இலங்கையின் வரலாற்றில் ஜப்பான் நடத்திய முதலாவது ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் நடந்த உயிர்பலி பற்றிய வரலாற்றுக்குறிப்புகளில் இருந்து இந்த வரலாற்றையும்  பலர் மறந்திருக்கலாம். சுவாரஸ்யமான ஒரு கதை இது. நிஜக் கதை.

ஐ. எஸ். பயங்கரவாதிகளால் கடந்த ஏப்ரல் மாதத்தின் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குரூரமான தாக்குதலை பலர், “ஈஸ்டர் தாக்குதல்” என்று வர்ணிக்கின்றார்கள் அல்லவா. ஆனால் அந்தச் சம்பவம் உண்மையில் இலங்கை எதிர் கொண்ட முதலாவது ஈஸ்டர் தாக்குதல் அல்ல, இரண்டாவது ஈஸ்டர் தாக்குதலாகும்.  இலங்கை அந்நிய சக்திகளினூடான தனது முதலாவது ஈஸ்டர் தாக்குதலை 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறுப் பண்டிகையன்று எதிர் கொண்டது.

ஜப்பானிய பேரரசின் இலங்கைக்கு எதிரான போர்

இம்பீரியல் ஜப்பானியக் கடற்படையென்ற பெயர்பெற்ற ஜப்பானியப் பேரரசின் கடற்படை, அப்போது இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானியப் பேரரசுடன் மோதும் முகமாக கொழும்பு நகரம் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டது. பிரித்தானியாவின் போர்க்கப்பல்கள், துறைமுகக் கட்டமைப்புகள், விமானத்தளங்கள் ஆகியனவையே ஜப்பானியப் படைகளின் இலக்காக இருந்தன. மேலும், பிரித்தானியாவை அச்சுறுத்தி, ஆசிய நீர்வழித்தடங்களிலிருந்து அதனை விரட்டுவதே ஜப்பானின் உள்நோக்கமாக இருந்தது.

கொழும்பை நோக்கி வந்த குண்டு வீசும் விமானங்களில் ஒன்று 

1796 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கையின் கரையோரப்பகுதிகள் அனைத்தும் பிரித்தானியரின் வசம் வந்துவிட்டன. ஆசியக் கடற்பரப்பில் முக்கிய கேந்திர மையமும் பிரித்தானியப் படைகளின் பிரதான தளமுமாக இருந்த சிங்கப்பூர், ஜப்பானின் கைகளில் விழுந்த பின்னர், இலங்கைக்கான முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. அதன்பின்னர் பிரித்தானியக் கடற்படை இலங்கையையே தனது பிரதான தளமாகக் கொண்டது.  இதுவே, ஜப்பானியப் படைகளின் கண்களில் வெகுவாக உறுத்தியிருக்கிறது.

ஜப்பானியப்படைகள் கொழும்பைத் தாக்கிய போது, பிரித்தானியாவின் பெரும்பாலான கடற்படைக்கப்பல்கள் மாலைத்தீவிலிருந்தன. பிரித்தானியக் கடற்படைக்குச் சொந்தமான வெறும் மூன்று கப்பல்களே கொழும்பில் தமது நங்கூரத்தைப் பாய்ச்சியிருந்தன. அவை மட்டும் அன்றைய தினம் மாலைத்தீவில் இல்லாதிருந்தால், பிரித்தானியா தலைநிமிரவே முடியாத தோல்வியையும், அளவிட முடியாத இழப்பையும் சந்தித்திருக்கும்.

1942ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று நடந்தது என்ன?

உண்மையில் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. 127 ஆண்டுகால பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக, ஆயுதப்போர் செய்ய முயன்று தோற்று, தோற்று, இனி அடிமைப்பட்டுக் கிடப்பதொன்றே வழியென்று எண்ணிய ஒரு தலைமுறை மடிந்து முடிந்து, அடுத்தடுத்த தலைமுறை இலங்கையர்கள் பிறந்து வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது! பிரித்தானியாவை எதிர்த்து போரிடக்கூடியவர்களை அந்தத் தலைமுறை கண்ணால் கண்டதில்லை. அன்றைய ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையர்களுக்கு ஜப்பான், தன்னைக் காண்பித்தது.

