பிரித்தானியர்களின் அதி திறன் வாய்ந்த இரு போர்க் கப்பல்களை இலங்கையின் கிழக்குப் பகுதியில் வைத்து, ஜப்பானிய விமானங்கள் முறியடித்த கதை, சற்று சோகத்தைத் தருவது இயல்புதான். மாவீர்களின் மரணத்தைக் காண்பது போன்ற துயரமே அது!
திருகோணமலையை குறிவைத்த ஜப்பானியர்கள்
திருகோணமலையில் ஜப்பானியர்கள் மேற்கொண்ட தாக்குதல் ஒன்றும் எதிர்பாராத தாக்குதல் அல்ல. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதியன்று தான் திருகோணமலையில் ஜப்பான் தனது ருத்ர தாண்டவத்தை ஆடியது. ஆனால் அதே மாதம் 5 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு நகரத்தை ஜப்பானியப் போர் விமானங்கள் சின்னாபின்னப் படுத்தியிருந்தன. அந்த வகையில், திருகோணமலைத் துறைமுகம் தாக்கப்படும் வாய்ப்பு பலமாக இருந்தது. அப்போது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த பிரித்தானியர்களுக்கு இது தெரியாமல் இருந்திருக்கலாம் என்று யாராவது சொன்னால், அதைப் போலொரு வேடிக்கை வேறில்லை.
கொழும்பைத் தாக்கியதைப் போலவே, ஜப்பானிய விமானங்கள் திருகோணமலைத் துறைமுகத்தை குறி வைத்து, சரமாரியாகத் தாக்கின. ஆனால், இங்கு பார்க்கப்போகும் பிரித்தானியப் போர்க்கப்பல்கள் அப்போது அங்கிருந்து புறப்பட்டுவிட்டன. மட்டக்களப்பிற்கு சற்றுத் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் வைத்தே அந்தக் கப்பல்களும் தாக்குதல்களுக்கு இலக்காகின.
1924 ஆம் ஆண்டில் கடல் களத்தில் குதித்த HMS Hermes
பிரித்தானியர்களின் ரோயல் நேவிக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலே HMS Hermes. இந்தக் கப்பலின் கட்டுமானப் பணிகள் முதலாம் உலகப் போர்க்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும், அந்தப் போர் நடந்து முடியும் வரை, இதன் கட்டுமானப் பணிகள் முடியவில்லை. இதன் அதி சிறந்த வடிவமைப்பு, பல தடவை மாற்றப்பட்டது என்கின்றது வரலாறு. இறுதியில் 1924 ஆம் ஆண்டில், HMS Hermes தனது மூர்க்கமான வடிவமைப்போடு கடல் என்ற களத்தில் குதித்திருந்தது.
இரண்டாம் உலகப்போர்க் காலத்திலேயே HMS Hermes தனது பலத்தைக் காண்பித்தது. பிரெஞ்சுக் கடற்படையுடன் இணைந்து, ஜேர்மனிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கடற் போர்களில் அதன் உக்கிரம் வெளிப்பட்டது. அதன் பின்னர் இந்து மா சமுத்திரத்தை ஜப்பான் – ஜேர்மனி கூட்டுப் படைகளிடமிருந்து காக்கும் பணியைப் பொறுப்பேற்றது HMS Hermes. திருகோணமலையை ஜப்பான் தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், அது இலங்கையை வந்தடைந்திருக்க வேண்டுமென கூறப்படுகின்றது.
திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்திருந்த HMS Hermes ஜப்பானியர்களின் தாக்குதல் குறித்து கிடைக்கப்பெற்ற எச்சரிக்கைத் தகவலொன்றின் காரணமாக, தாக்குதல் நடைபெறுவதற்கு முதல் நாளே, அங்கிருந்து கிளம்பியது. மாலைத்தீவு நோக்கி தனது பயணத்தை அமைத்துக் கொண்ட அந்த விமானம் தாங்கிக் கப்பலின் மேல் தளத்தின் அன்றைக்கென்று, எந்த விமானமுமே தரித்திருக்கவில்லையெனக் கூறப்படுகின்றது.
அடுத்த நாளான 9 ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தினைத் தாக்கியழித்த ஜப்பானிய விமானங்கள், HMS Hermesயை, மட்டக்களப்பிற்கு சற்றுத் தொலைவிலான கடற்பரப்பில் வைத்து அடையாளம் கண்டுகொண்டன. தாழப்பறந்து குண்டுவீசும் வல்லமை கொண்ட ஜப்பானிய விமானங்கள் ஒரே நேரத்தில் டசின் கணக்கில் HMS Hermes இனைச் சுற்றி வளைத்து, சரமாரியாகத் தாக்கின. காப்பாற்ற தன்னிடம் விமானங்களே இல்லாத நிலையில், அந்த விமானம் தாங்கிக் கப்பல் கடலில் மூழ்கியது.
HMS Hermes மூழ்கும் போது அதில் இருந்த பலர் தப்பித்தார்களெனக் கூறப்படுகின்ற போதும், அது 307 மனிதர்களுடன் மூழ்கியமை உறுதிசெய்யப்பட்டது. அந்தக் கப்பலின் கப்டன் Onslow இறுதிவரை அந்தக் கப்பலிலேயே இருந்து மரணத்தைத் தழுவினார்.
