Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தன் கவிதைகளுக்காக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் ஒடுக்கப்படும் தமிழ் கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் !

யார் இந்த அஹ்னாஃப் ஜசீம்? 

அஹ்னாஃப் ஜசீம்  இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தின்  சிலாவத்துறை எனும் கிராமத்தை  சேர்ந்த ஒரு தமிழ் முஸ்லிம் கவிஞர் ஆவர். 2017 ஆம் ஆண்டில், மாணவராக ஜசீம் தனது முதல் புத்தகமான நவரசம் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.  அவர் தனது படிப்பை முடித்து புத்தளத்தில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் இலக்கியம் கற்பிக்கத் தொடங்கினார்.  ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மே 16, 2020 அன்று, அவரது கவிதைகள் மதத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) மன்னாரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர்கள் அவரது தொலைபேசி, மடிக்கணினி மற்றும் அவரது புத்தக அலுமாரிகளை சோதனை செய்த பின், சுமார் ஐம்பது புத்தகங்களையும், நவரசத்தின் பல நூறு பிரதிகளையும் பறிமுதல் செய்தனர். மூன்று நாள் விசாரணைக்குத் தயாராகுமாறு மட்டுமே அவரிடம் கூறியிருந்த நிலையிலேயே.கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“இராணுவ அடக்குமுறை என்பது வடக்கிற்கு, கிழக்கிற்கு, தெற்கிற்கு என்று வேறுபாடுகள் இல்லை. அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவை என்றால் எங்கேயும் தொழிலாளர். வர்க்கத்தையும் பொது மக்களையும் அடக்குவார்கள். இதற்கு சிறந்த உதாரணம் ‘அரகலய’ (மக்கள் எழுச்சி போரட்டம்). அரசாங்கம் இராணுவ அடக்குமுறையை பிரயோகித்து ‘மக்கள் எழுச்சி போரட்டத்தினை இல்லாமலேயே செய்துவிட்டனர்.”என்று ஜஸீம் கூறுகின்றார்.

“அரசியல்வாதிகள் சாமானியர்களை எந்த இடத்திலும் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நசுக்கத் தயாராக இருக்கிறார்கள்” -தமிழ் கவிஞர் அஹ்னாஃப் ஜசீம்

அவர் சொல்வது சரிதான் !

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இலங்கை  ராஜகபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வந்தது நாம் அறிந்ததே. இது வரை அரசாங்கமோ அல்லது அரச அதிகாரிகளோ செய்த குற்றங்களை பொறுத்து வந்த பொது மக்களை வெகுண்கு எழ இந்த போராட்டம் வழிவகுத்ததென்றே  கூற முடியும். தற்போது இந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு அபத்தமான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றதை நாம் கண்கூடாக காண முடிகின்றது.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளரும் மாணவர் ஒன்றிய உறுப்பினருமான ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 22 அன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், மூவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் 90 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க ஒப்புதல் அளித்தார் – இதே விமர்சனத்திற்குரிய சட்டம் தான் 2020 மே இல் தொடங்கி 19 மாதங்கள் ஜசீமைக் கைது செய்து சிறைக்காவலில் வைக்கப் பயன்படுத்தப்பட்டது.

அவர்கள் நாளைக்கே உங்களை கைது செய்ய விரும்பினால், அதை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் [PTA] கீழ் செய்வார்கள். இது எனக்கும் உங்களுக்கும் கூட பொருந்தும் – எந்த மொழியைப் பயன்படுத்தினாலும் உண்மையைச் சொல்லும் அனைத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் என்று எவருக்குமே பொருந்தும்.” என்று  அஹ்னஃப் ஜசீம் என்னிடம் கூறினார்.

கைது

மே 16, 2020 அன்று இரவு 8:30 மணிக்கு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட ஜசீம் 19 மாதங்களாக வீடு திரும்பவில்லை.”அந்த 19 மாதங்கள் மிகவும் கஷ்டமான, சகிக்க முடியாத காலம்” என்று ஜசீம் கூறினார். “நான் தங்காலை, கொழும்பு, மற்றும் கடற்படை சிறை என்று பல இடங்களுக்கு மாற்றப்பட்டேன் – 02ம் மாடி  06ம் மாடி என்று வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டேன்.”

ஜசீம் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழ்நிலைகள் அவரை வலுவிழக்கச் செய்ய வடிவமைக்கப்பட்டதாகவே தோன்றியது. அவர் தினமும் படிக்கும் குர்-ஆனின் பிரதியை சிறையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்ததாக கூறினார்.  பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) அதிகாரிகளால் அவர் மோசமாக நடத்தப்பட்டார், பெரும்பாலும் உணவு மற்றும் பானங்கள் குறைவாகவே வழங்கப்பட்டது, சில நேரங்களில் முற்றிலும் மறுக்கப்பட்டது. ஜஸீமின் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர, 2021 ஆம் ஆண்டு மே மாதம் பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எழுதிய கடிதத்தில், “எனது கட்சிக்காரரை, மேலும் பயமுறுத்தி, மற்றும் வலுவிழக்கச் செய்து மனரீதியாக துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக சுய-குற்றச்சாட்டு அறிக்கைகளை TID பெற்றுக்கொள்ளும் பொருட்டு இவ்வாறு மோசமான நடந்து கொள்வதாக எனது கட்சிக்காரரின் குடும்பத்தினர் நியாயமாக சந்தேகிக்கின்றனர்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அஹ்னாஃப் ஜசீம் -புகைப்பட வடிவமைப்பு – ஜேமி அல்போன்ஸஸ்/Roar Media

மே 2021 இல், 13 உயர்மட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஜசீமின் உடனடி விடுதலைக்கு அழைப்பு விடுத்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.  சர்வதேச மன்னிப்புச் சபை, PEN இன்டர்நேஷனல், இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியவை இதில் அடங்கும்.

