தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் வரலாற்றை மூவேந்தர்களோடு மட்டுமே நாம் நிறுத்திகொள்கிறோம் , ஆனால் அவர்களுக்கு இணையான பேரரசுகளைப் பற்றிய எந்த தகவலும் நமது காதுகளுக்கு எட்டுவதில்லை , அவர்களின் ஆட்சி, கட்டிடகலை, இலக்கியம் என்று அத்தனையும் நமது மரபு சார்ந்தவையே ! ஆனால் இன்னும் சில காலத்தில் அவர்கள் தமிழர்களே அல்ல என்றும் புனையப்படலாம் .எனவேதான் அப்படிப்பட்ட பல்லவ அரசர்களை பற்றிய பதிவுதான் இது, இனி பல்லவர் காலம் நோக்கி பயணிக்கலாம்.
பல்லவ சாம்ராஜ்யம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கி ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை 700 ஆண்டுகள் நீடித்தது. மூன்று மரபுகளாக பிரித்தால் முற்கால பல்லவர்கள், இடைகால பல்லவர்கள், மற்றும் பிற்கால பல்லவர்கள் எனலாம். முற்கால பல்லவர்களின் சமகால ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள், பனவாசியின் கடம்பர்கள், மைசூர் கங்கர்கள், வேங்கி நாட்டின் சாளுக்யர்கள், இந்திரபுரத்தின் விஷ்ணு குந்தியர்கள் மற்றும் தமிழ்நாட்டின் களப்பிரர்கள்.
ஆந்திராவின் இராட்டிரகூடர்களை வென்று சிம்மாசனத்தில் அமர்ந்த முதல் பல்லவ மன்னரின் பெயர் சிம்மவர்மன் (கி.பி. 2 80 முதல் கி.பி. 335 வரை), ஆந்திரக் கடலோர பகுதிகளை ஆண்டு வந்தார். பின்பு வந்த சிவகந்தவர்மன் என்ற பல்லவ மன்னன், கிருஷ்ணா நதி முதல் தென் பெண்ணார் வரை, கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டங்கள் முடிய மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். பல்வேறு வேத காரியங்களில் ஈடுபட்டு தர்ம மகாராஜா என்றழைக்கபட்டார். அடுத்து வந்த விஷ்ணு கோபர் என்கிற அரசனின் ஆட்சி காலத்தில் சமுத்திரகுப்தர் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதன் மூலம் பல்லவ அரசு பலவீனமடைந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி நான்காம் நூற்றாண்டின் மத்தியில் திரிலோச்சன பல்லவரின் ஆட்சி (கி.பி. 35௦ முதல் 360 வரை) காலத்தில் கரிகால சோழ மன்னன் படையெடுத்து வெற்றி கண்டார். முந்தைய பல்லவர்களில் இறுதி மன்னர் முதலாம் நந்தி வர்மன். இவர் களபிரர்களின் போரில் வீழ்ச்சியடைந்தார். இதன் மூலம் பல்லவர்கள் அரசியல் முக்கியதுவத்தை இழந்தனர்.
களபிரர்கள் கன்னட நாட்டை சேர்ந்தவர்களாகவும், அவர்கள் தமிழ் மன்னர்களோடு சேர்ந்து ஆட்சி புரிந்தவகர்ளாகவும் தெரிய வருகிறது. அவர்கள் காலத்தை தமிழகத்தின் இருண்ட காலமாகவே இன்று வரை வரலாறு கருதுகிறது. அந்த காலத்தில் சைவ, வைதீக மரபுகளுக்கு எதிரான மரபான சமண மரபை ஆதரித்து வந்ததால் அவ்வாறு கருதப்பட்டிருக்கலாம். களப்பிரர்கள் ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் தென்னிந்தியாவை ஆட்சி செய்துள்ளனர்.