இரத்தம் குடிக்கும் பேய் – HMAS Vampire
HMS Hermes போலவே, திருகோணமலை மீதான ஜப்பானின் கொடூரத் தாக்குதலில் பிரித்தானியாவின் பிரபல்யம் வாய்ந்த மற்றுமொரு கப்பலும் மூழ்கிப்போனது. அதன் பெயர் HMAS Vampire. அது ஒரு நாசகாரிக் கப்பல். அதன் கடுமையான போர்த்திறமை காரணமாகவே, “இரத்தம் குடிக்கும் பேய் என்று கருதப்படும் வம்பயரின்” பெயரை அதற்குச் சூட்டியிருந்தனர்.
1917 ஆம் ஆண்டு தனது முதலாவது கடற்பிரயாணத்தை ஆரம்பித்த HMAS Vampire, பிரித்தானியாவின் பாரிய போர்க்கப்பல்களைப் பாதுகாக்கும் நாசகாரிக்கப்பலாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் பிரித்தானியா தனது கடற்படையில் இந்தக் கப்பலை வைத்திருந்த போதும், பின்னர் தனது காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடான அவுஸ்திரேலியாவின் கடற்படைக்கு இதனை அளித்துவிட்டது. அந்தவகையில் உலகின் இரு பெரும் கடற்படைகளின் பாதுகாவலனாக விளங்கியது HMAS Vampire.
இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கும் வரை அவுஸ்திரேலிய கடற்பரப்புகளின் காப்புப் பணியில் இது ஈடுபடுத்தப்பட்டு வந்தது. ஜப்பானிய நீர்மூழ்கிகளை அழிக்கும் நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட போர்க்கப்பல் அணியின் பாதுகாவலனாக HMAS Vampire பின்னர் உருவெடுத்தது.
கலப்ரியா கடற் சமர் என்று வரலாறு கூறுகின்ற மாபெரும் கடற்போரில், ஜப்பான் மற்றும் ஜேர்மனியின் நட்பு நாடான இத்தாலியின் கடற்படைக்கு எதிராக, HMAS Vampire பாரிய தாக்குதலைத் தொடுத்தது. அத்துடன் அந்தப் போரில் பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பலான HMS Eagle க்கு பாதுகாப்பளிக்கும் பணியையும் அது முன்னெடுத்திருந்தது.
அவுஸ்திரேலிய கடற்படையிலிருந்த HMAS Vampire, 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பிரித்தானியக் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டதோடு, பிரித்தானிய கடற்படையின் கிழக்குக் கடலணியின் ஓரங்கமாக்கப்பட்டது. அத்துடன், அது கொழும்பையும் வந்தடைந்தது. அங்கிருந்து ஜப்பானியக் கடற்படைக்கு எதிரான முன்னெடுப்புகளை Vampire வெற்றிகரமாக நகர்த்தியது.
இந்து மா சமுத்திரத்தில் அதிகரித்து வந்த ஜப்பானியக் கடற்படையின் ஆதிக்கத்தை துடைத்தெறிவதற்காக, விமானம் தாங்கிக் கப்பலான HMS Hermesக்குத் துணையாகவும் பாதுகாப்பளிக்கவுமென Vampire பணிக்கப்பட்டது. தாக்குதல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் Vampire இந்தப் பணியை ஏற்றுக் கொண்டிருந்ததாக தெரிய வருகின்றது.
கிடைத்த எச்சரிக்கைத் தகவலின் பிரகாரம் திருகோணமலையை விட்டுப் புறப்பட்ட HMS Hermes க்கு பாதுகாப்பளிக்கும் வகையில், உடன் பயணித்த HMAS Vampire ம் அடுத்த நாளான 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வியாழன் அன்று, ஜப்பானிய விமானங்களால் இலக்கு வைத்து தாக்கப்பட்டது. தன்னைத் தாக்கிய 16 குண்டு வீசும் ஜப்பானிய விமானங்களில், ஒன்றை மட்டுமே Vampire சுட்டு வீழ்த்தியது.
ஜப்பானிய குண்டு வீசும் விமானங்கள், ஒவ்வொன்றும் தலா 250 கிலோகிராம் நிறை கொண்டதான 16 குண்டுகளை HMAS Vampire மீது வீசி வெடிக்கச் செய்தமை காரணமாக, அது இரண்டு துண்டுகளாக உடைந்தது.
அதன் கட்டளையிடும் அதிகாரியும் எட்டு மாலுமிகளும், அந்தக் கப்பலுடனே இறந்தார்கள். தனது சேவைக்காலத்தில் ஐந்து பெரும் கடற்சமர்களில் கலந்து கொண்டு சாகசம் நடத்தியமைக்காக ஐந்து விருதுகள் பெற்ற, நாசகாரிக்கப்பல் இலங்கையின் கிழக்குக் கடலில் துயில் கொள்கின்றது.
HMAS Vampire மற்றும் HMS Hermes ஆகிய இரு கப்பல்களின் இழப்பும் பிரித்தானியக் கடற்படைக்கு ஈடுசெய்ய முடியாததாக இருந்தது. அந்தக் காலப்பகுதியில் அதி தொழினுட்பம் வாய்ந்த விமானங்களைக் கொண்டிருந்த ஜப்பானிய விமானப் படையின் வேகத்தினையும் வீச்சினையும், இந்த இரு கப்பல்களாலும் எதிர்கொள்ள முடியாமற் போனமை சோகம் மிக்க கதை தான்.