பாடலிபுத்திரம் என்ற பெயரை வரலாற்றுப்பாடத்தில் வாசித்திருக்கிறோம். இன்றைய பீகாரின் தலைநகரமான பாட்னாதான் அது என்றும் தெரிந்துகொண்டிருக்கிறோம்.
இந்தப் பாடலிபுத்திரத்தை நிறுவியவர் அஜாதசத்துரு; இவர் பிம்பிசாரர் என்ற மகதப் பேரரசருடைய மகன்.
அப்போது மகதப் பேரரசின் தலைநகரமாக ராஜகிரகம் என்ற ஊர் இருந்தது. இதுவும் இன்றைய பீகார் மாநிலத்தில்தான் உள்ளது; ‘ராஜ்கிர்’ என்று இப்போது அழைக்கப்படுகிறது; பாட்னாவிலிருந்து சுமார் 100கிமீ தொலைவில் உள்ளது.
பாடலிபுத்திரம் கோட்டை
பிம்பிசாரருடைய மகன் அஜாதசத்துரு மகதப் பேரரசின் எதிரிகளைச் சிறப்பாகக் கண்காணிக்க விரும்பியதாகவும், அதற்காகப் பாடலிபுத்திரம் என்ற நகரை இந்தியாவின் மையத்தில் உருவாக்கியதாகவும் தமிழண்ணல் எழுதுகிறார். கங்கை ஆற்றின் கரையிலிருந்த பாடலி என்ற கிராமத்தில் அஜாதசத்துரு கட்டிய கோட்டைக்குதான் ‘பாடலிபுத்திரம்’ என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும், பின்னர் அது ஒரு நகரமாக வளர்ந்ததாகவும் எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
பெயர்காரணம்
பாடலிபுத்திரம் என்ற பெயருக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன; அவ்வூரைச்சுற்றிப் பாடல மலர்கள் அதிகம் இருந்ததால் அந்தப் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்; ‘பாடலி’ என்ற பெண்ணின் மகனைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்; ‘பாடலிபுரம்’ என்பதுதான் பாடலிபுத்திரம் என மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
மகதப் பேரரசில் பாடலிபுத்திரம் மிகச்சிறப்பாக வளர்ந்தது; நன்கு திட்டமிடப்பட்ட நகரம் அது, மிகச்சிறந்த கலைஞர்கள் அதை உருவாக்கினார்கள், சிறந்த நிர்வாகக்குழுவினர் அதனைக் கவனித்துக்கொண்டார்கள். பின்னர் வந்த நந்தர்கள், மௌரியர்களும் பாடலிபுத்திரத்தையே தங்கள் தலைநகரமாகக் கொண்டு ஆண்டார்கள்.
இந்தக் காலகட்டத்தில் பாடலிபுத்திரத்தின் புகழ் எங்கும் பரவியது; அங்கிருந்து தொலைதூரத்திலிருக்கும் நம் தமிழகத்தில்கூட பாடலிபுத்திரத்தின் பெயரும் வளமும் அறியப்பட்டிருந்ததற்கு இலக்கியச்சான்றுகள் உள்ளன.
இலக்கியங்களில் பாடலிப்புத்திரம்
தலைவனைப் பிரிந்து தலைவி வாடுகிறாள்; அவன் எப்போது வருவான் என்று ஏங்குகிறாள்.
தலைவி வருந்துவதைப் பார்த்ததும் தோழிக்கும் வருத்தம்; ஆனால் என்ன செய்வது? அவன் திரும்பிவரும்வரை காத்திருக்கத்தானே வேண்டும்!
இந்த நேரத்தில் பாணன் வருகிறான், ‘பெண்ணே, உன் தலைவன் விரைவில் வந்துவிடுவான்’ என்று சொல்கிறான்.
அதைக்கேட்டதும் காதலியின் முகம் மலர்கிறது; தோழியும் மகிழ்கிறாள்.
ஆனாலும், அவளுக்குள் ஓர் ஐயம், ‘இந்தப் பாணனுக்குத் தலைவன் வரப்போகும் விஷயம் எப்படித் தெரியும்? இவனே தலைவனைச் சந்தித்துப் பேசினானா? அல்லது, சந்தித்த யாரிடமாவது விசாரித்து அறிந்தானா? ஆம் எனில், யாரை விசாரித்தான்? அந்த நபருடைய பேச்சை நம்பலாமா?’
