நவீன தமிழ் இலக்கியத்தின் யுக புருஷர் புதுமைப்பித்தன் | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழ் இலக்கியம் தனது நவீன யுகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு துணையாயிருந்த முன்னோடிகள் வரிசையில், முன் வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர் தான் புதுமைப்பித்தன்.

“இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை” என்றுரைத்த புதுமைப்பித்தன், யதார்த்த வாழ்வை எழுத்துக்குக் கொண்டுவந்தார். 

தமிழ் இலக்கியத்தில் அதுவரை இலட்சியக் கதாநாயகர்களும் இலட்சியக் கதாநாயகிகளுக்கும் உவமைக் கோட்டைகளைக் கட்டி உருவக மாளிகைகளில் குடியிருந்த கற்பனைக் காட்சிகளே படர்ந்திருந்தன. நிஜ உலகத் துன்பங்களைத் தன் எழுத்தினூடாகக் கொண்டு வந்து காட்டிய புதுமைப்பித்தனால், அதுவரை தமிழ் இலக்கியம் சுமந்திருந்த கனவுலக பிம்பக் காட்சிகள் கிழித்தெறியப்பட்டன. நிஜ உலகின் அவலங்களும் துன்பமும் பசியும் சின்னஞ்சிறிய மகிழ்ச்சிகளும் வலிகளும் ஏழைகளின் காதலும் கனவும் எதிர்பார்ப்பும் நடுத்தர வர்க்க மாந்தர்களின் வாழ்வியலும் பேசு பொருட்களாயின.

நவீன தமிழ் இலக்கியத்தின் யுக புருஷர் ஆனார் புதுமைப்பித்தன்.

தமிழ்நாட்டின் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்த புதுமைப்பித்தனின் இயற்பெயர் விருத்தாசலம். ஆரம்பக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய பிரதேசங்களில் கற்ற அவர்,  1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பி, அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பாடசாலையில் ஆரம்பகாலப் படிப்பை நிறைவு செய்தார். அதே நகரிலிருந்த நெல்லை இந்துக்கல்லூரியில் இளங்கலைக் கல்வியை நிறைவு செய்த புதுமைப்பித்தன், 1932 ஆம் ஆண்டு ஜூலையில் கமலாவை திருமணம் செய்தார்.

1930-களில் தமிழ்நாட்டில் வெளிவந்ததும் பிரசித்தி பெற்றதுமான தமிழ் இதழில், 1934 ஆம் ஆண்டிலிருந்து புதுமைப்பித்தனின் கதைகள் வெளிவரத் தொடங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்’ என்ற தலைப்பில் அமைந்தது. அவரது படைப்புகளில் பெரும்பாலும் சென்னையும் திருநெல்வேலியுமே கதைக் களங்களாக அமைந்தன. கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய வெளியீடுகள் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைச் சுமந்த பெருமையைப் பெற்றன. சிறுகதை ஒன்றை வார்த்தெடுத்து சிற்பமாகச் செதுக்கித் தருவதில் ஈடு இணையற்றவராயிருந்த அவர் எழுதிய 108 சிறுகதைகளில் 48 மட்டுமே, அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் வெளியாகின. 

 சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியிலும் புதுமைப்பித்தன் சிறந்து விளங்கினார். மொலியர், கே பாயில், மேக்சிம் கார்க்கி, சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர், வில்லியம் ஷேக்ஸ்பியர், இ. எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், இ. வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன், பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, அலெக்ஸாண்டர் குப்ரின், ஆன்டன் செக்கோவ், பிராண்ஸ் காஃப்கா, இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ், ஹென்ரிக் இப்சன், நாத்தேனியல் ஹாத்தோர்ன், எட்கர் ஆலன் போ, ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப், ஜேம்ஸ் ஹேன்லி முதலானோரின் சிறுகதைகள் தமிழில் கால்பதிப்பதற்கு புதுமைப்பித்தனே காரணமானார்.

இடதுசாரி அரசியல் சித்தாந்தத்தில் நம்பிக்கை உடையவராகத் திகழ்ந்த புதுமைப்பித்தன், அரசியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதேபோல, புதுமைப்பித்தனால் கவிதைகளும் எழுதப்பட்டன.

தமது சென்னை வாசத்தின் போது, ஊழியன், தினமணி, மற்றும் தினசரி ஆகியவற்றில் பணி புரிந்த புதுமைப்பித்தன்,  திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தியிருந்தார்.   ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்த அவர், “பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமொன்றைத் தொடங்கி, “வசந்தவல்லி” என்ற திரைப்படத்தைத் தயாரிக்க முயன்றார். எனினும் அது தோல்வியிலேயே முடிந்தது.

எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காக, மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்த புதுமைப்பித்தனை கடுமையான காச நோய் தாக்கியது. அந்த நோயினால் பாதிப்புற்ற புதுமைப்பித்தன் 1948 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி தனது உடலை நீத்தார்.

கட்டுடைத்து கூர்ந்து நோக்கும் விமர்சனப் பார்வையும் நையாண்டித்தனமான கருத்து வெளிப்பாடும் புதுமைப்பித்தனுக்கே உரித்தான தனிச்சிறப்புகள்! அந்தத் தனிச்சிறப்புகளே அவரை நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக நிலை நிறுத்தியிருக்கின்றன.

Related Articles

Exit mobile version