பிரபல எழுத்தாளராக, மண்பற்றாளராக நம்மோடு உறவாடிய ஆரையம்பதி க. சபாரெத்தினம் அவர்களின் மறைவு ஈடுயிணையற்றது என்பது அன்னாரின் படைப்புக்களை ருசித்தவர்கள் மட்டுமல்லாமல் அவரோடு அறிமுகமாகியிருந்த அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்.
அன்னாரைப்பற்றிய சிறு குறிப்புகள் மட்டுமே இங்கு பதியப்படுகின்றன.
மட்டக்களப்பு நவீன இலக்கிய வளர்ச்சியில் ஆரையம்பதி பிரதேசத்திற்கு முக்கியமானதொரு இடமுள்ளது. மட்டக்களப்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய “நவம்”, ஈழத்தவருக்கு வெளிப்படுத்திய “அன்புமணி” என ஆரையம்பதியில் பலருள்ளனர். இவா்களில் பலரை நான் அறிந்திருந்தேன். பலரோடு நட்பிருந்தது. எனினும் சிலவருடங்களுக்கு முன்னர், எனது யாழ்ப்பாணத்து நண்பரான எழுத்தாளர் கும்பிளான் ஐ.சண்முகம், ஆரையம்பதி எழுத்தாளரொருவா் பற்றியும் அவரது மொஸ்கோ அனுபவங்கள் பற்றி அவர் நல்லதொரு நுாலெழுதியிருப்பது பற்றியும் அவர் பெயர் சபாரெத்தினம் எனும் அரியதொரு தகவலை வெளிப்படுத்தி இருந்தார். அத்தகவல் எனக்கு புதிதாக விருந்தமையும் ஆரையம்பதி நண்பர்களெவரும் அது பற்றி – அவர் பற்றி எம்மிடம் குறிப்பிடாதிருந்தமையும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.
இவ்வாறு சித்திரை 2011 இல் வெளிவந்திருந்த “ஏற்றம் இறக்கம்” சிறுகதைத்தொகுப்பின் அணிந்துரையில் பேராசிரியர் யோகராசா அவர்கள் தனக்கு ஆரையம்பதி க. சபாரெத்தினம் அவர்களின் அறிமுகத்தை நினைவுகூருகின்றார். உண்மையில் நேர்பட பேசுவதும் அவசியமில்லாதவிடத்து பேசாமல் இருப்பதும் அன்னாரது பண்பாக காணப்பட்டதானாலோ என்வோ பேராசிரியருக்கு அறிமுகம் கிடைத்திருக்கவில்லை.
கல்வியும் தொழிலும்.
ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலடியில் திரு. நாகப்பர் கணபதிப்பிள்ளை – கணபதிப்பிள்ளை தக்கமணியமாள் தம்பதியினருக்கு இரண்டாவது புத்திரனாக ஏப்பில் 5 ஆம் 1946 இல் ஆறுகாட்டி குடி மரபில் பிறந்தார் “ஆரையம்பதி க. சபாரெத்தினம்” அவா்கள். ஆரம்பக் கல்வியை ஆரையம்பதி இராம கிருஷ்ண மிசன் பாடசாலை மற்றும் காத்தான்குடி ஊர் வீதி அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையிலும் ஆரம்பித்து. கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் தனது உயர்தரத்தை ஆங்கில மொழிமூலம் கற்று தேறியிருந்தார்.
1968 இல் நடைபெற்ற எழுதுவினைஞர் போட்டிப்பரீட்சையில் சித்திபெற்று அதே ஆண்டில் கல்வித்திணைக்களத்தில் எழுதுவினைஞராக தனது அரச கடமையில் இணைந்திருந்தார். கல்வித்திணைக்களம், நில அளவைத்திணைக்களம் என மட்டக்களப்பு கல்முனை பகுதிகளில் உள்ள பல்வேறுபட்ட திணைக்களங்களில் கடமையாற்றிய இவர். 1991ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு சேவை பரீட்சையில் தேறி, மொஸ்கோவில் உள்ள இலங்கைக்கான ரஷ்ய துாதரகத்தில் இடைநிலைத்தர முகாமைத்துவ அதிகாரியாக, அன்பின்னர் பெய்ரூட்டிலுள்ள இலங்கைக்கான லெபனான் துாதரகம் என 8 வருடங்கள் இலங்கை வெளிநாட்டு சேவையில் பணியாற்றி, 1996/97 களில் மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லுாரியில் பதில் பதிவாளராகவும், பின்னர் மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளராகவும் கடைமையாற்றியிருந்தார். பின்னர் 2005 செப்டம்பரில் ஓய்பெற்றிருந்தார். ஒய்வின் பின்னர் மண்முனைப்பற்று மத்தியஸ்தர் சபை மற்றும் மண்முனைப்பற்று கலாசார பேரவை என பல்வேறுபட்ட சமூகப்பணிகளை தொடர்நதிருந்தார்.
