மருமக்கத்தாயம் | தாய்வழி சமூகத்தின் அடையாளம்.

தாய்வழி சமூகம் என்பது தற்கால உலகில் மிகவும் அருகி வருகின்ற விடயங்களுள் ஒன்றாக மாறிவிட்டது. ஆதி மனிதன் கானகத்தில் இருந்து வேட்டை வாழ்வுக்கு நுழைந்த காலத்தில் பெண்களே குடிகளின் தலைமைகளாக இருந்தனர் என்பது அறிஞர்களின் கருத்து. ஆனால் காலங்கள் கடந்து செல்ல பெண்களுக்கான உரிமைகளும், சுதந்திரமும் குறைந்த வண்ணமே வந்தன. சமகாலத்தில் உலகெங்கும் பாலின சமத்துவமும், பெண்ணியமும் வலுப்பெற்று வருகிற நிலையில் கூட பெண்களுக்கான சம உரிமைகள் இன்னும் பூரணமாக கிடைக்கவில்லை. ஆனால் பதின்நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து கடந்த சகாப்தம் வரையில் தற்போதைய கேரளத்தின் பெரும்பான்மை பகுதிகளிலும், தமிழகத்தின் மிகச்சிலராலும் தாய் வழி சமூக வாழ்வியல் முறையொன்று பின்பற்றப்பட்டது. தென்னகத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் மட்டுமில்லாது, இலங்கையின் வரலாற்றிலும் மிக முக்கிய தாக்கம் செலுத்திய இந்த தாய்வழி சம்பிரதாயத்தின் முக்கிய அம்சம் மருமக்கத்தாயம். 

முடிவில்லா யுத்தம் 

பண்டைய சேர மன்னர்களால் ஆட்சிசெய்யப்பட்ட வளமான மேற்கு தொடர்ச்சி மலைப் பிராந்தியமான சேரநாடு தன்னுடைய நீர் வளத்துக்கும் அரேபியா, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்துக்கும் பெயர் பெற்றது. இதன் காரணத்தால் நெடுங்காலமாகவே பாண்டியர் மற்றும் சோழ ஆக்கிரமிப்புகளுக்கு உட்பட்ட வண்ணம் இருந்தது. போர் என்பது கேரளத்தின் வாழ்வியலின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறிவிட்டிருந்தது. உலகின் பழமையான தற்காப்பு கலையான களரியின் தோற்றமே அதற்கு போதுமான சான்றாகும். தங்கள் நாட்டை காக்கவும், வளங்களை பெருக்கவும் இடைவிடாத போர் செய்ய வேண்டிய கட்டாயம் மலை நாட்டுக்கு உண்டானது. எனவே போர் குடிகளின் ஆண் மக்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். நிலையான குடும்பமும், அமைதியான வாழ்க்கையும் அவர்களின் அன்றாடத்துக்கு சாத்தியமாக இருக்கவில்லை.

கேரளத்தை சேர்ந்த நாயர் சமூகத்தினர் – புகைப்பட உதவி – IndiaFacts.org

அத்தகைய கேரளப் போர் குடிகளில் ஒன்றே நாயர் சமுதாயம். நாயர் சமுதாயத்து ஆண்கள் பருவம் அடைந்த உடனே தங்கள் வீட்டை விட்டு படைகளில் சேர்ந்து விடுவார்கள். அவர்கள் பாதிப்பில்லாமல் வீடு திரும்புவது என்பது அரிது. அவ்வாறே வீடு திரும்பினாலும் அந்த விடுமுறை குறுகியதாகவே இருக்கும், மீண்டும் எல்லைகளில் மூளும் போர்கள் அவர்களை இழுத்துக்கொள்ளும். நாயர் சமூகத்து ஆண்களின் வாழ்க்கை முறை இவ்வாறு நிலையற்றதாக இருந்ததன் காரணமாக அவர்களின் குடும்ப பாரம்பரியங்களையும், சொத்துக்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு பெண்களை சேர்ந்தது. இந்தியாவின் பெரும்பான்மை சமூகங்களில் பெண்கள் வெறுமனே உடைமைகளாக மட்டும் பார்க்கப்பட்டு வந்த காலத்தில் ஒரு குடும்பத்தின் மொத்த உடைமைகளும் பெண்களை சாரும் மரபு கேரளத்தில் தோன்றியது. நாயர் சமுதாயம் தங்களை அன்னை வழி குடியாக மாற்றிக்கொண்டது. 

