யாழ்ப்பாணத்துக் கணவாய்க்கறி

“கணவாய்க் கறி ஆறப்போகுது, கெதியா குளிச்சிட்டு வாரும்”

ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் மனிசி அன்பாய் கூப்பிட, பாத்ரூமுக்குள் பாய்ந்தேன். சுடுதண்ணி அளவா வருதா என்று பார்க்க மினக்கெட, “என் மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” பாட்டு  சூரியன் FMல் ஒலிக்க தொடங்கியிருந்தது. Lux சோப் நான் போட, சூரியன் FM, இளையராஜாவின் “நீ தானே என் பொன்வசந்தம்” பாட்டு போடுது. 80களில் ஶ்ரீதேவி, Lux சோப் போட்டு குளித்த நாளிலிருந்து.. விடுவம், அது தனிக்கதை.

குளித்து முடித்து, சாமி கும்பிட்டுவிட்டு வர, குத்தரிசி சோறும் கணவாய்க் கறியும் கோப்பையில் எனக்காக காத்திருக்குது. கோப்பையின் ஓரத்தில் கத்தரிக்காய் பால்கறி வேற இடம்பிடித்திருக்குது. கணவாய் கறியை மட்டும் அளவா கிள்ளி சோத்தில் குழைத்து அள்ளி வாயில் வைக்க….சொல்லி வேலையில்லை, சொர்க்கத்தின் வாசற்படி தெரிந்தது.

(bp.blogspot.com)

“எப்பிடியிருக்கு ?” மனிசி கேட்டா

“அந்த மாதிரி.. கணவாய் கறி வைத்த தங்க கைக்கு நித்யகல்யாணியில் ஒரு வைரமோதிரம் வாங்கி தாறன்” காதல் வாக்குறுதியொன்றை வாரி வழங்கினேன்.

“உந்த கதை வசனத்தை உம்மட blogல் வைத்து கொள்ளும்.. கதையை விட்டிட்டு, கத்தரிக்காயை சேர்த்து சாப்பிடும்” சமாதான காலத்திலும் ஆமி ஷெல்லடித்தது.

யாழ்ப்பாண சமையலில் ஒரு தனித்துவமான கறி, கணவாய்க் கறி. நல்ல கொழு மொழு கணவாயை வாங்கி, திறமான  உறைப்புக் கூடிய யாழ்ப்பாண கறித்தூள் போட்டு, கொஞ்சம் பிரட்டாலாக குழம்பு வைத்தால்.. அதை அடிக்க ஆளிருக்காது. தடிப்பான கறித்தூள் குழம்பில், கலாதியாக மிதக்கும் கணவாயை பார்க்கவே வாயூறத் தொடங்கும். அடுப்பில் கணவாய்க் கறி கொதிக்கும் போதே நைசா எடுத்து வாய்க்குள் போட்டு ருசி பார்த்து அம்மாட்ட ஏச்சு வாங்கிய காலமும் இருந்தது.

கணவாய்க் கறிக்கு பொருத்தமான ஜோடி குத்தரிசி சோறு தான். சிவத்த சோற்றில், உறைப்புக் கணவாய் கறியை போட்டு, குழைத்து சாப்பிட… “என்னவென்று சொல்லுவதம்மா வஞ்சியவள் பேரழகை” பாட்டு மண்டைக்குள் கேட்கும்.  பாஸ்மதி, சம்பா, பொன்னி போன்ற ஹைஃபை அரிசிகள், கணவாய்க் கறிக்கு எடுபடாது. கணவாய்க்கறியில் இருக்கும் richnessற்கு தாக்கு பிடிக்க கூடிய ஒரே அரிசி, எங்கட குத்தரிசி தான்.

 

(bp.blogspot.com)

கணவாய்க் கறியும் புட்டும், நயன்தாராவும் கவர்ச்சியும் மாதிரி, நல்லா ஒத்துப்போகும். அதிலும் அரிசிமா புட்டு என்றால் இன்னும் விசேஷம். கோதுமை மா புட்டோடும் கணவாய்க் கறி திறமாத்தான் இருக்கும், ஆனாலும் அரிசிமா புட்டு மாதிரி வராது. எந்த புட்டாயிருந்தாலும், புட்டும் கணவாய்க் கறியும் மிதமான சூட்டோடு இருக்கும் போது சாப்பிடோணும். ஆறினாப்பிறகு மைக்ரோவேவில் போட்டு வறட்டி எடுத்து ருசியை கெடுக்கக் கூடாது.

கணவாய்க் குழம்பில் கணவாயின் சினை மாட்டுப்பட்டால் அன்றைக்கு சனிதா வாசனாவ லொட்டரி அடித்த மாதிரித்தான். சின்ன வெள்ளை கணவாய் முட்டையை வாயில் போட்டு மெல்ல…ப்பா, நினைத்தாலே என்னவோ செய்யும்.