எழுத்தாளராக, படைப்பாளியாக….
பாடசாலை காலத்திலிருந்தே பீஸ்மாச்சாரி என்ற புனைப்பெயரிலும் ஆரையம்பதி. க. சபாரெத்தினம் என்ற சொந்த பெயரியிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் என பல்வேறு கலை இலக்கிய பரிமாணங்களில் படைப்புக்களை மேற் கொண்ட இவா் 1990இல் தனது தந்தையாரின் நினைவு மலரான இதயத்தாமரை எனும் நுாலின் மூலம் நுாலாசிரியராக பரிணமித்தார்.
பின்னர் வெளிநாட்டு சேவையின்போது தனது அனுபவங்களையும் இன்னுமொரு நாட்டின் கலாசார பண்பாட்டு நடைமுறைகளை தமிழ் மொழியிலே “மொஸ்கோ அனுபவங்கள்” என எழுதி 2004 இல் ஒர் பயண இலக்கிய நுாலாக படைத்தார். இந்நூல் வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிறந்த நுால் எனும் விருதையும் தட்டிச்சென்றது.
இவரது “நல்வழி” எனும் சிறுவர்களுக்கான கவிதைநுால் ஒன்றும் “ஏற்றம் இறக்கம்” எனும் சிறுகதைத் தொகுப்பும் 2010 இல் வெளிவந்து மிகவும் பேசப்பட்ட படைப்புக்களாகின.
இவர் இந்து மதத்தில் புதைந்துள்ள அர்த்தப்பாடுகளின் தர்க்கரீதியிலான விளக்கங்களை சுமந்து “இந்து மதத்தின் இன்றைய தேவைகள்” என்ற பெயரில் 2015 இல் வெளியிட்ட நுால் அதன் உள்ளடக்கத்தை தலைப்பிலேயே சொல்லிய நுாலாக கருதப்படுகின்றது.
“ஆரையம்பதி என்றாலே பொதுவாக புறஞ்சூழவாழ்ந்து வரும் அத்தனை அயற்கிராம மக்களும் ஒருவித அச்சப்போக்கினை கொண்டிருப்பதோடு கூட்டுறவை வளர்த்துக்கொள்ள முடியாததொரு இடமாகவும் கருதி, காழ்ப்புணர்வுடனே சிந்திப்பதையும் அதற்கான போலியான காரணங்கள் பல வற்றை முன்வைத்து புறந்தள்ளி விடும் ஓர் மனோ நிலையுடன் வாழ்ந்து வருவதையும் காண முடிகிறது.
இதற்கு அவர்கள் கூறும் காரணங்களை விட அவர்களிடம் மலிந்து காணப்படும் இயலாமை அல்லது ஆற்றாமையே முதன்மைக் காரணமாகும். இப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஏனைய சாராசரி மனிதர்களோடு ஆரையம்பதியைக் கருவாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஒருசிலரையாவது எடுத்து ஒப்பு நோக்கி ஆராய்ந்து பார்த்தால் அவர்களது நடை, உடை, பாவனை, செயற்பாடு, நாகரிக முதிர்ச்சி என்பன ஏனையவர்களைவிட உயர்ந்தே காணப்படும். அல்லது ஒரு வித்தியாசமான முன்னேற்றப்பான்மையில் அமைந்திருக்கும். இது யதார்த்தம். அதனை விரும்பாத அல்லது வெறுக்கும் கூட்டமே காழ்ப்புணர்வுடன் செயல்பட்டு இவ்வாறான போலிக்கதைகளை அவிழ்த்து வருகின்றது.”
