தமிழில் இன்றளவும் வெளியாகிக்கொண்டிருக்கும், இனியும் வெளியாகப்போகும் பல வரலாற்று புனைவுகளுக்கு முன்னோடியாக இருப்பது, இருக்கப்போவது கல்கியின் படைப்புச்சமான பொன்னியின் செல்வன். இதற்கு காரணம் தன்னுடைய காலத்தின் வரம்புகளை கடந்து எழுத்தாளர் என்ற வகையில் கல்கி இந்நாவலுக்காக செய்த பெரும் முயற்சியும், காட்டிய அர்பணிப்புமே. ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் நாவல் வரிசையிலேயே கல்கி அவர்களின் பெருமுயற்சி மிகச் சிறப்பாக வெளிப்படும் தருணங்களில் குறிப்பிடத்தக்கது லங்கா பார்வமாக அமையும் சுழற் காற்று நூலிலேயே, அந்நூலின் சிறப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கல்கி கண்டுகொண்ட இலங்கை; மேலும் அங்குதானே நம் கதையின் பெயர் நாயகனான பொன்னியின் செல்வரை முதன்முதலாக சந்திக்கிறோம்.
கல்கிக்கு முந்தைய எந்த எழுத்தாளரும் இலங்கையை தமிழக வெகுசன ஊடகத்தில் சுவாரசியமாக முன்வைத்தது இல்லை. மெல்லியதோர் நீர் பரப்பால் எல்லையிடப்பட்ட அண்டை தேயமான ஈழம் குறித்து தமிழக வாசகர்கள் மனதில் வண்ணமாயான கனவுகளை உருவாக்குவதில் கல்கி வெற்றி பெற்றார். பொன்னியின் செல்வன் நாவலுக்காக மாத்திரம் அவர் இரு முறை இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். அந்த பயணங்கள் வாயிலாக கல்கி கண்டெடுத்த ஈழத்தை வரலாற்றின் பார்வையில் காண்போம்.
பொன்னியின் செல்வனின் வேறெந்த இடத்தை போலவும், ஈழத்தையும் முதன்முதலில் வந்தியத்தேவன் கண்கள் வழியாகவே காண்கிறோம். குந்தவை பிராட்டியிடம் இருந்து அருண்மொழி வர்மருக்கான தூது ஓலையுடன் இலங்கைக்கு வருகிறான் வந்தியன்; பூங்குழலியின் உதவியுடன். சுழல் காற்றின் எட்டாவது அத்தியாயத்தில் கோடியக்கரையில் இருந்து கிளம்பும் வந்தியர்-பூங்குழலில் ஜோடி இலங்கையின் வடகோடி தீவுக்கூட்டங்களில் ஒன்றான போதத்தீவினை அடைவார்கள். இந்த காட்சியமைப்பு தர்க்க ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் உண்மையானது. இலங்கையின் வட பகுதியான யாழ்தீபகற்பத்தில் இருந்து இந்தியப் பெருநிலத்தை அடைவதற்கான மிக அண்மிய இடம் தமிழகத்தின் கோடியக்கரையும், வேதாரண்யமுமே. யாழ்ப்பாணத்தக்கும் இவ்விரு இடங்களுக்கும் இடையிலான கடல் போக்குவரத்து பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்தது. கல்கி அவர்களின் காலப்பகுதியில் கூட இந்திய-இலங்கை கடல் போக்குவரத்து மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கடந்த காலங்களில் ஏற்பட்ட உள்நாட்டு போரும், வெளியுறவு கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றமும் இந்த ஆயிரமாண்டுகால கடல்வழித் தொடர்பை இன்று துண்டித்துள்ளது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
இது போல ஈழம் குறித்த பல பூகோள மற்றும் உயிர் பல்வகைமை குறித்த தரவுகளை கல்கி மிகச்சரியாக பொன்னியின் செல்வன் எங்கும் விட்டுச்சென்றுள்ளார். உதாரணமாக இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்கள் பற்றி. வந்தியத்தேவன் கண்களுக்கு சொர்க்க லோகமாக தெரியும் வட இலங்கை தீவுகளின் பழங்கால பெயர்களும், புவியியல் அமைப்பும் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பொன்னியின் செல்வனில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாவலில் நாகத்தீவு என அழைக்கப்படும் இடமே இந்து நயினாதீவாக மருவியுள்ளது, போதத்தீவாக இருந்து பூதத்தீவாக மாறிய இடம் இன்று புங்குடுதீவாக அறியப்படுகிறது. இதில் அதிசயிக்கத்தக்க ஒரு விடயமாக இருப்பது பூங்குழலியின் பின்வரும் வசனமே:
“ஆமாம்; இலங்கையின் வடபகுதி ஓரத்தில் பல தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நாகத் தீவு அதில் இறங்கினால் மறுபடியும் கடை கடக்கும் அவசியமல்லாமல் கரை வழியாகவே இலங்கைத் தீவை அடைந்து விடலாம்…”
முன்னர் குறிப்பிட்டது போல, இங்கு குறிப்பிடப்படும் நாகத்தீவு இன்றைய நயினாதீவே. ஆனால் பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்படுவது போல நயினாத்தீவில் இருந்து கால்நடையாக இலங்கையின் பிரதான நிலத்தை அடையவியலாது; அது இப்போதைய நிலையே அன்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை வேறு. இலங்கையும், இந்தியாவும் 32 கிலோ மீட்டர் நீளமுள்ள பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆழம் குறைந்த கடல் பரப்பாகும். கடந்த 1000 ஆண்டுகளில் ஏற்பட்ட சுற்றாடல் மாற்றத்தால் கடல் மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது என்பதை மறுக்கவியலாது. எனவே 1000 ஆண்டுகளுக்கு முன்பு நாகத்தீவை, இலங்கை பெருநிலத்துடன் இணைக்கும் நிலப்பரப்பு இருந்திருக்கக்கூடும் என்பதை கல்கி மிகவும் நுட்பமாக இங்கு வெளிப்படுத்தி உள்ளார்.
