Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன்படுத்தினான் | #தமிழ்பாரம்பர்யமாதம்

திடீரென ஓர்நாள் கூகுள் போன்ற தளங்களின் கணினி சேவையகங்கள் (Servers) முற்றிலும் இயங்காமல் போனால் என்னவாகும்? இது ஏற்கனவே, ஆகஸ்ட் 2013-ல் ஒருமுறை நடந்ததுதான். கோடிக்கணக்கான (அ) எண்ணிலடங்கா தகவல்கள் ஒரே நொடியில் பறிபோகும் அபாயத்திலிருக்கும் டிஜிட்டல் யுகத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தகவல்களை பத்திரப்படுத்த காகிதங்கள் தற்காலிக கருவியாக பயன்படுத்தப்பட்டு, அதிலும் பாதுகாப்பற்ற பயன்முறையை கொண்டிருக்கும் கணினிகளும் திறன்பேசிகளும் தகவல் பதிவு மற்றும் சேமிப்பிற்கான முக்கிய சாதனங்களாகவே மாறிவிட்டன. இந்த நேரத்தில் ஓலைச்சுவடியின் பயன்பாட்டை, அதன் வரலாற்றை, சிறப்புகளை எடுத்துரைப்பதில் களிப்படைகிறோம்.

தகவல் பதிவு

முதலில் தகவல் பதிவைச்செய்ய நாம் உபயோகப்படுத்தும் சில பொருட்களை பற்றி பார்ப்போம்.

  1. கிளவுட் சேமிப்பகங்கள் – கூகிள் கிளவுட், ஒன் டிரைவ் வகை – எவ்வளவு வருடங்கள் தகவல்களை அழியாமல் பாதுகாக்கும் என்பது நிச்சயமற்ற ஒன்று

  2. கணினி மற்றும் திறன்பேசி சேமிப்பகங்கள் – பல நேரங்களில் தகவல் இழப்பு சாத்தியம்

  3. காந்த நாடாக்கள் – 10 முதல் 20 வருடங்கள் தாங்கக்கூடியது

  4. தங்கத்தாலான ஆப்டிகல் தட்டுகள் – 100 வருட ஆயுள் என்றொரு கூற்று உண்டு

சற்று சிந்தித்துப்பார்த்தால், மேற்கூறிய அனைத்தும், செயற்கையாக தயாரிக்கப்பட்டதும், இயற்கைக்கு ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்யும் விதமாகவும் தான் இருக்கும்.

நாம் உபயோகப்படுத்திய ‘ஓலைச்சுவடிகள்’, முற்றிலும் இயற்கையான மற்றும் இயற்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்காத ஒன்றென்பதை நினைத்து வியக்கிறேன். அதன் ஆயுளும் மேற்கூறிய அனைத்தை விடவும் அதிகம் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்ததும் கூட.

Data Storage (Pic: w-dog)

எப்படி தயாரித்தனர் ஓலைச்சுவடிகளை?

ஓலைச்சுவடிகள் செய்ய பனை மர ஓலைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில், குறிப்பாக மூன்று வகை பனை மரங்களான, தாளைப்பனை, கூந்தல் பனை, இலாந்தர் பனை போன்ற மரங்களின் ஓலைகளையே ‘ஓலைச்சுவடிகள்’ செய்ய பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வகை பனைமரங்களின் குருத்து ஓலைகளை எடுத்து, அதில் மஞ்சள் தடவி, நன்கு பதப்படுத்தியபின்பு, சரியான அளவில் வெட்டப்பட்ட பிறகு, அதில் எழுத்தாணியைக்கொண்டு எழுதி, அதன் மேல் சுடர்க்கரி அல்லது மீண்டும் மஞ்சள் தடவ, ஓலைச்சுவடி தயாராகிறது. மேலும் அது பூச்சிகளின் அரிப்பிற்கு உள்ளாகாமலிருக்கும் பொருட்டு, அதன்மேல் வேம்பு அல்லது வசம்பு போன்ற, திரவியங்கள் அல்லது எண்ணெய்கள் தடவப்படுவதும் உண்டு. மேலும் எலுமிச்சை புல் எண்ணெய் அல்லது கற்பூர எண்ணெய் ஓலையின் நெகிழ்வுத்தன்மைக்காக தடவப்படும்.

நவீன காலங்களில், ஓலைகளை பூஞ்சை அரிக்காமல் பாதுகாக்க, ‘தைமோல் நீராவி புகையூட்டம்’ கொண்டு பதனிடப்படுகிறது.

