இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் அமைந்திருக்கும் விகாரை தான் இந்த களனி ராஜ மகா விகாரை அல்லது களனி விகாரை. இக்கோவில் கெளதம புத்தர் ஞானம் அடைந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு, மூன்றாவது மற்றும் கடைசி முறையுமாக , இலங்கை களனிக்கு விஜயம் செய்த போது பரிசுத்தமாக்கப்பட்ட புனித தலம் என நம்பப்படுகிறது. புத்தர் மகா சமாதியடைந்த அரசமரத்தினுடைய கிளை, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இங்கே நடப்பட்டுள்ளது என்ற வரலாறும் உண்டு. இலங்கையில் உள்ள புத்தகோவில்களில் பழமை வாய்ந்த கோவில் எனும் சிறப்பையும் இக்கோவில் பெற்றுள்ளது.
அக்காலங்களில் பெரும் வளமாக இருந்த இக்கோவிலின் பெரும்பாலான நிலம் போர்த்துகேயர்களால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பின்நாளில் ஒல்லாந்தர் ஆட்சியின் போது புதிய நிலங்கள் இக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. சித்திரங்கள் நிறைந்த கூடங்கள், உயரமான தியான புத்தர் சிலை மற்றும் மலைகள் நிறைந்த பின்னணியும் கொண்ட இந்த களனி விகாரை, உள்நாட்டவர்களையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்குள்ள சயன நிலையில் இருக்கும் பிரமாண்டமான புத்தர் சிலையானது மிகப்பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.