விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பியல்பு மனிதனுக்கு மட்டும் உள்ளது. அவன் சிந்திக்கத் தெரிந்தவன். அவனால் கற்பனை செய்யமுடியும். கற்பனைகள் அவனை வளப்படுத்த அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தன. அச்சம், வீரம், காதல், இரக்கம் போன்ற உணர்வுகளின் பிரவாகத்தில், ஒருவகை கலா மோகத்தில் அவன் தன்னை ஆட்படுத்திக்கொள்ள அவை உதவின. மனிதனின் கலை வெளிப்பாடு என்பது பண்டைய காலந்தொட்டே இருந்து வருகிறது. பூமி உருண்டையின் எல்லாப் பக்கங்களிலும் பேசப்படுகின்ற கதைகளே இதற்குச் சான்று.
ஆதிகால கிரேக்கர்களின் சமய நம்பிக்கை பல தெய்வ உருவ வழிபாட்டுக் கோட்பாட்டில் அமைந்திருந்தது. வானத்துக்கும் பூமிக்கும் தனித்தனியே கடவுள்கள் இருந்தனர். மலைகளுக்கும் கடலுக்கும் கடவுளர்கள் கற்பிக்கப்பட்டனர். சூரியனும் சந்திரனும் கடவுளர்களாகத் தெரிந்தனர். நெருப்புக்கும் நீருக்கும் கடவுள்கள் இருந்தனர். காட்டுக்கென்றும் கழனிக்கென்றும் கடவுள்கள் இருந்தனர். காட்டில் அலையும் மிருகங்களுக்கென்றும், கடலில் திரியும் மீன்களுக்கும் கடவுள்கள் உண்டு. வயலில் விளையும் தானியங்களுக்கும், காய்த்துக் குலுங்கும் கனிகளுக்கும் கடவுள்கள் உண்டு. இரும்படிக்கும் கருமானுக்கும் தனியாகக் கடவுள் இருந்தான். வேட்டைக்காரர்களுக்கு வேண்டியவை செய்ய தெய்வம் இருந்தது. போருக்குச் சென்றாலும் வெற்றியை ஈட்டித்தர கடவுள் இருந்தது. கல்விக்குத் தனித் தெய்வம் உண்டு. காதலுக்கும் அது போல் தனியே தெய்வம் உண்டு. செல்வத்துக்கும், சேமத்துக்கும் தனியே கடவுளோ தெய்வமோ கற்பிக்கப்பட்டிருந்தது. இப்படி எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடவுள்களைக் கற்பித்து வணங்கி வந்தனர்.
அன்றைய கிரேக்கர்களின் விண்ணியல் முறைகளால் அவர்கள் அப்போது கிரகங்களை பற்றி அறிந்து வைத்திருந்தார்கள். இப்போது விண்ணில் இருக்கும் கோள்களுக்கு கிரேக்க கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே ரோமர்கள் கிரேக்கர்களின் சமய நம்பிக்கைகளையும் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் அவற்றைத் தங்களுடைய சமயம், இலக்கியம் ஆகியவற்றில் புதிய வார்ப்புகளாக வடிவமைத்து, தாங்கள் அதுவரை வணங்கி நின்ற தெய்வங்களோடு கிரேக்கர்கள் வணங்கிவந்த தெய்வங்களை இணைத்தும் இணையாக்கியும் வைத்தனர். அதுபோன்று இணைத்த ஒரு கிரேக்க தொல்கதை கதாநாயகனின் கதையே இது.
