இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கிறீர்கள். தெரியாமல் இன்னோர் இணைப்பை க்ளிக்செய்துவிடுகிறீர்கள்.
இதுவொரு பெரிய பிரச்னையல்ல. எப்போது வேண்டுமானாலும் ‘பின்னே’செல்லும் பொத்தானை அழுத்திப் பழைய பக்கத்துக்கு மீண்டுவிடலாம், மீண்டும் உங்களுக்கு வேண்டியதைத் தேடிப்பெறலாம்.
ஒருவேளை, அப்படித் தெரியாமல் க்ளிக்செய்த இணைப்பு, நீங்கள் தேடிய இணைப்பைவிடச் சிறப்பாக இருந்துவிட்டால்? அதன்மூலம் உங்களுக்கொரு புதிய களம், புதிய வாய்ப்பு கிடைத்தால்? அதன்மூலம் உலகுக்கொரு புதிய சூப்பர்ஸ்டார் கிடைத்தால்?
இது கதையல்ல. இன்றைக்குச் சர்வதேச அளவில் கொடிகட்டிப்பறக்கும் பிரமாதமான இசைக்கலைஞர்களில் ஒருவரான ஜஸ்டின் பீபர் இப்படியொரு தவறான க்ளிக்கின்மூலம் அடையாளம் காணப்பட்டவர்தான்!
ஒருவேளை அந்தத் தவறான க்ளிக் இல்லாவிட்டாலும், வேறுவழியில் ஜஸ்டின் நிச்சயமாக அடையாளம்காணப்பட்டிருப்பார். ஆனால், அதற்கு இன்னும் சிலஆண்டுகளாகியிருக்கும். இசைத்துறையில் பலப்பல சாதனைகளை இப்படி மிக இளம்வயதில் உடைத்துப்போட்டிருக்கமாட்டார்!
அதேசமயம், அப்படி நிதானமாக வெற்றியைநோக்கி நகர்ந்திருந்தால், அதனை அவர் இன்னும் கவனத்துடன் அணுகியிருக்கக்கூடும். இப்போதைய அவரது ஆளுமையைச்சுற்றியுள்ள சர்ச்சைகளும் குறைந்திருக்கக்கூடும்.
இருக்கட்டும், சர்ச்சையை விட்டுச் சங்கீதத்தைக் கவனிப்போம்!
ஜஸ்டின் பீபர் பிறந்தபோது, அவருடைய தாய் பாட்ரீசியாவுக்கு வயது பதினெட்டுதான்; அந்த இளம்வயதில், திருமணம்செய்துகொள்ளாமலே குழந்தைபெற்றுக்கொண்டுவிட்டார்! ஜெரெமி ஜாக் பீபர் என்பவர்தான் ஜஸ்டினின் தந்தை. ஆனால், அவர் பாட்ரீசியாவை மணந்துகொள்ளவில்லை. ஜஸ்டினுக்கு மூன்று வயதாகியிருக்கும்போது, அவர் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அதன்பிறகும், தந்தைக்கும் ஜஸ்டினுக்கும் பேச்சுவார்த்தை இருந்தது. ஆனால் பல சிரமங்களுக்கிடையே தனியாளாக ஜஸ்டினை வளர்த்தது அவருடைய தாய்தான்.
இந்த மூன்று பந்திகளை வைத்து ஜஸ்டினின் இளவயதைப்பற்றி நாம் பலவிதமாக ஊகிக்கலாம். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று முத்திரைகுத்தலாம்.
‘என் தாய் நிறைய தவறுசெய்திருக்கிறார்’ என்று ஜஸ்டினே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார், ‘இளவயதில் அவர் புகைத்திருக்கிறார், மது அருந்தியிருக்கிறார், போதைப்பொருள்களைக்கூட உட்கொண்டிருக்கக்கூடும்.’