இந்தக் கேள்விகளையெல்லாம் அவள் பாணனிடமே நேரடியாகக் கேட்டுவிடுகிறாள், ‘உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியவந்தது, சொல்!’
ஐயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்கிற அதே நேரத்தில், அவளுக்குள் மகிழ்ச்சியும் பொங்குகிறது, தலைவிக்கு நற்செய்தி சொன்ன பாணனை வாழ்த்துகிறாள், ‘நீ சொன்னது உண்மையாக இருந்தால், உனக்கு எல்லா நலமும் கிடைக்கட்டும், நீ மிகுந்த செல்வத்தோடு வாழ்க!’
மிகுந்த செல்வம் என்றால், எப்படிப்பட்ட செல்வம்?
வெள்ளைத் தந்தங்களையுடைய யானைகள் சோணையாற்றில் படிந்து விளையாடுகிற, பொன்வளம் நிறைந்த பாடலிபுத்திர நகரம் உனக்குக் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறாள் தோழி. இதன் பொருள், அன்றைக்குப் பாடலிபுத்திரம் செல்வமயமாக இருந்தது, அதைச் சொல்லி வாழ்த்தும் அளவுக்குச் செழித்திருந்தது.
‘பொன்மலி பாடலி பெறீஇயர்’ என்று தோழி வாழ்த்துகிற இந்தப் பாடல் குறுந்தொகையில் உள்ளது; எழுதியவர் படுமரத்து மோசிகீரனார்.
‘சோணை’ என்பது பாடலிபுத்திரத்துக்கு அருகில் ஓடிய ஓர் ஆறு; பொன்வளத்தைக் குறிக்கும் ’சொர்ணமுகி’ என்ற ஆற்றின் பெயர்தான் தமிழில் சோணை என எழுதப்படுவதாகச் சொல்கிறார்கள்.
கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதையிலும் பாடலிபுத்திரத்தைப்பற்றிய ஒரு குறிப்பு வருகிறது: ‘பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்…’
இதன் பொருள், பாடலிபுத்திரத்தில் பசும்பொன்னைக்கொண்டு அழகிய நகைகளைச் செய்யக்கூடிய வினைஞர்கள் இருந்திருக்கிறார்கள். பொன் நிறைந்த பாடலிபுத்திரம் என்று குறுந்தொகை சொல்வதையும் இதையும் ஒப்பிட்டுக்காணலாம்: தங்கம் அதிகமுள்ள இடத்தில்தானே தங்கத்தைக்கொண்டு சிறப்பான கலைப்பொருள்களை உருவாக்கக்கூடியவர்களும் இருப்பார்கள்!
அகநானூற்றில் மாமூலனார் எழுதிய பாடலொன்றிலும் பாடலிபுத்திரம் வருகிறது; அது ஒரு சுவையான கதையைச் சொல்கிறது:
‘பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம்…’
தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான். அதனால் தலைவி வருந்துகிறாள், ‘அவர் தேட விரும்பிய பொருட்செல்வம் மிகப்பெரியதோ?’ என்று ஏங்குகிறாள். ‘ஒருவேளை, பாடலிபுத்திரத்தில் கங்கைக்கரையில் நந்தர்கள் ஒளித்துவைத்திருந்த பெருஞ்செல்வமோ அது?’
இந்த வரிகளின் பொருள்: மிகுந்த புகழ்பெற்ற, பல போர்களில் வென்ற நந்தர்களிடம் மிகுந்த செல்வம் இருந்தது; அதைப் பகைவர்கள் கைப்பற்றிவிடுவார்களோ என்று அஞ்சினார்கள்; அந்தச் செல்வத்தையெல்லாம் ஒரு பேழையில் போட்டு ஆற்றங்கரையில் ஒளித்துவைத்திருந்தார்கள்.
இது வரலாற்றுக்குறிப்பா, அல்லது செவிவழி நம்பிக்கையா என்பது தெரியவில்லை; ஆனால், பாடலிபுத்திரத்தில் நடந்ததாக நம்பப்படும் இந்த விஷயம் இங்கு தமிழகம்வரை பரவியிருப்பது தெரியவருகிறது.
