களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 2 | வாழ்வியலும் கலையும் | #தமிழ்பாரம்பர்யமாதம்

முந்தைய பாகம் – பகுதி 1 | வந்தார்கள் வென்றார்கள்

கோன்(ண்)மை

தென் கருநாடாகத்தின் மைசூருக்கு அருகே ஒரு சிறு இனக்குழுவாக வாழ்ந்துவந்த களப்பிரர் தக்கதருணம் பார்த்து தென்னகத்தை தங்கள் ஆளுமையின் கீழ் கொனர்ந்தனர். களப்பிரர்கள் வைதீகத்திற்கு எதிரான நாத்திக வாதங்களான பௌத்தம் மற்றும் சமணத்தை பின்பற்றியவர்களாக இருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கானது பாலி மற்றும் பிராகிருத மொழிகளை கொண்டே அமையப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தாங்கள் மைனோரிட்டி ஆட்சியை நிகழ்த்துவது சிறந்த முடிவாக அமையாது என்பதை நன்கு உணர்ந்தனர். வேற்று மொழியுடனும், மதத்துடனும் ஒரு நாட்டை ஆள்வது கொதிக்கும் எண்ணெய்யில் தண்ணீர் விழுவது போன்றது என்பதை புரிந்துகொண்ட களப்பிரர்கள் தனியாட்சி முறையை கைவிட்டு, முடிமன்னர்களை எதிர்த்த சிற்றரசர்கள், புலவர்கள், எண்பேராய மற்றும் ஐம்பெருங்குழு உறுப்பினர்களை இணைத்து ஒரு கூட்டாட்சியை உருவாக்கினார்கள். இவர்களில் பின்வரும் சிற்றரசர்கள் முக்கியமானவர்கள்.

  • தஞ்சாவூரை ஆண்ட முத்தரையர்
  • கொடும்பாளூர் இருக்கு வேளிர்கள்
  • பழுவூர் பழுவேட்டரையர்
  • களக்குடி நாட்டு அரையர்கள்
  • குண்டூர் சிற்றரசர்கள்

இருண்டகாலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் குறித்து பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை.  கி.பி 470 இல் வச்சிரதந்தி தன்னுடைய அபிதாமாவதாரம் நூலை பூம்புகாரில் இயற்றும் போது உறையூரை தலைநகராக கொண்டு அச்சுதன் (அச்சுதக்களப்பாளன்) என்பவன் ஆட்சி செய்ததாக கூறுகிறார். பெரிய புராணத்தில் கூறப்படும் கூற்றுவ நாயனார் ஒரு களப்பிர அரசர் ஆவார். கூற்றுவர் சோழர்களின் மணிமுடியை அணிந்து சோழநாட்டை ஆட்சி செய்வதற்கு எண்ணி மணிமுடியை வேண்டினார். சோழர்களின் மணிமுடியானது தில்லைவாழ் அந்தணர்களிடம் காலம்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. கூற்றுவன் சோழநாட்டின் அரசனாக இருந்தாலும் ஒரு வந்தேறி என்பதால் சோழமணிமுடியை மன்னனிடம் தரமறுத்தனர். சிறிது காலத்தின் பின்னர் அவ்வந்தணர்கள் சேரதேசம் சென்றுவிடவே கூற்றுவன் சோழமணிமுடியை குறித்தான தன் எண்ணத்தை கைவிட்டான்.

களப்பிரர்கள் பாண்டியர்களின் இரட்டை கயல் சின்னம், சோழர்களின் வேங்கை சின்னம், சேரர்களின் விற்ச்சின்னம் ஆகியவற்றையே தங்களின் சின்னங்களாக ஏற்று நாட்டை ஆட்சி செய்தனர். பூம்புகார், மதுரை உக்கிரன் கோட்டை ஆகிய நகரங்கள் தலைமை நகரங்களாக விளங்கின. மேலும் விஜயமங்கை, புல்லமங்கை, பூதமங்கை ஆகிய நகரங்கள் முக்கிய  ஸ்டார்ட்டேஜிக் சென்டர்களாக அமைந்தன. முக்கியமான படைப்பிரிவுகள், அரசநிறுவனங்கள் என்பன இங்கேயே அமைந்திருக்க வேண்டும். நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருந்த காஞ்சிபுரம் களப்பிரர்கள் ஆட்சியின் மணிமுடியென ஒளிவீசியது. முதன்முதலில் தமிழ் வட்டெழுத்து கொண்ட கல்வெட்டுக்களை உருவாக்கி தந்தவர்கள் களப்பிரர்களே. அதுவரை இருந்த தமிழ்பிராமி எழுத்துக்கள் வழக்கொழிந்து தமிழ் வட்டெழுத்துக்கள் உருவானது. இவ்வட்டெழுத்துக்களே தற்போது தமிழ் எழுத்துக்களுக்கான அடிப்படையாக உள்ளது. இவர்களின் கல்வெட்டு முறையை அடியொட்டியே பல்லவர்களுக்கு, பாண்டியர்களும், சோழர்களும் தங்கள் கல்வெட்டுக்களை அமைத்துக்கொண்டனர்.