பல்லவர்கள் மீண்டும் பிற்கால பல்லவரான சிம்ம விஷ்ணு ஆட்சி காலத்தில் முக்கியதுவம் பெற்றனர். ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் உள் நுழைந்தாலும் அவர்களின் தோற்றத்தை பற்றிய கூறுகள் விவாதத்திற்கு உரியதாக கருதப்படுகிறது. பி.எல். ரைஸ் என்கின்ற வரலாற்றாசிரியர் கூற்றுப்படி பல்லவர்கள் என்பது பண்டைய வரலாற்றின் பகலவர்கள் அல்லது பார்த்தீனியர்கள் என்கிறார். ஒரு சில வரலாற்றாளர்கள் சோழர்கள் மற்றும் ஜாப்னா’வை ஆண்டு வந்த நாகா ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு பிறகு அதிலிருந்து பிரிந்து வந்தவர்களாக இவர்கள் கருதப்பட்டனர். ஜெய்ஸ்வால் என்கின்ற வரலாற்றாசிரியர் கூறும்பொழுது மகாராஸ்டிராவை ஆண்ட வாகாடகர்களின் குலமரபில் இருந்து பல்லவர்கள் பிரிந்து வந்திருக்கலாம் என்கிறார். இருவரது கோத்திரமும் ஒன்றாக உள்ளதாக தெரிகிறது. எஸ்.கே. ஐயங்கார் என்பவர் இதை ஓரளவு தெளிவு படுத்துகிறார். தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சியையும், வடக்கே சாதவாகனர்களின் ஆட்சியையும் நடந்துள்ளது. பல்லவர்கள் குடும்பம் சாதவாகனர்களின் பிராந்தியத்தில் கப்பம் செலுத்தி சிற்றரசர்களாக இருந்துள்ளனர். சாதவாகனர்களின் வீழ்ச்சிக்கு பிறகு தென் பகுதி முழுவதையும் பல்லவர்கள் பொறுப்பேற்று கொண்டனர். ஏனென்றால் முற்கால பல்லவர்கள், மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டில் சிம்ம விஷ்ணு அரியணை ஏறும் வரை உள்ள கல்வெட்டுகள் ஆந்திரா பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த வரலாற்று சாட்சிகளின் மூலம் பல்லவர்கள் ஆந்திராவை ஆண்டு வந்து அவர்கள் பிராந்தியத்தை தொண்டைமண்டலம் வரை நீட்டித்துள்ளனர். காஞ்சியை அவர்களின் தலைநகராக முடிவு செய்து காஞ்சியின் பல்லவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பிற்கால பல்லவர் வரிசையில் சிம்மவிஷ்ணு (கி.பி. 555-590) முதலாம் மன்னராக அரியணை ஏறுகிறார். களப்பிரர்களை வீழ்த்தி மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்ந்து பல்லவ பேரரசு அமைய காரணமாக இருந்தவர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்று கிருஷ்ணா முதல் காவேரி ஆறு வரை உள்ள பிரதேசங்களை தன்னகத்தே கொண்டார். அவருக்கு ‘அவனிசிம்மா’, (பூமியின் சிங்கம்) என்று பொருள்படும்படியான ஒரு பட்டத்தோடு அழைக்கப்படிருக்கிறார். தொண்டை மண்டலம் வரை ஆண்டு வந்த சிம்மவிஷ்ணு பற்றிய நேரடியான குறிப்புகள் கிடைக்காத பொழுதும் அவரின் மகன் மகேந்திர வர்மன் எழுதிய குறிப்புகள் கிடைக்க பெற்றுள்ளன. சிம்மவிஷ்ணு காலத்திற்கு பிறகு மகேந்திரவர்மனுக்கு முடி சூட்டப்பட்டது. பாரவி என்ற புகழ்பெற்ற புலவர் சிம்மவிஷ்ணு’வின் அரசவையில் இடம்பெற்றுள்ளார்.
சிம்மவிஷ்ணு’வின் காலத்திற்கு பிறகு அவருடைய மகன் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 59௦ – 63௦) முடிசூட்டபட்டார். மகேந்திர வர்மன் பல்துறை மேதையாகபோற்றப்பட்டார். அவர் சிறந்த இராணுவ வீரனாக, ஆளுமை திறன் கொண்டவராக மட்டுமல்லாது, மத சீர்திருத்தவாதியாகவும், கட்டிடக்கலை, இசை மற்றும் இலக்கிய அறிவுமிக்கவராகவும் இருந்துள்ளார். மகேந்திர வர்மனுக்கு மட்டவிலாசா, சித்திரகாரப்புலி, விசித்திரசித்தா, குனபத்திரா, மற்றும் லலிதங்குரா என்று பல்வேறு சிறப்பு பட்டங்கள் அடையப்பெற்றார்.
பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர்களுக்கு இடையிலான நீண்ட காலப்போர் இவருடைய ஆட்சி காலத்திலேயே தொடங்கியது. இரண்டாம் புலிகேசி காஞ்சியின் அருகே ஊடுருவ மிகப்பெரிய போர் நடந்தது. அந்த போரில் மகேந்திய வர்ணமன் தோல்வியுற்றார். இறுதியில் இரு ராஜ்யங்களுக்கும் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதன் காரணமாக வடக்கு பிரதேசங்களின் பெரும்பகுதி புலிகேசி மன்னனுக்கு சொந்தமானது. இங்கு தொடங்கிய பிரச்சனை இரு நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
ஜைன மதத்தை பின்பற்றி வந்த மகேந்திர வர்மன் அப்பர் பெருமானால் சைவ மதத்தை பின்பற்ற தொடங்கினார். அவர் ஜைன மதத்தை பற்றி சமஸ்கிருத மொழியில் மட்டவிலாச பிரஹசனம் எனும் நாடகத்தை இயற்றியுள்ளார். குடைவரைக்கோயில் என்று அழைக்கப்படும் குகை கோயில்களை நிறுவுவதில் மகேந்திர வர்மன் சிறந்து விளங்கினார். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு குடைவரை கோயில், தளவானூர் சத்ருமல்லேசுவரர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள ஜைன மதத்தினர் இன்றும் வழிப்படுகின்றனர். இவருடைய காலத்தில் சமணர் மரபில் மூலிகை வர்ணங்களை கொண்டு தீட்டப்பட்ட சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றவளவும் இவர் பெயர் சொல்லிக்கொண்டு உள்ளது. சித்திரகாரப்புலி என்கிற பெயர் வர இவை காரணமாக இருந்திருக்கலாம்.
இவருக்கு பின் அரியணைக்கு வந்தார் முதலாம் நரசிம்ம வர்மன் (கி.பி. 630 – 668) பல்லவர்கள் ராஜ்ஜியத்தின் அதிகார பலமும் மதிப்பும் வானுயர காரணமாக இருந்தவர் இவர். மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியதால் மாமல்லர் எனும் புனைப்பெயரை பெற்றவரும் இவரே. இவருடைய தந்தையின் காலத்தில் தொடங்கிய சாளுக்யர்களுடனான யுத்தம் மீண்டும் தொடங்கியது. தந்தையின் இறப்புக்கு காரணமாக இருந்த இரண்டாம் புலிகேசியை பலி தீர்க்க பெரும்படையை திரட்டி வாதாபியில் ஊடுருவி மூன்று முறை போரிட்டு இறுதியில் புலிகேசியை கொன்றார். இதன் மூலம் வாதாபிகொண்டான் என்கிற பட்டம் பெற்றார். சாளுக்யர்களின் தலை நகரான வாதாபியை கைப்பற்றியது மூலம் அந்த கலங்கம் நீங்கியது.
இலங்கையை சேர்ந்த மானவர்மனுக்கு அரியணையை கைப்பற்ற இரண்டு முறை தன்னுடைய கடல்படையை அனுப்பி வைத்துள்ளார். இரண்டாம் முறை பல்லவ படை வெற்றி கண்டு மானவர்மன் அரியணை ஏறினான். இந்த கடல் படை மாமல்லபுரத்தில் இருந்து சென்றிருப்பதால் அப்பொழுது மாமல்லபுரம் துறைமுகமாகவும் விளங்கியுள்ளது. இவருடைய ஆட்சி காலத்தில் காஞ்சிக்கு வந்த சீனாவின் பயண எழுத்தாளர் ஹூவாங் சுவாங் குறிப்புகளின் படி காஞ்சி மாநகரம் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தும் கல்வி சாலைகள் கொண்ட நகராமாக விளங்கியது. மகேந்திர வர்மனின் தந்தை வழி வந்த கட்டிடக்கலை நிபுணத்துவம் மாமல்லபுரத்தின் ஒற்றை கல் கோயில்களை நிறுவ உதவியது. ஒற்றை கல் சிற்பங்களால் மகாபாரதத்தை தொடர்பு படுத்தும் பஞ்ச பாண்டவ ரதங்கள் (ஐந்து ரதங்கள்) இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் மகேந்திர வர்மனால் (கி.பி. 66 8 -67௦) இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடிந்தது. அப்பொழுது நடந்த போரில் சாளுக்கிய மன்னர் முதலாம் விக்கிரமாதித்யரால் கொல்லபட்டார். இதன் மூலம் காஞ்சியை கைப்பற்றிய சாளுக்கியர்களின் கை மீண்டும் ஓங்கியிருந்தது. ஆனால் அதுவும் சிறிது காலமே.
வீரத்தின் விலை நிலமான பல்லவ மன்னர்கள் ஆந்திராவில் தொடங்கி , தமிழகத்தில் தற்போது காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் தொண்டைமண்டலம் முதல் புதுக்கோட்டை வரையில் ஆட்சி புரிந்தனர். அவர்களது ஆட்சி காலம் முழுவதும் போரும் சிக்கலும் நிறைந்திருந்தாலும் அவர்களின் கலை தாகம், படைப்பாற்றல் மற்றும் மக்களுக்கான பணிகளில் அவர்கள் உமியளவும் பிசகவில்லை.