கடற்கொள்ளையர் வரலாறு என்பது கடல்வணிக வரலாற்றைப் போலவே பழையது. ஆனால் இந்தியப் பெருங்கடல் கொள்ளையர்கள் பற்றிய வரலாறு என்பது வேறு எங்கும் பரவியுள்ள வரலாற்றில் இருந்து வேறுபட்டது. ஏனென்றால் இந்தியப் பெருங்கடல் ஒரு “சுதந்திர கடல்”, வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்துக்கும், துறைமுக நடவடிக்கைகளுக்கும் போதிய வசதிகள் நிறைந்த பகுதிகளை உள்ளடக்கியது. மேலும் ஓரளவிற்கு கடல் வழிப் போர் நடவடிக்கைகள் குறைந்த பகுதி. மேலும் உலகின் மிகப் பழமையான கடல் வணிகம் நடந்த இந்தப் பகுதியில் பல கடற்கொள்ளையர்கள் உருவாகி இருந்தனர். பழந்தமிழ் இலக்கியங்கள் கூட இவர்களை ‘யவனர்கள்’ என்று குறிப்பிடுகிறது.
பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் இருவரும் நீண்டகாலமாக இந்தியப் பெருங்கடல் வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். மொரிசியஸ் தீவுகளில், மொரிசியஸ் மற்றும் ரீயூனியனில், மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் எண்ணற்ற தீவுகள் ஆகியவை கடற்கொள்ளையர்களின் கூடாரமாகவே அறியப்பட்டன. ஜார்ஜ் பூத், ஜான் ஹேஸ்லி போன்றோர் இந்திய பெருங்கடலில் 18 நூற்றாண்டின் தீவிரமான கடற்கொள்ளையர்களாக அறியப்பட்டனர்.
ஆப்பிரிக்க நாடு கரீபியன் மற்றும் ஐரோப்பாவிற்கும் இடையே தனது போக்குவரத்தை 18 ஆம் நூற்றாண்டில் உயர்த்தத் தொடங்கியது. இது முக்கோண அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் என அறியப்பட்டது. வர்த்தக கப்பல்கள் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்க கடலோரப் பகுதிக்கு வந்தன. வணிகர்கள் அடிமைகளை விற்கும் கரிபியன் நாட்டுக்குச் சென்று சர்க்கரை, புகையிலை மற்றும் கொக்கோ போன்ற பொருட்களுடன் ஐரோப்பாவுக்குத் திரும்புவார்கள். பாதுகாக்கப்படும் மீன்வளம் மற்றும் ரம் ஆகியவை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அங்கு சரக்குகளின் ஒரு பகுதியை உற்பத்தி பொருட்களுக்கு விற்பார்கள். அவை கரிபியன் நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. முக்கோண வர்த்தகத்தில் கப்பல்கள் ஒவ்வொன்றிலும் பணம் சம்பாதித்தனர்.
இவ்வாறு தொடர்ந்த கடல் வணிகத்தில் சர்வதேசக் கடல்சார் அமைப்பின் (IMO) தோற்றத்திற்குப் பிறகு கடல் வழி வணிகம் இந்தப் பாதையில் மேலும் அதிகரித்தது. இங்கேதான் தங்களைக் கடற்காவலர்கள் என்றழைத்துக்கொள்ளும் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் இன்று உலகையே அச்சுறுத்தி வருகின்றனர். சோமாலியா என்றதும் பசியும், பஞ்சமும், பட்டினிச்சாவுகளும்தான் யாருக்கும் ஞாபகம் வரும் இதுவரை. இப்போதோ கடற்கொள்ளையர்கள் எனும் சொல் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களையும், உலக நாடுகளையும் மிரட்டுகிறது. சூயஸ்கால்வாய் தோண்டப்படுவதற்கு முன்புவரை ஐரோப்பிய நாடுகள் இந்தியப்பெருங்கடல் நாடுகளுக்கு வருவதற்கு ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே வரவேண்டியதிருந்தது. சூயஸ்கால்வாய் தோண்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததும் செங்கடல் பகுதி கப்பல் போக்குவரத்து மிகுந்த பகுதியானது. ஐரோப்பாவில் இருந்து சூயஸ் கால்வாய் வழியாக வந்து வளைகுடா நாடுகளைத் தாண்டிசெல்லும் கப்பல்கள் எல்லாம் இவர்களது நாட்டையொற்றிய எடேன் வளைகுடாவை கடந்துதான் செல்லவேண்டும்.