பொதுவாக ஒரு குடும்பத்தின் உடைமைகள் பாட்டன், தந்தை, மகன் பேரன் என குடும்பத்தின் ஆண்கள் வழியே கடத்தப்படுவதற்கு பதிலாக, தாய் வழி சமூகத்தில் பாட்டி, தாய், மகள், பேத்தி என பெண்கள் வழியே கைமாறியது. நாயர் ஆண்களுக்கு குடும்ப சொத்தில் எவ்வித உரிமையும் இருக்கவில்லை. நாயர் குடும்பங்கள் தரவாடு என்று அழைக்கப்படும் பெரிய வீடுகளில் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வார்கள். ஒரு தரவாட்டின் அனைத்து உறுப்பினரும் பொதுவான ஒரு பெண் முன்னவளின் வாரிசுகளாக இருப்பார்கள். குடும்பத்தின் தலைமை உறுப்பினர் வீட்டின் மூத்த பெண்ணாக இருப்பார்.  

நாயர் ஆண்கள் தொடர்ச்சியாக தங்கள் வாழ்விடங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டிய நிலை இருந்தமையாலும் அவர்களின் வாழ்வுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாது இருந்தமையாலும், நாயர் சமூகத்தில் பாரம்பரிய சடங்குகள் கொண்ட திருமணத்துக்கு பதிலாக சம்பந்தம் என்னும் சமூக ஒப்பந்தம் மேற்கொள்ளும் வழக்கமே இருந்தது. சம்பந்தம் எனும் இந்த ஒப்பந்தத்தின் போது ஆண், பெண்ணுக்கு புடவை உள்ளிட்ட பரிசுகளை எரியும் தீபம் மற்றும் எண்மங்கலங்கள் முன்னிலையில் வைத்து வழங்க வேண்டும். அதற்கு சாட்சியாக பெண் வீட்டாரும், ஆண் வீட்டாரோ அல்லது நண்பர்களோ இருப்பார்கள். சம்பந்தம் முறைக்கு அமைவாக எந்நேரத்திலும் பெண்ணோ, ஆணோ தங்களுடைய உறவை முறித்துக் கொள்ள முடியும். எனவே விவாகரத்து என்பது சாதாரணமானதாக இருந்தது. அதே போல கணவன் இறந்த பின்னர் பெண்கள் கைம்மை நோன்பு (விதவை) மேற்கொள்ள கட்டாயம் இருக்கவில்லை, மறுமணம் செய்து கொள்ள இருதரப்புக்கும் பூரண சுதந்திரம் இருந்தது, இதன் விளைவாக ஆண்களும், பெண்களும் பலதார திருமணம் செய்து கொள்ளும் நிலையும் வழக்கமானது, அது குறித்து பின்பு விரிவாக நோக்குவோம்.

1872ம் ஆண்டு ராமசாமி நாயுடு  அவர்களினால் வரையப்பட்ட நாயர் இன சிறுமிகளின் ஓவியம் – புகைப்பட உதவி – wikipedia.org