அத்தி கோசம் யானைப்படையும், நாற்பாத்தினை, உள்முனையர், வலைஞ்சியர் ஆகிய காலாட்படைகளும் களப்பிர அரசில் விளைந்த வீரப்படைகளாகும். கடாரம் கொண்ட சோழர்களுக்கு முன்னோடியாகவும், சங்ககால வழக்கத்தை தொடரும் வண்ணமாகவும் வலுவான கடற்படையை களப்பாள அரசு பேணிவந்தது. களப்பிரரின் ஆட்சிக்காலத்தில் நாடிழந்த பாண்டிய அரசர்கள் சில கிளர்ச்சிகளை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். எனினும் அவற்றை களப்பிர அரசு வெற்றிகரமாக முறியடித்து. சோழ அரசர்கள் தங்கள் முடியை தில்லைவாழ் அந்தணர்களிடம் ஒப்படைத்துவிட்டு பதுங்கிவாழ தங்களை பழக்கப்படுத்தி கொண்டனர். சங்ககாலத்தில் பிரம்மதேயங்கள் என்ற பெயரில் மக்களின் விளைநிலங்களையும் குடித்தன பூமியையும் கையகப்படுத்தி வாழ்ந்துவந்த பிராமணர்களின் பிரம்மதேயங்களை பறிமுதல் செய்து மீண்டும் மக்களின் பாவனைக்கு வழங்கினார்கள். இந்தியா முழுவதும் அக்காலத்தில் பரவியிருந்த பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிகரமான செயலாக இது அமைந்தது. வெள்ளைத்தோல் பிராமணர்களை எதிர்த்து களப்பிரர்கள் மேற்கொண்ட இந்த ஹீரோயிசம் மக்களை அவர்கள் பால் ஈர்த்துக்கொண்டது. மக்களின் மத்தியில் களப்பிரரின் கோன்மை புகழ் பெற்ற அதேவேளையில், பார்பனரின் பார்வையில் இது மிலேச்சனின் கோண்மை என ஆனது.யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்  என வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

வாழ்வியல்

மக்களின் வாழ்வு முறைகளில் பெரும் மாற்றங்கள் என எதுவும் நிகழவில்லை. தன்னிறைவான பொருளாதார முறை தொடர்ந்துவந்த நிலை இருந்தது. வைதீக மதத்தின் வீச்சம் சோபையற்று போக பௌத்தமும், சமணமும் அதை நிரப்பலாகின. வர்ணாசிரம முறையை உட்புகுத்துவதன் மூலம் தங்களின் இருப்பை உறுதிப்படுத்த திட்டமிட்ட பிராமண சித்தாந்தத்தால் அதிருப்தி கொண்டிருந்த தென்னகத்தோரை, யாவரும் சமம் என்ற நோக்கும் எளிமையும் நிரம்பியிருந்த பௌத்தமும் சமணமும் அதிகமாக கவர்ந்தன. எனினும் பெண்களின் நிலை பெரிதாக மாற்றம் பெறவில்லை. குடும்பப்பெண்கள் வெறுமனே குழந்தைகள், கணவன் ஆகிய நிலைகளோடு இருந்து விட்டனர்.  மனைவியரிடம் மனம் நிறையாத ஆண்கள் விலைமகளிரை அணுகும் பழக்கமும் தொடர்ந்தது.

