சோழ சிற்றசர்கள்
இந்த கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான விடயம் குறித்து அவ்வப்போது கூறிய வண்ணமே உள்ளோம். சோழ சாம்ராஜ்யத்தின் வலிமைக்கும், நீடித்த நிலைத்திருப்புக்குமான முக்கிய காரணங்களுள் ஒன்று விசுவாசமான சிற்றரசர் குடும்பங்கள். இராஜராஜரின் காலம் வரையில் சிற்றரசர்களை சார்ந்தே சோழ நாட்டின் அரசப்படை செயலாற்றி வந்தது. இந்த வரலாற்று நிதர்சனத்தை புது வெள்ளத்தில், சதியாலோசனை கூட்டத்தில் மிக அழகாகவும், அழுத்தமாகவும் கல்கி நிறுவியிருப்பார். இவ்வாறு பொன்னியின் செல்வன் கதைக்களத்தில் மிக முக்கிய பங்கு வகித்த சில சோழ சிற்றரசுகள் குறித்து பார்ப்போம்.
ஐயத்துக்கு இடமில்லாமல் பழுவேட்டரையர்களே பொன்னியின் செல்வன் கதையோட்டத்தில் உச்ச அதிகாரம் கொண்டிருந்த சிற்றரசர் குலம் என அறுதியிட்டுக் கூறலாம். தஞ்சாவூரின் கோட்டைக் காவல் அதிகாரியாக சிறிய பழுவேட்டரையர் என அறியப்பட்ட காலந்தகக் கண்டரும், சோழ அரசின் தனாதிகாரியாக பெரிய பழுவேட்டரையர் என அறியப்பட்ட கண்டன் அமுதனாரும் பணியாற்றி வந்ததாக கல்கி கூறுகிறார். இராஜராஜரின் காலத்தில் இருந்துதான் சிற்றரசர் மரபில் இருந்து வந்தவர்களுக்கு சோழ மைய அரசாங்கத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டமை தெரிகிறது. எனவே கல்கி பழுவூர் சகோதரர்களை வடிக்கும் போது இராஜராஜரின் ஆட்சியை மனதில் கொண்டே செய்யலாற்றியிருக்க வேண்டும். மேலும் கண்டன் அமுதன் என்ற பெயருடன் ஒரு பழுவூர் அரசன் இருந்தமை மட்டுமே நமக்கு கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது. இவரும் சுந்தர சோழரின் காலத்தை சேர்ந்தவர் இல்லை, சுந்தரர் காலத்தில் பழுவூரை ஆண்டவர் மறவன் கண்டன் என்பவரே. எனவே இந்த அதிகாரம் மிக்க பழுவூர் சகோதரர்கள் கல்கியின் கற்பனையில் உதித்த மேலுமொரு சுவாரசியமான பாத்திரப்படைப்பு என்பது திண்ணம். பழுவூர் அரசர்களின் பூர்வீகம் குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லாவிடினும், அவர்கள் சேர நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களாயிருக்கலாம் என்பது பரவலான கருத்து. ஆனால் பழுவேட்டரையர்கள் சோழ அரச குடும்பத்துடன் மிக நெருங்கிய திருமண உறவுகளை பேணியமை தெளிவாகத் தெரிகிறது. சுந்தர சோழரின் தந்தையான அரிஞ்சயர், பராந்தக சோழருக்கு பழுவேட்டரையர் குலத்து இளவரசியான அருள்மொழி நங்கை மூலம் பிறந்தவர். இதனை சுந்தர சோழரின் அன்பில் செப்பேடும், இரண்டாம் பிரதிவீபதியின் உதயேந்திரம் செப்பேடுகளும் உறுதி செய்கின்றன. மதுராந்தக உத்தம சோழரின் மனைவியருள் ஒருவர் பழுவூர் இளவரசியே, இதனை பொன்னியின் செல்வனின் ஆரம்ப அத்தியாயங்களில் கல்கியே குறிப்பிட்டிருப்பார். மேலும், இராஜராஜரின் முக்கிய அரசிகளில் ஒருவரான நக்கன் தில்லையழகியான பஞ்சவன் மதேவி, இராஜேந்திரரின் மனைவி நக்கன் கருக்கமர்ந்தாள் பஞ்சவன் மாதேவி ஆகியோர் பழுவேட்டரையர் குலத்தில் உதித்தவர்களே. தாங்கள் ஆட்சி புரிந்த பழுவூர் பகுதியில் பல ஆலயங்களை எடுப்பித்த இப்பழுவேட்டரையர்கள் சிவபக்தியில் மிகவும் சிறந்தவர்களாகவே இருந்தனர். ஆக, சோழ அரசின் மிகமுக்கிய உறவினார்களாக இருந்த பழுவேட்டரையர்கள் சோழ சாம்ராஜ்யத்தில் உயர் பதவியில் இருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.