‘ஆனால், இவையெல்லாம் நான் பிறக்கும்வரைதான். நான் பிறந்தவுடன், அவர் எல்லாக் கெட்டபழக்கங்களையும் விட்டுவிட்டார்’ என்கிறார் ஜஸ்டின். ‘எனக்காக அவர் மாறிவிட்டார். எனக்காகவே வாழத்தொடங்கிவிட்டார்.’ இதையெல்லாம் பாட்ரீசியாவே ஜஸ்டினிடம் சொல்லியிருக்கிறாராம், ‘மகனே, உனக்கும் சேர்த்து நான் நிறைய கெட்டது செய்துவிட்டேன், ஆகவே, நீ எந்தக் கெட்டபழக்கத்திலும் ஈடுபடவேண்டாம்’ என்றாராம் அவர். நாம் எத்தனையோ அம்மா சென்டிமென்ட் கதைகள், நிஜச்சம்பவங்களைக் கேட்டிருப்போம். இப்படிச்சொன்ன ஒரு தாயைச் சந்தித்ததுண்டா?
பதினெட்டு வயதில் பிள்ளைபெற்றுக்கொண்ட பாட்ரீசியாவுக்கு ஜஸ்டின்தான் எல்லாமே. பெரிய வசதி,வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில்கூட, தன் மகனுக்கு எல்லாவற்றையும் பெற்றுத்தரவேண்டும் என்று அவருக்கு ஆசை.
கனடாவிலுள்ள லண்டன் என்ற ஊரில் பிறந்த ஜஸ்டின் வளர்ந்தது ஸ்ட்ராட்ஃபோர்டில். சிறுவயதிலிருந்தே இசையில் நல்ல ஆர்வம். பியானோ, கிடார், ட்ரம்பெட் ஆகியவற்றை அவனே வாசிக்கக் கற்றுக்கொண்டான், ட்ரம்ஸ் வகுப்புக்குச் சென்றுவந்தான், வீட்டில் சும்மா இருக்கும் நேரமெல்லாம் வாயில் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டிருப்பான்.
மகனின் இசைத்திறமையைக்கண்டு பாட்ரீசியாவுக்குப் பெருமை, அவன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் வீடியோ படமெடுத்துவைத்தார். அதைத் தனது நண்பர்கள், உறவினர்களிடம் யூட்யூப்மூலம் பகிர்ந்துகொண்டார்.
அந்தநேரத்தில் ஜஸ்டினுக்கு டிஸ்னிலாண்ட் செல்லவேண்டுமென்று ஆசை. ஆனால், கையில் பணமில்லை.
அப்போது அவர்களுடைய ஊரில் ஒரு பெரிய திருவிழா வந்தது. அதற்காகப் பல ஊர்களிலிருந்தும் மக்கள் குவிந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் கிடார் வாசித்துப் பணம்சேர்த்தான் ஜஸ்டின்.
‘மத்தியில்’ என்று சொல்வதுகூடத் தவறுதான். ‘ஓரத்தில்’ என்பதுதான் சரியாக இருக்கும். சாலையோரத்தில் ஜஸ்டின் கிடார் வாசிக்க, அந்தப்பக்கமாகச் சென்றவர்கள் அதைக் கேட்டுப் பணம்போட்டார்கள். சிலர் அந்த வாசிப்பைப் படம்பிடித்து யூட்யூபில் வலையேற்றினார்கள்.
‘ரோட்டோரத்தில் பாடினார்’ என்றதும் நம் ஊரில் சிலர் முகம் சுளிக்கக்கூடும். ஜஸ்டின் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. அவன் தன்னுடைய இசைத்திறமையைக் காட்டினான், கேட்டவர்கள் பணம்தந்தார்கள், அதைக்கொண்டு கிட்டத்தட்ட 3,000 டாலர்கள் சேர்த்தான், அவனும் பாட்ரீசியாவும் டிஸ்னிலாண்ட் சென்று திரும்பினார்கள்.