நாயர் குடும்பத்தில் குழந்தைகள் பிறந்தால் அவை பிராயம் அடையும் வரை தாய் வீட்டிலேயே வளர்க்கப்படும். குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் குறித்த வயதில் போர் படைகளுக்கு சென்றுவிடுவார்கள். பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அங்கேயே வளர்ந்து தாயின் சொத்துக்கு உரிமையாளர்கள் ஆவார்கள். சொத்துரிமை பூரணமாக பெண்களிடம் இருந்த போதிலும் அவற்றை மேற்பார்வையிடும் உரிமையும், முகாமை செய்யும் உரிமையும் குடும்பத்தின் மூத்த ஆண் மகனுக்கு சென்றது. அதாவது சொத்தின் உரிமையாளராக இருக்கும் பெண்ணின் அண்ணன் அல்லது தாய் மாமன் பராமரிப்பிலேயே தரவாட்டின் வருவாய் இருக்கும். இந்த மூத்த ஆண் ஆளுமை காரணவன் என்று  அழைக்கப்படுவார். தரவாட்டின் சொத்துக்கள் மூலமாக வரும் வருவாய்கள் அனைத்தும் காரணவரின் எண்ணத்துக்கு இணங்கவே பயன்படுத்தப்படும், வருவாயை செலவிடும் முறை குறித்து காரணவர் யாருக்கும் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை. இருந்த போதிலும் காரணவர் தரவாட்டின் நன்மை கருதி மட்டுமே அதன் வருவாயை செலவு செய்வார். காரணவர் திருமணம் செய்து, குழந்தைகளை பெற்றுக்கொண்டாலும் கூட அவரின் சகோதரிகளின் குழந்தைக்கே முன்னுரிமை வழங்குவார். காரணவருக்கு பின்னர் சொத்தை முகாமை செய்யும் உரிமை அவரின் சகோதரியின் மூத்த மகனுக்கும்  (மருமகன்) சொத்துரிமை மருமகளுக்கும் கைமாற்றப்படும். அதாவது மக்களுக்கு பதிலாக மருமக்களுக்கு உரிமை கொடுக்கப்படும் இந்த வழக்கமே மருமக்கள் தாயம் (மருமக்கத்தாயம்) என அழைக்கப்பட்டது.  

திருவிதாங்கூர் சமஸ்தானம் 

13ம் நூற்றாண்டில் கேரளாவில் சேரமான் பெருமாள்களின் ஆட்சி முடிவடைந்ததை தொடர்ந்து மேற்கு மலை நாடு பல சிற்றரசுகளாக பிரிந்து தங்களுக்குள் மோதிக்கொண்டிருந்தன. ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் தொடர்ந்து வந்த இந்த குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கி.பி 1729ம் ஆண்டு அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மர் பல சிற்றரசுகளை இணைத்து தென் கேரளாவில் திருவாங்கூர் அரசை ஸ்தாபித்தார். அதன் தலைமைப்பீடம் திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் சமஸ்தானமும் மருமக்கத்தாயத்தை பின்பற்றிய தாய்வழி சமுதாயமாகும். அரசருக்கு அடுத்து அவரது மருமகனே பட்டத்துக்கு வருவார். திருவாங்கூர் அரசர் நாயர் குடியில் இருந்தே பெண்ணெடுப்பார். அவர் மனைவிக்கு அரசி என்ற பட்டமோ, அரசவை உரிமையோ வழங்கப்படாது, அவர் அரசருடன் ஒரே அரண்மனையில் வாழவியலாது, அரசரோடு இணைந்து பொதுவெளிகளில் தோன்ற முடியாது.. அதற்கு பதிலாக அவர்கள் அம்மச்சி என்று பட்டமளிக்கப்படுவார்கள் (அரசரின் குழந்தைகளுக்கு அம்மா என்பதால்), அவர்கள் வாழ்வதற்கு அம்மவீடு என்ற பிரத்தியேக அரண்மனைகள் செய்து கொடுக்கப்படும். அங்கு சகல மரியாதைகளுடன் அமைதியாக வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியும். நாட்டின் அரசியாக அரசரின் தாய் அல்லது சகோதரி பொறுப்பேற்பார். 

திருவிதாங்கூர் இராச்சியத்தின் மகாராஜா மார்த்தாண்ட வர்மா – புகைப்பட உதவி – wikipedia.org