வரலாற்றிலும் சரி, பொன்னியின் செல்வன் கதையிலும் சரி பழுவேட்டரையர்களுக்கு நேர் நிகராக வைக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் கொடும்பாளூர் வேளிர்கள் மட்டுமே. பழுவூர் சகோதரர்களை போலில்லாமல் கொடும்பாளூர் சகோதரர்களாக வரும் பெரிய வேளார் எனப்பட்ட பூதி விக்ரம கேசரி மற்றும் சிறிய வேளார் எனப்பட்ட பராந்தக இருங்கோலர் (இருக்கு வேளிர்) குறித்து அதிகளவு வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கின்றன. சுந்தர சோழரின் காலத்தில் சிறிய வேளார் அரச குடும்பத்துடன் மிக நெருங்கிய உறவில் இருந்தார் என்பது கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் தெரிகிறது. இவர் அநேகமாக சோழ அரசுடன் திருமண உறவு கொண்டிருக்க வேண்டும், இவருக்கும், பூதி விக்கிரம கேசரிக்கும் சகோதர முறையிலான உறவு உள்ளது என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. மேலும் சிறிய வேளார் ஈழப்போரில் இறந்தமையை உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் நமக்கு கிடைக்கின்றன. எனவே கொடும்பாளூர் சிற்றரசர்கள் பற்றி நம் கல்கி கூறியிருக்கும் பல விடயங்கள் வரலாற்று மெய்ப்பாடு கூடியவையே; வானதி விடயம் தவிர்த்து. வானதி கொடும்பாளூர் இளவரசி என்பதை நிறுவ போதுமான ஆதாரங்கள் இல்லாத போதிலும், கொடும்பாளூர் மரபுக்கும், சோழ அரச குடும்பத்துக்கும் நெருக்கமான கொள்வினை-கொடுப்பினை தொடர்புகள் இருந்தன. முதலாம் பாராந்தகரின் பெண் அனுபமா, சோழப் பெருமானடிகள் உடன் பிறந்த நங்கை வரகுணப் பெருமானார் ஆகியோர் கொடும்பாளூர் அரசர்களுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டதுடன் பூதிமாதேவ அடிகள், பூதி ஆதித்த பிடாரி ஆகிய கொடும்பாளூர் அரச குலப்பெண்கள் சோழ அரசர்களுக்கு அரசிகளாக மணம் முடித்து வைக்கப்பட்டனர். இந்த உறவின் உச்ச காலமாக இருந்தது சுந்தர சோழப் பராந்தகரின் ஆட்சியே. எனவே இவர்களும் பொன்னியின் செல்வன் காலகட்டத்தில் உயர் அதிகாரத்துடன் இருந்தமை உண்மையே. இவர்களும் பழுவேட்டரையர்கள் போல தாங்கள் ஆண்ட பகுதியில் கண்கவரும் பல ஆலயங்களை எடுப்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கது மூவர் கோயில்.
பொன்னியின் செல்வனில் முக்கியத்துவம் பெறும் ஏனைய சிற்றரசர் குலங்களாக கடம்பூர் சம்புவரையர்களும், திருக்கோவிலூர் மலையமான்களும், திருமழப்பாடி மழவரையர்களும் காணப்படுகிறார்கள். கல்கி காவியத்தில் வரும் இந்த மூன்று குறுநில அரச குடும்பங்களுமே தங்கள் குருதியில் வந்த/வரப்போகும் இளவரசர்களை சோழ நாட்டின் அரியாசனத்தில் அமர வைக்கும் முயற்சியில் ஈடுபடும் வண்ணமே வடிவமைக்கப்பட்டிருக்கும். வரலாற்றுப் பார்வையில் அதுவே உண்மையாக இருக்கக்கூடும். சிற்றரசுகள் தங்கள் அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொள்வது, பேரரசுகளுடனான திருமண உறவின் மூலமாகவே. எனவே பழுவேட்டரையர்களும், இருக்கு வெளிர்களும் பெற்ற அதிகார அந்தஸ்த்தை பெற ஏனைய அரச குலங்கள் முயல்வது இயல்பே. இந்த மூன்று குலங்களில் வரும் பாத்திரங்களும் மிகக் குறைந்த வரலாற்று மெய்மையும், அதிகளவு கற்பனையும் கொண்டு உருவானவையே.