1942 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 5 ஆம்திகதி ஞாயிற்றுக் கிழமை, கொழும்பிலிருந்த பிரித்தானியர்கள் தமது இறைகுமாரனான இயேசுவின் உயிர்த்தெழுதற் பிரார்த்தனைகளில் மூழ்கியிருந்தனர். கொழும்பின் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் அன்றைய தினம் நிகழ்ந்தன. விடிந்து சூரியனின் ஒளி பரவாத இருள் முற்றாய் அகலாத பொழுதில், ஜப்பானிய விமானங்கள் கொழும்பின் வான்பரப்பை கிழிக்கத் தொடங்கின.

கொழும்பு மீதான ஜப்பானின் தாக்குதலில் மூன்று விமானம் தாங்கிக்கப்பல்கள் பங்கேற்றிருந்தன. அகாகி (Akagi), ஹிர்யு ( Hiryu), சோர்யு (Soryu) என்ற பெயர்களுடைய அந்த மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களும் தாக்குதல்களுக்குத் தேவையான பல ரக விமானங்கள் மற்றும் குண்டுகளைத் தாங்கி வந்தன. ஜப்பானிய கப்டன் மிட்சுவோ ஃபுச்சிடா ( Mitsuo Fuchida)வின் வழிகாட்டுதலில், கொழும்பை நோக்கி, 36 போர் விமானங்கள், 54 தாழப்பறந்து குண்டு வீசும் விமானங்கள் மற்றும் 90 குண்டுவீச்சு விமானங்கள் ஆகியன சீறிப் பாய்ந்தன.

அகாகி (Akagi), ஹிர்யு ( Hiryu), சோர்யு (Soryu) என்ற பெயர்களுடைய அந்த மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களும்

ஜப்பானிய விமானங்களின் வீரியம் மிக்க தாக்குதலால் கொழும்புத்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள் பொருத்தப்பட்ட வர்த்தகக்கப்பலான HMS Hector மூழ்கியது. இது, பிரித்தானியக் கடற்படைக்குச் சொந்தமானது. ஆரம்பத்தில் சரக்குக்கப்பலாகவே இது தயாரிக்கப்பட்டிருந்த போதும் பின்னாளில், இது ஆயுதம் பொருத்தப்பட்ட நிலைக்கு மாற்றியமைக்கப்பட்டிருந்தது. HMS Hector கப்பலுடன், துறைமுகத்திலிருந்த பிரித்தானியாவின் நாசகாரிக்கப்பலான HMS Tenedos வும் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. பிரித்தானிய விமானப்படைக்குச் சொந்தமான 27 விமானங்களை ஜப்பானிய விமானங்கள் சிதைத்து உருத்தெரியாமல் அழித்தன. 

HMS Hector கப்பலுடன், துறைமுகத்திலிருந்த பிரித்தானியாவின் நாசகாரிக்கப்பலான HMS Tenedos வும் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது

ஜப்பானின் கொடூரம்

கொழும்பிலிருந்த பிரித்தானிய இலக்குகளைக் குறிவைத்து அழித்த வண்ணமிருந்த ஜப்பானிய விமானங்கள், கொடூரமான ஒரு காரியத்தைச் செய்தன. அது அங்கொடையில் இயங்கி வந்த மனநலங் குன்றியவர்களுக்கான காப்பகத்தின் மீதான குண்டுவீச்சு!

அங்கொடைப்பகுதிக்கு அருகில் உள்ள கொலன்னாவ எண்ணெய்த்தாங்கிகளையே யப்பானிய விமானிகள் குறிவைத்ததாகவும், ஆனால் குறி விலகி, அங்கொடை – மனநலங் குன்றியவர்களுக்கான காப்பகத்தின் மீது குண்டுகள் விழுந்து விட்டதாகவும் சில கதைகள் சொல்லப்படுகின்றன. எனினும், அங்கொடைக்காப்பகத்தை அன்றைய அரையிருளில் காலையின் கொலன்னாவ எண்ணெய்த்தாங்கிப் பகுதி என்று நினைத்து குண்டு வீசப்பட்டதாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகின்றது. எப்படியாயினும், இரு பேரரசுகளின் மோதலில், தமக்கான சுய உலகில் எவருடனும் முரண் நிலை கொள்ளாமல், வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி உயிர்கள் அந்தக் காப்பகத்தில் மாண்டு போயின.

