வடக்கின் மறக்கப்பட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் அறிமுகம்

இன்றைய காலகட்டம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகள் பரிணாம உலகின் விளைவே ஆகும். உலக அரங்கில் நடந்தேறும் எல்லா நிகழ்வுகளுக்கு பின்னும் மிக வலிதான வரலாற்றுப் பின்னணி மேலோங்கி நிற்கிறது. வலியது பிழைத்தல் என்ற கொள்கையின் உச்சம் தான் இந்த இருபத்தோராவது நூற்றாண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. சாதாரண எறும்புகளின் சேமிப்பு தொடக்கம் ரோபோக்களின் உற்பத்தி வரை எல்லாமே தக்கன பிழைத்தல் தான். இன்றைய சமூகத்தில் ஒரு நிலையான இடம் தேடல் என்பது மிகச் சிரமமான விடயம். எத்தனையோ கலாச்சாரங்கள் தோன்றி அழிந்து நாமம் இல்லாமலே போன வரலாறுகள் இந்த உலகின் பக்கங்களின் கறைபடிந்த எழுத்துக்களாக பதியப்படுகின்றன. நான் முதலே கூறிய வலிதான வரலாற்று பின்னணி, கரைந்து போன கலாச்சாரங்களுக்கும் உண்டு. இருந்தும், அக் கலாச்சாரங்கள் காணாமல் போனதற்கு காரணம் என்ன? இன்னும் எத்தனை கலாச்சாரங்கள் இவ்வாறு அழிந்து ஒழிந்து போய்விடும் ? இதை மீட்க அல்லது தடுக்க வழி இல்லையா ?

(folomojo.com)

இற்றைக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி தமிழன் வாழ்ந்தான்என்னும் வரலாறு, வாய்வழி எமக்கு கிடைக்கப்பட்டது இல்லை (folomojo.com)

பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ உகந்ததென கண்டுபிடிக்கப்பட்ட ஒரே கிரகம் பூமி தான். அதில் ஏற்படும் அதீத மக்கள் வளர்ச்சியும் பொதுப்பண்பாட்டு நிலையும் தொன்மையான பண்பாட்டு கலாச்சாரங்களும் மிகுந்த சவாலாக காணப்படுகின்றன. ஒருசில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த  ஆராய்விற்கு அல்லது இப்படியான ஒரு விழிப்புணர்வு கட்டுரைக்கான தேவைப்பாடு காணப்படவில்லை. உலகின் வளர்ச்சித்தன்மை வெளிப்பட்டது என்பது உண்மைதான் ஆனால் பண்பாட்டு கலாச்சாரங்களை மழுங்கடிக்கும் அளவு அதி தீவிரமான முறையில் அது காணப்படவில்லை. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற வலை எப்போது உலகின் மூலை  முடுக்கெல்லாம் தனது ஆக்கிரமிப்பால் போர்த்தி தன் வசம் இழுத்துக்கொண்டதோ அன்றிலிருந்தே பொதுப்பண்பாட்டுக் கொள்கை விகாரமடையத் தொடங்கியது. அதுவரை தங்கள்  சுதேசிய கலாச்சாரங்களுக்குள் இருந்து பண்பட்ட சமூகம், ஒரு திறந்த கட்டுப்பாடு அற்ற பண்பாட்டு அலையில் சிக்கிக்கொள்கிறது. ஒரு குறிப்பிட்டகாலம் வரை படிப்பறிவு மட்டம் கூடிய கூட்டத்துக்குள் இருந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், பாமரன் வரை கொண்டு செல்லப்பட்டது. இந்த பரவலாக்கம் சரி பிழை என்பதை மீறி பண்பாட்டின் மீதான அதன் தாக்கம் என்பது மறையான பாதிப்பாகவே காணப்படுகிறது.

