இலங்கையின் ஐந்து வகையான பாரம்பரிய கலை வடிவங்கள்

இலங்கைக்கே உரித்தான ஐந்து வகை கலை நுட்பங்கள்

கலைகள் பொதுவாக மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் கொடுக்கும் ஆற்றல் கொண்டவை. அந்தவகையில்  இலங்கையின் பாரம்பரியம் காக்கும் கலைகளுள் பல்வேறு சிறப்பான அம்சங்களை காணமுடியும். அப்படியாக வளர்ந்து வந்த கலைகளில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படாமல் இருக்கும் கலைவடிவங்களை பற்றிய தொகுப்பே இது!

பீரளு ரேந்தைப் பின்னல்

அனுபவம் வாய்ந்த பீரளு ரேந்தைப் பின்னல் நெசவாளர்
பட உதவி : dailymirror.lk

இலங்கையில் போர்த்துக்கேய  ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கலை தான் பீரளு எனும் இந்த ரேந்தைப் பின்னல் கலை. இவற்றில் சில முறைகள் இன்றும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆடை வடிவமைப்பு, திரைச்சீலைகள், மேசை விரிப்புகள், மெத்தை விரிப்புகள் போன்றவற்றில் இக்கலை உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. முதலில் ஓர் வரைபட தாளில் தெளிவற்ற உருவமோ அல்லது வடிவமோ வரையப்படும். பின்பு தலையணை வடிவ மூட்டை ஒன்றின் மேல் இத்தாள் வைக்கப்பட்டு பிரத்தியேகமான  ஊசிகள் மூலம் இணைக்கப்படும். இதன் பின்னர் நெசவாளர் தனது கைகளை கொண்டு நூலை பீரளுவின் ஊடாக வரைப்படத்திலுள்ள வடிவத்திற்கு ஏற்ப முடிச்சிட்டு வடிமைப்பர். பீரளு (மரத்தினாலான நூல் வட்டு) மூலம் அந்த வடிவத்திற்கு உயிர் கொடுப்பார் நெசவாளர்.

முகமூடி தயாரிப்பு

முகமூடித் தயாரிப்பு கலைஞர் முகமூடிக்கு வண்ணம் பூசும் போது
பட உதவி : blogspot.com

1800 களிலேயே இலங்கை நாட்டுப்புறவியலால் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் சடங்கு சம்பிரதாயங்கள், நாடகங்கள், பரிகாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கையால் செய்யப்படும் இந்த முகமூடிகள் காட்டு அரளி மரத்தின் பாரம் குறைந்த பலகைகளில் நாட்டுப்புற நாடகங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள் செதுக்கப்பட்டு அனுபவம் வாய்ந்த நடிகர்களாலும் நடன கலைஞர்களாலும் அழகிய உணர்ச்சிபூர்வமான நாடகங்கள் நிகழ்த்தப்படும். கதாபாத்திரங்களை மிக துல்லியமாகவும் வண்ணமயமாகவும் காட்டக்கூடிய பேய் ஆட்டம் எனும்  இம்முகமூடி அணிந்த நடனம் உள ரீதியான பிரச்சினைகளை தீர்க்கும் என்ற ஐதீகம் இன்றும் காணப்படுகிறது. இந்திய கேரள மாநிலத்தின் முகமூடித் தயாரிப்பு கலை நுணுக்கங்களையும் இலங்கையின் முகமூடித் தயாரிப்பு நுணுக்கங்களையும் இணைத்து பல விதமான முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன.

இக்கலையை இன்று நாம் அம்பலாங்கொட, வத்துகெதர, பென்தர மற்றும் மேல்மாகாண கடலோர  இடங்களில் காணக்கூடும். இவற்றில் இக்கலையின் இதயமாக அமபலாங்கொட திகழ்கின்றது.

