Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இதுவரை உலகில் வேகமாகப்பரவிய தொற்று நோய்கள் பற்றித் தெரியுமா?

சிறிய ஸ்பரிசம் முதல், வீசும் காற்று, குடிக்கும் தண்ணீர் என அனைத்தின் மூலமாகவும் இந்நோய்கள் பரவும். சாதாரண குளிர் சுரம் முதல் உயிர் கொள்ளும் வைரஸ் காய்ச்சல் வரை எல்லாமே வேகமாக பரவும் தன்மை கொண்டவை. தொற்றா நோய்கள் போலில்லாமல் தொற்றும் நோய்கள் நுண்ணங்கிகளான பற்றீரியா மற்றும் வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இந்த வேற்று உயிர்களால் பரவும் தொற்று நோய்களை இரு வகையாக பட்டியலிடலாம். 

  • எபிடெமிக் (EPIDEMIC)
  • பன்டெமிக் (PANDEMIC)

எபிடெமிக் எனப்படும் நிலைமை குறித்த ஒரு தொற்று நோய், குறிப்பிட்ட ஒரு மக்கள் குழுவையோ, ஒரு நாட்டையோ மாத்திரம் தாக்குவதை குறிக்கும். பன்டேமிக் எனப்படுவது ஒரு தொற்று நோய் உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் வாழும் மக்களை தாக்கும் நிலைமை ஆகும். இன்று உலகம் முழுவதும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் கொரோனா (CoVid-19) பாதிப்பும் ஒரு பன்டேமிக் நோய் தொற்று நிலைமையே. ஆனால் இது மனித இனம் எதிர்கொள்ளும் முதலாவது பன்டேமிக் நிலைமை அல்ல. மானுட வரலாற்றின் பக்கங்களில் இவ்வாறான இருண்ட நாட்கள் பல வந்துள்ளன. அவை மனித இனத்துக்கு கற்றுத்தந்த பாடங்கள் என்ன? என்பதையும், அந்த அனுபவங்களை கொண்டு எவ்வாறு தற்போதைய நிலையையும், வருங்கால சவால்களையும் எதிர்கொள்ளலாம் என்று காண்போம். 

படஉதவி : sciencenewsforstudents

பன்டேமிக்: எவ்வாறு பரவுகின்றது? 

ஏறத்தாழ 12000 ஆண்டுகளுக்கு முன்னர் தொற்று நோயால் இருந்திருக்க கூடிய மக்களின் அளவு மிக சொற்பமே. காரணம் அப்போதைய வாழ்க்கை முறை. காட்டில் வேட்டையாடியும், காய்களை சேகரித்தும் வாழ்க்கை நடாத்தி வந்த நம் மூதாதையர்கள் எப்போதும் நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கியது இல்லை. அதேபோல பெரியளவு எண்ணிக்கை கொண்ட குழுக்களாக வாழ்ந்ததும் இல்லை. இதனால் எந்த தொற்றக்கூடிய நோய்களும் அதிகளவு பேரிடம் பரவுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் 10000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் விவசாயம் பற்றிய தெளிவான அறிவை அடைந்ததும் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. 

விவசாயம் மனிதனின் பிரதான வாழ்வாதாரம் என்றான பின்னர் நதிக்கரைகளில் பெருமளவு நாகரிகங்கள் தோற்றம் கொண்டன. தனித்தனியே வேட்டையாடி வந்த மக்கள் குழுக்கள் எல்லாம் இணைந்து ஒரு சமூகமாக வாழத்தலைப்பட்டது. இதனால் அதிகளவு மக்கள் குறுகிய இடப்பரப்பில் வாழும் சூழ்நிலை உண்டானது. விவசாயத்துக்கு நீர் மட்டுமில்லாது பண்ணை விலங்குகளும் தேவை என்றான பின்னர் மாடு,மாடு, கோழி, பன்றி, நாய் என பலவகையான விலங்குகள் மனித குடியேற்றங்களுக்கு மிக அருகாமையிலேயே நிறுவப்பட வேண்டிய நிலை உண்டானது. ஒரே நீராதாரம், மக்கள் செறிவு, விலங்குகள் என ஒரு தொற்று நோய் பரவுவதற்கு தேவையான எல்லா தேவைப்படுகளும் பூர்த்தியான பட்சத்தில் தொற்றுநோய்களின் எண்ணிக்கையும் வீரியமும் உயர்வுகண்டன.இவை எபிடெமிக் நிலைமைகளாகவே இருந்தன.  நாகரிகங்கள் வளர்ச்சி கண்டு எப்போது மற்ற நாகரிகங்களுடன் வர்த்தக தொடர்புகளை மேற்கொள்ள தொடங்கினவோ அப்போது எபிடெமிக் தொற்றுகள் பன்டேமிக் தொற்றுகளாக மாறின. 