திருவிதாங்கூர் அரசிகளுக்கு பல சிறப்புரிமைகள் இருந்தன. அவர்கள் ஆள்வதற்கு என தனியான பிராந்தியங்கள் இருந்தன. அவற்றுள் பிரபல்யமானது ஆட்டிங்கல். எனவே சமஸ்தானத்தின் அரசிகள் ஆட்டிங்கல் ராணி என்று அழைக்கப்பட்டனர். அரசரின் தாய் அல்லது மூத்த அரசி ஆட்டிங்கல் மூத்த தம்பிராட்டி என்றும், அரசரின் சகோதரி அல்லது இளைய அரசி ஆட்டிங்கல் இளைய தம்பிராட்டி என்றும், அரசரின் மருமகள் அதாவது வருங்கால அரசி ஆட்டிங்கல் கொச்சு தம்பிராட்டி என்றும் அழைக்கப்பட்டனர். வலிய தம்பிரான் என்று பட்டம் கொண்ட அரசரின் மறைவுக்கு பின்னர் அவரது சகோதரியின் மகன் மகராஜகுமார் அரசராவார். அரச பொறுப்பேற்க ஆண்வாரிசு இல்லாத சமயங்களிலும், இளவரசனுக்கு ஆட்சிப் பொறுப்பேற்கும் வயது இல்லாத நேரங்களிலும் மூத்த தம்பிராட்டி ஆட்சிப்பொறுப்பை ஏற்பார். ஆனால் கொச்சு தம்பிராட்டியாக பதவியேற்க பெண் வாரிசு இல்லாது போகும் சமயங்களில் அரச மரபை தொடர்வதற்காக திருவனந்தபுரத்துடன் நெருங்கிய தொடர்புடைய பிற கேரள அரசுகளிடம் இருந்து பெண்கள் தத்தெடுக்கப்பட்டனர் (குறிப்பாக மாவேலிக்கரையை ஆண்ட கோலத்திரி அரச குடும்பத்தில் இருந்து). தத்தெடுக்கப்படும் மூத்த பெண்குழந்தை பெண் வாரிசாக வளர்ந்து நாட்டின் அடுத்த அரசரை பெற்றெடுக்க வேண்டும். இதிலிருந்து திருவாங்கூர் அரச குடும்பம் பெண்வழி மரபுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கியது என்பது தெளிவாக தெரியும். 

இலங்கையின் இறுதி அரசு 

மருமக்கள் தாயத்தின் விளைவால் இலங்கையின் வரலாற்றிலும் மிக முக்கியமான திருப்புமுனை ஒன்று கூர் தீட்டப்பட்டது. இலங்கையின் இறுதி சுதந்திர அரசாக ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கத்துக்கு எதிராக பலமாக போராடி வந்தது கண்டி ராஜ்ஜியம். இலங்கையின் மலைநாடு உள்ளிட்ட மத்திய பிராந்தியங்களை போர்த்துகீசியர்களிடம் இருந்து பாதுகாத்த கண்டி அரசு ஒல்லாந்தர்களுக்கு எதிரான போராட்டத்தில் உறுதியான கூட்டாளி சக்தி ஒன்றை தேடியது. அக்காலகட்டத்தில் கண்டி ராஜ்ஜியத்தின் பிரதான வர்த்தக கூட்டுறவாக விளங்கியது மதுரையை ஆண்ட நாயக்க அரசு. எனவே அவர்களுடன் கண்டி அரசு நல்லுறவை வளர்த்தது.

கண்டி நாயக்கர்கள் – ஜான் டேவியின்  எனும் நூலிலிருந்து  – புகைப்பட உதவி – -https://udithadevapriya.medium.com

1687 முதல் 1707 வரை கண்டி அரசை ஆட்சி புரிந்த மன்னர் இரண்டாம் விமலதர்மசூரியன் மதுரை நாயக்கர்களிடம் இருந்து பெண்ணெடுத்தார், நாயக்க இளவரசி கண்டியின் முதன்மை அரசியாகவும், முடியிளவரசனின் வளர்ப்பு அன்னையாகவும் பொறுப்பேற்றார். அப்போதிருந்தே கண்டியின் அரசவையின் தமிழ் பேசும் தெலுங்கு நாயக்கர்களின் ஆதிக்கம் உருவாகத் தொடங்கியது. 1707 இல் கண்டியின் அடுத்த அரசராக ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் ஆட்சிக்கு வந்தார். அவரும் தன்னுடைய தந்தையின் பாதையில் மதுரை நாயக்கர்களிடம் இருந்து பெண்ணெடுத்தார். பிட்டி நாயக்கரின் மகள் பிரமிளா தேவி பட்டத்து அரசியாகவும், உடுமலை தேவி எனும் மதுரை நாயக்க இளவரசி இரண்டாம் அரசியாகவும் கண்டியில் பொறுப்பேற்றனர். அவர்கள் இருவர் மூலமாகவும் அரசருக்கு ஆண் வாரிசுகள் எதுவும் உண்டாகாத நிலையில் காலமானார். மன்னரின் அரச அனுக்கியான மொனராவில தேவி மூலம் உனம்புவ பண்டார எனும் மைந்தன் பிறந்திருந்தான். எனினும் அவன் ஆட்சிக்கு வர அரசவை ஒப்புதல் கிடைக்கவில்லை.