அதனை தொடர்ந்து  15 டிசம்பர் 2021 அன்று, ஜசீமுக்கு பிணையில் விடுதலை அளிக்கப்பட்டது.   2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் இனவாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.  ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு மறைப்புத் தேவை ஏற்பட்டபோது, ​​அப்பாவி மக்கள் பிடிபட்டனர் – நான் அவர்களில் ஒருவன், தவிர என் மீதான வழக்குக்கும் அத்தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, “ஒரு கவிதையிலேயே இவ்வளவு பிரச்சனைகளை அவர்கள் ஏற்படுத்தினால், பெரிய உண்மைகளை வெளிப்படுத்த முயல்பவர்களின் கதி என்ன? அவர்கள் இந்த நாட்டில் எப்படி வாழ்வார்கள்?”  என்று ஜசீம் கூறினார்.

கவிதை அரசியல்

ஜஸீம் எப்போதுமே கவிதையை ஒரு பெரிய உட்கருத்துள்ள தேவையாகவே பார்த்திருக்கிறார். 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலுக்கு அடுத்த நாள், அவர் தனது வலைப்பதிவில், தாக்குதல்களைக் கண்டித்து ஒரு கவிதையை பதிவிட்டார்.  குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு இலங்கை முழுவதும் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெடிப்பதைக் கண்டதால், அடுத்தடுத்த வாரங்களை அவர் வீட்டிலேயே செலவிட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர், குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் சஹ்ரான் ஹாஷிம், ஜசீமின் கவிதைகளைப் படித்த பிறகே தாக்குதல்களை நடத்துவதற்கான உத்வேகத்தை ஓரளவு பெற்றதாக TID, ஜசீமிடம் கூறியுள்ளது.

“நவரசம் கவிதைத் தொகுப்பே உண்மையான பிரச்சினையாக இருந்திருந்தால், இலங்கையின் தேசிய நூலகம் அதை அங்கீகரித்திருக்காது, அல்லது அரசாங்கம் அதைத் தடைசெய்திருக்கும். நவரசத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை;  கவிதைகள் வறுமை, பாகுபாடு மற்றும் உலக அமைதிக்கு அழைப்பு விடுக்கின்றன, போருக்கு அல்ல.” என்று ஜஸீம் கூறினார்.

இவரது கவிதைகள் Free Ahnaf Jazeem என்ற தளத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு, உறுதியான மற்றும் நீடித்த அரசியல் குரலையும் இஸ்லாமியக் கொள்கைகளிலிருந்து தெளிவாகப் பெறப்பட்ட ஒரு தார்மீக இழையோடலையும் கொண்டுள்ளது – கடவுளின் விருப்பத்திற்கு அடிபணிதல், இறுதியில் உண்மையை வெளிப்படுத்துதல் மற்றும் தெய்வீக நீதியின் தவிர்க்க முடியாத தன்மை ஆகியவற்றை அவரது கவிதைகள் பரைசாற்றி நிற்கின்றன.

“கலையில் சிறந்தது இலக்கியம், இலக்கியத்திற் சிறந்தது கவிதை; அதனால்தான் நான் அதைத் தேர்ந்தெடுத்தேன்” – அஹ்னாஃப் ஜசீம்

ஜஸீம் அரசியலை நன்கு அறிந்தவர். “கவிதைகளை அரசியலில் இருந்து பிரிக்க முடியாது, எல்லா கலைகளும் அரசியலுடன் கலந்துள்ளன. நீங்கள் ஒரு காதல் கவிதையை எழுதும்போது கூட, அது குடும்ப அமைப்பு, உறவின் சட்டபூர்வமான தன்மை மற்றும் அரசாங்கத்தின் விதிகளுடன் தொடர்புபடுகின்றது. நீங்கள் எதை எழுதினாலும் அதில் அரசியல் அம்சம் இருக்கும்  என்று  கூறினார்.