தற்காலத்தை போல மஜெஸ்டரேட் நீதிமன்றாகளோ, காவல் நிலையங்களோ அக்காலத்தில் இருக்கவில்லை. அரசனே நீதியின் காவலனாக இருந்தான். ஆனால் அவர் சுப்ரீம் கோர்ட், தொட்டதற்கெல்லாம் சுப்ரீம் கோர்ட் செல்ல முடியாது என்பதால் கிராமங்கள் ரீதியாக பஞ்சாயத்து சபைகள் இருந்தன. பெரிய ஆலமரம், வெற்றிலையை குதப்பிக்கொண்டிருக்கும் முறுக்கு மீசை நாட்டாமை, நாட்டாமைக்கு ஒரு செம்புதூக்கி, நாலு பெரியமனுஷர்கள், இரண்டு வழக்காடிகள், இருநூறு வெட்டிப்பயலுகள் என பாரதிராஜா படத்துக்கு நிகராக கற்பனை செய்வது பொருந்தாது. பஞ்சாயத்து இடங்கள் கிராமத்தில் அமைந்த கோவில்களே. அவைகள் சபை எனப்படும், சபையின் தலைமையாக கிராம தேவதையே நின்றது. சங்ககாலத்தில் சாஸ்தா எனப்பட்ட ஐயனார் சபாபதியாக சேவையாற்றினார். களப்பிரர் ஆட்சியில் சாஸ்தாவுக்கு சப்போர்ட்டாக தாரா தேவி என்றொரு தெய்வம் வந்தது. இவ்வாறு கிராமங்கள் தோறும் சபைகள் செயல்பட்டு வந்தது.

கடல் வணிகத்தை பொறுத்தமட்டும் பௌத்தர்களே அதிகம் ஈடுபடலாயினர். கிழக்கே சீனதேசம் முதல் மேற்கே ரோமானிய சாம்ராஜ்யம் ஈறாக அனைத்து அரசுகளுடனும் விரிவான வணிகம் நடைபெற்றது. மட்பாண்டங்களும், மதுக்குடுவைகளும் களப்பாளர் நாட்டிற்க்கு இறக்குமதியாயின. சமணத்தின் கோட்பாட்டின் படி கடல் தாண்டுவது பாதகம் என்பதால் தரைவழி வணிகத்தில் சமணர்கள் செழிப்புற்றனர். சமகாலத்தில் நிலவிய சாதவாகன பேரரசு நாத்திக கொள்கைகளை ஆதரித்தமையால் தரைவழி வணிகர்களான சமணர்களால் அதிகம் லாபத்தை காணமுடிந்தது.

நாத்திகம்

நாஸ்திகம் (नास्तिक) என்ற சமஸ்கிருத சொல்லின் பொருளானது ‘வேத எதிர்ப்பு’ என்பதாகும். வைதீக கொள்கைகளால் கட்டுண்டு துன்புற்ற சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் சித்தார்த்த கௌதமரால் பௌத்தமும், இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் வழியே சமணமும் நிறுவப்பட்டன. களப்பிரர்கள் ஆட்சியில் இவை தென்னகம் முழுவது மிகவும் சிறப்புற்றன. சமணத்தை காட்டிலும் பௌத்தம் அதிக செல்வாக்குடன் திகழ்ந்தது. தியானத்தையே அடிப்படையாக கொண்ட தேரவாத பௌத்தம் ஆரம்பகாலத்தில் வேகமாக பரவியபோதும், பிற்காலத்தில் தெய்வம் இல்லாத ஒரு மார்க்கத்தை பின்பற்ற மக்கள் தயக்கம் காட்டினர். எனவே புத்தருக்கான சிலைகளும், போதிசத்துவர் சிலைகளும் ஆசியாமுழுவதும் தோற்றம் பெற்றன. இவ்வுருவ வழிபாடு மகாயானம் எனப்பட்டது.  மகாயான பௌத்தம் தமிழகத்தில் தலைதூக்கியதும் இந்நாட்களிலேயே. அக்காலத்தில் தமிழகத்தில் அமையப்பெற்ற விகாரைகள் ‘தேவகுலம்’ என அறியப்பட்டன. புத்தர் அல்லது அவரது முக்கிய சீடர்களின் அஸ்தியின் மீது விகாரைகளை கட்டுவதே பௌத்த மரபாக இருந்தது. களப்பிர ஆட்சியில் விளங்கிய விகாரைகளில் சிறப்புற்றன சில

  • பூலாங்குறிச்சி தேவகுலம், இது களப்பிரரின் கடற்படை தலைவனால் உண்டாக்கப்பட்டது.
  • கரூர் அருகில் அமைக்கப்பட்ட தேவகுலம்
  • கொங்குநாட்டின் முத்தூற்றுகூட்டம் அமைந்த தேவகுலம்
  • மதுரை நகரில் அமைந்த தேவகுலம்
  • சங்ககால தேவகுலமான புகார் தேவகுலம்
  • நாகைப்பட்டினம் சூடாமணி விகாரம்

சமணர்கள் பெரும்பாலும் மலைஉச்சிகளில் வாழ்வதையே நெறியாக கொண்டவர்கள். அவர்களின் வானியல் ஆய்வு, கருத்தாக்கம், மருத்துவம் ஆகிய தேடல்களுக்கு மலைகள் தேவையானது. எனவே சமணர்கள் இருப்பிடங்கள் மலைகளில் அமைந்தன.