‘அதுதான் எங்களுடைய முதல் விடுமுறைப்பயணம்’ என்கிறார் பாட்ரீசியா. ‘நான் அவனை அழைத்துச்செல்லவில்லை, அவன்தான் பணம் சம்பாதித்து என்னை அழைத்துச்சென்றான்!’
இப்படி ஜஸ்டினின் மேடைநிகழ்ச்சிகள், சாலையோரநிகழ்ச்சிகள் யூட்யூபில் கொஞ்சம்கொஞ்சமாகச் சேர்ந்திருந்தன. அவனுடைய குரலும் இசையும் பலருக்குப் பிடித்துப்போயிருந்தது.
ஆனால் அதற்காக, சிறுவன் ஜஸ்டினை ‘யூட்யூப் நட்சத்திரம்’ என்றெல்லாம் சொல்வதற்கில்லை. சில ஆயிரம் பேர் அவருடைய பாடல்களைக் கேட்டிருப்பார்கள், பாராட்டியிருப்பார்கள், அவ்வளவுதான்.
இந்த நேரத்தில், ஸ்கூட்டர் ப்ரௌன் என்றொருவர் இணையத்தில் இன்னொரு பாடகரைப்பற்றித் தேடிக்கொண்டிருந்தார். அப்போது எதேச்சையாக ஜஸ்டின் பீபரின் ஒரு வீடியோவை க்ளிக்செய்துவிட்டார்.
ஜஸ்டினின் குரலைக்கேட்ட ப்ரௌன் அசந்துபோனார். ‘யார் இந்தப் பையன்?’ என்று யோசித்தார்.
ப்ரௌன் பிரபலத்தின் பின்னே ஓடுகிறவர் இல்லை. திறமையுள்ள, ஆனால் அதிகப்பேருக்குத் தெரியாத இளைஞர்களைக் கண்டுபிடித்து, வளர்த்துச் சந்தோஷப்படுகிறவர். அவருடைய முதலீடே அதுதான்.
ஜஸ்டின் பீபரின் குரலைக்கேட்டதும், ‘இந்தப் பையனைச் சரியானபடி வழிநடத்தினால் பெரியாளாக வருவான்’ என்று ப்ரௌனுக்குத் தோன்றியது. அவனைத் தேட ஆரம்பித்தார்.
யூட்யூபில் பாடல்கள்தான் வரும், முகவரியா வரும்? ஜஸ்டினை எப்படித் தொடர்புகொள்வது?
ப்ரௌன் அப்படிச் சுலபத்தில் விடுகிற ஆள் இல்லை. ஜஸ்டின் எந்தக் கட்டடத்துக்கு முன்னே வாசிக்கிறான் என்று வீடியோவைப்பார்த்துக் கண்டுபிடித்தார், அங்கிருந்து நூல்பிடித்துப்போய் அவனுடைய பள்ளியைக் கண்டுபிடித்தார், அந்தப்பள்ளியின் பொறுப்பாளர்களிடம் விசாரித்து எப்படியோ பாட்ரீசியாவைச் சந்தித்துவிட்டார், ‘உங்கள் மகனுக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது, உலகமே அவனுடைய பாடலைக்கேட்கப்போகிறது’ என்றார், ‘நான் அவனைக் கவனித்துக்கொள்கிறேன், என்னோடு அனுப்பிவையுங்கள், நல்ல இசைநிறுவனமாகப் பார்த்து அவனைச் சேர்த்துவிடவேண்டியது என்னுடைய பொறுப்பு.’
பாட்ரீசியா முதலில் கொஞ்சம் தயங்கினார். சிலரிடம் ஆலோசனை கேட்டபிறகு, அவருக்கு நம்பிக்கைவந்தது, மகனை ப்ரௌன்வசம் ஒப்படைத்துவிட்டார்.
அப்புறமென்ன? இசைநிறுவனங்களெல்லாம் க்யூவில் வந்து நின்றார்கள், ஜஸ்டின் பெரியாளானார், சுபம், அவ்வளவுதானே!
