வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் – 02

ஒரு பேரூந்திலோ  அல்லது மோட்டார் சைக்கிளிலோ நகர்ப்புற வீதிகளில் செல்லும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் வித்தியாசமும் மாற்றமும் உணர்வீர்கள். விதவிதமான வான்முட்டும் கட்டடங்களும் தொழில்நுட்பமும் எம்மைச்சூழ விரிந்து கிடந்தாலும் நீண்ட முடிவில்லா வயல்களையும், பனந்தோப்புக்களையும், கொட்டில் வீடுகளையும் அதில் கொத்தி திரியும் கோழிகளையும் பார்க்கும்போது மனதின் ஓரத்தில் ஆனந்தமாய் இனம்தெரியாத ஒரு பூரிப்புவரும். கலை  இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடுள்ளவர்களுக்கு இது கூடுதல் குதூகலம்  என்பதை மறுத்து கூறமுடியாது.

தொலைதூர புகைவண்டிப் பயணங்களில் எமது புகைப்படக் கருவிகள் அதிகம் படம் பிடிப்பது கிராமங்களையே. தேடித் தேடி சேர்த்துக்கொள்ளும் புகைப்படங்களில் கவனம் செலுத்திய நாங்கள் இதம் தந்த தென்றலையும், பரந்து விரிந்த வயல் தேசத்தில் கையில் மண்வெட்டியுடன் வியர்வையை  உரமிட்டு எங்கள் உணவுக்காக உழைக்கும் விவசாயியின் வாழ்வியலையும் இன்னும் சமூகவலைத்தளங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் அச்சமூக வலை தளங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களின் நாளாந்தத்தையும் கவனிக்க தவறிவிடுகிறோம். இவ்வாறு தவறி விடப்பட்டவையே எதிர்காலத்தில் எங்கள் அடையாளங்களை கேள்விக்குறியாக்கி விடப்போகின்றன.

நாட்டார் வழக்காற்றியல் என்பதை அறிமுகம் செய்து உள்நுழையவேண்டிய துர் அதிஷ்ட நிலை என் எழுத்துக்களுக்கு ஏற்பட்டுள்ளதை நினைத்து ஒருகணம் வருந்திக்கொள்கிறேன். நாட்டார் இலக்கியம் என்பதை வரையறுப்பதில் காலம் காலமாக வேற்றுமையான எண்ணப்பாடுகள் காணப்பட்டு வருகின்றது. வரலாற்றில் நாட்டார் இலக்கியங்களை ஆராய்ந்தவர்கள் அக்காலநிலைக்கும் தங்கள் சுவாத்தியத்திற்கும் இணங்க அதனை வரைவிலக்கணப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள். இருந்தும் எல்லோரையும் பொதுமைப்படுத்தி அவர்களின் கருத்தாழங்கள் விடயப் பரப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு அறிஞர் போக்ஸ்

புராதனமாகவோ அல்லது நாகரிகம் வாய்ந்ததாகவோ ஒரு சமூகப்பகுதி அல்லது உறவுக்குழுக்கள் அல்லது பழங்குடி மக்கள் அல்லது ஒரு இனம் அல்லது ஒரு நாட்டு மக்களின் வழக்காற்றுத்தொகுதியே நாட்டார் வழக்காற்றியல் என வரையறைசெய்கிறார்.

இந்த நாட்டார் வழக்காற்றியல் இரு பெரும் பிரிவாக பிரிகின்றது.

  1. நாட்டார் இலக்கியம்

2.நாட்டார் நம்பிக்கைகள்

இந்த தொடர் நாட்டார் இலக்கியம் என்ற பெரும் பிரிவையே முழு நோக்காக கொண்டு எழுதப்படுகிறது. வடக்கு தமிழ் மக்களின் வரலாற்று பாரம்பரியம் தொன்மையானது. நாட்டார் இலக்கியத்திற்குள்அவர்களின் வரலாற்று வாழ்க்கை முறையை ஆராய்வது மிக திருத்தமான செயலாகும்.

