இலங்கைக்கு உரித்தான தற்காப்புக்கலை – அங்கம்பொர | வாசகர் கட்டுரை

உலகில் ஏராளமான தற்காப்புக் கலைகள் நடைமுறையில் உள்ளன. முறையாக பயிலப்படும் தற்காப்புக்கலை சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, தேகாரோக்கியம் என்பவற்றிற்கு வழிகோலுகின்றது. எழில்மிகு இலங்கைக்கு உரித்தான தற்காப்புக்கலையே அங்கம்பொர ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக இலங்கையில் நடைமுறையில் உள்ள இத் தற்காப்புகலையானது இலங்கை வரலாற்றில் பல போர்களில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகின்றது. இந்திய தற்காப்பு கலைகளின் செல்வாக்கை கொண்டுள்ள அங்கம்பொர ஆசியாவின் மிகப் பழமையான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். தலதா மாளிகை, எம்பக்க விகாரை போன்ற பல விகாரைகளில் இக்கலை தொடர்பான சிற்பங்களையும், சித்திரங்களையும் காணலாம். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்ட அங்கம்பொர நுட்பம் அக்காலத்தில் இரகசியமாக பயிற்றுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அங்கம்பொர வீராங்கனை – ஓவியம் – Supul Amarakoon

அங்கம்பொர என்ற வார்த்தையானது அங்கம் – உடல் மற்றும் பொர – போர் ஆகிய இரு வார்த்தைகளிலிருந்து உருவானது. அதாவது இது அங்கப்போர் என தமிழில் பொருள்படும். இந்த தற்காப்பு கலையானது பிரதான மூன்று பிரிவுகளை கொண்டது. அவையாவன: அங்கம்பொர – நிராயுதபாணியாக கைகளினால் சண்டை செய்தல், எலங்கம்போரா – ஆயுதங்களை பயன்படுத்தி சண்டை செய்தல், மாயா அங்கம் – எதிரிகளை விரட்டுவதற்கு மந்திரங்களைப் பயன்படுத்துதல் (பண்டைய காலத்தில் இருந்ததாக நம்பப்படுகின்றது) என்பனவாகும்.

தோற்றமும் வரலாறும்

பயிற்சி பெறும் வீரர்கள்: பட உதவி: https://martialask.com/angampora-sri-lanka/

அங்கம்பொரவின் தோற்றத்தில் பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், புராண கதைகளின்படி அங்கம்பொர தற்காப்பு கலை வடிவம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தீவில் வசித்த இயக்கர்களிடம் இருந்து தோன்றியதாக அறியப்படுகின்றது. இருப்பினும் வர்கா பூர்னிகாவ மற்றும் பஞ்சா ராகவலிய எனும் இரு பழங்கால வரி வடிவங்களில் இக்கலை ஒன்பது துறவிகளால் தோற்றம் பெற்றதென குறிப்பிடப்படுகின்றன. இலங்கை மன்னன் இராவணன் அங்கம்பொர நிபுணர் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. நடுவனகால சகாப்தத்தில் வாழ்ந்த திசாபத்தினியா என்ற பெண் தந்தையின் கொலைக்கு பழிவாங்குவதற்காக ஆண் போன்று உடையணிந்து, “ஊரு லிந்த” அல்லது ‘பன்றியின் குழி’ என்று அழைக்கப்படும் ஆழமான குழியில் அங்கம்பொர நுட்பங்களைப் பயன்படுத்தி கொலைகாரனைத் தோற்கடித்தாள். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பல போர்களில் அங்கம்பொர வீரர்கள் இருந்துள்ளார்கள். இலங்கையை ஆண்ட பல மன்னர்கள் இக்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் வரலாற்றில் இருந்து அறியாலாம்.

