ஓர் ஆண்டில் இரு பொதுத் தேர்தல்கள் : 1960

1960 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்த இரு பொதுத் தேர்தல்கள் இடம்பெற்றன. முதலாவது பொதுத் தேர்தல் அந்த ஆண்டின் மார்ச் மாதத்திலும், இரண்டாவது பொதுத் தேர்தல் அந்த ஆண்டின் ஜூலை மாதத்திலும் நிகழ்ந்தன.

பிரதமராகப் பதவி வகித்த S. W. R. D. பண்டாரநாயக்கவின் கொலைக்குப் பின்னரான காலம் அது! நாடு பாரிய குழப்பத்தில் இருந்தது. பண்டாரநாயக்கவால் 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மஹாஜன எக்சத் பெரமுன கூட்டணி, அவருடைய மறைவின் பின்னர் பிளவடைந்தது. அந்தக் கூட்டணியின் பிரதான கட்சியான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன், பிற கூட்டணிக் கட்சிகளான கம்யூனிசக் கட்சிகள் கருத்து முரண்பாடு கொண்டன. வயல் காணிகளைக் கையாளும் விடயத்திலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

S. W. R. D. பண்டாரநாயக்க அவர்களின்
இறுதிக்கிரியையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் 
படஉதவி : dbsjeyaraj.com

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இன்னுமொரு ஆபத்தும் அப்போது ஏற்பட்டிருந்தது. அதன் ஸ்தாபகரான S. W. R. D. பண்டாரநாயக்க இல்லாத நிலையில், அந்தக் கட்சி உள்ளகப் பிரச்சினைகளை எதிர்கொண்டது. அந்தக் கட்சிக்குள் அனைவரையும் அரவணைத்துச் செல்பவராக S. W. R. D. பண்டாரநாயக்க இருந்தார். எனினும் அவருடைய மறைவின் காரணமாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீகாமன் இல்லாத நாவாய் ஆக மாறிப் போனது.

இந்த நிலையிலேயே, 1960 ஆம் ஆண்டின் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது. ஆட்சி அதிகாரத்தை S. W. R. D. பண்டாரநாயக்கவிடம் தாரை வார்த்துவிட்டு, மீண்டு எப்படிக் கைப்பற்றுவது என்று காத்துக் கிடந்த ஐக்கிய தேசியக் கட்சி, தனிச்சிங்களச் சட்டத்தை அமுற்படுத்துவதாக பெரும்பான்மை மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. அதே வாக்குறுதியை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அளித்தது. அதேபோலவே, இந்திய வம்சாவளி மக்களை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவதாக, இரு பிரதான கட்சிகளுமே வாக்குறுதி அளித்திருந்தன.

தேர்தல் 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றது.

அந்தப் பொதுத்தேர்தலில், உண்மையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே வென்றிருக்க வேண்டும். ஏனென்றால், இலங்கையின் பெருந்தலைவராக கருதப்பட்ட S. W. R. D. பண்டாரநாயக்கவின் கொலை இலங்கை முழுவதும் பாரிய அதிர்வை ஏற்படுத்தியிருந்ததுடன், அனுதாப அலையையும் ஏற்படுத்தியிருந்தது. எனினும், அந்த அனுதாப அலையை அறுவடை செய்வதற்கு ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால் முடியாமல் போனது.

நாடளாவிய ரீதியில் 108 தொகுதிகளில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. அந்த 108 வேட்பாளர்களும் 647,175 வாக்குகளையே, அந்தக் கட்சிக்கு அருவடை செய்து அளித்திருந்தனர். அந்தப் பொதுத் தேர்தலில் செல்லுபடியான வாக்குகளில் இது வெறுமனே 21.28 சதவீதம் ஆகும். இந்த வாக்குவீதம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 46 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுத் தந்தது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. நாடளாவிய ரீதியில் 127 வேட்பாளர்களை அந்தக் கட்சி தேர்தலில் களமிறக்கிய போதும் 50 ஆசனங்களை மட்டுமே பெற முடிந்தமை, பின்னடைவாகப் பார்க்கப்பட்ட போதும், நாடாளுமன்றில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற பெருமையை ஐக்கிய தேசியக் கட்சியே பெற்றது. அந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு 909,043 கிடைத்தன. இது செல்லுபடியான வாக்குகளில் 29.89 சத வீதமாக இருந்தது.

படஉதவி – vanakkamlondon.com

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மட்டும் 19 வேட்பாளர்களை அந்தத் தேர்தலில் நிறுத்தி வாக்குக் கோரியிருந்த இலங்கை தமிழரசுக் கட்சி, 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றமை முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்பட்டது. அந்தத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 176,444 வாக்குகள் கிடைக்கப் பெற்றன. செல்லுபடியான மொத்த வாக்குகளில், இது 5.80 சத வீதமாக இருந்தது.