  • மதுரைக்கு வடக்கே உள்ள அரிட்டாப்பட்டி மலை, இங்கு சமண தீர்த்தங்கர்களில் ஒருவரான அரிட்டநேமி(நேமிநாதர்) தங்கியதாக நம்பிக்கை
  • தூத்துக்குடி அருகே வெட்டுவான் கோயில் பகுதியில் அமைந்த மலைக்குன்று.
  • ஆனைமலை
  • மதுரை அழகர் மலை, தற்கால கள்ளழகர் கோவில்
  • பரங்குன்றம், தற்கால திருப்பரங்குன்றம்
  • கழுகு மலை
  • தமிழகத்தின் எல்லோரா என வர்ணிக்கப்படும் சித்தன்னவாசல்

ஆகிய பகுதிகள் களப்பிரர் காலத்தில் சமணர்களின் முக்கிய மையங்களாக திகழ்ந்தன. கி.பி 470 இல் வச்சிரதந்தி என்ற சமணர் திரமிளசங்கம் அமைத்தது தமிழகத்தில் சமணத்தின் எழுச்சியை உண்டாக்கியது.

கல்வி:கேள்வி:கலை

பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கும் போது, முன்னைய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டு அவற்றுக்கு பிரதியீடாக வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். வெறும்5 ஆண்டு ஆட்சியிலேயே திட்டங்கள் புதிது புதிதாக தோன்றும் போது, நிலையான ஒரு அரசை உருவாக்கிய களப்பிரர்கள் பல மாற்றங்களை உருவாக்கிச் சென்றது இயல்பே.  களப்பிரர்கள் ஆட்சியில் மதுரையில் கொழுவீற்றுரிந்த கடைச்சங்கம் பொலிவிழந்து போகலானது. பாண்டியர்களின் குலஉரிமை போன்றான சங்கத்தை களப்பிரர்கள் கைவிட்டது ஆச்சரியத்துக்குரியது அல்ல. களப்பிரர் தாய் மொழி பிராகிருதம் அல்லது பாலி மொழியாக இருந்தது. எனினும் களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும்,தமிழ் கலைகளும் புனர்ஜென்மம் பெற்றன. கல்விக்கண் திறந்தனர் களப்பிர அரசர்கள். தமிழை தங்கள் தாய்மொழியாக ஏற்றனர்.

‘எழுதறிவித்தான் இறைவனாவான்’ என்ற வாக்கு மெய்யெனில் களப்பாளர் அனைவரும் மக்களின் கண்கண்ட தெய்வங்களே. சங்கம் வளர்த்து மூவேந்தர்கள் தமிழ்வளர்த்த போதும் மக்களிடையே நிலவிய கல்வியறிவு எத்தகையது என்பது வரையறைப்பதற்கு கூடியதாக இல்லை. ஆனால் களப்பிரர் ஆட்சியில் இந்நிலை மாறி அனைவருக்கும் கல்வி கிடைக்குமாறு வகைசெய்யப்பட்டது. இதற்கான பிரதான உந்துதல் களப்பிரர் கைக்கொண்ட பௌத்தமும் சமணமுமே. கருத்தியல், வாதம், வானியல், வைத்தியம் என அனைத்து துறைகளிலும் பௌத்த பிக்குகளும், சமண துறவிகளும் அறிவும் ஆர்வமும் கொண்டிருந்தனர். பௌத்த பிக்குகள் கடல்வழி பிரயாணம் மூலம் கிழக்கு தேசங்களுக்கு சென்று புதிய சித்தாந்தங்களையும், அறிவியலையும் கோணர்ந்த வண்ணம் இருந்தனர். சமணர்கள் தம்மிடையே இருந்தவண்ணம் ஆலோசனைகள் கூட்டி புதிய கண்டுபிடிப்புகளில் மூழ்கினார்கள். கச்சி என அறியப்பட்ட காஞ்சிமாநகர் கல்வியின் உச்சமாக திகழ்ந்தது. பௌத்த ஆராமைகளும், சமணப்பள்ளிகளும் காணும் திசையெங்கும் விரிந்தவண்ணம் சென்றன. வாதமும், ஞானமும், கலைகளும், கல்வியும் செழிப்புற்றன. காஞ்சிக்கடிகை நிகரில்லா செல்வாக்குடன் திகழ்ந்த பௌத்த கல்விக்கூடமாக இருந்தது. தற்கால யூனிவேர்சிட்டி, கேம்பஸ் ஆகியவற்றுக்கு திறமையின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது போல நாடளாவிய ரீதியில் திறம் மிக்க மாணவர்கள் அனைவரும் கடிகைக்கு அனுமதி பெற்றனர். களப்பிர அரசின் ஆலோசனைக்கூடமாக திகழ்ந்த இது, பிற்காலத்தில் பல்லவர்களின் வாரிசுரிமையை தீர்மானிக்கும் அளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டது. தற்கால ஆட்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிப்பது போல, அக்காலத்தில் கல்விமான்கள் தெரிவு செய்தனர் போலும்.  உலகப்புகழ் பெற்ற குங்-ஃபூ தமிழனான போதிதர்மர் வாழ்ந்து சீனதேசம் சென்றதும் இக்காலத்தில் நடைபெற்றதே. தின்னனார், தர்மபாலர், சூனியவாதத்தின் ஸ்தாபகரான நாகர்ஜுனர் ஆகியோரும் காஞ்சியில் தங்கி போதனைகளை செய்தனர்.