படஉதவி : usatoday.com

பொதுவாக விலங்குகளை தாக்கும் வைரஸ்கள் மனிதர்களிடம் தொற்றுவதில்லை. எனினும் மனிதர்களை ஒத்த DNA அமைப்புகள் கொண்ட விலங்குகளிடம் (பன்றி, குரங்குகள்) வைரஸ் தொற்றுகள் ஏற்படுவதுண்டு. ஆனாலும் வைரஸ்கள் தொடர்ச்சியாக இனப்பெருக்கம் செய்யும் வகையில் ஒன்றில் இருந்து ஒன்றாக புதிய அங்கிகளை நோக்கி நகர்ந்த வண்ணமே இருக்கும். மிகவும் குறுகிய கால வாழ்க்கையையும், அதிகளவு இனப்பெருக்க ஆற்றலும் கொண்டிருப்பதால் வைரஸ்கள் மிக விரைவாக தாங்கள் நுழையும் அங்கியின் உடலுக்கு ஏற்ப வியத்தமடைந்து விடும். அவ்வாறு புதிதாக வியத்தமடையும் வைரஸ் கிருமிகள் அதிவேகமாக செயற்படும் ஆற்றலை கொண்டிருக்கும். இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்ஸும் இவ்வகையில் வியத்தமடைந்த வைரஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வைரஸ் வௌவாலிடம் இருந்து எறும்பு திண்ணிகளுக்கும் அதிலிருந்து மனிதனுக்கும் பரவியிருக்கும் என்பதை தற்போது வரை நடைபெற்றுள்ள ஆய்வுகளில் இருந்து தெரியவருகிறது. 

வெறுமனே விலங்குகளாலும், மனித ஸ்பரிசங்கள் மூலமாகவும் மாத்திரம் வைரஸ் நோய்கள் பரவுவதில்லை. காலநிலை கூட வைரஸ்களை காவிச்செல்லும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் காலநிலை மாற்றங்கள் மூலம் புவியின் தெற்கு அரைக்கோலத்தில் இருந்து, வடக்கு அரைக்கோலத்துக்கு நோய்த்தொற்றுகள் சுழற்சியடைவது இயல்பு. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இலையுதிர் காலம் மற்றும் பனிக்காலங்களில் வரும் flu வகை வைரஸ் நோய்கள் இவ்வகையானவையே. இவை வருடாந்தம் வந்து செல்லும் நோய்கள் என்பதால் மனித உடல் இவற்றுக்கு எதிரான இயற்கையான எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்தாலும் 20-40 வருடங்களுக்கு ஒரு முறை இந்நோய் வீரியமடைவதையும் காணலாம். கடந்த காலத்தில் பலரை பாதித்த influvenza வைரஸ் இவ்வாறு வீரியமடைந்த வைரஸ் நோயே. வாத்துகளை தாக்கும் Wild flu வைரஸ், பன்றிகளை தாக்கும் வைரசுடன் பரிணாமரீதியாக கலப்படைந்தமையின் விளைவே influvenza நோய் தொற்றுக்கான காரணம் என பின்னாட்களில் கண்டறியப்பட்டது. இவ்வாறு விலங்குகள், காலநிலை, வாழ்க்கை முறை ஆகியவற்றால் மனித இனம் அனுபவித்த மாபெரும் நோய்தொற்றுகள் சிலவற்றை காண்போம். 