அநிருத்த பிரம்மராயர்
சுந்தரசோழரின் பிரதான அமைச்சராக வரும் அநிருத்தர், அவரின் இளமைக்கால நண்பனாயும் நம்முடன் கதையில் பயணிக்கிறார். ஓட்டு மொத்த பொன்னியின் செல்வன் நாவலிலுமே மிகச் சிறந்த அரசியல் சூத்திரதாரியாக ஒளிரும் இந்த வரலாற்று கதாப்பாத்திரம் சுந்தர சோழருடைய அன்பில் செப்பேடுகள் மூலம் நமக்கு தெரிய வருகிறது (அக்கால உறையூருக்கு அருகாமையில் இருந்த சிற்றூரான அன்பில் எனும் இடமே அநிருத்தரின் பிறந்தகம்) இச்செப்பெடுகள் சுந்தர சோழர் மற்றும் அநிருத்தர் ஆகிய இருவரின் குடும்பங்கள், பூர்வீகம் ஆகியவை பற்றி கூறுகிறது. இவ்விடயம் அநிருத்தர் இராமேஸ்வரத்தில், ஆழ்வார்க்கடியானோடு உரையாடும் போது குறிப்பிடப்படும். அன்பில் செப்பேடுகள் சுந்தர சோழரால் அநிருத்தருக்கு வழங்கப்பட்ட நிலக் கொடைகள் குறித்த தகவல்களை வழங்குகிறது. முழுக்க முழுக்க சோழ நாட்டின் நலனுக்காகவே பணியாற்றிய இந்த வைணவ மரபை சார்ந்த அமைச்சர் சுந்தர சோழரின் வாலிபப்பருவத்து நண்பன் என கல்கி கூறியிருப்பதை மறுப்பதற்க்கு இல்லை. அநிருத்தரை கடந்து, அவருடைய குடும்பத்தவருக்கும் சுந்தரர் பல கொடைகளை வழங்கியுள்ளது மூலம் இதனை ஓரளவு உறுதிப் படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால் பல வரலாற்று ஆர்வலர்கள் அநிருத்தர் குறித்து தவறான கருத்தொன்றை முன்வைக்கின்றனர். அது என்னவென்றால் சுந்தர சோழரின் பிராதன அமைச்சராக இருந்த அநிருத்தர், உத்தம சோழர் ஆட்சிக்கு வந்ததும் தன்னுடைய பதவியில் இருந்து விலகி 15 ஆண்டுகள் கடந்து அருண்மொழி வர்மர் ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பதே. அநிருத்தரின் இந்த செயல்பாட்டுக்கு பல காரணங்களையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். உத்தம சோழருக்கு ஆதித்த கரிகாலன் கொலையுடன் தொடர்பு இருந்ததாக அநிருத்தர் சந்தேகித்தார் என்றும், அநிருத்தர் சுந்தர சோழரின் குடும்பத்துக்கு மட்டுமே விசுவாசமாய் இருந்தார் என்றும் பல கருத்துக்கள் உள்ளன. ஆனால் இவை உண்மையில்லை. சுந்தர சோழப் பராந்தகருக்கு பின்னர் அநிருத்தர் சோழ அரசவையில் பதவி வகித்ததாக சான்றுகள் இல்லை. இராஜராஜரின் முதன்மை அமைச்சராகவும், சேனைத் தலைவராகவும் இருந்த மும்முடிச்சோழ பிரம்மாதிராயன் என அறியப்பட்ட அமன்குடியினனான கிருஷ்ணன் ராமன் என்பவரை, அனிருத்தருடன் குழப்பிக் கொள்வதாலேயே இந்த பிழையான கருத்து உண்டாகிறது.
முடிவாக…
பொன்னியின் செல்வன் நாவலை பகுப்பாய்வு செய்யும் பக்கங்களின் மறுபக்கம் என்ற கட்டுரைத் தொடரில் சங்கதி தெரியுமா?! என்ற கிளைப்பகுதியின், முதல் அங்கமான கல்கியின் கதைமாந்தர்கள் இத்துடன் முடிவடைகிறது. கல்கி காவியத்தின் வரலாற்று செரிவு மிகுந்த முக்கிய பாத்திரங்கள் அனைத்தை குறித்தும் எம்மால் இயன்றளவு உங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இதற்காக நாங்கள் மேற்கொண்ட தேடல்களின் பக்க விளைவாக சோழ அரச வம்சம் குறித்த தெளிவான வம்ச விருட்சம் ஒன்று உங்கள் roar தமிழில் வெளியாகும்; காத்திருங்கள். சங்கதி தெரியுமா?! பகுதியின் அடுத்த அங்கமாக கல்கி கூறும், சோழ நாட்டின் வாழ்வியல் குறித்தான கட்டுரை விரைவில் வெளியாகும்.