இலங்கையின் இன்றைய தலைமுறையினர் பார்த்திடாத அன்றைய டிராம் கார்கள்

புதிய தலைமுறை பார்த்திராத ஒரு போக்குவரத்து சேவைதான் டிராம் கார்கள். விசித்திரமான வாகனமாக அறியப்படும் இந்த டிராம் கார்கள் தற்போது லண்டன், அவுஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இன்னும் பாவனையில் இருக்கின்றது. ஆனால் நமது நாட்டில் அது வழக்கொழிந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த டிராம் கார்கள் ஓடிய அந்தத் தடம் இன்னும் கொழும்பின் ஓரிரு இடங்களில் நாம் காணலாம். குறிப்பாக புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தியில் இந்த டிராம் கார்கள் ஓடிய அந்த தண்டவாளங்கள் இன்னும் காணக்கிடைக்கின்றது. பிரித்தானியர்களின் காலத்துவ நிர்வாகத்தில்தான் இந்த டிராம் கார்கள் இலங்கைக்கு வந்தன. அதாவது 1899ஆம் ஆம் ஆண்டுதான் முதன்முதலில் இலங்கையில் டிராம் கார்கள் ஓடத் தொடங்கின. முதலாவது பயணமானது கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலிலிருந்து தொட்டலங்கவரை சென்றுள்ளது. இது 1899ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி முதன்முதலாக இயக்கப்பட்டுள்ளது. கோட்டையிலிருந்து பொரள்ளை வரையான தூரத்திற்கு பொதுமக்களிடமிருந்து 5 சதங்கள்வரைதான் அறிவிட்டப்பட்டதாம்.

அந்தக் காலத்திலிருந்த ரிக்ஷாக்கள் என்று அழைக்கப்படும், மனிதர்கள் இழுக்கும் வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகளின் சத்தத்தோடு கொழும்பில் இந்த டிராம் வண்டிகளின் சத்தமும் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானதாகவே அமைந்திருந்தது. இந்த நினைவுகள் அந்தக் காலத்தில் டிராம் வண்டிகளில் பயணித்தவர்களுக்கு ஞாபகமிருக்கக்கூடும். புதிதாக ஒரு தொழிநுட்பம் அறிமுகமானால் அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எமக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் இந்த டிராம் வண்டிகளை ஒருசிலர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

1899ஆம் ஆண்டு முதன்முதலாக டிராம் கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பயணித்துக்கொண்டிருந்த டிராம் கார்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாம். அதுமட்டுமன்றி டிராம் கார்கள் ஓடும் அந்தத் தண்டவாளங்களின் மீது கற்களை வைத்து பல இடையூறகளை ஏற்படுத்தினராம். அதனால் ஒவ்வொரு டிராம் கார்களிலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் அமர்த்தப்பட்டார் என்று பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போதைய வீதிகளில்போல அந்தக் காலத்தில் பெரிதாக போக்குவரத்து நெரிசல் இல்லாததினால் டிராம் கார்களோடு ஏனைய போக்குவரத்து வண்டிகளும் இலகுவாகவே பயணம் செய்துள்ளது.

டிராம் கார்கள் பொதுவாக வீதியின் நடுவே குறுக்காகவே பயணிக்கும். நடுவீதியில் பயணிக்கும் டிராம் கார்களுக்கு முன்பாக ரிக்ஷாக்கள் மற்றும் கைவண்டி இழுக்கும் நபர்கள் தங்களது வண்டிகளை குறுக்காக போட்டுவிடுவார்களாம். இதனால் டிராம் கார் ஓட்டுனர் இவர்களை வசைப்பாடி விட்டுச் செல்வது அந்தக் காலத்தில் வழக்கமான ஒன்றாம். 1944ஆம் ஆண்டு இந்த டிராம் கார் சேவையை கொழும்பு மாநகரசபை தனக்குள் கொண்டு வந்தது. இந்த டிராம் கார் சேவையானது முன்பைப்போல சீரான சேவையை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர், சீனா, ஹொங்கொங் போன்ற நகரங்களில் இந்த டிராம்கார்கள் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. 1950களில் இலங்கையில் தனியார் பேருந்து நிறுவனங்கள் களத்தில் இறங்கின. அதனையடுத்து இந்த டிராம் கார் சேவைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ட்ரோலி பஸ் சேவையானது 1953ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் அதுவும் அகற்றப்பட்டு பெரு முதலாளிகளின் பஸ்கள் வீதிக்கு வந்தன.அத்தோடு ட்ராம்ப் கார்கள் கொழும்பிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுவிட்டது.

Related Articles

Exit mobile version