தயார் செய்யப்பட்ட ஓலைகள், இளம் பழுப்பு நிறத்தை அடைந்ததும், எழுதப்பட தயாராக உள்ளதென்று பொருள். ஓலைகள் எழுதி முடித்ததும், அந்த கட்டின் மேலும் கீழும் ஓலையின் அளவைவிட சற்று பெரிய மரத்தாலான பலகைகள் கொண்டு பாதுகாப்பு உறை போன்று  மூடப்படுகிறது. சிறிய நூல் நுழையும் வண்ணம், துளையிடப்பட்டு, ஒட்டுமொத்தமாக கோர்க்கப்படுகிறது. கோர்க்கப்பட்ட பின், அஃது ஒரு துணியினால் சுற்றப்பட்டு, தூசு படியாமல் பாதுகாக்கப்படுகிறது.

ஓலை காலப்போக்கில் வறட்சியடைந்தால், மீண்டும் அதன்மீது எண்ணெய் தடவப்படும். அப்போது, மெல்ல ஓலையின் நிறம் கருமையை தழுவ ஆரம்பித்திருக்கும்.

ஓலைச்சுவடிகள், பொதுவாக 15-60 செ.மீ நீளமும், 3-12 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். உலகிலேயே பெரிய ஓலைச்சுவடி ஒன்றை மைசூரு கண்காட்சியில், ‘ஓரியண்டல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்’ காட்சிப்படுத்தியிருந்தது. அந்த சுவடி சுமார் 90 செ.மீ நீளமும், 4-5 செ.மீ. அகலமும் இருந்தது. விரமஹேஸ்வராச்சார சங்க்ரஹா(Viramahesvarachara Sangraha) எனும் அந்த ஓலைச்சுவடியை, நீலகந்த நாகமாதாச்சாரியா(Nilakantha Nagamathacharya) என்பவர் எழுதியிருந்தார்.

இப்போதும், சிலர் ஓலைச்சுவடிகளில் எழுதும் அல்லது தகவல்கள், இலக்கியங்களை நகல் செய்யும் பொருட்டு ஓலைச்சுவடிகளை பயன்படுத்துகின்றனர். பொள்ளாச்சியின் ‘நல்லிக்கவுண்டன்பாளையத்தை’ சேர்ந்த சோதிட சிகாமணி என்பவர், சில இலக்கியங்கள் மற்றும் புராணங்களை ஓலைச்சுவடிக்கு நகலெடுத்துள்ளார்.

Olai Chuvadi (Pic: tamilwin)

ஓலைச்சுவடி வரலாறு

ஓலைச்சுவடிகள், கி.மு 5-ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து கிட்டத்தட்ட கி.பி.19-ஆம் நூற்றாண்டு வரை எழுதப்படுபொருளாக தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தியா, நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் இதில் அடக்கம். எனினும், ஓலைச்சுவடியில் எழுதும் இந்த முறையை, மிகச்சரியாக யார் கண்டறிந்தார்கள் என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.

பெரும்பாலானவை, கட்டிடக்கலை, கணிதம், வானியல், சோதிடம் மற்றும் மருத்துவம் பற்றின ஓலைச்சுவடிகள். ஒவ்வொரு முறையும், ஓலைச்சுவடிகள் ஏதேனும் பாதிப்பிற்கு உள்ளாகும்போதோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறையோ மற்றொரு புதிய ஓலைச்சுவடிக்கு அதன் தகவல்கள் மாற்றப்பட்டு வந்துள்ளன.

அதாவது, திருக்குறள், திருவள்ளுவரால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருந்தால், அந்த ஆதிச்சுவடி தற்போது நமக்கு கிடைப்பது அரிது. அஃது, கி.மு 1-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருப்பின், இப்போது, குறைந்தபட்சம் 9 தலைமுறைகளில் ஓலை மாற்றி எழுதப்பட்ட, அண்மைய சுவடிகளையே நம்மால் காண இயலும். ஏனெனில், சரியாக பாதுகாக்கப்பட்டிருந்தால், ஒரு ஓலைச்சுவடியின் ஆயுட்காலம், சராசரியாக, 200-லிருந்து 300 ஆண்டுகள் வரையே.

இலங்கையில் இருக்கும் அநுராதபுரத்தில், 1100 வருட பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் கண்டிபிடிக்கப்பட்டன.

மு. வரதராசனின் ‘தமிழ் இலக்கியம்’ நூலில் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு,

பழங்காலம்

    சங்க இலக்கியம் (கிமு 300 – கிபி 300)

    நீதி இலக்கியம் (கிபி 300 – கிபி 500)

இடைக்காலம்

    பக்தி இலக்கியம் (கிபி 700 – கிபி 900)

    காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)

    உரைநூல்கள் (கிபி 1200 – கிபி 1500)

    புராண இலக்கியம் (கிபி 1500 – கிபி 1800)

    புராணங்கள், தலபுராணங்கள்

மேற்கூறிய அனைத்து, இலக்கியங்களும், மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகளும், ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டிருந்தன. தமிழின் பெருமைகளை கூற வேண்டும் என்றால், அந்த பெருமைகளை திறமையாக காத்துக்கொடுத்த பெருமையும் ஓலைச்சுவடிகளையே சாரும். இன்றளவும் செந்நாப்போதார் என்றழைக்கப்படும் வள்ளுவரின் திருஉருவம், வலது கையில் ஓர் எழுத்தாணியும், இடது கையில் ‘ஓலைச்சுவடியுமாகவே’ நமக்கு மனதில் பதிந்திருக்கும்.

