மருத்துவர் புண்யசிரி வருசவிதான அம்பலாங்கொடையில் சிறுவனாக இருக்கும் பொழுதே வெசாக் தோரணங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அதையும் தாண்டி வைத்தியராகும் ஆர்வத்தினால் வெளிநாட்டில் மருத்துவக் கற்கையையும் பயிற்சியையும் நிறைவு செய்தார். இவர் இலங்கைக்குத் திரும்பி வந்து மயக்கமருந்தியல் (Anesthesiologist) மருத்துவராகப் பணி புரிந்தபோதிலும் வெசாக் தோரணம் அமைக்கும் ஆர்வத்தைக் கைவிடவில்லை.
1982இல் களுபோவிலவிலுள்ள தன் வீட்டில் குடியமர்ந்த பின்பே இவர் தோரணங்களை அமைக்க ஆரம்பித்தார். அவர் வெசாக் காலங்களில் தன் வீட்டு மாடியில் ஒரு சிறிய தோரணத்தை அமைக்கத் தொடங்கினார். ஆனால் 37 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தோரணம் 25 அடி உயரமுள்ளதாகவும் அதிகளவான விளக்குகளையும் தன்னியக்க பொம்மைகளையும் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.
“ஒவ்வொரு ஆண்டும் என் வடிவமைப்பை மேம்படுத்திக்கொண்டிருந்தேன். இதை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் செய்து கொண்டிருந்தேன். நோய்த் தோற்றுக் காலத்திலும் கூட இதைச் செய்தேன்” என்று சொன்னார்.
தோரணங்களைத் திட்டமிட்டு மின்னணுக்கூறுகளை ஒருங்கிணைத்து வடிவமைப்பது வரை தோரணத்துக்கான அனைத்தையும் வருசவிதானவே செய்கின்றார். மருத்துவராயினும் பொறியியலிலும் மின்னணுக்கூறுகளிலும் தேர்ந்தவராக இருப்பதால் அவருக்குத் தோரணங்களை அமைப்பது இலகுவாக இருக்கிறது. கலையாக்கங்கள் மட்டும் தனக்குக் கைவராத காரணத்தால் கடந்த ஆண்டுகளில் பல்வேறு கலைஞர்களின் உதவியை அவர் பெற்று வந்திருக்கிறார். தற்போதுள்ள கலைஞர் செனரத் ரணசிங்க கடந்த பத்தாண்டுகளாகத் தோரணத்துக்கான கலையாக்கங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்.
அவர் புத்தரின் முற்பிறவிகளைச் சொல்லும் 37 ஜாதகக் கதைகளுடன் இதுவரை 37 தோரணங்களை அமைத்திருக்கிறார். இவ்வாண்டு தோரணத்தில் கிசா கோதமியின் கதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வருசவிதானவின் சுற்றுப்புறத்தில் இத் தோரணம் ஒரு முக்கியமான நிகழ்வாக இருப்பதுடன், அவர் பார்வையாளர்கள் தங்கள் பின்னூட்டத்தை எழுதுவதற்காக ஒரு புத்தகத்தையும் வைத்திருக்கிறார். கடந்த 37 ஆண்டுகளாக அவர் உருவாக்கிய அனைத்துத் தோரணங்களின் புகைப்படங்களையும் அவர் வைத்திருக்கிறார்.
வருசவிதான தோரணம் அமைப்பதையும் மக்கள் அதைப் பார்த்து மகிழ்வதையுமிட்டுப் பெருமிதமடைகின்றார். அவர் செய்யும் வேலையில் அவருடைய அர்ப்பணிப்பு, படைப்பாக்கம், கலை மீதான ஆர்வம் என்பன பிரதிபலிக்கின்றன. அவர் 35 ஆண்டுகள் மயக்கமருந்தியல் (Anesthesiologist) மருத்துவராகப் பணியாற்றி 2005இல் ஓய்வு பெற்றபின் தன் ஓய்வுக்காலத்தில் தோரணங்களை உருவாக்கி மகிழ்கின்றார்.
புகைப்படங்கள் : நஸ்லி அஹமட்/Roar Media