கிரேக்க தொல்கதை கதாப்பாத்திரமான ஹெராக்லஸ் என்ற பெயரில் இருந்து தோன்றியதே ஹெர்குலீஸ். கிரேக்க காவியங்கள் இன்றளவும் ஆங்கில படைப்புலகை தங்களின் வசியத்திற்குள் வைத்திருப்பதின் சமீபத்திய சாட்சி இயக்குனர் பிரட் ராட்னரும் இந்த படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். ரோமானிய தொல்கதை கதாப்பாத்திரமான ஹெர்குலீஸ் என்ற நம் கதையின் கதாநாயகன் ஜூபிட்டர் கடவுளுக்கும் மனித பெண்ணான அல்க்மேனாவுக்கும் பிறந்தவர். ஹெர்குலீசை தலைமை நாயகனாக கொண்டு பல ரோமானிய கதைகள் தோன்றின. கிரேக்கர்கள் என்னும் நீண்டமுடி அகியன்கள் இந்த கதாநாயகனை ஹெராகிள்ஸ் என்றே அழைக்கிறார்கள். ஹெர்குலிஸின் திறமை கடவுள் கொடுத்தது. ஹெர்குலிஸ் பிறந்த கதையே வேடிக்கையும் ஆச்சரியமுமானதுதான். ஜீயஸ் கடவுள் ஒருநாள் நினைக்கிறார். கடவுள் என்பவர் இறப்பு அற்றவர் ஆனால் மனிதன் என்பவன் இறப்புக்கு உட்பட்ட உடலைக் கொண்டவன். ஏன், இறப்பற்ற கடவுள் உடலுக்கும், இறக்கும் மனிதன் உடலுக்கும் பிறக்கும் ஒரு குழந்தையை தேர்ந்தெடுக்கக் கூடாது அது எப்படி இருக்கும். கடவுளின் குணங்களும், மனிதனின் குணங்களும் சேர்ந்தே இருக்கும்தானே என்று எண்ணி அதை செயல்படுத்துகிறார்.
ரோமானியர்கள் ஆட்சி புரிந்த காலத்தில், ஹிஸ்பானியா முதல் காவுல் வரை வாழ்ந்த உள்ளூர் மக்கள் ஹெர்குலீசை கடவுளாக வழிபட்டனர். சிங்கத் தோல், தண்டாயுதம் சகிதமாக காணப்படும் ஹெர்குலீஸ், புத்திசாலியான வீரர். அல்க்மேனாவுடன் உறவு கொண்டதால் கோபமடைந்த ஜூபிட்டரின் மனைவி ஹேரா, அல்க்மேனாவுக்கு பிறந்த ஹெர்குலீசை விரோதியாக பார்த்தாள். குழந்தையாக இருக்கும் போது ஹெர்குலீஸ் மீது அன்பாக இருந்த ஹேரா, ஒருமுறை குழந்தை மார்பில் அணைத்தபடி தூங்கினாள். அவள் தூங்கும் போது விழித்த குழந்தை, தனது தாய் என எண்ணி ஹேராவின் மார்பில் இருந்து பாலை குடித்தது. தேவதையிடம் பாலை குடித்ததால் ஹெர்குலீஸ் தெய்வதன்மை அடைந்தார். ஆனால் மனித பெண்ணுக்கு பிறந்ததால் அவர் மனிதனாக வாழ்ந்தார். தன்னுடைய பாலை குடித்து தெய்வதன்மை அடைந்ததாலேயே ஹெர்குலீசை, ஹேரா விரோதியாக பார்க்க தொடங்கினாள்.
டெயனேய்ரா என்ற பெண்ணை மணந்த ஹெர்குலீசுக்கு நிறைய குழந்தைகள் பிறந்தன. சந்தோஷமாக வாழ்ந்த ஹெர்குலீசை பார்க்க சகிக்காத ஹேரா, ஹெர்குலீசின் பார்வையை பறித்தாள். குருடரான ஹெர்குலீஸ், விரோதி என நினைத்து தனக்கு பிறந்த குழந்தைகளை கொன்றார். ஹேராவின் சாபத்தில் இருந்து விடுபட மைகேனாய் நாட்டு மன்னன் யுரேதியசுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என வானில் இருந்து வந்த அசரியை ஏற்றுக் கொண்ட ஹெர்குலீஸ், கண் பார்வையை திரும்ப பெற்றார். பிறகு அசரியை கூறியபடி யுரேதியஸ் மன்னனுக்கு அடிமையாக பணியாற்றினார். அடிமையான ஹெர்குலீசுக்கு யுரேதியஸ் 12 கடும் சோதனைகள் வைத்தார். எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்ற ஹெர்குலீஸ், யுரேதியஸ் மன்னனிடம் இருந்து விடுதலை பெற்றார். சோதனைகளின் போது பல தீய சக்திகளை அழித்ததால் ‘உலகை காப்பாற்றியவர்’ என ஹெர்குலீஸ் அழைக்கப்பட்டார்.
