சங்கதி தெரியுமா? | பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :05

வானவன் மாதேவியாகிய வானதி 

இராஜராஜ சோழ தேவருக்கு அரசியல் நோக்கங்கள் கருதி பல அரசிகள் இருந்தனர் என்பதை முன்பே பார்த்தோம், அதில் முக்கியத்துவம் பெறுபவர்கள் மூவர். பட்டத்து அரசி ஒலோக மாதேவியான தந்திசக்தி விடங்கி, ராஜேந்திரசோழரால் பள்ளிப்படை எடுக்கப்பட்ட பஞ்சவன் மாதேவி மற்றும் ராஜேந்திர சோழனின் அன்னை திரிபுவன மாதேவியான வானவன் மாதேவி. இந்த வானவன் மாதேவியின் இளமைப் பருவத்தின் ஊகமாக அமைக்கப்பட்ட கதாபாத்திரமே வானதி. 

பொன்னியின் செல்வன் கூறும் “சிறிய” வானவன் மாதேவியான வானதி, சுந்தர சோழர் காலத்தில் ஈழத்துக்கு படையெடுத்து சென்று உயிர் துறந்த கொடும்பாளூர் வேளிர் தலைவர் பராந்தகன் சிறிய வேளாரின் புதல்வி ஆவார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த வாதத்துக்கு சாதகமான எந்த வரலாற்று ஆதாரங்களும் கிடைக்கவில்லை.  ஆசிரியர் கல்கி வானதி குறித்து இந்த முடிவை மேற்கொண்டமைக்கு காரணம், கொடும்பாளூர் வேளிர்கள் சோழ அரச குடும்பத்துடன் கொண்டிருந்த நெருக்கமான திருமண உறவு. பராந்தக சோழர் காலத்தில் இருந்தே கொடும்பாளூர் வேளிர் தலைவர்கள் அரச குடும்பத்தடன் கொள்வினை கொடுப்பினை மூலம் நெருங்கிய உறவை கொண்டிருந்தனர். பொன்னியின் செல்வன் நாவலில் வானதியின் பெரிய தந்தையாக வரும் பூதி விக்கிரம கேசரி உண்மையில் சுந்தர சோழரின் தங்கையான நங்கை வரகுணப் பெருமானார் என்பவரை திருமணம் செய்திருந்தார்(K A நீலகண்ட சாஸ்த்ரியின் கருத்து). மேலும் வானதியின் தந்தையாக வரும் பராந்தக சிறிய வேளார் சோழ அரச குடும்பத்தின் மிக நெருங்கிய உறவினன் என்றும், இவர் பூதி விக்கிரம கேசரிக்கு சகோதர முறையினன் என்றும் சோழர் கல்வெட்டுகள் திட்டவட்டமாக கூறுகின்றன. இந்த ஆதாரங்களை கொண்டே வானதி கொடும்பாளூர் இளவரசி என கல்கி வரைமுறை செய்தார். 

ஓவியர் மணியம் அவர்களின் கைவண்ணத்தில் குந்தவை (இடது) மற்றும் வானதி (வலது) புகைப்பட விபரம் : pinterest,com

பொதுவாக எந்த ஒரு அரசியை போலவும் வானவன் மாதேவியை பற்றிய வரலாற்று தகவல்களும் அதிகம் கிடைக்கவில்லை. எனினும் வானவன் மாதேவி செய்துள்ள ஆலய திருப்பணிகள் மற்றும் கொடைகளில் இருந்து முக்கியமான விடயம் கண்டறியப்படுகிறது. திருவெண்காடு இறைவனுக்கு அதிகளவு தானங்களை மேற்கொண்டுள்ள இவ்வரசி “உடைய பிராட்டி தம்பிரானடிகள் திரிபுவன மாதேவியான வானவன் மாதேவி ” என்றும் “இராஜேந்திர சோழ தேவர் தங்களாய்ச்சி (தாய்)” எனவும் அறியப்படுகிறார். பொன்னியின் செல்வன் நாவலின் படி ராஜராஜ சோழரின் முதல் மனைவி வானவனமாதேவியான வானாதியே. ஆனால் ‘நான் ஒருபோதும் அரியணை ஏற மாட்டேன்’ என செய்த சபதத்தின் பெயரால் இவர் பட்டத்து அரசியாகவில்லை என கல்கி கூறியிருப்பார். இதுவும் கல்கியின் அனுமானத்தின் விளைவே, ஏறத்தாழ உத்தமன் ஆட்சியேறும் போதே அருண்மொழி திருமணம் செய்துகொண்டார் என தன்னுடைய கதையை கல்கி வடிவமைத்தமையாலேயே இவ்வாறான ஒரு சபதக் காட்சி உண்டானது. ஆனால் உண்மையில் இராஜராஜரின் மூத்த மனைவியும் பட்டத்து அரசியுமானவர் ஒலோக மாதேவியான தந்திசக்தி விடங்கி ஆவார். அதே போல பொன்னியின் செல்வன் காலத்துக்கு முன்னமே ராஜராஜனுக்கு திருமணம் நடந்தேறியிருக்கும். 