* ஆறாம் புவனேகபாகு மன்னர் யாழ்பாண இராச்சியத்தை கைப்பற்றிய போது மன்னனின் போராளிகளால் இக்கலை பயன்படுத்தப்பட்டது.
* சீதாவாக்கை இராச்சியத்தின் மாயாதுன்னை மன்னனின் வீரர்களினால் 1592 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற முல்லேரியா போரின் போது அங்கம்பொர கலை பயன்படுத்தப்பட்டது.
* மருவல்லியா மற்றும் சுதாலியா ஆகிய இரு பெரிய குலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கம்பொர தற்காப்புக் கலையை பயன்படுத்தி மன்னர் முன்னிலையில் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் பின்னர் இக்கலை வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1815 ஆண்டளவில் இலங்கையின் பெரும்பகுதி ஆங்கிலேயர் வசமானது. காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உள்ளூர் போராளிகளால் அங்கம்பொர நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஊவா-வெல்லசை கிளர்ச்சியின் பின்னர், 1818 ஆம் ஆண்டில் அங்கம்பொர வீரர்களினால் பிரித்தானிய படையினருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை உணர்ந்த ஆளுநர் ராபர்ட் பிரவுன்ரிக் இக்கலையை தடை செய்ததோடு, அங்கம் மடு என்று அழைக்கப்படும் பயிற்சி அளிக்கும் குடிசைகளையும் எரிக்கவும், அங்கம்பொர பயிற்றுவிப்பாளர்களை முழங்காலில் சுடுவதற்கும் உத்தரவிட்டார். மேலும் அங்கம்பொரவைப் பயன்படுத்துவதையும் கற்றுக்கொள்வதையும் தடை செய்தார்.

அங்கம்பொர போர்க்கருவிகள் – பட உத்வி – angampora.info

1948ம் ஆண்டில் இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் கேகாலையின் பெலிகல் கோரளை என்ற பகுதியில் இருந்து இந்த தற்காப்புக் கலை மீண்டும் தோன்றியது. இக் கலையை வளர்த்தெடுக்க 2001 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த நிர்வாகக் குழுவான ஜாதிகா ஹெலா அங்கம் ஷில்பா கலா சங்கமய நிறுவப்பட்டது. இலங்கையின் கலாச்சாரம் மற்றும் கலை அமைச்சு அங்கம்பொர கலையை ஆதரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கம்பொரவில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் தொகுப்பு கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கம்பொர பயிற்சிகள்

அங்கம்பொர பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் குடிசைகள் அங்கம் மடு என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை பாரம்பரிய கட்டிடக்கலை அமைப்பான கெபிம் சாஸ்திரத்தின் படி கட்டப்பட்டன.

* அங்கம்பொரபயிற்சி அமர்வு தியானம், குரு தட்சணை வழங்குவதன் மூலம் தொடங்குகிறது.
* பயிற்சி குடிசைக்குள் நுழைவதற்கு முன்பு மாணவர் மூன்று விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.
* தற்காப்பு மற்றும் குடும்பம் அல்லது நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதாக உறுதியளிக்க வேண்டும்.
* அடிப்படை பயிற்சிகள் சூடான பயிற்சிகளுடன் (warm up) தொடங்குகிறது. பின்னர் , படிப்படியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
* அங்கம்பொரவின் அடித்தளம் கால் அசைவு நுட்பங்களாகும். ‘முல்லா பானினா’ என்ற கால் அசைவு பயிற்சி கற்பிக்கப்படுகின்றது. இந்த பயிற்சியை இன்னும் மேம்பட்ட நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
* அடுத்ததாக அமரயா எனப்படும் ஆயுதம் பயன்படுத்தாத போர் முறை அடுத்ததாக கற்பிக்கப்படுகிறது. இதில் மாணவர் எதிராளியின் பலவீனங்களை கவனிக்கவும், தாக்கவும் கற்றுக்கொள்கிறார்.
* பின்னர் ஆயுத பயிற்சியளிக்கப்படுகின்றது. முப்பத்திரண்டு வாள் வகைகளும் பல பாரம்பரிய ஆயுதங்களும் உட்பட அறுபத்து நான்கு வகையான ஆயுதங்கள் அங்கம்பொரவில் பயன்படுத்தப்படுகின்றன.
* பயிற்சி பெறுபவர்கள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்பு மண்டலத்தை தாக்க கூடிய வித்தைகளையும் கற்று கொள்கிறார்கள். இந் நுட்பங்கள் மரணம் அல்லது முடக்கத்தை ஏற்படுத்தகூடியவையாகும்.
* இத்தகைய நுட்பங்களுடன் மாணவர்கள் பெஹெத் பெரவால் என அழைக்கப்படும் ஒரு சுதேச மருத்துவ முறையும் கற்றுக்கொள்கிறார்கள்.
* இறுதியாக அங்கம்பொர தற்காப்புக் கலையின் அனைத்து நுட்பங்களிலும் பயிற்சி பெறுபவர் பௌத்த விகாரையில் பட்டமளிக்கப்படுகிறார்.

Related Articles

Exit mobile version