Black Death / பிளேக் 

படஉதவி : 

மனித வரலாற்றில் பதிவான முதல் பாரிய நோய்த்தொற்று கறுப்பு மரணம் என அழைக்கப்பட்ட பிளேக் நோய் ஆகும். முதன் முதலில் கி.பி 541 இல் பைசாந்திய பேரரசை இந்நோய் தாக்கியது. அக்காலத்தில் இந்நோய் சுமார் 25 மில்லியன் மக்களை கொன்றிருக்கும் என்று நம்பப்படுகிறது. Plague of Justinian என்று வரலாற்றில் பெயர் கொண்ட இந்நோய் மீண்டும் 800 ஆண்டுகள் கழித்து அசுர வேகத்தில் ஐரோப்பாவை மீண்டும் தாக்கியது. கி.பி 1347 இல் இத்தாலி நாட்டின் சிசிலி தீவை வந்தடைந்த 6 மாலுமிகள் மூலம் இந்நோய் ஐரோப்பாவுக்குள் நுழைந்தது. இந்நோய்க்குரிய வைரஸின் பிறப்பிடம் சீனா. பட்டுப்பாதை வழியாகவும் இந்நோய் ஐரோப்பாவுக்கி கொண்டுவரப்பட்டது என்ற முடிவுகளும் உண்டு.எலிகள் மூலமாக பரவும் இந்நோயால்  உடலில் கறுப்பு நிற தழும்புகளும், கடுமையான சுரமும் ஏற்படுவதால் இதனை கறுப்பு மரணம் என்று அழைத்தனர். இந்நோய்க்கு காரணம் YERSINA PESTIS என்ற பற்றீரியா. இந்நோயின் பரவல் தீவிரமடையவே நாட்டுக்குள் புதிதாக நுழைபவர்கள் அனைவரையும் 40 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்தனர். லத்தீன் மொழியில் இதனை குவாரெண்டா ஜியோ டெனிஸ் என்று அழைத்தனர். அதவாது 40 நாள் நோய். இந்த லத்தீன் வார்த்தையில் இருந்தே இப்போது தனிமைப்படுத்தல் செயல்முறையான QUARANTINE என்ற வார்த்தை உண்டானது. ஏறத்தாழ இந்நோய் பாதிப்பால் 135 மில்லியன் மக்கள் இறந்தனர். இது வரை மனித வரலாற்றில் அதிகம் பேரை காவுகொண்ட நோய் இதுவே. 

கொலரா

கொலரா விப்ரியம் என்ற பற்றீரியா மூலம் பரவும் இந்நோய் கடுமையான வயிற்றுளைவு மற்றும் வாந்தி ஏற்பட செய்து உடலில் நீர்ப்பற்றாகுறை ஏற்பட செய்யும். இந்நோய்க்குரிய பற்றீரியா தாக்கும் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள். ஆனால் அவர்கள் இந்நோயின் காவிகளாக தொழிற்படுவார்கள். அசுத்தமான நீர், தூய்மையின்மை மற்றும் சுத்தமற்ற உணவுகள் மூலமாக இந்நோய் வேகமாக பரவலடையும். 2011 ஆம் ஆண்டு ஹெய்டியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் காரணமாக பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இம்முகாம்களில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாததாலும், அனைவருக்கும் ஒரேயொரு பொதுவான நீராதாரம் மட்டுமே வழங்கப்பட்டதாலும் முகாமில் இருந்த பலருக்கு கொலரா தொற்று ஏற்பட்டது. இந்நோய் பெரும்பாலும் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகம் காணப்பட்டாலும் 1830 இல் உலகவில் பல கொலரா தொற்றால் இறந்தனர். இந்தியாவில் கி.பி 1000ம் ஆண்டு வெடித்த கொலரா தொற்றினால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். 