இலங்கையின் உயிர் பல்வகைமையை வெளிப்படுத்துவதில் கூட கல்கி மிகவும் நுணுக்கங்களை காட்டியுள்ளார். பாதிக்கு நிலப்பறப்புக்கு மேல் காடுகளால் சூழப்பட்டிருத்த ஈழத்தில் மந்தைகளென திரிந்த யானைக் கூட்டங்களையும், மான் கூட்டங்களையும், மலை சிறுத்தைகளையும் கல்கி எவ்வாறு வர்ணித்திருந்தாரோ இன்றும் அதே போலவே உள்ளது. யால, வில்பத்து, குமன, பின்னவளை போன்ற இலங்கை விலங்கு சரணாலயங்களுக்கு இப்போது சென்று பார்த்தால் கல்கியின் எழுத்துக்கள் உயிர்பெற்று எழுவதனைக் காணலாம்.
மாந்தை என அப்போது அறியப்பட்ட மாதோட்டம் துறைநகரத்தை கல்கி விளக்கும் போது அங்கிருந்த திருக்கேதீஸ்வரர் பற்றியும் எழுதியிருப்பார். இலங்கையில் நாயன்மார்களால் பாடல் பெற்றத் தலமாக விளங்குவது இரு தலங்கள் மட்டுமே, ஒன்று வடமேற்கு கரையில் அமைந்திருக்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம். இந்த இரு ஆலயங்களுமே ஈழத்து சோழராட்சியில் மிகவும் சிறப்பான நிலையில் இருந்தது. காரணம் கேதீஸ்வரமுடைய மன்னார் துறையும், கோணேஸ்வரமுடைய திருகோணமலை துறையும் சோழர்களின் பெருங்கடல் வாணிபத்தில் மிக முக்கியமான நகரங்களாக விளங்கியமையே. இராஜராஜராலும், இராஜேந்திரராலும் பல நிவந்தங்கள் செய்யப்பட்டு பல்லாண்டுகள் நன்னிலையில் இருந்த இரு கோயில்களும் பின்னாட்களில் போர்த்துக்கேயர் ஆட்சியில் பாரியாளவு அழிவுக்குட்படுத்தப்பட்டது, இன்றிருக்கும் ஆலயங்கள் சுதேசிகளால் நிர்மானிக்கப்பட்டது. இன்று அவ்விடங்களில் சோழராட்சியின் எச்சங்களாக எஞ்சியிருப்பது சில கல்வெட்டுக்கல் மட்டுமே. இலங்கையின் மற்ற சில முக்கிய வரலாற்று சின்னங்களான அநுராதபுர தாதுகோபங்கள், சிங்ககிரி அரண்மனை, தம்புள்ளை விகாரம் என்பவற்றுக்கு 1000 வருடங்களுக்கு முன் நின்றிருந்திருக்கக் கூடிய அதே பொலிவுடன் எழுத்துக்களால் மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.