இலக்கியம் கூறும் வரலாறு
மாமூலனாரின் பாடல்களில் இப்படிப் பல வரலாற்றுச்செய்திகள் இருப்பதால், அவரை ‘வரலாற்றுப்புலவர்’ என்றே அழைக்கிறார்கள். இவருடைய இன்னோர் அகநானூற்றுப் பாடலில் மௌரியர்கள்கூடக் குறிப்பிடப்படுகிறார்கள். இதே பாடலில் நந்தர்களின் செல்வத்தைப்பற்றிய இன்னொரு குறிப்பையும் எழுதியிருக்கிறார் மாமூலனார்.
இங்கும் ஒரு தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான். அவனுடைய பிரிவால் வருந்திய தலைவிக்குத் தோழி ஆறுதல் சொல்கிறாள், ‘நீ கவலைப்படாதே தோழி, அவன் விரைவில் வந்துவிடுவான்’ என்கிறாள்.
‘எப்படிச் சொல்கிறாய்?’
‘அவனைப் பிரிந்து நீ அனுபவிக்கும் துன்பத்தைப்பற்றி அவன் கேட்டால் போதும், உடனே வந்துவிடுவான்.’
‘ஆனால், அவர் பணம் சேர்க்கச் சென்றிருக்கிறாரே, எனக்காகத் திரும்பி வருவாரா?’
‘உன்னைவிட அவருக்குப் பணமா பெரியது? அந்த நந்தர்களுடைய செல்வமே கிடைத்தாலும் அவன் அங்கு தங்கமாட்டான், வந்துவிடுவான்!’
‘நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்
தங்கலர்…’
பாடலிபுத்திரத்தைச் சுற்றியிருந்
பெரியபுராணத்திலும் பாடலிபுத்திரம் வருகிறது: மருள்நீக்கியார் என்ற இயற்பெயருடன் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்துக்கு மாறியதைக் குறிப்பிடும் பாடல் இப்படித் தொடங்குகிறது: ‘பாடலிபுத்திரம் என்னும் பதி அணைந்து சமண்பள்ளிமாடு அணைந்தார்.’
அதாவது, மருள்நீக்கியார் பாடலிபுத்திரத்துக்குச் சென்றார், அங்குள்ள சமணர் பள்ளியைச் சென்றடைந்தார்.
தமிழகத்தில் பிறந்த மருள்நீக்கியார் பீகார்வரை சென்று சமணரானாரா என்று குழம்பவேண்டாம்; இது வேறு பாடலிபுத்திரம்.
ஆம், அன்றைய இந்தியாவில் இரண்டு பாடலிபுத்திரங்கள் இருந்திருக்கின்றன; அவற்றில் ஒன்றுதான் இன்றைய பீகாரிலுள்ள பாட்னா; இன்னொன்று, தமிழகத்திலுள்ளது. அதன் இப்போதைய பெயர் ‘திருப்பாதிரிப்புலியூர்’.
கங்கைக்கரையிலிருந்த பாடலிபுத்திரத்தைப்போலவே, இங்கு கெடிலநதிக்கரையிலிருந்த பாடலிபுத்திரமும் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிடுகிறார் ரா. பி. சேதுப்பிள்ளை. இரு பாடலிபுத்திரங்களும் கலைக்களஞ்சியங்களாகத் திகழ்ந்ததாகச் சொல்கிறார்.
அங்கிருந்த பாடலிபுத்திரத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது; அதுபோல, இங்கிருந்த பாடலிபுத்திரத்தில் (திருப்பாதிரிப்புலியூரில்) சமணர் மடங்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார் சு. இராசு. அங்கிருந்த திகம்பர ஜைன மடம் புகழ்பெற்றுத் திகழ்ந்ததாகச் சொல்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.
வடக்கில் பாடலிபுத்திரம் நகரம் சிறந்துவிளங்கியதால், தமிழகத்திலும் அப்பெயரில் ஒரு நகரம் அமைக்கப்பட்டதாகச் சிவக்கவிமணியார் குறிப்பிடுகிறார். இங்கும் பாடல மலர்கள் அதிகம் இருந்ததால் அப்பெயர் அமைந்திருக்கலாம்.