சமத்துவத்தை போதிக்கும் புத்தரின் தர்மத்தை பின்பற்றும் நாடாக இருந்த போதிலும், கண்டியின் சிம்மாசனத்துக்கு தூய ஷத்திரியர்களே உரிமை கொள்ள முடியும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டது. உனம்புவ பண்டாரவின் அன்னை அரச குடியில் பிறக்காத காரணத்தால் அவன் அரசனாவதில் முரண்பாடுகள் உண்டாகின. அடுத்த அரசனாக பொறுப்பேற்க ஆள் இல்லாத நிலையில் நாயக்கர்களின் குரல் அவையில் ஒலித்தது, கேரளத்தின் மருமக்கத்தாயத்தை கொண்டு பட்டத்து அரசியின் இளைய தம்பிக்கு கண்டியின் மகுடம் சூட்டப்பட்டது. ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்ற அபிஷேக நாமத்தோடு அரசியின் தம்பி கண்டி அரசனானார். அவ்வாறு இலங்கையில் நாயக்கர் அரசு நிறுவப்பட்டது. 1747 இல் ஸ்ரீ விஜய ராஜசிங்கனும் முறையான வாரிசு இன்றி இறந்தமையால் மீண்டும் மருமக்கதாயத்தின் பிரகாரம், அரசியின் தம்பி கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்ற பெயரில் அரசரானார். அவரைத் தொடர்ந்து அவர் தம்பி ராஜாதி ராஜசிங்கன் அரசாரனார். அவரும் வாரிசு இன்றி இறக்கவே மருமக்கத்தாயத்தை  கொண்டு அரசரின் மருமகன் (சகோதரியின் மகன்) கண்ணுசாமி நாயுடு, ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற பெயருடன் நாட்டின் மன்னரானார். இவரே இலங்கையின் இறுதி முடிக்குரிய அரசர். 

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் – புகைப்பட உதவி – wikipedia.org

தமிழ் பேசும் தெலுங்கு நாயக்கர்கள் இலங்கையின் மன்னர்களானதில் இருந்து சிங்கள பிரதானிகளுக்கும், நாயக்க தலைமைகளுக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடுகள் இருந்து வந்தன. நாயக்கர்களின் தாக்கத்தால் தமிழ் கண்டியின் அரசவை மொழியாக அங்கீகாரம் பெற்றது. பிறப்பால் சைவ சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் நாயக்க மன்னர்கள் பௌத்தத்துக்கு பெரும் தொண்டாற்றினார்கள். நாட்டின் நலனுக்காக எத்தனை சேவைகள் செய்த போதிலும் வேற்று நாட்டில் பிறந்த பிறமொழி மன்னர்கள் தங்களை ஆள்வதில் சிங்கள சமூகத்தின் ஒரு பகுதி விரும்பவில்லை. நாயக்கர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே தொடர்ந்து ஏற்பட்டு வந்த முரண்பாடுகளின் விளைவாக 1815 இல் பிரித்தானியர்கள் கண்டியை கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆதிக்கத்துக்கு கீழே கொண்டுவந்தனர். வாரிசில்லாத சிம்மாசனத்துக்கு வாரிசு தேடித் தந்த அதே மருமக்கத்தாயத்தின் விளைவாலேயே அந்த அரசு முடிவுக்கு வந்தது என்பதே உண்மை. 

