பொதுவாக கார்ட்டூன்கள் என்றாலே வெள்ளையின கதாபாத்திரங்களைக் கொண்டதாகவே தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில், மிகப்பெரிய நிற புரட்சியை செய்த கார்ட்டூன்தான் டோரா. தோளின் நிறம் வெளுப்பாகத்தான் இருக்கும் என்கிற குழந்தைகளுக்கான ஆழமன பதிவுகளை துடைத்தெறிய “நிக்லோடியன்” தொலைக்காட்சி தயாரிப்பில் புறப்பட்டவள்தான் டோரா.
1999 ஜூன் முதலாம் திகதி முதன்முதலாக கிரிஸ் கிஃபோர்டு, வலேரி வல்ஷ், எரிக் வெய்னர் ஆகியோரின் கூட்டிணைப்பில் ஆங்கில மொழியில் உருவான “டோரா தி எக்ஸ்புளோரர்“ என்னும் குழந்தைகளுக்கான சாகசத் தொடரான டோரா இன்று அரபு , கண்டோனீயம், டேனிய மொழி, டச்சு, பிரெஞ்சு, பிலிப்பினோ, ஐரிய மொழி, இடாய்ச்சு மொழி, கிரேக்கம், எபிரேயம், இந்தி, அங்கேரிய மொழி, இந்தோனேசிய மொழி, இத்தாலிய, ஜப்பானிய மொழி, கன்னடம், கொரிய மொழி, மக்கதோனிய மொழி, மலாய், மலையாளம், மாவோரி மொழி, நோர்வே, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, பாரசீகம், உருசிய மொழி, செர்பிய மொழி, ஸ்பானியம், சுவீடிய மொழி, தமிழ், தாய்லாந்திய மொழி, துருக்கிய மொழி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம்பூராவும் ஒளிபரப்பப்பட்டு குழந்தைகளுக்கான கற்பித்தலுக்கான ஏராளமான விருதுகளை வெவ்வேறு மொழிகள் சார்பாக பெற்றுக்கொண்டமையிலிருந்தே இந்த கார்டூனின் சிறப்பம்சம் என்னவென்று புரிந்திருக்குமே?
லத்தீன் அமெரிக்க சிறுவர்களை கவர வேண்டும் என்கிற நோக்கில் லத்தீன் அமெரிக்க சிறுமியாக வடிவமைக்கப்பட்ட டோரா முதன்முதலில் 22 லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டாலும் இன்று லத்தீன் அமெரிக்காவினையும் தாண்டி உலகம்பூராவும் சக்கைபோடு போடும் கார்ட்டூன். ஸ்பானிஷ் மொழியில் “exploradora” எனும் வார்த்தையிலிருந்துதான் டோரா எனும் பெயரையே இந்த தொடருக்கு சூட்டினார்களாம்.
இந்த ஒரு கார்ட்டூனை வடிவமைப்பதற்காக மட்டும் நிக்ளோடியனில் கிட்டத்தட்ட முன்னூறுபேருக்கு மேற்பட்டவர்கள் தீவிரமாக வேலைபார்த்துள்ளார்களாம். 1999 இல் ஆரம்பித்து 2019 இல் 8 பாகங்களாக 178 தொடராக தொடர்ந்துள்ள டோராவின் பயணம் 151 நாடுகளுக்கும் 31 மொழிகளிலும் சென்றடைந்துள்ளது.
பயணம் செய்வதில் ஆர்வமுடைய டோரா என்னும் சிறுமி, பேசும் ஆற்றலுடைய தன்னுடைய பை (bag), பூட்ஸ் (boots) Bujji எனும் அவளுடைய குரங்குத் தோழன் சகிதம் பயணங்களை மேற்கொள்ளுகையில் போகும் வழியில் ஏதாவது சிக்கல் இருக்கும். வழி தெரியாதபடி மறைத்திருக்கும் பாறை, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள், புதிர்கள் என வெவ்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பர்.
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் குழந்தைகளை நோக்கி உதவி கேட்பர். எப்படி போவது, என்ன செய்வது என்பது மாதிரியான கேள்விகள் இருக்கும். சற்று நேரத்தில், டோராவே சரியான வழியை தேர்ந்தெடுப்பாள். மீண்டும் ஒரு முறை கேட்டு உறுதி செய்து கொள்வாள். இவர்களை போக விடாமல் தடுக்கும் நரி ஒன்று இருக்கும். அது ஏதாவது நாச வேலை செய்யும். இவர்களது பொருட்களை திருடுவது, வழியை மறிப்பது, டோராவின் நண்பர்களை ஏமாற்றுவது உள்ளிட்ட வேலைகளை செய்துவிடும்.
இந்த கார்ட்டூன் அறிமுகமானதன் பின்னர் கதைப்புத்தகங்களாகவும் விளையாட்டுப் பொருட்களாகவும் , சிறுவர்களின் உபயோகப்பொருள்களுக்கான லோகோவாகவும் உருமாறி இதுவரையில் டோரா சம்பாதித்த பணம் பதினோரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றால் நம்பமுடிகின்றதா?