களவியல்: சங்ககால காதல் வாழ்க்கை

தம்மை சுற்றி நடப்பவை அனைத்தையும் கூர்ந்து அவதானித்து, அவற்றில் நிலவும் இயற்கை ஒழுக்கைக் கண்டு தெளிந்து அவற்றில் இருந்து இலக்கணம் வரையும் பண்பினைக் கொண்டிருந்த பழந்தமிழ் சமூகம் நம்முடைய மானுட வாழ்வையும் ஒவ்வொரு கட்டங்களாக வகைப்படுத்தியும், நெறிப்படுத்தியும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். தனிநபர் ரீதியிலும், குடும்ப மட்டத்திலும், சமூக அளவிலும் இரு தனியாட்கள் ஒன்றாக இணைந்து ஒரு வாழ்க்கையை முன்னெடுத்தல் என்பது இன்றியமையாத பாகமாகப் பார்க்கப்பட்டது. எனவே இருவர் இணைந்து நடாத்தும் இல்லறத்துக்கென நெறிமுறைகள் வகுத்தாயின. அந்த நல்லில்லறத்துக்கு ஆதாரமாய் விளங்கும் அன்பும், காதலும் மனித கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட இயற்கையின் நியதி என்று அமைந்த போதிலும், அவ்வியற்கையின் வெவ்வேறு படிநிலைகள், மற்றும் இயல்புகள் பற்றிய புரிதல்களும், பழக்கங்களும் நம் முன்னோர்களால் குறித்து வைக்கப்பட்டது. நம் அன்னைத் தமிழுக்கு இலக்கணம் வரைந்த அதே தொல்காப்பியம் தான் வாழ்க்கை ஆண்-பெண் உறவுக்கும் இலக்கணம் கூறுகிறது. இதிலிருந்தே தமிழ் எனும் அடையாளமானது நம்முடைய வாழ்வியலில் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளது என்பது ஆதாரமாகிறது. 

புகைப்படவிபரம்.Thamizhdna.org

முதலில் தொல்காப்பியம் பற்றி சிறிது தெளிவோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தொல்காப்பியர், தான் எழுதிய தொல்காப்பிய இலக்கண நூலினை மூன்று அதிகாரங்களாகப் பகுத்துள்ளார் எழுத்துகள் பிறந்தது முதல் அவை ஒன்றோடொன்று இணைந்து மொழியாகும் தன்மைகளைக் கூறும் எழுத்ததிகாரம்; இவ்வெழுத்துகள் சொல்லாகி, அச்சொற்கள் அமையும் பாகுபாடுகள், அவற்றின் பெயர் வகைகள் முதலியவற்றைக் கூறும் சொல்லதிகாரம்; இச்சொற்கள் இணைந்து பல்வேறு பொருள்களை உணர்த்தும் பொருளதிகாரம். சொற்களுக்கான பொருளை மாத்திரம் கூறுவது மாத்திரம் பொருளதிகாரத்தின் இயல்பல்ல, பொருளதிகராமே நம் வாழ்வியல் கூறுகளைப் பற்றியும் கூறுகிறது.

பொருளதிகாரம் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அகத்திணையியல் களவியல், கற்பியல் ஆகியவை அகத்திணை பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. திணைகளை அகம் (அகம் எனப்படுவது காதல் முதலிய நுண்ணுணர்வுகளை குறிப்பிடுகிறது), புறம் (புறம் எனப்படுவது அரசியல், போர் முதலிய வெளியுலகத்து விடயங்களைப் பற்றி கூறுகிறது) என்று பிரித்த தொல்காப்பியர், அகத்திணையை (திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்படும்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என ஏழாக வகைப்படுத்தியுள்ளார்.அகமாவது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் தமக்குள்ளே கண்டு, காதல் கொண்டு ஒன்றுபடுதல்; சில காரணங்களால் பிரிதல்; பிரிந்து தனித்திருத்தல்; அத்தனிமைக்கு இரங்குதல்; சில நேரங்களில் பிணக்குக் கொள்ளுதல் என ஐந்துவகை நிலைகளைக் கொண்டது. இவற்றைக் கூடல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனக் கூறுகிறது தொல்காப்பியம். 