இலங்கையின் ஆதிக்குடிகள் எனப்படும் இயக்கரும் நாகரும் வாழ்ந்த பழம்பெரும் நிலப்பரப்பு இலங்கை வடக்காகும். வடக்கின் மண்ணுக்கு உள்ள அதே வரலாற்று முக்கியத்துவம் வடக்கு மக்களுக்கும் உண்டு. இன்றைய உலக அரங்கில் இலங்கைத்தமிழர் என்ற அடையாளம் ஈழ யுத்தத்தால் ஏற்பட்டதே. கொஞ்சம் சில இருபது ஆண்டுகளில் இருந்து தொடங்கினால் வடக்கு தமிழனின் நிலைப்பாடு வேறு. எமது வரலாற்று பின்னணி,எமது இலக்கிய பதிவுகள் , எமது சாதனைகள் , என்பதைப்பற்றி நொடிகூட நினைக்க முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள் அவர்கள். அவர்கள் எண்ணம் எல்லாம் அவர்களுக்கான இருப்பிடம் தான். அவர்கள் தங்கள் அடையாளங்களை தேடிக்கொள்ள முற்படவில்லை அவர்களுக்கான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதே பெரும் போராட்டமாக இருந்தது. உலகம் இலவச கணனி இணைய இணைப்பை வழங்கிக்கொண்டிருந்த காலம் பனம் காயில் உடல் தேய்த்து சீனியில்லாமல் வெறும் தண்ணீர் குடித்திருந்த வடுவான காலம் வடக்கு மக்களினது. இந்த போராட்ட காலம் அவர்களுக்கு உயிரை பாதுகாத்து கொள்வதில் போனதே ஒழிய வரலாற்றை கடத்துவதில் கவனம் செலுத்த தோன்றியதே இல்லை. இதில் வடக்கு மக்களுக்கு எந்த பழியும் சாராது. அவர்களில் நிலை அது. எந்த சமூகமும் இவ்வாறான ஒரு நிலையில் தங்கள் இருப்பை உறுதிசெய்யுமே தவிர வேறு நோக்கங்களில் ஈடுபடாது. இந்த இக்கட்டான நிலை, இதில் கடந்து சென்ற காலங்கள் உலக அரங்கிற்கும் வடக்கு தமிழருக்குமான ஒரு விரிசலை ஏற்படுத்தியது .

(c1.staticflickr.com)

உலகம் இலவச கணனி இணைய இணைப்பை வழங்கிக்கொண்டிருந்த காலம் பனம் காயில் உடல் தேய்த்து சீனியில்லாமல் வெறும் தண்ணீர் குடித்திருந்த வடுவான காலம் வடக்கு மக்களினது. (c1.staticflickr.com)

இந்த போராட்டத்தில் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி வடக்குத் தமிழரின் வரலாற்று இருப்பை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. இன்றைய தலைமுறையினருக்கு சரியான வரலாற்றுப் பண்பாடுகள் கடத்தப்படவில்லை. இந்த கடத்தப்படாத பண்பாட்டு விழுமியங்கள் போன தலைமுறையினரோடு முடிந்து போவது மிக வருத்தத்திற்குரிய செய்தியாகும். கடத்த இயலாமல் போன வடக்கு தமிழரின் பண்பாட்டு கலாசாரங்கள் முந்தைய தலைமுறையினரோடு தேக்கி வைக்கப்பட, இன்றைய சமூகத்தினர் இடையே ஒரு பண்பாட்டு வெறுமை தோன்றுகின்றது. இந்த பண்பாட்டு வெறுமை பரவலாக இருந்த காலத்தில்தான் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அவர்கள் கைகளில் வந்தது. இந்த தொழில்நுட்பம் பரப்பிய பொதுப்பண்பாடே இன்றைய  தலைமுறையினரால் எதிர்கொள்ளப்பட்ட  முதலாவது பண்பாட்டுக் கொள்கையாகும். பொதுப்பண்பாட்டில் உள்ள வெளி, அதில் உள்ள சுவாத்தியம் இன்றைய தலைமுறையினரின் எண்ணஓட்டத்திற்கு ஏதுவாக இருந்ததால் அதில் அவர்கள் தொற்றிக்கொண்டனர் . ஆகையால் இதற்கு இன்றைய தலைமுறையினரையும் குறை சொல்லமுடியாது.

இந்த யார் பொறுப்பு கூறுவது என்ற போராட்டம் இன்னும் கால இடைவெளியையும் விமர்சனங்களையும் பொதுப்பண்பாட்டின் மேலதிக ஊடுருவலையும் அதிகரிக்குமே தவிர வேகமான இந்த காலஓட்டத்தில் எந்த பயனுள்ள விடயத்தையும் முன்வைக்காது. மேலும் மேலும் உலக அரங்கில் வடக்கு தமிழரை பின்னோக்கி நகர்த்தும் சுயஇழிவுச்செயலே இதுவாகும். இதிலிருந்து விடுபட்டு எமது இருப்பை உறுதி செய்துகொள்ள போனதலைமுறையினர் வரலாற்று பண்பாட்டினை இந்த தலைமுறையினருக்கு தெரியப்படுத்துவதோடு இந்த தலைமுறையினர் பண்பாட்டு தேடலை அதிகரித்து ஆவணப்படுத்தவேண்டிய வழிமுறையே சரியானதாகும். இதில் ஒவ்வொரு வடக்கு வாழ் தமிழனும் தனக்கான பங்கினை சரிவர செய்வதன் மூலம் தொலைந்து போன பண்பாட்டு கலாசாரங்களை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