தமிழ்த்தாய் சிலம்பை மட்டும் அணிந்திருக்கையில் அவளுக்கு மேகலையும், சிந்தாமணியும் சூட்டி அழகுபார்த்தவர்கள் களப்பிரர்கள். இரட்டை காப்பியங்கள் என அறியப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் பிந்தையது களப்பிரர் ஆட்சியில் எழுதப்பட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியும் இக்கால சமணர்களின் கைவண்ணமாக உதித்ததே. மேலும் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம், பெருங்கதை ஆகிய இலக்கியங்கள் சமைக்கப்பட்டதும் இந்நாட்களிலேயே. கி.பி 407 இல் புத்ததத்தர் எனும் பிக்கு கூத்தமங்களத்தில் இருந்து அபிநயவிதாரம், புகாரில் இருந்து அபிதாம அவதாரம் ஆகிய இரு இலக்கண நூல்களை வடித்தார். நந்ததத்தம், காக்கைபாடனியம், பல்காப்பியம், பல்காயம் ஆகிய இலக்கண நூல்களும் எழுதப்பட்டது. விருத்தம், தாளிசை, துறை ஆகிய செய்யுள் வடிவங்களை தந்து தமிழ் மொழியை புதியபாதைக்கு இட்டுச்சென்றவர்களும் இவர்களே.

கலைமகள் நிச்சயம் களைப்பிரர் ஆட்சியில் களிகூர்ந்திருப்பாள். காணும் திசையெல்லாம் கானமும், ஆடலும் நிறைந்து மக்களின் மனதை நிரப்பியது. பரத்தையர்கள் என அறியப்பட்ட விலைமகளிரே நடனம் முதல் பாடல் வரை தேர்ச்சிபெற்றிருந்தனர். எனவே குலப்பெண்கள் நடனமும் கானமும் கற்பதற்கு தடை விதிக்கப்படலானது. பிற்காலத்தில் சம்பந்தர் தன் பதிகத்தில் திருவையாறின் ஒவ்வொரு வீட்டிலும் சதங்கை ஒலியும், பாடலொலியும் கேட்கும் விந்தைக்குறித்து பாடலானர். அங்ஙனம் திருவையாறு தென்னக கலைகள் கருவறையாக மாறியதற்கான அடித்தளம் களப்பிரர்கள் இட்டுச்சென்றதே. கொங்குநாட்டின் (அரசலூர்) பகுதிகளில் ஆடப்படும் கூத்துவடிவங்களின் சொற்கட்டுகளில் ஒன்றான “தா-தை” என்ற கட்டு, மணிவக்கன் தேவன் சாத்தான் என்றவாரல் ஆக்கப்பட்டது. இதுதவிர்த்து இன்னும் சிலக்கூத்து வடிவங்களும் எழலாகின.

இறுதிப் பாகம் – பகுதி 3 | இருண்டது காலம்

ஆதாரங்கள்.
  • சமூக ஆய்வுவட்டம், வரலாற்று பேராசிரியர் பத்மாவதியின் உரை
  • இந்திய வரலாறு : டாக்டர் ந. சுப்ரமணியன்
  • பாண்டியர் காலச்செப்பேடுகள் : டாக்டர் மு. ராஜேந்திரன்
  • முகப்புப் படம் : https://twitter.com/JJayCreation

Related Articles

Exit mobile version