Great flu / Spanish flu

Spanish flu யினால் பாதிக்கப்பட்டவர்கள்
படஉதவி : politico.com

1918 ம் ஆண்டின் வசந்தகாலம். முதலாம் உலகப்போரின் அந்திமகாலத்தில் பிரான்ஸின் வடக்கு பகுதிகளில் பணியாற்றிவந்த அமெரிக்க படைவீரர்கள் கடுமையான தலைவலியையும், குளிரையும், காய்ச்சல் காய்வதையும் உணர்ந்தனர். பணி முடிந்து முகாம்களுக்கு திரும்பியவர்கள் காலையில் எழுந்திருக்கவே இல்லை. பணிக்கு திரும்பாதவர்களை தேடி கூடாரங்களை திறந்தோருக்கு அருவருப்பும் அதிர்ச்சியும் காத்திருந்தன. சலம், நிணம், குருதி என மனித உடலில் இருந்து வெளியான திரவங்களால் கூடாரங்கள் நிறைந்திருந்தன. அவற்றின் இடையே உடலெங்கும் சிவப்பு புள்ளிகளுடனும், நீலம் பாய்ந்தும் பலரின் உடல்கள் கிடந்தன. தி கிரேட் ஃப்ளூ என்று அறியப்பட்ட இந்நோய் மிகவும் வேகமாக ஐரோப்பா முழுவதும் பரவியது. அப்போது ஐரோப்பிய காலனித்துவம் உலகமெங்கும் இருந்தமையால் இந்நோயும் உலகெங்கும் பரவியது. ஸ்பெயின் நாட்டவர்களே இந்நோய் பற்றி முதன்மையாக அறிக்கைகளை உருவாக்கியதால் இதனை ஸ்பானிஷ் ஃப்ளூ என்றும் அறியப்பட்டது. இந்நோய்க்கு ஆளானோர்கள் பெரும்பாலும் 20-40 வயது உள்ளவர்களே. இந்நோயால் இறந்தவர்களின் 90% அதிகமானோர் 65 வயதை விட குறைந்தவர்கள். உலகப்போரின் விளைவால் வைத்திய துறை மிகவும் கழிந்திருந்தமையால் அமெரிக்காவில் 650 000, பிரித்தானியாவில் 230 000, இந்தியாவில் 10 மில்லியன் என இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. சுமார் 75 மில்லியன் உயிர்களை காவுகொண்ட பின்னரே சாந்தமானது இந்நோய்.

Severe Acute Respiratory Syndrome (S.A.R.S)

படஉதவி : businessinsider.com

மிக அண்மையில் பதிவான ஒரு பன்டேமிக் நோய் இதுவே. 2003ம் ஆண்டில் ஹாங்காங் நகரத்தின் Metro pole ஹோட்டலுக்கு வருகை தந்த சீன மருத்துவர் இந்த வைரஸின் அறியப்பட்ட முதல் காவி. அவர் அந்த ஹோட்டலில் தங்கிய 24 மணித்தியாலங்களுக்குள் சுமார் 16 பேருக்கு இந்நோய் பரவிவிட்டது. நிலைமையின் தீவிரத்தை உணராது வியட்நாம், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அதில் ஐவர் சென்றுவிட்டனர். SARS வைரஸின் தீவிரம் உலகளவில் வெளிப்படுவதற்குள் சுமார் 29 நாடுகளுக்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்டுவிட்டது. 1000 பேருக்கும் அதிகமானோர் இறந்தனர். இவ்வைரஸ் தாக்கத்தை விட இதனை பற்றிய பொய்யான செய்திகளும், வதந்திகளுமே வேகமாக பரவியது. இணையத்தில் நினைத்ததை இல்ல எழுதும் சில நெட்டிஸன்கள் இந்நோய் குறித்தும் ஆதாரமற்ற பல கருத்துக்களை முன்வைத்தமையால் ஹாங்காங், சிங்கப்பூர் உடப்பட பல நாடுககுக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருமான வீழ்ச்சி ஏற்பட்டது. 