இந்த பண்பாடு கலாசாரம் என்பன எதன் மூலம் கடத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு ஒரே ஏற்றுக்கொள்ளத்தக்க பதில் இலக்கியங்கள் தான். இற்றைக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி தமிழன் வாழ்ந்தான்என்னும் வரலாறு, வாய்வழி எமக்கு கிடைக்கப்பட்டது இல்லை. தமிழர் வரலாற்றை இன்று கூறுகிறோம் என்றால் அன்று இப்படி இருந்தோம் , எங்களிடம் இவ்வளவு தேசம் இருந்தது, எம்மிடம் உலகையாண்ட படைகளும், தேவரும், அரக்கரும், பாய்ந்தோடும் முப்படையும் இருந்தது என்று கூவிக்கொள்கிறோம் என்றால் அதற்கு காரணம் எம் இலக்கியங்களே. இன்றைய காலத்தில் தமிழுக்கென சிறப்பிடம் இருக்கின்றது என்றால் அதற்கு இந்திய இலக்கியங்களே மூலம். ஒரு மொழியின் செம்மை , அதன் தொன்மை எல்லாவற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய ஒரே விளக்கு இலக்கியங்கள் தான். இவ்வளவு சிறப்பு ஏன் இலக்கியங்களுக்கு என்று பார்க்கப்போனால் , அது இன்றைய நிதர்சன நிலைக்கு ஒரு முறை திரும்பிப் பார்க்கச்சொல்கிறது.

(tamilandvedas.files.wordpress.com)

எங்களிடம் இவ்வளவு தேசம் இருந்தது, எம்மிடம் உலகையாண்ட படைகளும், தேவரும், அரக்கரும், பாய்ந்தோடும் முப்படையும் இருந்தது என்று கூவிக்கொள்கிறோம் என்றால் அதற்கு காரணம் எம் இலக்கியங்களே. (tamilandvedas.files.wordpress.com)

இன்றைய நாளில் நீங்கள் என்ன எழுதுகிறீர்கள்? அதிகம் புனைவுகளையா? அதிகம் சுயசரிதத்தையா? பொதுவான விடை சுயசரிதமாகத்தான் இருக்கும். கூடப்போனால் புனைவு கலந்த சுயசரிதம். இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையினரின் எழுத்துக்கள் எதைநோக்கி இருக்கின்றன என்ற கேள்வியே முன்னைய கேள்வியின் பதிலாகும். இன்றைய ஈழத்திலிருந்து வரும் படைப்புக்களில் பெரும்பாலானவை போர் என்ற பின்னணி தாங்கிய வரலாற்று சுவடுகளே. இதில் மறுக்கவோ எதிர்க்கவோ எதுவுமே இல்லை. எழுத்தாளன் எதை சுற்றி இருக்கிறானோ அதுதான் அவன் எண்ணங்களைத் தீர்மானிக்கும். அதுவே பேனா வழியே வழியும். வடக்கு எழுத்தாளர்களில் சுற்றம் போரும் அதன் வடுவும் அதன் பின்னான வாழக்கையையும் தாங்கியது. அதுதான் அவர்களின் படைப்புக்கள். அதுதான் இலக்கியங்கள். இந்த மரபு இன்று நேற்று இல்லை, காலம் காலமாக இருக்கின்ற உண்மை கருத்தியல். இதனாலேயே இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன.


இக்கட்டுரைத் தொடர் வடக்கின் நாட்டார் இலக்கியங்களைப் பற்றியது. வடக்கு மக்களிடையே ஏற்பட்ட விரிசல்களில் தொலைந்து போனதையும் , விரிசல்களால் உண்டானதையும்பற்றியதே இக்கட்டுரை. எனவே எனது இக்கட்டுரை ஆராய்ச்சி கட்டுரை இல்லை. என் தேடல்களின் சாராம்சம் . நான், இங்கே முதலில் கூறிய இன்றைய தலைமுறை பயிர்தான். வடக்கின்  இலக்கியம் சம்பந்தமான தேடல்களுள் நான்  தேற்றியவற்றைத்தான் இனி வரும் கட்டுரைகளில் தொகுக்க உள்ளேன். இதை தொடராக எழுதலாம் என்ற கோரிக்கையில் முதல் பாகமாக “தொடங்க முன் ” என்று தொடங்கி இருக்கிறேன். இதன் விமர்சனங்களில் பயிர் வாடிவிடப்போவதில்லை. எல்லாமே எனக்கிட்ட உரங்கள்தான். மிகவிரைவில் இரண்டாவது தொகுப்புடன் சந்திக்கிறேன்

தொடரும்…

Related Articles

Exit mobile version