செம்மொழியான தமிழ்க் கவிதையின் பாணியையும் கட்டமைப்பையும் பின்பற்றும் அவரது கவிதைகளில்,  அமெரிக்காவின் பாசாங்குத்தனம் மற்றும்  ஈராக், சிரியா  (ISIS) போன்ற மத்திய கிழக்கின் மீதான தொடர்ச்சியான அழிவு மற்றும் சுரண்டலுக்கு எதிராகவும் அவர் குற்றம் சாட்டினார். வன்முறை, துன்பங்களுக்கு உடந்தையாக இருப்பது மற்றும் அக்கறையின்மை ஆகியவை கூட குற்றங்களாகவே கருதப்படும. மேலும் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மௌனமும் விமர்சனத்திற்குத் தப்பவில்லை. பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான், காஷ்மீர் மற்றும் பர்மா மக்களுடனான அவரது ஒற்றுமையின் வெளிப்பாடுகளைப் படிக்கும்போது, ​​ஜசீமின் வாழ்க்கைச் சூழ்நிலைகளால் அவரது கலை நீதியையும் உண்மையைக் கையாளுவதை பிரதிபலிக்கும் தன்மையும் ஆச்சரியமளிக்கிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பன், ஒளவையார், திருவள்ளுவர், சுப்ரமணிய பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் என் கவித்துவத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். “சமூக சீர்திருத்தங்கள், அரசியல் விழிப்புணர்வு மற்றும் சுதந்திரம் பற்றி அவர்களின் கவிதைகள் பேசுகின்றன, இது ஜனநாயகம், பொதுவுடைமை மற்றும் அமைதி பற்றி எழுதுவதற்கு என்னைத் தூண்டியது” என்றும் அவர் கூறினார்.  “மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு கவிதை உதவுகிறது. ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதை ஆளும் வர்க்கத்தினர் விரும்புவதில்லை.எல்லோராலும் கவிதை எழுதிவிட முடியாது.கலையில் சிறந்தது இலக்கியம், இலக்கியத்திற் சிறந்தது கவிதை; அதனால்தான் நான் அதைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் அஹ்னாஃப் ஜசீம்.

Designated person

ஜசீம் தனது 27 வயதிலேயே இலங்கை அரசு, அதன் எதிரிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களின் மோசமான நிலையை அனுபவித்துள்ளார். உள்நாட்டுப் போரின் போது அவரது பெற்றோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் அவர்களது சொந்த ஊரான மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்டனர், இதனால் ஜசீம் புத்தளத்தில் பிறந்தார். “நான் வளர்ந்தவுடன், மக்கள் அகதிகள் போல எங்களைப் பற்றி பேசுவதைக் கேட்டேன், இது ஏன் நடக்கிறது என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்,” என்று அவர் கூறினார். “தமிழ் சமூகத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் ஏனைய சமூகங்களைத் துன்புறுத்தினர். அரசியல் ஆதாயங்களுக்காக இன அடையாளத்தைப் பயன்படுத்தும் இந்த முன்னுதாரணம் நம் நாட்டில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

2014 இல், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் என் கண்முன்னே நடந்தது.” என்று ஜசீம் கூறினார். அவர் அப்போது பேருவளையில் உள்ள நளீமியா இஸ்லாமிய கற்கை நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்தார். அளுத்கம நகரம் மற்றும் தர்கா பகுதிகளில் வன்முறைகள் அதிகம் நடந்தன. “கலவரம் என் கண்களைத் திறந்தது. இலங்கைத் தலைவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து தமக்காக மட்டுமே உழைக்கும் சுயநலவாதிகள். அவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக இனவாதத்தையும் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தூண்டுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

அஹ்னாஃப் ஜசீம் -புகைப்பட வடிவமைப்பு – ஜேமி அல்போன்ஸஸ்/Roar Media

2022ம் ஆண்டு  ஆகஸ்ட் 1ம் திகதி, அரசாங்கத்தின் ‘Designated persons’ (நியமிக்கப்பட்ட நபர்கள்)  பட்டியல் பாதுகாப்பு அமைச்சகத்தால் புதுப்பிக்கப்பட்டது, அதில் ஜசீமின் பெயரும் சேர்க்கப்பட்டது.  இது பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றது. அவருக்கு எதிரான வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், அக்டோபர் 10 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘Designated persons’ பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருப்பதன் காரணமாக, அது அழிக்கப்படும் வரை அவர் கடவுச்சீட்டை பெறவோ, எந்த அரசாங்க சேவைகளையும் அணுகவோ அல்லது வேலை தேடவோ முடியாத நிலை உள்ளது.

“நான் இந்த நாட்டின் குடிமகன் இல்லை என்பது போல உணர்கிறேன்” என்று ஜசீம் கூறினார். “எனது எதிர்காலத்தைப் பற்றி நான் பயப்படுகிறேன்-எனக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் மறைந்திருக்க வேண்டியது தானோ? மக்கள் எழுச்சி அகற்றப்பட்டது மற்றும் போராட்டம் நசுக்கப்பட்டது போல், இது நாட்டில் எழுத்தாளர்களை வாயடைக்க வைக்கும் முன்னுதாரணமாக அமையும் என அவர் அஞ்சுகிறார். “ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரை ஒடுக்கப்பட்டவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் என்பதே இல்லை.” அஹனாஃப் ஜசீம் Roar தமிழுக்கு  தெரிவித்தார்.

நேர்காணல்: இமான் சலீம் மற்றும் கிறிஸ்டினா நாகராஜா
தமிழில்: ரிஜன் விஜயகுமார் / கிறிஸ்டினா நாகராஜா

Related Articles