என தனது மண் மாந்தர்களின் வீரியத்தையும் மண் எதிர்கொள்ளும் சவால்களையும் நினைத்து கவலைகொள்ளும் சபாரெத்தினம்
“வரலாற்று நூல் ஒன்று எவருக்குத் தேவையோ இல்லையோ ஆரையம்பதிக் கிராமத்தை பொறுத்தவரை இது போன்றதொரு ஆவண நூல் அவசியமாகின்றது. அதுவும் உண்மைகள் மறைக்கப்படாததோர் தெளிவான சான்று நூல் தேவைப்படுகிறது. அத்தகையதோர் தேவை படிப்படியாக உணரப்பட்டு வந்ததனாலும் இன்னும் ஒரு சில வருடங்களுக்குப் பின்னர் இவ்வுண்மைத் தகவல்கள் மறைந்து ஒளிந்து விடும் என்ற அபாயச் சங்கொலியின் அறிவிப்பாலும் அத்தகையதொரு பாரிய பொறுப்பினை நிறைவேற்றி வைக்கக் கூடிய ஏதோ ஒரு வகையில் இறைவனது நாட்டம் விழைந்ததனாலுமே இந்நூலை மிகவும் நுட்பமாகச் சிந்தித்து அது அதுவாகவே அமைவுற எழுதியுள்ளேன் என்பதை மிகவும் அடக்கத்துடனும் பணிவுடனும் கூறிவைக்கின்றேன். இருப்பினும் எனது அறிவு, ஆற்றல், தேடல் என்பவற்றிற்கு அப்பாலும் சில விடயங்கள் இன்னும் மறைந்து கிடக்கலாம் அல்லது சேர்க்கப்படாது விடப்பட்டிருக்கலாம். இவற்றைத் எதிர்காலச் சந்ததி மேலும் கூர்மையாகச் சிந்தித்து முன்னெடுத்துச் சென்று ஊர்ப் பற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்பதுவும் எனது கோரிக்கையாகும்”
என 2012 ல் “ஆரையம்பதி மண் – உள்ளதும் உரியதும்” எனும் நூலில் ஒர் கிராமம் தன்னைப்பற்றி அறிந்துகொள்ள தனது வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுகொள்ள தேவையான ஆவணமாக படைத்ததற்கான காரணங்களை தனது நுாலின் முன்னுரையிலே கூறி நிக்கின்றார்.
“ஆரையூர் கோவை”, “ஆரையூர் கந்தனுக்கு” அடுத்தாக வெளிவந்த ஆரையம்பதியின் முக்கிய ஆவணமாக இது கருதப்படுகின்றது.
இதன் பின்னர் இறுதியாக ஆரையம்பதி க. சபாரெத்தினம் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நுால் ஈழத்தில் முக்கியத்துவம்வாய்ந்த கண்ணகி கோயிலின் வரலாற்று பதிவு என்பதை தாண்டி ஒர் குல மரபின் சாட்சியாக ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது.
திரு. க. சபாரெத்தினம் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அன்னாருக்கான அஞ்சலிக்குறிப்பில்
“தான் வாழும் சமூகத்தின் வரலாறு பண்பாடு பற்றியதான எழுத்துகள் அவரின் தனித்துவமான ஆய்வு நெறியயை எடுத்தியம்பின. குறிப்பாக மட்டக்களப்பின் வரலாறு பல்வேறு குல மரபின் நீட்சியே என்பதை நிறுவியவர். குருகுல மரபையும் அது கண்ணகி வழிபாடுடன் கொண்டிருக்கும் வகி பாகத்தையும் எடுத்துக் காட்டி மட்டக்களப்பின் வரலாற்றின் புதிய பக்கங்களை திறந்தவர் எனலாம். மட்டக்களப்பின் பண்பாடு பற்றிய பார்வையும் முக்கியத்துவம் பெறுகிறது.”
என முன்னான் கிழக்கு பல்கலைகழக பீடாதிபதி பாலசுகுமார் அவா்கள் “ஆரையூர் கண்ணகை” நுாலின் முக்கியதுவத்தை குறித்துக்காட்டுகின்றார்.
கெளரவங்களும் விருதுகளும்
அன்பு வெளியீட்டகத்தால் 2004 இல் அறிஞர் விருது, மண்முனை பிரதேச கலாசார பேரவையால் 2010 இல் கலைஞர் கௌரவ விருது, இலங்கை கலாசார பாண்பாட்டு அலுவல்கள் அமைச்சால் 2013 இல் கலாபூஷணம் விருது என பல்வேறுபட்ட விருதுகளால் இலக்கிய பரிமாணங்களை கொண்ட க. சபாரெத்தினம் அவா்கள் பல்வேறுபட்ட இலக்கிய ஆர்வலர்களாலும் தேசிய ரீதியாகவும் கௌரவிக்கப்பட்டிருக்கின்றார் என்பது ஒர் எழுத்தாளன் அவன் வாழும்போதே அங்கீகரிக்கப்பட்டான் என்ற ஒரு சிறிய திருப்தியுடன் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக் பிரத்திப்போம்.