வானவன் மாதேவீஸ்வரம் (பொலவன்னறுவை இரண்டாம் சிவன் கோயில்)புகைப்பட விபரம்:-TLC.lk

வானவன் மாதேவியான வானதியின் மகன் இராஜேந்திரர் தன்னுடைய மாற்றன்னையான பஞ்சவன் மாதேவிக்கு எடுப்பித்த பள்ளிப்படை கோயில் குறித்து மக்களுக்கு தெரிந்திருக்கும் அளவு, தன்னுடைய பிறப்பன்னையான வானவன் மாதேவியின் பெயரில் இலங்கையில் எடுப்பித்த கற்றளி குறித்து தெரிந்திருக்காது. கி.பி 1017 ம் ஆண்டு முழு இலங்கையையும் சோழர் அதிகாரத்துக்குள் கொண்டு வந்த ராஜேந்திரசோழர் இலங்கையின் புதிய தலைநகரமான ஜனநாதமங்கலம் எனும் பொலன்னறுவையில் வானவன் மாதேவீஸ்வரம் எனும் சிறிய கருங்கல் ஆலயம் ஒன்றை எடுப்பித்தான். இன்று இலங்கையில் எஞ்சியிருக்கும் பதினாறு சோழ ஆலயங்களில் இது ஒன்று மட்டுமே அதிகளவு சேதம் இல்லாமலும், இன்று வரை வழிபாட்டிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இராஜேந்திரசோழர் ஏன் தன் அன்னைக்கு இலங்கையில் ஆலயம் எடுப்பித்தார் என்பதில் தெளிவு இல்லை. ஒருவேளை கல்கி கூறியது போலவே தன் தாய்வழி பாட்டனார் இறந்த இலங்கையிலேயே தான் தாய்க்கு ஆலயம் எடுப்பிக்க வேண்டும் என இராஜேந்திரர் விருப்பம் கொண்டார் போலும்!?     

பாண்டிய ஆபத்துதவிகள் 

பொன்னியின் செல்வனின் மொத்த கதையோட்டமும் சோழ அரச குடும்பத்துக்கு எதிராக பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் மேற்கொள்ளும் சதிகளை முன்னிலைப்படுத்தியே அமையும். அந்த கதையோட்டத்தின் முக்கிய உயிர் புள்ளியாக இருப்பது கடம்பூர் மாளிகையில் நடைபெறும் ஆதித்த கரிகாலன் கொலை. சோழ வரலாற்றில் மிகப்பெரிய மர்மமாகவும், திருப்புமுனையாகவும் இந்த கொலை அமைவதால், இது குறித்த பல அனுமானங்களும், சந்தேகங்களும் வாசகர்கள் மத்தியிலும், வரலாற்று ஆர்வலர்கள் மத்தியிலும் நிலவுகிறது. சோழ அரசியல் விளையாட்டில் தவிர்க்க முடியாத போட்டியாளர்களாய் இருந்த இந்த பாண்டிய ஆபத்துதவிகள் பற்றி வரலாறு என்ன கூறுகிறது என்பதை பார்போம். 

பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு தென்னவன் ஆபத்துதவிகள் குறித்து சொல்லத் தேவையில்லை. அரசணை உயிரைக் கொடுத்தேனும் காப்போம் என சத்தியம் செய்த தற்கொலைப்படை. சேவூர் போரில் தோற்கடிக்கப்பட்ட வீரபாண்டியன், தலைமறைவாக காட்டில் ஒளிந்திருந்த நேரம் ஆதித்த கரிக்காலனால் தலை வெட்டி கொல்லப்பட்டான். இதனால் ஆதித்த கரிகாலனும் அவன் துணைவரும் “பாண்டியன் தலைகொண்ட” என்ற விருதுப் பெயரை சூடிக்கொண்டனர். தங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்த பாண்டியனின் உயிரை ஆதித்தன் பறித்தது சோழர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருந்தது, ஆனால் பாண்டியர் தரப்புக்கு இது மாபெரும் அநீதியாகவும், அவப்பெயராகவும் மாறியது. வீரத்துடன் போர்க்களத்தில் இறந்திருந்தால் விளைவுகள் வேறு விதமாய் அமைந்திருக்கும். ஆனால் போரில் தோல்வி கண்டு, காயமுற்ற நிலையில் காட்டில் பதுங்கி சிகிச்சை பெற்று வந்த தங்கள் மன்னனை படுக்கையில் வைத்து கொன்றது ஆபத்துதவிகளின் சினத்தை பெரிது படுத்தியது. அவர்களுக்குள் இருந்த சினத்துக்கு ஈடாக குற்ற உணர்வும் பெருகியது. தங்கள் மன்னனை அநீதியால் கொன்ற சோழர்களை எந்த எல்லைக்கு சென்றேனும் பழி வாங்குவோம் என்ற மனநிலைக்கு அவர்கள் ஆளாயினர். அதற்கு அவர்களுக்கு பேருதவி புரிந்தது பழுவூர் இளையராணி நந்தினி தேவி

வீரபாண்டியன் கொலை – பொன்னியின் செல்வன் ஓவியம்புகைப்பட விவரம்: pinterest.com

பாண்டிய ஆபத்துதவிகளின் பட்டியலில் சோமன் சாம்பவன், இரவிதாசன், தேவராளனான பரமேஸ்வரன், இடும்பன் காரி, ரேவதாச கிரமவித்தன் மற்றும் ராக்கம்மாள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் சோழ நாட்டிலேயே மக்களோடு மக்களாக வாழ்ந்து அரச குடும்பத்துக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டனர். சுந்தரசோழர், அருண்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் ஆகிய மூவர் மீதும் இவர்கள் நடாத்திய கொலை முயற்சியில் மூன்றாவது மட்டுமே நிறைவேறியது. ஆதித்த கரிகாலன் மரணம் குறித்து திருவாலங்காட்டு செப்பேடுகள் முதலிய வரலாற்று ஆதாரங்கள் கிடைத்திருந்தாலுமே, அவை எதிலும் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டது பற்றி கூறப்படவில்லை. ஆதித்த கரிகாலன் சதியொன்றினால்  கொலை செய்யப்பட்டது குறித்து முதன் முதலில் தெரியப்படுத்தியது உடையார்குடி கல்வெட்டு

தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் உள்ள உடையார்குடி எனப்படும் சிறு கிராமத்தில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலில் கண்டறியப்பட்ட கல்வெட்டு சோழ வரலாற்றின் நெடுங்கால புதிருக்கு தீர்வு தருகிறது. இக்கல்வெட்டு கூறும் செய்தி வருமாறு: 

“வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து ஊர் சபையின்  பொறுப்பில் இருக்கும்  ‘பாண்டியன் தலை கொண்ட’ ஆதித்த சோழனை கொன்று துரோகிகளான சோமன், பஞ்சவன் பிரமாதிராயரான ரவிதாசன், இருமுடி சோழ பிரமாதிராயனான பரமேஸ்வரன், இவர்கள் தம்பி மலையானூரனான ரேவதாசவித்தன் ஆகியோரது உடைமைகளில் இருந்தும், இவர்கள் உடன்பிறந்தார், இவர்கள் மாமன்மார், இவர்களிடம் பெண்ணெடுத்தவர்கள், இவர்களுக்கு பெண் குடுத்தவர்கள் ஆகியோரது உடமைகளில் இருந்தும், ரேவதாசவித்தன், அவன் மகன், அவன் தாய் நங்கை சாணி ஆகியோரின் இரண்டே முக்கால் வெளி ஒரு மா பரப்பளவு நிலத்துடன் கூடிய ஆறு வீட்டுத் தொகுதிகளை, வியாழ கஜமல்லன் என்பவர் ஊரார் சபையிடம் இருந்து 112 பொன் கழஞ்சு விலைக்கு வாங்குவார். அந்த பணத்தை கொண்டு அனந்தீஸ்வரர் கோயில் அந்தணர்களுக்கு உணவளிக்க வேண்டும்.”