ஜஸ்டின் பீபர் அதிவேகத்தில் வெற்றியடைந்தவர் என்பது உண்மைதான். ஆனால் அந்த ‘ஒரே ராத்திரி வெற்றி’க்காக, அவரும் ப்ரௌனும் பலநாள் போராடவேண்டியிருந்தது.
காரணம், அன்றைக்கு யூட்யூப்மூலம் ஒரு திறமைசாலி மேலே வரக்கூடும் என்று எந்தப் பெரிய இசைநிறுவனத்துக்கும் நம்பிக்கை இல்லை. அவர்கள் இன்னும் தொலைக்காட்சி, வானொலியில் தங்களுடைய அடுத்த நட்சத்திரத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், ப்ரௌன் கொஞ்சம் மாற்றி யோசித்தார், ‘இன்றைய இளைஞர்கள் தொலைக்காட்சி, வானொலியைவிட, யூட்யூபில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆகவே, யூட்யூபில் ஜெயிப்பவர் யாரோ, அவர் இசைத்துறையில் பெரிய அளவில் வெற்றியடையமுடியும்’ என்று நம்பினார்.
ஆகவே, ஜஸ்டின் தொடர்ந்து யூட்யூபில் இயங்கவேண்டும் என்று ப்ரௌன் ஊக்குவித்தார். ‘பெரிய கேமெரா வேண்டியதில்லை, அதிநவீனத் தொழில்நுட்பம் வேண்டியதில்லை, நன்றாகப் பாடினால்போதும், கேட்கிறவர்களுக்கு அது பிடித்தால் போதும், மற்ற எல்லாம் தானாக நடக்கும்’ என்றார் அவர்.
ப்ரௌன் சொன்னவழியில் ஜஸ்டின் நடக்க, அவருடைய யூட்யூப் ரசிகர்வட்டம் படிப்படியாக அதிகரித்தது. இசைநிறுவனங்கள் இதைக் கவனிக்கத்தொடங்கின. அவருடைய முதல் இசைத்தொகுப்பை வெளியிடுவதற்காக இரு நிறுவனங்கள் போட்டிபோட்ட அதிசயமும் நடந்தது.
2009ம் ஆண்டு மத்தியில், ஜஸ்டின் பீபரின் முதல் ‘சிங்கிள்’ பாடல் ‘One Time’ வெளியானது. அப்போது அவருக்கு வயது பதினைந்துதான். இன்னும் உடையாத குழந்தைக்குரல். யூட்யூபுக்கு வெளியே அதிகப்பேர் கேட்டிருக்காத குரல்.
ஆனாலும், அதிலிருந்த ஏதோ ஒரு வசீகரம் பலரை ஈர்த்தது. கனடாவிலும் அமெரிக்காவிலும் தொடங்கி, உலகெங்கிலுமிருந்த இசைத்தளங்களில் அப்பாடல் வேகமாகப் பிரபலமடைந்தது.
இத்தனைக்கும் ஜஸ்டின் பீபர் தன்னுடைய முதல் ஆல்பத்தையே இன்னும் வெளியிட்டிருக்கவில்லை. எனினும், மக்கள் அவருடைய குரலை ரசித்தார்கள். அவருடைய அறிமுக ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, ஜஸ்டின் பீபரின் முதல் ஆல்பமான ‘My World’ வெளிவந்தது. அதேவேகத்தில் பெரிய அளவில் வெற்றியடைந்தது.
அந்த முதல் ஆல்பம்மட்டுமல்ல, அதன்பிறகு வந்த அவருடைய எல்லா ஆல்பம்களுமே பெரிய, மிகப்பெரிய வெற்றிகள்தாம். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா என்றெல்லாம் வித்தியாசமே பார்க்காமல் மக்கள் அவருடைய குரலைக் கொண்டாடினார்கள். குறிப்பாக, இளைஞர்கள், அதிலும் குறிப்பாக, இளம்பெண்கள் அவரது இசையை, நடனத்தை, தோற்றத்தைக்கண்டு கிறங்கிப்போனார்கள், இசைத்துறை சார்ந்த விற்பனை சாதனைகள், வருமான வரம்புகளையெல்லாம் தாண்டி கிடுகிடுவென்று வளர்ந்தார் இந்த டீனேஜ் பையர்.