நாட்டார் இலக்கியம் பொதுவாக நாட்டுப்புற கதைகள் , நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், புராணக் கதைகள், கூத்து என வகைப்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவை வாய்மொழி வழக்காறு உடையனவையாகவே காணப்படுகின்றன. நாட்டார் இலக்கியம் என்று வரும்போதே நாட்டாரியல் மேலோங்கி நிற்கிறது. ஆதிகால வடக்கு மக்களின் சூழலியல் சார்ந்த அம்சங்கள் வயலும் வயல்சார்ந்த இடங்களுமாக இருந்தமையால்  அம்மக்கள் கல்வித்துறையில் பெரும்பான்மை  நாட்டம் செலுத்த தடையாக இருந்தது. இதனால் எழுத்து மொழி இலக்கியங்களை விட வாய் மொழி இலக்கியங்களிலேயே அதிக ஈடுபாடு காட்டியிருந்தார்கள் அம்மக்கள். வடக்கு பகுதியின் நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவை பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் கூத்து, கதைப்பாடல்களாகவும் அமைந்துள்ளன.

வடக்கின் நாட்டார் இலக்கியங்களை இரசிக்க வாசகர்களை இன்றிலிருந்து மிகவேகமாக பின்னோக்கி ஒருமுறை அழைத்துச் செல்வோம்…….

அதோ வயல்காணிகள் தெரிகின்றன, அளந்து மண் கோதி இடப்பட்ட வரம்புகள், எங்கு பார்த்தாலும் சலசலக்கும் வாய்க்கால்கள், வாய்க்கால்களில் நீந்தி விளையாடும் கச்சல், வரால், கெளிறு, மங்கன்,  மசரி,  உழுவைகள், கொஞ்ச தூரம் தள்ளி மதகு அருகே தூண்டிலோடு சில நடுத்தர வயதுகாரர்கள். வாய்க்கால் திரும்பும் இடம் ஓலையால் நேர்த்தியாக பின்னப்பட்டு களிமண் சுவர்கள் இடப்பட்டு வெளியே குந்துடன் சிறிய அளவான வீடு, வீட்டின் முன்னே ஓலைப்பின்னலினாலான கூடாரம் கோழிகளுக்கும் சாவல்களுக்கும், விவசாயத்திற்குச்செல்ல கணவன் தயாராகி விரிந்து செழித்த ஆலமரத்தின் கீழ் அடிஅகன்ற முடி கூரான பிள்ளையார் சிலை முன்

“முடியோடு தேங்காய் கையில் எடுத்தோம்

மூத்தோர் கணபதியை தோத்திரம் செய்தோம்.”  என தேங்காய் உடைப்பார்.

வீட்டோடு அருகே உள்ள வயலுக்கு சென்றவன் ஏர்பூட்டி உழ முன்…..

“பட்டி பெருகவேணும் தம்பிரானே

பால்ப்பானை பொங்க வேணும் தம்பிரானே……

மேழி பெருகவேணும் தம்பிரானே

மாரிமழை பெய்யவேணும் தம்பிரானே ………”

என மழை சிறப்பாக பெய்யவேண்டும் என வருண பகவானை வணங்கிக்கொள்வார்கள்.

என்னதான் மழையும் மனிதர்களும் ஒத்துழைத்தாலும் விவசாயியின் பெரும் நம்பிக்கை அவன் எருதிலேயே இருக்கும். எருதை சமாதானப்படுத்தி வேலை செய்யவைக்க

“சார்பார்த்த கள்ளனடா …..

தாய்வார்த்த கேளனடா …..

பாரக்கலப்பையடா செல்லனுக்கு ….

பாரமேத்தத் தோணுதடா……

வரம்போ தலகாணி செல்லனுக்கு ……

வாய்க்காலோ பஞ்சுமெத்த ……. ”

என்று பெற்ற பிள்ளையை போல தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவார்கள்.

இப்பிடி பிள்ளைபோல் வளர்த்த உழவு மாடுகள் இடைக்கிடை கட்டவிழ்த்து காடுகளுக்கிடையே மறைந்து விடுவதுண்டு. இப்பிடி தொலைந்த மாடுகளை தேடி காடு மேடுகளெல்லாம் அலையவேண்டி வரும். அலையும் நேரங்களில் தன்னை பாதுகாத்துக் கொள்ள உடற்கட்டு மந்திரம் சொல்லிக்கொள்வார்கள். ஊர் எல்லையெங்கும் காவலிருக்கும் ஐயனாருக்கு நல்ல கேட்டித் தடி வெட்டி சாத்தி வைப்பார்கள். இதை வதனமார் சிந்தில் வரும் பாடல் வரிகளில்

“நாவியும் கீரியும் நுழையாத குருமனில

நாங்கள் நுழைந்தொரு குரும் பொல்லு வெட்டி

பொல்லு நல்ல பொல்லு, வெட்டிக் கட்டிய பொல்லு

மட்டடக்கும் பொல்லு இது ……”

என்றும்

” அட்ட திசை எல்லாம் கவரிவீச

ஆடர்ந்து சில மனிதர் வந்தடி பணிந்தேத்த

மட்டுலவு மச்சிலாய் வாளுமையானாரை

மலரடிகளென்று மனதிலயராமே …..”