இந்த கல்வெட்டின் மூலமாக சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகிய மூன்று பிராமணர்களே ஆதித்த கரிகாலனை சதியால் கொலை செய்த துரோகிகள் என்பது தெளிவாகிறது. மேலும் இம்மூவர் தவிர இவர்கள் தம்பியான ரேவதாசவித்தன், இவர்கள் ஏனைய உடன்பிறந்தோர், நெருங்கிய உறவினர் அனைவரது சொத்துக்களும் அவர்கள் வாழ்ந்த வீரநாராயண சதுர்வேதி மங்கலம் ஊர் சபையால் கையகப்படுத்தப்பட்டு இருந்ததும் இதன் மூலம் தெரிகிறது. 

உடையார்குடி அனந்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு புகைப்பட விவரம்: veludharan.blogspot.com

ஆனால் இந்த கல்வெட்டு மேலும் பல புதிய சந்தேகங்களை உண்டாக்கியது என்பதே உண்மை. இக்கல்வெட்டு இராஜராஜ சோழரின் இரண்டாம் ஆட்சி ஆண்டை சேர்ந்தது. இந்த ஒரு விடயமே பல புதிர்களை உண்டாக்குகிறது. ஆதித்த கரிகாலன் இறந்தது சுந்தர சோழரின் ஆட்சிக் காலத்தில். ஆனால் அதற்கு 20 ஆண்டுகள் கழித்தே ஆதித்த கரிகாலனின் கொலையாளிகள் பற்றி இந்த கல்வெட்டு வெளிவந்துள்ளது. ஏன் இந்த 20 வருட தாமதம்? நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய சோழர்கள் புத்தகத்தில் ஆதித்த கரிகாலனின் கொலைக்கு பின்புலமாக இருந்தது மதுராந்தக உத்தம சோழரே என கூறுகிறார். இதனாலேயே உத்தம சோழரின் 15 வருட ஆட்சிக் காலத்தில் இந்த கொலை குறித்து எந்த தீர்ப்பும் எட்டப்படவில்லை என கூறுகிறார் அவர். ஸ்ரீ ஆர் வி ஸ்ரீனிவாசன் எனும் வரலாற்றாளர் ராஜராஜனும், அவர் தமக்கை குந்தவை பிராட்டியும் சேர்ந்தே ஆதித்த கரிகாலனை கொலை செய்ததாக கூறுகிறார். கொலையாளிகளான பிராமணர்களுக்கு மரண தண்டனை விதிக்காமல் அவர்களின் சொத்துக்களை மட்டும் பறிமுதல் செய்தது இராஜராஜரின் மீதான ஐயத்தை உண்டாக்குகிறது என இவர் கூறுகிறார். மனு நீதியின் பிரகாரம் ராஜராஜன் பிராமணர்களை கொலை செய்யாமல் நாடு கடத்தி இருக்கக் கூடும் என சிலர் கருதுகிறார்கள். ஆனால் இந்த வாதங்கள் எதற்கும் தக்க சான்றுகள் கிடைக்கவில்லை. 