காலம் மாறிப்போச்சு 

மறுக்கப்படும் உரிமைகளுக்கு எதிரான குரல் எப்போதும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. 19ம் நூற்றாண்டு தொடக்கமே கேரளாவில் வலுவடைந்த பிரித்தானிய தாக்கமும், திருவாங்கூர் சமஸ்தானத்தின் சிறப்பான ஆட்சியும் கேரளத்தில் வாழ்வியல் மாற்றத்தை உண்டாக்கியது. காலனித்துவ ஆட்சியின் விளைவால் கேரளாவின் போர்க் குடிகளாக இருந்த நாயர் சமுதாயத்தின் வாழ்க்கை முறை வெகுவாக மாறியது. போருக்கான தேவை இல்லாது போனமையால் பெரும்பாலான நாயர்கள் விவசாயம், வியாபாரம் என சாதாரண தொழில்களுக்கு வந்தனர். 20ம் நூற்றாண்டில் இருந்து மேலைநாட்டு கல்வியின் தாக்கம் வந்தமையை தொடர்ந்து அரச உத்தியோகங்களுக்கும் நாயர் சமுதாயத்தினர் செல்லத் தலைப்பட்டனர். இந்த சமுதாய மாற்றமே மருமக்கள் தாயத்துக்கு முடிவை கொண்டு வந்தது. 

போர் என்பதே முக்கிய தொழிலாக இருந்த காரணத்தாலேயே நாயர் சமுதாயம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியது. ஆனால் ஆண்கள் நிலையான குடும்ப வாழ்வு ஒன்றை அமைத்துக்கொள்ள வேண்டிய நிலை வந்ததும் இவ்வளவு நாட்கள் பின்பற்றி வந்த சமூக கட்டமைப்புக்கு எதிரான கேள்வி உண்டானது. மருமக்கத்தாயாத்தின் பிரகாரம் சொத்துக்களை முகாமை செய்யும் உரிமை ஆண்களுக்கு (காரணவன்) இருந்தாலும் அவர்கள் இறந்த பின்னர் அவர்களின் மனைவி மக்களுக்கு பூர்வீக சொத்தில் எந்தவித உரிமையும் இருக்கவில்லை. தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டானது. மேலும் தரவாடு ஒன்றின் சொத்துக்களை முகாமை செய்யும் காரணவர்கள், தரவாத்தின் வருமானத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், ஊழல் நிகழ்த்தியதாகவும் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் குற்றம் சாட்டினார்கள். திருவனந்தபுரம் அரச குடும்பத்துக்கு வாழ்க்கைப்படும் நாயர் பெண்களின் குழந்தைகளுக்கும் இதே நிலை தான். அரசரின் மகன் அரச குடும்பத்து உறுப்பினாராகக் கூட கருதப்படவில்லை. அவர்களுக்கும் பரம்பரை சொத்துக்கள் மறுக்கப்பட்டன. நாயர் சமுதாயத்தை கடந்து நாயர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பிற சமுதாயங்கள் சிலவற்றிலும் மருமக்கத்தாயம் வழக்கில் இருந்தது. அம்பலவாசிகள், நாஞ்சில் நாட்டு வேளாளர்கள், மாப்பிள்ளைமார்(கேரள இஸ்லாமிய சமூகம்) மற்றும் சில கிறிஸ்தவ குடும்பங்கள் இதில் அடக்கம். இந்த அனைத்து சமூகங்களுமே சொத்துரிமை குறித்த பிரச்சினைகளுக்கு  முகம் கொடுத்தன. 