என்னும் 

“சல்லியொரு கொம்பு முழவதிர

வெள்ளையானை மேலேறிவரும்

ஆதி சடவைக்குளம் வாளுமையானரே …..”

என்றும் வரும் வரிகள் அவர்களின் உணர்வுகளை இனிமையான சந்தத்துடன் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறான பாடல்கள் வடக்கில் இன்னும் வழக்கில் உள்ளன.

அரிவு வெட்டும் காலம் வந்தாலே கேளிக்கைகளுக்கும் நையாண்டிகளுக்கும் குறைவே இருக்காது, அந்த மக்களின் மனங்களைப்போலவே வேளாண்மையும் என்றும் செழித்தே இருக்கும். இந்தக் காலங்களில் பாடப்படும் பள்ளு பாடல்கள் ரசனை மிக்கவை.  அரிவு வெட்டும் கத்தியின் சிறப்புக்களை பாடும் போது

“மட்டு கருக்காலே அரிவாளை தீட்டி

மாவிலங்கம் பிடி தன்னில் இறுக்கி

வெட்டும் பிடியை சிரிக்கவே வெட்டி

வெள்ளித்தகட்டாலே விரல் கூட்டமிட்டு ….”

என பாடுகின்றனர்.

மட்டு என்பது மட்டக்கிளப்பின் சுருக்கம். அங்கிருந்து பெறப்பட்ட தாக்கத்தி, ஒன்றரை அல்லது இரண்டங்குல அகலமான முனை சுருட்டிய வளைவானது. இந்த கத்தி வீசினால் இரண்டு அல்லது மூன்று வீச்சுக்கு கைநிறையும். தொடர்ந்து உப்பட்டி விழும். முதல் மூன்று கத்தி வீச்சு நான்கு உப்பட்டி விழல் என்ற தொழில் சந்தத்தில் அருவி வெட்டு பாடல்கள் அமைந்திருப்பதை காணலாம்.

1.மாட்டு கருக்காலே 2.அரிவாளைத் தீட்டி 3. மாவிலங்கம்படி என மூன்று வீச்சுகளோடு நான்காவது சொல்லுக்கு உப்பட்டி கீழே விழும். இந்த ஒழுங்கு பாடல் தொடங்கி முடியும் மட்டும் மாறாமல் பேணப்படும்.

“கூழாவடியாம் குளிர்ந்த நிழலாம்

குளக்கட்டு நீளம் புளியாமினலாம் ……

யாரடா எந்தன் குளக்கட்டு தனிலே ?….

நாங்கள்தான் அந்த சிந்து கவி பாடியோர் ….”

என்று தொடர்ந்து செல்லும்.

அரிவு வெட்டு முடிந்தது நெல்லெல்லாம் வீட்டு முற்றத்திலே காய விடுகிறார்கள். காயவிட்டால் குருவி விடுமா? குருவியின் தொல்லையை பாடுகிறார்கள்

“கோலமலை நீலமலை குந்துமலை கண்டல்

கொக்கிளாய் பரந்தமலை மெம்மலை குறுந்தேர்

கன்னியங் குமரிமலை ஓதியமலையேகி

பொதியமலை நாயாறு தட்டாமலை குருவி முதலாய்

தோற்றமுள்ள கந்தளாய் குளமேவு மலையினொரு

சோல்லரிய பூநேரி சூழுமலையாளம்

குருவிக்கிளை பறந்து வருதே …….”

(static.dnaindia.com)

இதெல்லாம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது நாம் இப்போது உலவிக்கொண்டிருக்கும் கிராமத்துள் என்று சொற்களால் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மனம் பண்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு கற்பனை பார்வையிலே இவ்வளவு பண்படல் என்றால் நாட்டார் வழக்கியலும் நாட்டார் இலக்கியங்களும் அதனுள் உள்ள நாட்டார் பாடல்களும் எவ்வளவு பண்பட்டவை என்பது சொல்லிலடங்கா. இன்னும் நாட்டார் பாடல்களுடனும் நாட்டார் இலக்கியத்துடனும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

மீண்டும் இந்த இயந்திர நூற்றாண்டுக்குள் வந்துவிடுங்கள் இன்னும் எம்மை விட்டு உலக இலக்கியங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

Image Credits : Sajath Nijamudeen

Related Articles

Exit mobile version