இந்தத் தாக்குதலை முடித்துக்கொண்டு, ஜப்பானிய கப்டன் மிட்சுவோ ஃபுச்சிடாவின் விமானங்களடங்கிய அணி, மீண்டும் தமது விமானம் தாங்கிக் கப்பலான, Akagiக்கு திரும்பியது. ஆனால், அது முடிவல்ல! முதல் அலையின் ஓய்வே அது என்றவாறு, ஜப்பானிய விமானங்களின் இரண்டாவது அலை உடனடியாக, கொழும்பை நோக்கி கிளம்பியது. ஜெப்பானிய லெப்டினென்ட் கொமான்டர் எகுசா (Egusa) தலைமையில் வழிகாட்டப்பட்ட அந்த விமானப்படை அணி இலங்கையிலிருந்து தென் மேற்காக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பாரிய பயணியர் கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்தது. Dorsetshire மற்றும் Cornwall என்ற பெயர்களை உடைய அந்த இரு பெரும் பயணியர் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டமை காரணமாக, 424 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 1,120 பேர் உயிர்பிழைத்தனர் என்றாலும், அவர்கள் உதவியை எதிர்பார்த்து பல மணித்தியாலங்கள் கடலில் மிதக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகின்றது.

Dorsetshire மற்றும் Cornwall என்ற பெயர்களை உடைய  இரு பெரும் பயணியர் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டமை

சுடுகாடாக மாறிய கொழும்பு நகரம்

கொழும்பின் மீது பறந்த ஜப்பானின் தாழப்பறந்து குண்டுவீசும் விமானங்கள் ஏறக்குறைய 90 சதவீதம் தமது இலக்குகளை, துல்லியமாக கண்டு அழித்தனவெனக் கூறப்படுகின்றது. கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இவற்றின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. மருதானை ரயில் நிலையத்திற்கு அருகிலும் ஒரு குண்டு விழுந்து வெடித்ததில் அந்த ரயில் நிலையம் பகுதியளவில் சேதமடைந்தது. பெரும்பாலான மரணங்கள் சாதாரண மக்களுடையதாகவே இருந்தன.

ஜப்பானிய கப்டன் மிட்சுவோ ஃபுச்சிடா ( Mitsuo Fuchida)

பிரித்தானியப் படைகள், ஜப்பானிய விமானங்கள் மீது தரையிலிருந்தான துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை முன்னெடுத்தன. இதன் காரணமாக கணிசமான ஜப்பானிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டமையையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் ஒன்று கல்கிசை பரிதோமாவின் கல்லூரிக்கு அருகில் வீழ்ந்தது. மற்ற ஜப்பானிய விமானம் பெல்லன்வில வயல்களில் விழுந்ததாக தெரியவருகின்றது. ஹொரணப்பகுதியிலும் காலிமுகத்திடலிலும் கூட ஜப்பானிய விமானங்கள் பிரித்தானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கொழும்பு பாரியளவில் பாதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. ஜப்பானியர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களை எதிர்ப்பதற்கு பிரித்தானிய விமானப்படை அன்றைய தினம் தயாராக இருக்கவில்லை. அவர்களிடம் அப்போது வெறும் 20 விமானங்களே இருந்தன.

ஆனால், அடுத்தநாள் திங்கட்கிழமை வெளியான சிலோன் டெய்லிநியூஸ் பத்திரிகை இதையே தெரிவித்தது:

“கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகர்ப்புறங்கள், நேற்று காலை 8 மணியளவில், கடற்புறமிருந்து வந்த  75 எதிரி விமானங்களால் தாக்கப்பட்டன. அவற்றுள் 25 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. மேலும் 25 சேதமடைந்தன. கொழும்புத் துறைமுகம் மற்றும் இரத்மலானைப் பகுதிகளில் தாழப்பறந்து குண்டுவீசலும், துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கொழும்பின் நகர்ப்புறத்தில் மருத்துவக் கட்டிடமொன்றின் மீதும் குண்டுவீசப்பட்டது”

முகப்பு படம் : HMS கப்பல் மூழ்கும் காட்சி (pacificeagles.net)

Related Articles

Exit mobile version