புகைப்படவிபரம் -Noolaham.com

ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொண்டு உடலாலும், மனதாலும் இணைவது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. தன் ஊரிலே வறட்சியின் காரணமாக வெளியூர் சென்று பொருளீட்டி வரலாம் என்று தலைவன் பிரிந்து செல்லும் நேரத்தில் இல்லத்தில் இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும், செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று தலைவி இல்லத்தில் இருந்து கவலைப்படுதலும் பாலைத் திணை என அறியப்படும். காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி தன் தலைவன் மீது வருத்தம் கொள்ளாமல், தானும் வருந்தாமல் ஆற்றியிருத்தலும், ஆற்றியிருக்கக் கூறுதலும்  காத்திருப்பதும் முல்லைத் திணை எனப்படும்.பாலைத் திணைக்குக் கூறியதுபோல ஏதேனும் ஒரு காரணத்தின் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். அவன் திரும்பி வருவதாகக் கூறிச்சென்ற காலம் வந்தவுடனோ வருவதற்கு முன்போ தலைவி, அக்காலம் வந்ததாகவும் தலைவன் வரவில்லை என்று வருந்துவது இரங்கல் ஆகும். இதனை நெய்தல் திணை என குறிப்பிடுவர். தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம், தலைவனின் தீயொழுக்கம் கண்டு தலைவி அவனோடு கோபம் கொள்ளலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும்.

ஆண் விரும்பி, பெண் விரும்பாமலோ அல்லது பெண் விரும்பி, ஆண் விரும்பாமலோ இருப்பின் அது கைக்கிளை. அதாவது ஒரு தலைக் காமம். காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் தமிழ்ச் சான்றோர்களால் போற்றப்படாத ஒழுக்கங்களாகும். இவை இயற்கைக்கும், வழக்கங்களுக்கும் முரணாகப் பார்க்கப்பட்டது. ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என்று போற்றப்பட்டது.

புகைப்படவிபரம் -Janavin.blogspot.com

காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு எனப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு பற்றியே மிகுதியாகப் பேசப்படுகிறது. களவு எனப்படுவது பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் தொடர்ந்து பேணுவார்கள். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை. ஏனெனில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலும் அன்பும் இயற்கை என்ற புரிதல் பண்டை தமிழ் சமூகத்தில் இருந்து வந்தது.இக்களவு ஒழுக்கம் நான்கு மட்டங்களாக பகுத்துக் கூறப்படும். அவை: காமப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் கூட்டம். 

ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து காதலில் விழுவதற்கு காரணமாக அமைவது அவர்கள் முன்னாட்களில் செய்த நற்புண்ணியத்தின் விளைவே என கருதப்பட்டது. விதிவசத்தாலேயே இருவர் காதலில் விழுகிறார்கள் என சமூகம் எண்ணியது.வாலிபப் பருவத்தில் விலாயும் ஆசைகளின் மிகுதியால் தான் இக்காதல் உருவாகிறது. இதுவே காமப் புணர்ச்சி எனப்படுகிறது. இது நல்வினைப் பயனால் தன்னிச்சையாகவே  நிகழும் புணர்ச்சியாதலின் இயற்கைப் புணர்ச்சி எனவும், தெய்வப் புணர்ச்சி எனவும் கூட அழைக்கப்பட்டது. 

“ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் இல்லறத்தின் பயனால் அவ்விருவரையும் ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்தும், பிரித்தும் வைப்பதுமான இருவகை ஊழ்வினை உண்டு. அவற்றுள் நல்லூழின் ஆணையால் ஒத்த பிறப்பு, குடி, ஆண்மை , ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்துப் பண்புகளுடன் இருக்கும் ஓர் ஆணும், பெண்ணும் கண்டு காதல் வயப்படுவர்.” 

என தன்னுடைய பார்வையில் காதல் உருவாகும் விதத்தை தொல்காப்பியர் கூறியுள்ளார். ஒருவரை ஒருவர் காணும் முதல் கணத்திலேயே புணர்ச்சி இடம் பெறாது. உள்ளத்தால் இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டு அன்பு செலுத்திய பின்னரே உடலால் கூடி மகிழ்வர்.

இயற்கைப் புணர்ச்சி எனப்படுகின்ற இருவரும் கூடி மகிழ்கின்ற நிலையை நாள்தோறும் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இளவட்டங்களான இருவருக்கும் ஏற்படும். முதல்நாள் சந்தித்த அதே இடத்திற்கு ஒவ்வொரு நாளும் தலைவன் சென்று காதலியைச் சந்தித்து மகிழ்வான். இதுவே இடந்தலைப்பாடு ஆகும். களவு என்பது பிறர் அறியாது நடக்கும் ஒழுக்கம் என்பதால் இடந்தலைப்பாடு இடையூறு இன்றி நிகழ்தல் அரிது. ஆதலால் தலைவியோடு தனக்குள்ள உறவினைப் தலைவன் தன் பாங்கனுக்குக் (தோழனுக்கு) கூறுவான். பிறகு அத்தோழன் அப்பெண்ணைப் பற்றி செய்திகளை எல்லாம் கேட்டறிந்து அவள் இருப்பிடம் அறிவான். அவ்விடம் சென்று அத்தலைவியைக் கண்டு வந்து அவள் நிலையைத் தலைவனுக்குக் கூறுவான். இதுவே பாங்கொடு தழாஅல் எனப்படும். தலைவியை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து கூட விழையும் தலைவனுக்குப் பாங்கற் கூட்டம் பயன்தராது. அதனால் தலைவியோடு பழகிவரும் உயிர்த்தோழியை நட்பாக்கிக் கொண்டு அவளிடம் தன் நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்பான் தலைவன். பிறகு அவள் வாயிலாகத் தலைவியைக் கண்டு கொள்வான். இது தோழியிற் கூட்டம் என உரைக்கப்படும். தலைவியைத் தோழி குறிப்பிட்ட ஓரிடத்தில் இருக்கச் செய்து, பின்னர்த் தலைவனிடம் சென்று தலைவி தலைவனுக்காகக் காத்திருக்கும் இடத்தைக் குறிப்பிடுவாள். தலைவன் அவ்விடம் சென்று தலைவியுடன் கூடி மகிழ்வான்.