மனைவி டெயனேய்ராவுடன் தூர தேசம் செல்லும் வழியில் ஹெர்குலீசுக்கு பெரிய ஆற்றை கடக்க நேரிட்டது. படகுடன் வந்த நெஸ்சுஸ், ஹெர்குலீசுக்கு உதவ முன்வந்தான். ஆனால் அவனது நோக்கம் டெயனேய்ராவை கடத்தி செல்ல வேண்டும் என்பதாகும். இதை அறிந்த ஹெர்குலீஸ், நெஸ்சுசை கொல்ல முயன்றார். அவன் தப்பியோட, துரத்தி சென்ற ஹெர்குலீஸ் நெஸ்சுஸ் மீது விஷ அம்பை ஏய்து கொன்றார். சாகும் முன்பு தனது ரத்தத்தை பிடித்து வைத்துக் கொள்ளுமாறு டெயனேய்ராவிடம் ரகசியமாக கூறிய நெஸ்சுஸ், ஹெர்குலீஸ் துரோகம் செய்தால் அவரது அன்பை மீண்டும் பெற ரத்தத்தை பயன்படுத்துமாறு தெரிவித்தான். ரத்தத்தை பிடித்து அதை ஹெர்குலீசுக்கு தெரியாமல் டெயனேய்ரா ரகசியமாக வைத்திருந்தாள்.
ஹெர்குலிஸ் மனிதனை விட அதிக சக்தி கொண்டவன். ஜீயஸ் கடவுளுக்கு பிறந்தவன் என்றாலும் ஹெர்குலிஸ் மனிதன் என்றே இக்கதையில் போற்றப்படுகிறான். தன்னை போன்று இரு மடங்கு எடை கொண்ட மிருகத்தை சந்திக்கும் அளவுக்கு ஹெர்குலிஸ் பயிற்சி பெற்றவன். கூலிப்படைத்தலைவனான அவனை திரேஸ் நாட்டு மன்னன் கோட்டீசின் மகளான எர்கினியா சந்தித்து தங்கள் நாட்டு வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்து தங்களது எதிரி மன்னனான ரெஸ்சுய்சை போரில் வீழ்த்தி தனது நாட்டை காக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். இதற்காக ஹெர்குலிசின் எடையை போல் இரு மடங்கு தங்கத்தை வழங்குவதாக அவனுக்கு வாக்குறுதி அளிக்கிறாள். ஆனால் அவன் அவள் மீது காதல் வயப்படுகிறான்.
சில ஆண்டுகள் சென்றது. ஒரு நாள், ஹெர்குலீசுக்கும் வேறொரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த டெயனேய்ரா கணவரின் அன்பு பறிபோய்விடுமோ என அஞ்சினாள். நெஸ்சுஸ் கூறியது நினைவுக்கு வர, ரகசியகாம வைத்திருந்த ரத்தத்தை ஹெர்குலீசின் ஆடையில் தடவினாள். அந்த ரத்தத்தில் நெஸ்சுசை கொல்ல ஹெர்குலீஸ் பயன்படுத்திய அம்பில் இருந்த விஷம் கலந்திருந்ததை டெயனேய்ரா அறியவில்லை. ரத்தம் தடவப்பட்ட ஆடையை அணிந்ததும் ஹெர்குலீசை விஷம் தாக்கியது. அவரது உடல் தீ பிடித்து எரிந்தது. தான் பயன்படுத்திய விஷமே தன்னை எரிக்கிறது என்பதையும் நெஸ்சுசின் சதியையும் ஹெர்குலீஸ் தெரிந்து கொண்டார். ஆனால் என்ன செய்ய முடியும், ஹெர்குலீசை விஷம் கொன்றது. மரணமடைந்த ஹெர்குலீசை, தந்தையான ஜூபிட்டர் கடவுளாக மாற்றினார்.
ஹெர்குலீஸ் கடவுளானார் என்பது ரோமானியர்களின் நம்பிக்கை.
Web Title: Greek god Hercules life saga
Featured Image Credit: youtube