அனுபவம் கற்றுத்தந்த பாடம்

இன்றைய உலகம் முன்பு போன்றது அல்ல. மிக விரைவானது. காத்திருக்கும் தேவை அரிதானது. அதனால் நன்மைகள் மட்டுமன்றி தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. கப்பல், கால்நடை என்று இருந்த போதே நோய்கள் அசுர வேகத்தில் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு பரவியது என்றால் இன்று போக்குவரத்து துறையில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியை நோக்கும் போது ஒரு நெருடல் உண்டாகிறது. இன்று 24 மணிநேரத்தில் உலகின் எந்த நாட்டில் இருந்தும் எந்த நாட்டுக்கும் விமானத்தில் சென்றுவிட முடியும். எனவே நோய்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் பரவுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதே போல விமான நிலையங்கள் என்பது தினமும் ஆயிரக்கணக்கான மக்களால் உபயோகிக்கப்படும் பிரதேசம். ஒரு நோய் தோற்று உடையவர் மூலமாக பலருக்கும், அங்கிருந்து பல நாடுகளுக்கும் நோய் காவப்படும் உயரபாயம் உண்டு. அதே போல் இன்னொரு பக்கம் உலக தொடர்பாடல், சமூக விழிப்புணர்வு மற்றும் வைத்திய துறை ஆகியவற்றில் உண்டாகியுள்ள வளர்ச்சியின் காரணமாக நிலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்படும் நிலையும் உயர்ந்துள்ளது. 100 வருடங்களுக்கு முன் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூ இல் லட்சக்கணக்கில் மக்கள் இறந்த அதே நேரம் தற்போது உலகை தாக்கிய influenza, SARS ஆகியவை சில ஆயிரம் பேரை மட்டுமே பலிகொண்டுள்ளது என்பது நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை காட்டுகிறது. இதனை மட்டும் ஒரு சாதனையாக கொண்டு பன்டேமிக் குறித்து நாம் அலட்டிக்கொள்ளாமல் இருக்கவியலாது. Evolve. Learn. Adopt என்ற அடிப்படையில் கடந்து வந்த பாதையின் அனுபத்தை கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

Be prepared (தயாராய் இருங்கள்)

ஒரு பன்டேமிக் உலகத்தையே தாக்குகிறது என்ற செய்தி நம்மை எட்டும் வரை மெத்தனமாக இருக்க வேண்டாம். நோய்கள் எப்போது வருமென அறிகுறிகளை கொண்டு கணிக்க இயலாது. எனவே எப்போதும் தயாராய் இருத்தல் அவசியம். குறித்த காலத்தில் தேவையான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது. எந்த உடல் உபாதை ஆனாலும் முறைப்படி வைத்தியர்களை நாடுவது, அவசரகால தேவைப்பொருட்களை எப்போதும் சேமித்து வைத்திருப்பது என நாம் செய்யும் சிறியதொரு முயற்சி கூட தக்க சமயத்தில் பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றும். 

Be hygiene (தூய்மையாய் இருங்கள்)


பெரும்பாலான தொற்று நோய்களுக்கு காரணமாக அமைவது தனிமனித சுத்தம் மற்றும் சூழலில் சுத்தம் போதுமானதாக இன்மையே. பிளேக், கொலரா முதலிய நோய்களை கண்ட தலைமுறையாகிய நாம் எப்போதும் நம்மையும் நம் சுற்றாடலையும் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். குறிப்பாக செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளுடன் தொடுகையில் இருப்போர் கண்டிப்பாக தம்மை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை நன்கு கழுவுதல், நன்கு சமைத்த உணவுகளை உண்ணுதல், சுத்தமான ஆடைகளை அணிதல், முடிந்தளவு நாம் பயன்படுத்தும் பொது இடங்களை தூய்மையாக பேணுதல் என அன்றாட வாழ்க்கை முறைகளில் நெறிமுறைகள் உண்டாக வேண்டியது அவசியம். 