புகைப்படவிபரம்.Thamizhdna.org.

சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் போதிலும் களவு இன்பம் நீண்ட நாட்கள் தொடர முடியாது ஏனெனில் களவிற்குப் பல்வேறு இடையூறுகள் உண்டு. அதில் முக்கியமானது அலர். காதலனும், காதலியும் அடிக்கடி சந்திப்பது பற்றி ஊர் மக்கள் அறியும் போது அது ஒருவரில் இருந்து ஒருவருக்கு செவி வழியாகச் சென்று அனைவருக்கும் தெரிய வரும் சூழல் உண்டாகும். இத்தகு சூழல் வரும்போது பெற்றோரின் செவிகளுக்குச் செய்தி எட்டிவிடுவதும் உண்டு. பெற்றோரில் சிலர் இக்காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாட்டைச் செய்வர். ஆனால் சில பெற்றோர் அக்காதலை அறிந்து, திருமணத்தை முடிக்காமல் பெண்ணையோ, ஆணையோ காதல் நிலையில் இருந்து பிரிக்க நினைப்பது உண்டு. இவ்வாறான சமயங்களில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து யாருமறியாமல் ஊரைவிட்டு வெளியூர் சென்றுவிடுதலும் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று பெயர். 

பெற்றோரே காதலுக்கு எமனாக அமைவது நம்முடைய காலத்தவர்களுக்கு பெரிய ஆச்சரியமாய் அமையாது. இன்று பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணமோ அதே காரணங்கள் அன்றும் நிலவி வந்தன. அதில் முக்கியமானது களவில் ஈடுபட்ட இளைஞர்களில் சிலர், அக்களவு வெளிப்பட்ட பின் “நான் இன்னாரை  அறிந்ததில்லை” என்று பேசியும், காதல் மணம் கொண்டவர்களைக் கைவிட்டும் வந்தனர். இப்பழக்கம் பலரிடம் பரவாதிருக்கும் வகையிலேயே களவு வெளிப்பட்ட பின் பலர் அறியத் திருமணம் நடத்தும் வழக்கம் வந்ததாகத் தொல்காப்பியர் கூறுவார். காதலில் விளைந்த குற்றங்களே திருமணத்துக்கு வழிவகுத்தது என்பதே உண்மை. திருமணத்துக்கு பின்னரான ஆண், பெண் காதல் வாழ்க்கையே கற்பு ஒழுக்கம் என வகைப்படுத்தப்பட்டது.

களவு, கற்பு என்ற இரு நிலைகளிலும் தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் உற்ற துணையாய் இருந்து உதவுபவள் பெண்ணின் தோழியே. தலைவியின் உற்ற தோழி காதலுக்கு உதவுவதிலும், இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்வதிலும், தலைவிக்கான உளவியல் ஆதரவாகவும் களவியல் நிலையில் உதவியாக இருப்பாள். கற்பு வாழ்விலும் தலைவியின் தோழியின் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு சில சமயங்களில் தலைவன் இன்னொரு பெண்ணைத் தேடிச் செல்வது உண்டு இது பரத்தையிற் பிரிவு எனப்படும். இத்தகு நேரங்களில் தலைவனுக்கு அறிவுரை கூறி அவனை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் தோழிக்கு உண்டு. தலைவனின் நண்பன் பாங்கன் எனப்படுவான். தலைவன் களவுக்காலத்தில் தலைவியின் இருப்பிடம் அறிந்து, அவள் தலைவனிடம் கொண்டிருக்கும் காதலைத் தெரிந்து, தலைவனுக்கு உண்மை நிலையைத் தெரிவித்து காதலுக்குத் துணை நிற்பான். திருமணம் முடிந்து, பரத்தையிற்பிரிவு நிகழும் போது தன் நண்பனை இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் பொறுப்பு பாங்கனுக்கும் உண்டு. 

சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் வாயிலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டுச் செய்திகளை நாம் அறிய முடிகிறது. அக வாழ்க்கை என்பது ஒருவனும் ஒருத்தியும் காதலிப்பது, மணந்து கொள்வது மட்டுமல்ல. காதலிக்கும் போது ஏற்படும் இடையூறுகள், அந்த இடையூறுகளை நீக்கப் போராடும் தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரின் செயல்பாடுகள் என அனைத்துமே இணைந்தது தான் அகத்திணை. வருடங்கள் ஆயிரமாயிரம் கடந்து போன பின்பும் சில விடயங்கள் நம்மிடையே பெரிதும் மாறாது இருப்பதை காண்பது ஒரு வகை ஆச்சரியத்தை நம்முள் விட்டுச் செல்கிறது. சங்ககாலமோ, சமகாலமோ இன்றும் பலருடையே காதல் வாழ்க்கை மேற்கூறிய வண்ணமே உள்ளது.  ஆணும் பெண்ணும் சந்தித்து காதல் கொள்வது, பிறர் அறியாத படி அக்காதலை பேணுவது, காதலுக்கு நண்பர்களின் துணையை நாடுவது, தங்கள் காதலுக்கு ஏற்படும் எதிர்ப்புக்களை எதிர்த்து போராடுவது, காதல் வாழ்க்கையை இல்லறமாக மாற்றுவது, எதிர்ப்புக்கள் மிகுதியாகும் போது காதலர்கள் துணிச்சலுடன் தங்களுக்கான வாழ்க்கையை புதியதொரு இடத்தில் ஆரம்பிப்பது என அனைத்துமே இன்றைய வாழ்வோடும் ஒத்துப் போகின்றன.திருமணத்தோடு நம் கடமை முடிந்தது என ஒதுங்கிக்கொள்ளாமல் அதற்கு பின்னரும் ஒரு தம்பதியினருக்கு இடையே நிகழும் பிணக்குகளை தீர்க்க முன்நிற்கும் உண்மையான நட்பின் அடையாளமும் தற்கால இளைஞர்களிடையே தெளிவாகக் காணக்கூடியா ஒன்றாக இருக்கிறது. இந்த கூறுகள் இன்றளவும் நம்மிடையே நீடித்து வருகின்றன என்பதை சினிமாவே சிறப்பாக காட்டுகிறது. அக்கால கருப்பு வெள்ளைப் படங்கள் முதலாக, தற்கால முப்பரிமாண  திரைப்படம் வரை தமிழ் திரை உலகின் ஒவ்வொரு காதல் சார்ந்த திறப்படத்தில் தொல்காப்பியர் யாத்த இலக்கணம் தெள்ளத்தெளிவாக வெளிப்படுவதை காணலாம். (நாடோடிகள் திரைப்படம் இதற்கு நல்லதொரு உதாரணம்) 

கடல்புறா புத்தக அட்டைப்படம் – புகைப்படவிபரம் -Ujiladevi.in

களவியல் பற்றி மேலும் நோக்கும் போது திருமணம் என்கிற சடங்கு, ஒரு பெண்ணைக் காதலில் ஏமாற்றுவோர் எண்ணிக்கை பெருகி விட்ட சூழலில்தான் உருவானதை நாம் அறியலாம். காதல்கூட, ஒத்த குணமும், ஒத்த தன்மையும்  போன்ற பத்துப் பண்புகள் பொருந்தும் போதே நிகழும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ஒருவர் பிறக்கும் சமூகமும் காதலில் தாக்கம் செலுத்தும் என தொல்காப்பியம் கூறுவது தவிர்க்கமுடியாத ஒரு விடயமாகும் ஆண் அக ஒழுக்கமும், புறவொழுக்கமும் உடையவனாக விளங்கினான். 

பெண் இல்லத்தில் இருந்து இல்லறத்தை மட்டும் நடத்தி மகிழ்வுற்றாள். ஆதலின் அவள் அக ஒழுக்கத்திற்கு உரியவள் எனக் கருதப்பட்டாள். ஆண்,பெண் இருவருக்கும் கற்பொழுக்கம் மிகுதியாக வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் ஆண்கள் பரத்தையர் வீடுகளுக்குச் செல்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்ததாக தெரிகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவிவரும் தற்கால சமூக நீதி வேறுபாடுகளின் மூலம் அன்றே தோன்றிவிட்டது என்பதே உண்மை. அக்கால வழக்கங்களில் சிலது இன்றைய சமூக நீதிக்கு ஏற்புடையதாக அல்லாத போதிலும் பல மரபுகள் நமக்கு இன்றளவும் பயன்படும் வகையில் உள்ளன என்பது அவதானிக்கப்பட வேண்டியதே. “காதல்: இயற்கையின் நியதி” என்பதே பண்டைத் தமிழரின் புரிதல். 

Related Articles

Exit mobile version