இந்த கல்வெட்டை ஆராயும் போது ஒன்று தெளிவாக தெரிகிறது. இது ராஜராஜ சோழன் குறித்த நில விற்பனைக்கு அனுமதியளித்து அனுப்பியிருக்கும் ஸ்ரீமுகம் (கடிதம்) மட்டுமே, அரசாணை அல்ல. இந்த திருமுகத்தின் படி, சோமன், இரவிதாசன், பரமேஸ்வரன் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்துக்கள் ஏற்கனவே ஊர் சபையின் பொறுப்பில் இருந்தது தெளிவாக தெரிகிறது. அதற்கு மேலதிகமாக குற்றவாளிகளான பிராமண சகோதரர்களை கைது செய்தது பற்றியோ, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது பற்றியோ உடையார்குடி கல்வெட்டு எதையும் கூறவில்லை. எனவே ராஜராஜாரின் இந்த கல்வெட்டு வெளியாவதற்கு முன்பே ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய அனைத்து விசாரணைகளும் முடிவுக்கு வந்து, தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். இராஜராஜனுக்கு முன்பு ஆட்சியில் இருந்த உத்தம சோழர் காலத்தில் அல்லது சுந்தர சோழர் இறப்பதற்கு முன்னர் கூட இந்த வழக்கு விசாரணைகள் நடந்திருக்கலாம். மேலும் உத்தமருக்கும், அவர் அன்னை செம்பியன் மாதேவிக்கும் சோழ நாட்டு மக்களிடமும், அரச குடும்பத்திடமும் இருந்த மதிப்பும், அன்பும் அளப்பரியது என்பதை முன்பே கண்டோம். எனவே மதுராந்தக உத்தம சோழருக்கு இந்த கொலை சதியுடன் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. 

அவ்வாறெனில் உண்மையில் இந்த பிராமண சகோதரர்கள் யாவர்? அதற்கான விடையும் இந்த கல்வெட்டில் இருந்து கிடைக்கிறது. சோமன், இரவிதாசன், பரமேஸ்வரன் ஆகிய மூவரும் பிராமண அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர்ந்த பதவியான பிரம்மாதிராயன் எனும் படத்தை கொண்டிருந்தனர் (சோமனின் பட்டம் தெளிவாக அறியப்படவில்லை). இதில் இரவிதாசனின் பட்டம் ‘பஞ்சவன் பிரமாதிராயன்’ என்பதாகும். பஞ்சவன் என்பது பாண்டியர்களின் சிறப்புப்பெயர். எனவே இவர்கள் பாண்டிய நாட்டில் இருந்து வந்து சோழ நாட்டில் குடியேறி அரசாங்கத்தில் உயர்ந்த பட்டத்தை பெற்ற அதிகாரிகளாக இவர்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு ஆதித்த கரிகாலன் மீது ஏன் இத்தனை வன்மம்? ஏன் இத்தனை நெடிய ஆழமான சதித்திட்டம்? அதற்கான விடை வேறொரு செப்பேட்டில் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்தளூர் ராஜேந்திர சோழனின் செப்பேட்டில் ‘வீரபாண்டியன் தலை கொண்ட பரகேசரி வர்மனான ஆதித்தன், வெட்டுண்ட பாண்டியன் தலையை தஞ்சாவூர் கோட்டை வாயிலில் அனைவரும் காணும்படி தொங்கவிட்டான்’ என்ற செய்தி காணப்படுகிறது. இவ்வாறு தோற்ற அரசர்களின் மரணத்தின் மீதாக தங்கள் வெற்றியை வெளிக்காட்டுவது பண்டைய மரபு என்றாலும், ஆதித்தனின் இந்த செயலால் பாண்டி நாட்டாரிடம் சோழர் மீது கடும் அதிருப்தி உண்டாக்கியிருக்க வேண்டும். இதன் விளைவாகவே தருணம் பார்த்து காத்திருந்து பாண்டி நாட்டார் தங்கள் பழியை தீர்த்துக் கொண்டனர். 

இந்தளூர் செப்பேட்டின் சமீபத்திய ஆதாரங்களை தவிர்த்து பிற அனைத்து ஆதாரங்களையும் கொண்டே கல்கி பாண்டிய ஆபத்துதவிகளின் பாத்திரத்தை கல்கி வடிவமைத்திருந்தார். தெளிவான பல ஆதாரங்கள் கிடைத்த போதும் கரிகாலன் கொலையை கல்கி ஏனோ மர்மமாகவே முடித்துவிட்டார். நந்தினியின் காதலன் என்பதாலேயே அவனுக்கும் மர்ம முடிவை கல்கி விதித்துவிட்டார் போலும்.

கல்கியின் கதை மாந்தர்கள் தொடரின் அடுத்த பகுதியில் சோழ நாட்டு சிற்றரசர்கள் பற்றியும், அரச அலுவலர்கள் பற்றியும் பார்ப்போம்.   

 

 

Related Articles

Exit mobile version