அடுத்ததாக இலங்கையில் நிலவிய அரசியல் சூழ்நிலைகள் பற்றி காணோம். சுந்தர சோழருடைய ஈழப்படையெடுப்பின் போது அநுராதபுர மன்னராக இருந்தது 3ம் சேனன். வீரபாண்டியனுக்கு படையுதவி வழங்கிய காரணத்துக்காக இந்த படையெடுப்பு நடந்தது. படையின் தலைமைப் பொறுப்பில் இருந்தது சோழர்களின் மிக நெருங்கிய உறவினரான கொடும்பாளூர் சிறிய வேளாரும், சுந்தரரின் மைத்துனரான ஒரு வாணர் குலத்தலைவரும். பாண்டியனை போரில் வென்றது போன்று இலங்கைப் போரில் முடிவுகள் சாதகமாக இருக்கவில்லை. இந்த போரைத் தொடர்ந்து சோழப்படைகள் இலங்கையில் நிலைத்திருக்கவில்லை. வெகுவிரைவாகவே சோழநாடு திரும்பி விட்டன. சுந்தர் சோழர், சேனனுடன் உடன்பாட்டிற்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. எனவே பொன்னியின் செல்வன் கூறுவது போல மாதோட்டம் முதல் புலஸ்தியநகரம் வரை சோழர் வசம் இருந்தது என்பதை நிறுவ வரலாற்று சான்று இல்லை. ஏனெனில் 3ம் சேனனைத் தொடர்ந்து 5 சிங்கள மன்னர்கள் அனுராதாபுரத்தில் ஆட்சியமைத்தனர். எவ்வாறாயினும் முதலாம் பாராந்தகரின் ஆட்சியில் இருந்தே இராஜசிம்ம பாண்டியனால் ஈழத்தில் விட்டு செல்லப்பட்ட இந்திர ஆரமும், சுந்தர முடியும் தங்கள் கைகளுக்கு வந்தாக வேண்டும் என சோழர்கள் தொடர்ச்சியாக ஈழம் மீது போர் மூலமாகவும், வெளியுறவு கொள்கைகள் மூலமாகவும் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய வண்ணமே இருந்தனர். எனினும் இலங்கையை முறையாக சோழர்களின் ஆட்சிக்கு உட்படுத்தியது இராஜராஜ சோழரே; அதுவும் கி.பி 993 இல். ஆகவே பொன்னியின் செல்வனில் கூறப்படுவது போன்று அருண்மொழிவர்மர் தென்திசை மாதண்ட நாயக்கராக ஈழத்தில் இருந்தமையும், பூதி விக்ரமர் தலைமையில் சோழப்படைகள் ஈழத்தை காத்து வந்தமையும் கதையின் விறுவிறுப்பையும் கூட்டவும், சோழர்களின் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தவே கல்கி சேர்த்துக்கொண்டுள்ளார்.
பின்னாட்களில் அருண்மொழி வர்மன், இராஜராஜனாக முடிசூடியதும் இலங்கை மீது உடனடியாக படையெடுக்கவில்லை, தன்னுடைய திறந்த மதியூகத்தால் அநுராதபுர நகரின் அப்போதைய மன்னன் 5ம் மகிந்தன் வலுவிழக்கும் வரை காத்திருந்து தன் காரியத்தை செய்து முடித்தார். 5ம் மகிந்தன் ஒரு திறனற்ற அரசன் என்றும், அவனுடைய ஆட்சியில் மக்கள் வருமையால் துன்புற்றானர் என்றும், அரசனுடைய சொந்த பாதுகாப்புக்காக இறக்குமதி செய்யபட்ட வேளக்காரப் படை ஊதியமின்மையால் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும் இலங்கை வரலாறு நூலான மகாவம்சம் கூறுகிறது. இவ்வாறான சரியான தருணத்திலேயே இராஜேந்திரன் மற்றும் வந்தியத்தேவர் தலைமையில் சோழப்படை இலங்கையின் வடக்கு அரையான இராசரட்டை மண்டலத்தை முழுமையாக கைப்பற்றியது. அஞ்சிய சிங்கள மன்னன் தென்னிலங்கை அரணான உருகுனைக்கு தப்பிச் சென்றான். ஆனால் இராஜராஜனால் கூட தன் மூதாதை பாராந்தகரின் கனவை நிறைவேற்ற முடியவில்லை, அவர் மைந்தன் இராஜேந்திரரே கி.பி 1017 இல் உருகுனையையும் கைப்பற்றி பண்ணடியா அரச சின்னங்களை மீட்டனர். ஆனால் சோழர்கள் இலங்கை மீது கவனம் செலுத்தியமைக்கு பாண்டிய குலச்சின்னங்கள் மட்டும் காரணம் இல்லை. இலங்கையின் அமைவிட முக்கியத்துவமும், இலங்கையில் காணப்பட்ட செம்பு மற்றும் யானைகள் முதலிய இயற்கை வளங்களும் கூட பொருளாதார ரீதியில் இலங்கையை கைப்பற்றியாக வேண்டிய சூழலை உண்டாக்கியது. மேலும் சோழர்களின் எதிரிகளுடன் தொடர்ந்து சிங்களவர்கள் உறவு பாராட்டி வந்தமையும் ஈழத்தை தங்கள் நேரடி ஆட்சிக்கு கொண்டு வந்தமைக்கு முக்கிய காரணமாகும். இலங்கையின் மீதான சோழர்களின் அதீத வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக இருந்தது ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் சோழர்களுக்கு வழங்கிய ஆதரவும் தான்.
‘இலங்கையர்கள் எல்லாம் முரடர்களாமே’ என்று வந்தியத்தேவன் கேட்ட கேள்விக்கு, ‘அதெல்லாம் முழுப்பொய்’ என பூங்குழலி ஒரே சொல்லில் மறுத்தமையே போதும், ஆசிரியர் கல்கியின் மன ஆழத்தில் அவர் ஈழத்தின் மீது கொண்டுள்ள காதலை வெளிப்படுத்த.