CoViD-19 தாக்கியுள்ள இந்நேரத்தில் நாம் கைகொள்ளும் பிரதான பாதுகாப்பு நடவடிக்கைகளான சுய தனிமைப்படுத்தல், கூட்டங்களை தவிர்த்தல், கைகளை சுத்தமாக கழுவுதல், கைகுளுக்குவதை தவிர்த்தல், முகமூடி மற்றும் கையுறைகள் அணிதல் என்பன அனைத்தும் 100 வருடங்களுக்கு முன்னர் தி கிரேட் ஃப்ளூ உலகநாடுகளை தாக்கிய போது கைக்கொண்ட அதே முறைமைகள் தான். எனவே எப்போதும் தூய்மையாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது நமக்கும் பிறருக்கும் பாதுகாப்பாகவே அமையும்

Be self sufficient (தன்னிறைவாக இருங்கள்) 

கொரோனா தாக்கத்தால் உலகின் பல நாடுகள் முடங்கி இருக்கும் இந்நேரத்தில் நோயை விட மனஅழுத்தங்களே மக்களை அதிகமாக பாதிக்கிறது. நவீன உலகம், பூகோளமயமாதல் ஆகியவற்றால் நாம் ஒவ்வொருவரும் பிறரில் தங்கி வாழும் நிலை அதிகரித்து விட்டது. உணவு, குடிநீர், மின்சாரம், அவசர உதவி, பொழுது போக்கு என அனைத்துக்கும் இன்னொருவர் துணை தேவைப்படும் வாழ்க்கை முறையில் வாழும் நமக்கு சுய தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு என்பன பெரும் அழுத்தங்களை தரும். 

இதில் இருந்து வெளிவர நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தனிப்பட்ட ரீதியில் புதுப்பிக்க கூடிய சக்திவளங்களை பயன்படுத்தல் (சூரிய சக்தி அல்லது காற்று மூலம்  மின்), நிலத்தடி நீர் பயன்பாடு, சிரியதோ பெரியதோ வீட்டில் நமக்கென ஒரு தோட்டம், அடிப்படை அவசர உதவி உத்திகளை பயில்தல். நீண்டகால பாவனை உடைய உணவுப்பொருட்களை சேகரித்து வைத்தல், வாசிப்பு, பாடல், நடனம் என ஏதோ ஒரு உள்ளக பொழுபோக்கு அம்சத்தை பழக்கிக்கொள்ளுதல், யோகா, தியானம் என மனதை அமைதிப்படுத்தும் ஏதேனும் ஒரு பழக்கத்தை கைக்கொள்ளல் என நம்மை நாமே கவனித்து க்கொள்ளக்கூடிய ஒரு நிலையை உண்டாக்க வேண்டும். இது பன்டேமிக் காலங்களில் மட்டுமல்ல இயல்பாக நம்வாழ்க்கையில் நேர்மறையான எண்ணத்தை உண்டாக்கும். 

படஉதவி : bizcommunity.com

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற சிந்தனையை மாற்றி “தனித்திருந்தால் தான் தப்பிக்கலாம்” என்ற நெருக்கடியை உருவாக்கியுள்ள கொரோனா வைரஸை எதிர்த்து இன்று உலக நாடுகள் அனைத்தும் பேதமின்றி போராடி வருகின்றன.  இந்நிலையில் கடந்தகாலத்தில் இருந்து நாம் கற்ற அனுபவங்கள் நமக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கின்றன என்பதே உண்மை. கொரோனா வைரஸ் ஒரு வியத்தம் அடைந்துவரும் வைரஸாக இனங்காணப்பட்டுள்ளது. இந்த வியத்தமடையும் செயற்பாடு தொடர்ந்து நடைபெறும் எனில் இன்னும் சில மாதங்களில் இந்நோயின் வீரியம் பாரியளவில் வீழ்ச்சிகாணும் என கருதபப்டுகிறது. அதுவரை நம்மை நாம் தனிமைப்படுத்திக்கொண்டு நம்மையும் பிறரையும் காத்திடுவோம். 

Related Articles