு கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு இலங்கை அரசு சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாது சீன கப்பல் நாளை (ஆகஸ்ட் 11ம் திகதி 2022) அம்பாந்தோட்டை துறைமுகத்தினை வந்தடையவுள்ளது. யுவான் வாங் 5 கப்பலானது ஒரு வார காலத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நங்கூரமிட்டிருக்கும் என்பதுடன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்து சமுத்திர வலயத்தின் வடமேல் பகுதியில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கை கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கும் என நம்பப்படுகின்றது.
இரண்டு நாடுகளுக்கும் ‘முடியாது’ என கூற முடியாத நிலையில் இலங்கை உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீனா ஒரு புறத்தில் தேவைப்படுகின்றது. மறுபுறத்தில், மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கு இந்தியா தேவைப்படுகின்றது. சீனாவின் கப்பல் ஒன்று இங்கு வருவதற்கு இந்தியா விருப்பப்படாது. என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்பாடல் பிரிவில் சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி ஹஷித்த கந்தஉடஹேவா பிபிசி தமிழிற்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பிபிசி தமிழிற்கு கருத்து தெரிவித்த பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள், “அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடக் குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த உடன்படிக்கையின் பிரகாரம் சீனக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவற்கான வாய்ப்புகள் இல்லை. ஒரு துறைமுகத்தைக் குத்தகைக்கு எடுக்கும் உடன்படிக்கை என்பது, அங்குள்ள கடற் பகுதியை தனது செல்வாக்கினுள் குத்தகைக்குப் பெறும் நாடு வைத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் கொண்டதாகவே கருதப்படும்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் வெளியுறவு என்பது தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் புகார்கள் மற்றும் எதிர்ப்புகளையெல்லாம் மீறி, சீனக் கப்பலை ஹம்பாந்தோட்ட துறைமுகத்துக்குள் நுழைய இலங்கை அனுமதிப்பது, இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், இலங்கையுடனான உறவை ஒட்டுமொத்தமாக கைகழுவி விடும் வேலையை இந்தியா மேற்கொள்ளாது எனவும் இலங்கை அமைந்துள்ள பிராந்தியத்தை தொடர்ச்சியாக தனது செல்வாக்கினுள் வைத்திருக்க வேண்டும் எனும் அடிப்படையிலும், இலங்கையுடன் உறவை வைத்திருக்க வேண்டும் எனும் எண்ணத்திலும் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு சூழலுக்குள் தான் இலங்கையின் எல்லைப் பகுதிகள் இருக்கின்றன. அதனால் இலங்கையுடன் நெருக்கடிகளை இந்தியா ஏற்படுத்திக் கொள்ளாது. இன்னொருபுறம் இந்தியா பகைத்துக் கொள்ளுமளவுக்கு – இலங்கை என்பது ரஷ்யா அல்லது சீனா போன்ற வலுமிக்கதொரு தேசமும் கிடையாது,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், ஏனைய நாடுகளைப் பகைத்துக் கொள்ளும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள மாட்டார். அதுவும் இலங்கையின் மற்றைய ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும் போது, ரணில் விக்ரமசிங்க அவ்வாறு பிரச்னைகளை ஏற்படுத்தவே மாட்டார். அவர் ராஜதந்திரியாகவும் தலைவராகவும் லிபரல் முகம் கொண்ட ஒருவராகவும் கடந்த காலங்களிலும் அறியப்பட்டுள்ளார். எனவே மேற்கினையும் இந்தியாவையும் பகைக்கும் வகையில் – சீனக் கப்பல் விவகாரத்தை அவர் பயன்படுத்த மாட்டார்’ என பேராசிரியர் கணேசலிங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்டுரைக்கான ஆதாரம்: பிபிசி தமிழ்/BBC Tamil