At Sea-Shore (Pic: flickr)

ஓலைச்சுவடிகள் தற்காலம்

முதல், இடை, கடை என மூன்று சங்க காலங்களை கடந்து வந்தபின், தற்காலத்தில், சிற்சில அவதூறுகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. சோதிடக்கலைகள் தலைமுறை தலைமுறையாக சுவடிகளிலேயே கடத்தப்பட்டு வந்து, பின் போலிகளையும் தற்சமயம் சந்தித்துள்ளது வருத்தத்திற்குரிய செய்தியாகும். அதிலும், அகத்தியர் எழுதியதாக கூறப்படும் ‘நாடி சோதிட நூல்கள்’.

அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில், தமிழகத்தின் சீர்காழியில் உள்ள, ‘வைத்தீஸ்வரர் கோவிலைச்சுற்றி’ அமைந்திருக்கும், பல நாடி சோதிட நிலையங்களைப்பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மையினை பற்றியும் எடுத்துரைக்க முனைந்தபோது, சற்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அந்த கோவிலைச்சுற்றியுள்ள, கதிராமங்கலம், பாகசாலை மற்றும் காத்திருப்பு போன்ற கிராமங்களில் மக்கள், தொன்மையான சுவடிகள் போலவே, போலி நாடி சோதிட ஓலைச்சுவடிகள் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

ஆசியாவிலேயே, பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த, யாழ்ப்பாணம் பொது நூலகம், 1981-இல்  எரிக்கப்பட்டது. அதில், தற்போது திராவிடம் என்று சொல்லப்படும் பகுதிகளைச்சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தின் பண்டைய ஓலைச்சுவடி நூல்கள் ஏராளமானவை தீக்கிரையாகின. அன்றைய தினம், எரிக்கப்பட்டதில் சுமார் 95,000 ஓலைச்சுவடிகளும், மீண்டும் கிடைக்கப்பெறாத பல புத்தகங்களும் அடக்கம். பல வருடங்கள் கழித்து இலங்கை அரசாங்கம் இதற்கு மன்னிப்பு கோரியிருந்தது. இரண்டு நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீக்கு, அத்துணை அறிவுசார், பாரம்பரிய நூல்களும், பாழும் அரசியல் மற்றும் இனவெறி காரணங்களால் எரிக்கப்பட்டதற்கு, எந்த மன்னிப்பையும் ஏற்க முடியாத மனப்பாங்கிலேயே நாம் உள்ளோம்.

சில ஓலைச்சுவடிகளை ‘டிஜிட்டல்’ முறைக்கு, அதாவது படங்களாக மாற்றிக்கொண்டிருப்பது சற்றே ஆறுதலளிக்கும் செய்தியாகும்.

நம்மிடம் இந்த நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள், நூறில் இருபது சதவீதம் கூட இல்லையென்றாலும், அதன் பின்னும் நாம் அந்த அரும்பொருளை, பாதுகாக்காமல் வீணாக அழியவும் தொலையவும் விட்டது, மிக்க வேதனை தரும் செய்கையாகவே தோன்றுகிறது.

Jaffna Library (Pic: tamilguardian)

தன்பங்கிற்கு, இலக்கியங்களையும் காப்பியங்களையும் மொழியின் இலக்கண மற்றும் வரலாற்றையும் தாங்கி நின்று, அதன் இறுதிக்காலம் வரை அவற்றை பத்திரப்படுத்திய ஓலைச்சுவடிகளை, அடையாளம், ஆதி மொழி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம் பராமரித்து, பாதுகாக்க தவறியதை எங்ஙனம் கூறுவது? நாம் இழந்தது வெறும் மர ஓலைகளை அல்ல. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, ஆராய்ச்சி முடிவுகளை.. நோய் தீர்க்கும் மருந்துகளை.. வாழ்வியல் நெறிகளை.. சிந்தையில் கொஞ்சும் கவிகளை.. அனைத்திற்கும் மேல், நாம் இழந்ததும், இழந்துகொண்டிருப்பதும், ஏறத்தாழ குறைந்தபட்சம் 2000 வருட அனுபவங்களை…

Related Articles