இன்றைக்கு, ஜஸ்டின் செய்யாத சாதனையில்லை. கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் என எங்கே சென்றாலும் இளம் தலைமுறையினர் அவரைத்தான் தேடுகிறார்கள். அவருடைய ஆல்பம்கள் வந்தவேகத்தில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விற்கின்றன, அவர் விளம்பரம் செய்யும் பொருள்கள் உடனுக்குடன் விற்றுத்தீர்கின்றன, வரும் மே மாதத்தில் அவர் இந்தியாவுக்கு வருகிறார் என்றதும் டிக்கெட் விற்பனை சூடுபிடித்துவிட்டது. இத்தனைக்கும் குறைந்தபட்ச டிக்கெட்டே நான்காயிரம் ரூபாயாம்!
யோசித்துப்பாருங்கள், யூட்யூபில் கிட்டத்தட்ட இலவசமாகவே கிடைக்கும் ஒரு பாடகரை நேரில் பார்ப்பதற்கு இத்தனை ரூபாய் செலவழிக்க இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றால், ‘அவர் நம்மில் ஒருவர்’ என்ற எண்ணம்தானே காரணம்? இசையோடு அந்த அனுபவமும்தானே அவர்களுக்குத் தேவைப்படுகிறது!
ஜஸ்டின்பற்றிப் பல சர்ச்சைகள் உண்டு. அவர் அதிவேகமாகக் காரை ஓட்டிக் காவல்துறையினரிடம் மாட்டியிருக்கிறார், பிறரை அவமானப்படுத்தும்படி பேசுகிறார், யாரையும் மதிப்பதில்லை என்று அவரைப்பற்றிய குற்றச்சாட்டுகள் ஏராளம். இணையத்தில் அதிகம் வெறுக்கப்படும் பிரபலங்களில் ஒருவராகவும் அவரே இருக்கிறார்.
ஆனால் அதற்காக, ஜஸ்டின் மோசமானவர் என்கிற தீர்மானத்துக்கு வந்துவிடவேண்டியதில்லை. அதிவேக வளர்ச்சியை, புகழை, பணத்தைச் சரியாகக் கையாளஇயலாத ஓர் இளைஞராகவே அவரைப் பார்க்கமுடிகிறது.
இப்போது ஜஸ்டின் மிகவும் மாறிவிட்டார் என்கிறார்கள். எப்போதும்போல் அவரைச் சுற்றியுள்ள ‘பெரியவர்’களின் ஆலோசனையும் அறிவுரையும் வழிகாட்டுதலும்தான் இதற்குக் காரணமாம்.
ஜஸ்டினுக்கு இன்று இருபத்துமூன்று வயதாகிறது. அதற்குள் அவர் சாதித்துள்ளவை வியப்பூட்டுகின்றன. வயதுக்கேற்ற முதிர்ச்சியும் திறமையும் அனுபவங்களும் வழிகாட்ட, அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவுள்ளார் என ஊகிப்பது சுலபமே. இந்த வளர்ச்சியைச் சரியாகக் கையாண்டால், இன்றைய இளைஞர்களுக்கு ‘அவர்களில் ஒருவரான’ லட்சியபிம்பமாக அவர் உருவாகப்போவதும் பலரை வழிநடத்தப்போவதும் நிச்சயமே.
சரித்திரம்முழுக்க எல்லாத் தலைமுறைகளுக்கும் இப்படியோர் அடையாளம் தேவைப்பட்டிருக்கிறது. அது நல்ல அடையாளமாயிருப்பின், அதுபோல் ஆயிரம் பூக்கள் மலரும்.