அதனால்தான், சமணராக மாறிய மருள்நீக்கியார் இந்தத் தென்னாட்டுப் பாடலிபுத்திரத்துக்குச் சென்றிருக்கிறார். இந்நகரைப்பற்றி இன்னும் பல குறிப்புகள் பெரியபுராணத்தில் உள்ளன.
‘தொன்மையிற் பாடலிபுத்திர நகர்’ என்று சேக்கிழார் ஓரிடத்தில் குறிக்கிறார். இதன் பொருள், திருநாவுக்கரசருக்குமுன்பே இந்நகரம் புகழோடு இருந்திருக்கிறது.
பாடலிபுத்திரத்தின் ஜைன மடத்தில் சிம்மசூரி என்ற ஜைனப்பெரியார் இருந்ததாகவும், அவர் இங்கிருந்தபடி சிம்மவர்மன் என்ற அரசனுடைய நூலை மொழிபெயர்த்ததாகவும் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதுகிறார். இந்த ஜைன மடத்துக்குதான் பின்னர் மருள்நீக்கியார் தலைவராகிறார். அப்போது அவருடைய பெயர் ‘தருமசேனர்.’
பின்னர், மருள்நீக்கியார் சைவசமயத்துக்குத் திரும்புகிறார்; ‘திருநாவுக்கரசர்’ என்ற பெயர் பெறுகிறார்; சிவபெருமானைப்போற்றிப் பாடத்தொடங்குகிறார். இதனால் வெகுண்ட சமணர்கள் அரசன் துணையோடு அவருக்குத் தீங்கு செய்கிறார்கள்; அவர் அனைத்தையும் இறைவர் அருளால் வெல்கிறார்.
சமணர்களுக்குத் துணையாக நின்ற அரசன் மனம் மாறுகிறான்; அவரிடம் மன்னிப்புக் கேட்கிறான்; பாடலிபுத்திரத்திலிருந்த சமணர் பள்ளிகளை இடிக்கிறான். அவற்றைக்கொண்டு திருவதிகையில் ‘குணபரவீச்சரம்’ என்ற திருக்கோயிலைக் கட்டுகிறான்.
இன்றைக்குத் திருப்பாதிரிப்புலியூர் ஒரு புகழ்பெற்ற சிவத்தலமாகத் திகழ்கிறது. அங்குள்ள சிவபெருமானுக்குப் ‘பாடலீஸ்வரர்’ என்று பெயர். பாடலம்/பாதிரி ஆகிய இரு பெயர்களும் ஒரே மலரைக் குறிப்பவைதான்.
திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பாடியிருக்கிறார்கள். கடலூருக்கு மிக அருகிலுள்ள இந்தத் தலத்தில் வழிபடுவதற்காகச் சிவ அன்பர்கள் நாள்தோறும் வருகிறார்கள்.
‘பாட்னா’ எனப்படும் பாடலிபுத்திரமும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்தான். ‘தொடங்கிய நாள்முதலாகத் தலைநகரமாக இருக்கும் ஊர்’ என்று அங்குள்ள மக்கள் பெருமையோடு சொல்கிறார்கள். வரலாறுநெடுக இந்த ஊருக்குக் குசுமபுரம், புஷ்பபுரம், அஜீமாபாத் என்று பல பெயர்கள் இருந்திருக்கின்றன. இங்கு நிகழ்த்தப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சிகளில் பல அரிய வரலாற்றுத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
வடநாட்டுப் பாடலிபுத்திரத்துக்கும் தென்னாட்டுப் பாடலிபுத்திரத்துக்குமிடையே இரண்டாயிரம் கிலோமீட்டர்களுக்குமேல் இடைவெளி. ஆனாலும், கலைவளம், வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றில் இவ்விரு நகரங்களும் ஒத்துள்ளன. தமிழ்ப்புலவர்களும் இவற்றை அரிய குறிப்புகளுடன் பதிவுசெய்திருக்கிறார்கள்.
Web Title: Padaliputhiram Place Where North & South Intersects
Featured Image Credit: bihartales