கணவாய்க் கறியை மண்சட்டியில் வைத்து காய்ச்சினால், அதன் சுவை இன்னொரு லெவலிற்கு போய் விடும். மத்தியானம் சோறோடு கணவாய்க்கறி விளாசிவிட்டு, இரவு புட்டுக்கும் கணவாய்க் கறி இருந்தா திறமா இருக்கும் என்று மனம் ஏங்கும். புட்டை கொஞ்சமா கையில் எடுத்து, கணவாய்க் கறி காய்ச்சிய மண்சட்டிக்குள் மிஞ்சியிருக்கும் கறியில் பிரட்டி எடுத்து சாப்பிட…நாக்கில விண் கூவும்.

கணவாய்க் கறியும் இடியப்பமும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு மாதிரி. எவ்வளவு குத்தி முறிஞ்சாலும் ஒத்து வராது. கணவாய்க் குழம்பு பிரட்டலா இருப்பதால் இடியப்பத்தற்கு ஒத்து வாரதில்லை என்று நினைக்கிறேன். பாண், ரொட்டி எல்லாம் கணவாய்க்கு கிட்டவும் கொண்டு வரக்கூடாது. தோசை, இட்லி எல்லாம் கணவாய்க் கறிக்கு கண்ணிலேயும் காட்ட கூடாது.

கணவாயை சாதுவாக உப்பும் தூளும் போட்டு பிரட்டி பொரித்து சாப்பிட்டாலும் நல்லாயிருக்கும். வாயில் போட்டு கஷ்டப்பட்டு கடிக்க, கணவாயிலிருக்கும் அந்த ஜூஸ் வெளிப்பட்டு நாக்கில் நர்த்தனமாடும் கணம் அலாதியானது.

கலமாரி (olivegarden.com)

வெள்ளைக்காரன், சால்ட் அன் பெப்பர் கலமாரி (Salt & Pepper Calamari) என்று ஒரு பதார்த்தத்தை தயாரித்து, தமிழர்களின் கணவாய் பொரியலோடு மாஸ்டர் செப்-இல் போட்டிக்கு வருவார்கள். போட்டியில் அந்த சால்ட் அன் பெப்பர் கலமாரியை எங்கட கணவாய் பொரியல் தூக்கி சாப்பிட்டு ஈசியாக வெற்றிவாகை சூடும்.

90களில் வெள்ளவத்தை வாகீசன் சாப்பாடுக் கடையில் வேர்த்து விறுவிறுத்து உறைக்க உறைக்க கணவாய்க் கறி சாப்பிடுவோம். கடைசியாக கொழும்பு போனபோது “Palmyra” வில் ஏசி அறைக்குள் இருந்து கணவாய்க் கறி சாப்பிட்டோம். வாகீசன் 5-3 Palmyra.

ஒஸ்ரேலியாவில் கிடைப்பது “Calamari” இல்லாட்டி “Squids”. “Squids” கணவாய் போல இருக்கும் ஆனால் கணவாய் இல்லை. “Calamari” தான் எங்கட ஊர் கணவாய். கணவாயை விட அளவிலும் ருசியிலும் சிறிதான “Squids” வாங்கிக்கொண்டு போய் ஏமாந்த நாட்களும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. ஒஸி கணவாய் தாய்லாந்திலிருத்து இறக்குமதியாகிறது. தாய்லாந்து கணவாய் கொஞ்சம் மென்மையானது. எங்கட யாழ்ப்பாண கணவாய் மாதிரி தடிப்பு இல்லை. யாழ்ப்பாணத்தானின் தடிப்பு கணவாயிலும் தெரியும்.

ஒஃபிஸ்காரரோடு சாப்பிட போகும் போது விலாசமாக Calamari Salad-ஐ ஓடர் பண்ணி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நொந்து நூடில்ஸான பொழுதையும் வரலாறு மறக்காமல் பதிவு செய்யும்.

(squarespace.com)

கணவாய் கறியை சாப்பிட்டு விட்டு எவ்வளவு தான் டெட்டோல் போட்டு கழுவினாலும் அந்த கணவாய்க் கறி மணம் கையை விட்டு போகாது. சாப்பிட்டு முடிச்சாப் பிறகு, எவ்வளவு கழுவியும் மணம் போகாத அந்த கையை,  யாரும் பார்காத போது, ஒருக்கா முகர்ந்து பார்த்து, கணவாய்க் கறி வாசத்தை மீண்டுமொரு முறை அனுபவித்து, தங்களுக்குள் சிரிக்காதார் யாரேனும் இந்த வையகத்துள் உண்டோ ?

கணவாய்க் கறி

யாழ்ப்பாண சமையலின் மகுடம்

Related Articles

Exit mobile version