லாக்ஷா கலை

லாக்ஷா கலை உபகரணங்கள்
 
பட உதவி : media.timeout.com

அரக்கை பயன்படுத்தி பலகைகளில் நுண்ணிய பாரம்பரிய வேலைப்பாடுகளை கொண்டு வடிவமைக்கப்படுவது தான் லாக்ஷா கலை . பல்வேறு வகையான வீட்டு அலங்கார உபகரணங்கள் இக்கலை மூலம் உருவாக்கப்படுகின்றன. இவற்றை தயாரிக்க வண்டுகளால் சேதப்படுத்தப்பட்ட மரங்களை அறுவடை செய்து அதன் மரப்பட்டையில்  இருந்து நீரில் கரையாத பற்றாற்றல் மிக்க மரப்பிசின் எடுக்கப்படுகின்றது. அவ்வாறு எடுக்கப்பட்ட மரப்பிசின் வடிகட்டப்பட்டு தேவையான வண்ணங்களில் நிறமூட்டப்பட்டு காயவிடப்படுகின்றன. காய்ந்த பின்னர். கைகளினால் அல்லது பலகையில் சுற்றவிட்டு அந்த சுழற்சியின் மூலம் நிறமூட்டப்படும். இம்முறைகள் அரக்கு கரையும் தன்மையை கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. அப்போதுதான்  பளபளக்கும் ஒரு நிறைவு வரும். நகத்தினால் செய்யும் வேலைப்பாடுகள் சூடாக்கப்பட்ட அரக்கின் மீது வரையப்பட்டு எண்ணைச்சாயம் பூசப்படும். இக்கலை பிரசித்திபெற்ற இடங்கள் பல்லே ஹபுவிட, மாத்தளை.

களிமண் மட்பாண்டம்

குழைக்கப்பட்ட மண்ணில் இருந்து உபகரணம் தயாராகும் நிலை 
பட உதவி : srilankadaytours.com

இலங்கையின் பண்டைய நுண்ணிய வேலைப்பாடுகளில் ஒன்று களிமண்ணில் உபகரணங்கள் தயாரித்தல் முறை. சமையல் உபகரணங்கள், களிமண் உருவச்சிலைகள், பூச்சாடிகள், சட்டிகள் மற்றும் பரிசுப்பொருட்கள் என்பன இம்முறை மூலம் தயாரிக்கப்படும். நீர், தூர்வையாக்கபட்ட மண் சேர்த்துக் குழைக்கப்பட்ட களிமண்ணை வேண்டிய உருவத்தில் செய்து, அதனை சூளையில் இட்டு உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி மட்பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு சூடாக்குவதன் மூலம் களிமண்ணில் இறுகுதல், பலம் கூடுதல், வடிவம் உறுதியாதல் போன்ற நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மட்பாண்டங்கள் செய்வதற்குப் பயன்படும் களிமண் இடத்துக்கு இடம் வேறுபடுவதால், அவ்விடங்களில் செய்யப்படும் மட்பாண்டங்களும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டவையாக அமைகின்றன. கொழும்பிற்கும் கண்டிக்கும் இடையேயுள்ள மால்கொட களிமண் தயாரிப்புக்கு பிரசித்திபெற்ற இடம் ஆகும்.

பதிக் தயாரிப்பு

நிறமூட்டப்பட்ட மெழுகு பதியம் ஆடையில் பூசப்படுகின்றது
பட உதவி : blogspot.com

இக்கலை இந்தோனேஷியாவில் இருந்து பெறப்பட்டு இலங்கையின் பிரத்தியேகமான அழகுத்தோற்றத்தினால் மேம்படுத்தப்பட்டு இன்று தனிச்சிறப்பை பெற்றுள்ளது. இன்று நாடு முழுவதும் பரந்து காணப்படும் இக்கலை நுட்பத்தின் ஆக்கபூர்வமான வடிவமைப்புகள் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ளது. பதிக் வண்ணமயமான பூவணி வேலைப்பாடுகளையும் பாரம்பரிய மற்றும் இன்றைய காலத்தோடு இணைந்த வடிவமைப்புகளையும் கொண்டுள்ளது. இதனை தயாரிக்கும் முறையில் முதலில் நிறமூட்டப்பட்ட மெழுகு பதியம் ஆடையில் பூசப்பட்டு காயவிடப்படும். அடுத்து ஆடையில் இருந்து காய்ந்த மெழுகு உரித்தெடுக்கப்பட்டு ஆடை கொதிக்கவைக்கப்படும். இந்த முறையில் ஆடையை நிறமூட்ட ஹைட்ரொகிளோரிக் எனும் அமிலம் பயன்படுத்தப்படுகின்றது. தீர்மானிக்கப்பட்ட வடிவம் அல்லது நிலை வரும்வரை இம்முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

இக்கலை நுட்பங்கள் இலங்கையர் மற்றும் சுற்றுலா பயணிகளின் மனங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் .   

Related Articles

Exit mobile version