சம்பந்தம் எனும் திருமண முறையும் சில சமூக சிக்கல்களை உண்டாக்கியது. சம்பந்தம் முறையில் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாக இருந்தமையால் ஆண்கள் பெண்கள் இருபாலரும் பல தார திருமணங்களை செய்து கொண்டமை சமூக சீர்கேடுகளுக்கு வழி வகுத்தது. நம்பூதிரி சமுதாயத்தால் பிரசித்தம் அடைந்த இந்த சம்பந்தம் முறைமையின் படி, ஒரு பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு அதன் உண்மையான தந்தை உரிமை கோரவில்லை எனில் அக்குழந்தையை கொல்வது, அடிமைகளாக விற்பது அல்லது சமூகத்தில் தாழ்ந்த பிரிவாக நடத்துவது போன்ற அவலங்கள் நிகழ்ந்தன.  இதற்கு எதிராகவும் மக்களின் குரல் எழுந்தது. மேலும் ஆணாதிக்க சமுதாயமாக இருந்த பிரித்தானியர்களின் கண்களுக்கு தாய் வழி சமுதாயமும், மருமக்கத்தாயமும், சம்பந்தம் என்ற திருமண முறையும் ஜீரணித்துக்கொள்ள முடியாத அம்சங்களாக பட்டன. எனவே பிரித்தானியர்களும் இந்த மரபுகளை வன்மையாக எதிர்த்தனர்.

திருவிதாங்கூரின்  மஹாராணி பூராடம் திருநாள் சேது லட்சுமிபாய்  அவர்கள்  (1924)  – புகைப்பட உதவி – wikipedia.org

1924இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்மா இறந்ததை தொடர்ந்து அவருடைய மருமகன் ஸ்ரீ சித்திரை திருநாள் பலராம வர்மா ஆட்சிக்கு வர வேண்டிய நிலை உண்டானது. ஆனால் பலராம வர்மனுக்கு 12 வயதே ஆகியிருந்தமையால் ஆட்டிங்கல்  மூத்த தம்பிராட்டியாக இருந்த சேது லக்ஷ்மி பாய் (புகழ் பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் பேத்தி | பெண் வாரிசு இல்லாமையால் திருவனந்தபுரம் அரச குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டவர்) அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவருடைய 7 வருட ஆட்சியில் கேரளத்தில் பல முன்னேற்றகரமான மாற்றங்கள் உண்டாகின. மிருக பலி தடை, தேவதாசி முறை ஒழிப்பு ஆகியன இவரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. தாய் வழி சமூக முறைக்கான முடிவையும் இவரே நிறைவேற்றினார். C.K கிருஷ்ணப்பிள்ளை, S. தாணுப்பிள்ளை முதலியவர்களின் தொடர் முயற்சியின் விளைவாலும், மக்கள் வேண்டுகோளாலும், பிரித்தானிய அரசின் அழுத்தம் காரணமாகவும் 1925 ஏப்ரல் 13ம் திகதி சரித்திர புகழ் பெற்ற நாயர் ஒழுங்குமுறை சட்டம் மகாராணி சேது லக்ஷ்மி பாயால் கைச்சாத்திடப்பட்டது. அச்சட்டத்தின்படி தாய்வழி கூட்டுக்குடும்ப முறையும், மருமக்கத்தாயம் வழியான சொத்துரிமையும் இல்லாதொழிக்கப்பட்டு, ஆண்வழி சமுதாயமும், கருக்குடும்ப முறையும் அமுலானது. எந்த தாய் வழி மரபின் பயனால் திருவனந்தபுரத்துக்கு அரசியாக பொறுப்பேற்றார்களோ, அதே தாய் வழி சமுதாய முறையை ராணி சேது லக்ஷ்மி பாய் இல்லாமல் செய்தது விந்தையாகவும், வேதனையாகவும் உள்ளது. 

விமர்சனங்களை கடந்து, தாய்வழிச் சமூகத்தின் பயனாக பெண்களுக்கு பல சமூக நலன்கள் கிடைத்தன. சொத்துரிமையும், திருமண உரிமையும் இருந்தமையால் பெண்கள் சுதந்திரமாக செயல்பட முடிந்தது. பெண் கல்வியறிவு வீதம் உயர்வாக இருந்தது. சமூக அந்தஸ்தில் பெண் ஆணுக்கு இணையாக பார்க்கப்பட்டாள். ஆனால் காலத்தின் மாற்றத்தால் இன்று நிலைமை தலை கீழாய் மாறிவிட்டுள்ளது. பெண்களின் சம உரிமைக்காக போராடும் ஒவ்வொருவரும் இந்த தாய் வழி சமுதாய நடைமுறைகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது இன்றியமையாதது. 

Related Articles

Exit mobile version