அக்கால இலங்கையில் இருந்த முக்கியமான மற்றுமொரு அரசியல் கட்சியான லங்கா சமசமாஜ கட்சி அந்தப் பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில், 101 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தது. எனினும் அந்தக் கட்சி வெறுமனே 10 நாடாளுமன்ற ஆசனங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. முழு இலங்கையிலுமாக அந்தக் கட்சிக்கு கிடைத்த 325,286 வாக்குகள், செல்லுபடியான மொத்த வாக்குகளின் 10.70 சதவீதமாக இருந்தன.

இந்த நிலையில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட வெறுமனே 4 நாடாளுமன்ற உறுப்பினர்களையே ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருந்தது. உறுதியற்ற நிலையில் இருந்த போதும், ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசாங்கத்தை அமைத்தது. அதன் பிரதமராக டட்லி சேனாநாயக்க மார்ச் மாதம் 21 ஆம் திகதி பதவியேற்றுக் கொண்டார். அவருடைய அரசாங்கம் மிகவும் பலவீனமாக இருந்தது. பெரும்பான்மைப் பலமற்ற அந்த அரசாங்கத்தால் நான்கு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதேவேளை, வேறு கட்சிகளாலும் அரசாங்கமொன்றை அமைக்க முடியாத நிலையே அப்போது காணப்பட்டது. இதன் காரணமாகவே மற்றுமொரு பொதுத் தேர்தல் நோக்கிச் சென்றேயாக வேண்டிய நிலையை இலங்கை எதிர்கொண்டது.

டட்லி சேனநாயக்க 
படஉதவி –  dailynews.lk

1960 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற இந்தத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மகத்தான வெற்றி கிட்டியது. தமது கணவரின் அரசியற் பணியை தாம் முன் கொண்டு செல்வதாக உறுதியளித்து, களத்தில் குதித்திருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, மக்களின் அனுதாபத்தை வாக்குகளாக அறுவடை செய்து குவித்தார். தனிச்சிங்கள சட்டத்தை முன்னிறுத்தியதும் இந்திய வம்சாவளித் தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு உறுதியளித்ததும் ஸ்ரீமாவின் வெற்றிக்குத் துணை செய்தன. இதன்காரணமாக, அந்தப் பொதுத்தேர்தலின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றது.

நாடளாவிய ரீதியில் 98 வேட்பாளர்களை மாத்திரம் களமிறக்கி, 75 நாடாளுமன்ற ஆசனங்களைத் தன் வசமாக்கியது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. ஆனால், 128 வேட்பாளர்களைக் களமிறக்கிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெறுமனே 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கிடைத்தனர்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசியல் பிரச்சாரம்
படஉதவி –  pinterest.com

என்றுமில்லாதவகையில் அந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒட்டுமொத்தமாக, 1,022,171 வாக்குகளைப் பெற்றதுடன், அவை செல்லுபடியான மொத்த வாக்குகளின் 33.22 சதவீதமாக இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் பெற்ற 1,144,166 வாக்குகள், செல்லுபடியான மொத்த வாக்குகளின் 37.19 சத வீதமாக இருந்தன. இந்த நிலையில், ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெற்றுக்கொண்ட வாக்கு எண்ணிக்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலையில் நின்றாலும் கூட, இது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகையால், அந்த அந்தத் தொகுதிகளின் வாக்கு முன்னிலையே, வெற்றிகளைத் தீர்மானித்தது.

தமிழ்மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 213,733 வாக்குகளைப் பெற்று 16 நாடாளுமன்ற ஆசனங்களை வென்றெடுத்தது. அதேவேளை லங்கா சம சமாஜ கட்சி 224,995 வாக்குகளைப் பெற்று 12 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இந்தத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 46,804 வாக்குகளைப் பெற்று ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை சுவீகரித்திருந்தமையை குறிப்பிட்டாக வேண்டும்.

இலங்கையின் முதல் பெண் பிரதமரான
சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள்
படஉதவி – kariatide.es

இதனையடுத்தே, உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அந்தத் தேர்தலில் அவர் போட்டியிடாத போதும், நாடாளுமன்றின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற காரணத்தினால், அவர் பிரதமராக பதவியேற்பதற்கு சட்டம் இடமளித்தது, எனினும் அடுத்த 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக தெரிவாக வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருந்தது.

இதனையடுத்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிடும் வகையில், மனமெல்டுற பியதாஸ டி சொய்ஸா (Manameldura Piyadasa de Zoysa) தனது நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து அந்த வெற்றிடத்துக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவருடைய ஆட்சி வெற்றிகரமாக இடம்பெற்றதை வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.

Related Articles

Exit mobile version