இந்தப்பகுதியில் மிக நீண்ட கடல்கரையை கொண்ட நாடு சோமாலியா. மீன்பிடிப்பிலும் அதனைச்சார்ந்த தொழில்களிலும் சிறந்து விளங்கவேண்டிய அளவிற்கு புவியியல் அமைப்பைக்கொண்ட நாடு. ஆனால் உள்ளூர் மீனவர்கள் கூட மீன் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். காரணம் பன்னாட்டு மீன்பிடி கப்பல்கள் இயந்திரங்களுடனும் தேர்ந்த தொழில்நுட்பத்துடனும் இந்தப்பகுதியையே சல்லடை போட்டு அரித்துவிடுகின்றன. அந்தந்தப்பகுதியில் ஆதிக்கம் மிகுந்தவர்கள் தங்களின் பாதுகாப்புக்கென ஆயுதக்குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு, தங்களின் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியாக குழு மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியான இந்த சண்டையில் விவசாயமோ வேறு உற்பத்திகளோ இல்லாமல் போனது. நிலத்திலுள்ள கனிமங்களோ பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில். அமெரிக்காவும் தன் பங்குக்கு மக்கள் அல்காய்தாவை ஆதரிப்பதாக கூறி (சோமாலிய மக்கள் அனைவரும் இஸ்லாமியர்கள்) யுத்தக்குழுக்களுக்கு ஆயுதம் வழங்கியதுடன் எத்தியோப்பியாவையும் சோமாலிய மீது படையெடுக்கத் தூண்டியது. இவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்ட சோமாலிய மக்களில் ஒரு பகுதியினர் கடற்கொள்ளையர்களாக உருமாறினார்கள்.
சுனாமி பேரலைகளால் உலகமே ஸ்தம்பித்து போய் நிற்க அந்த அலைகள் தான் சோமாலியாவை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. அதாவது, அந்த அலைகள் சோமாலிய கடலில் கொட்டப்பட்டிருந்த விஷக்கழிவுகளை வெளிக்கொண்டு வந்தன. இந்த விஷக்கழிவுகள் பெரிய கண்டைனர்களிலும், பேரல்களிலும் ஒழுகிய நிலையில் இருந்தன. பெரிய அளவிலான அந்தக் கழிவுகளைக் கண்டு ஐ.நா சுற்றுசூழல் அமைப்பு அதிர்ச்சியில் உறைந்தது.
மிக நீண்ட காலங்களாகவே, அதாவது 1989 முதலே, ஐரோப்பிய நாட்டு தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சோமாலியா நாட்டு கடலில் கொட்டுகின்றன என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இப்போது சுனாமி அலைகள் தெள்ளத்தெளிவாக அந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்துவிட்டன . இதில் என்ன பெரிய கொடுமை என்றால், அந்த கழிவுகளில் அணுக்கழிவுகளும் இருந்ததுதான். நீண்ட காலங்களாக சோமாலியா கடற்கரை பகுதி மக்கள் அனுபவித்து வந்த உடல்நிலை கோளாறுகளுக்கும் விடை அளித்துவிட்டது சுனாமி. பின்னர் இது சம்பந்தமான உண்மைகள், ஆதாரங்கள் வெளிவந்தன. ஐ.நா சுற்றுசூழல் அமைப்பு இதற்கெல்லாம் காரணம் சில ஐரோப்பிய தொழிற்சாலைகள்தான் என்று வெளிப்படையாக கூறியது.
இப்படி ஒரு புறம் கழிவுகளாலும், மறுபுறம் சட்டவிரோத மீன்பிடி நிகழ்வுகளாலும் சின்னா பின்னமாகிப் போனார்கள் சோமாலியர்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்க்கு அங்கே நிலையான அரசாங்கமும் கிடையாது. இந்த சூழ்நிலை தான், சில சோமாலியர்களைக் கொள்ளையர்கள் ஆக்கியது.
சீரழிந்து போயிருக்கும் சோமாலிய கடற்பகுதியை மேம்படுத்துவதற்காகவும், மேற்கொண்டு கப்பல்கள் எந்த அசம்பாவிதத்தையும் செய்யாமல் காப்பதற்காகவும் தான் தாங்கள் கடல் காவலர்களாக அதாவது கொள்ளையர்களாக மாறிப்போனதாக்க் கூறுகிறார்கள்.
இன்றளவும் சர்வதேசக் கப்பல்களினால் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சென்ற வருடம் ஒரு ஸ்பெயின் நாட்டு கப்பலை இவர்கள் கடத்தி சென்றதாக செய்திகளில் பார்த்திருப்போம். அந்த கப்பலை இவர்கள் கடத்தியதற்கு இவர்கள் கூறிய காரணம், அந்த கப்பல் சோமாலிய கடற்பகுதியில் மீன்பிடித்தது என்பது தான். இதனால் தான் இவர்கள் தங்களை கடற்காவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.
சமீபத்தில் ஹைய்தி தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு தாங்கள் ஒரு பெரிய தொகையை தருவதாகவும், அந்த தொகை எப்படியாவது அம்மக்களுக்கு சென்று விடும் என்று அறிவித்ததும் தான் (இவுங்களும் ராபின் ஹூட் தான் போல..).
கடற்கொள்ளையால் ஆதாயமடைந்த நாடுகள்தான் இன்று சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒழித்துக்கட்ட முழுமூச்சுடன் கிளம்பியிருகிறது. காரணம் கடற்கொள்ளையை தடுப்பதற்காக அல்ல. ஒருசில பெருமுதலாளிகளுக்கு சொந்தமான கப்பல்களையும், அதிலுள்ள சரக்குகளுகளையும் பாதுகாப்பதற்குத்தான் அங்கே கப்பற்படை அனுப்பப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் கப்பற்படை, அடித்தட்டு மக்களை காப்பதற்கு பயன்படுத்தப்படாத கப்பற்படை முதலாளிகளின் சொத்தை பாதுகாப்பதற்கு அனுப்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் தினமும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.. அதை தடுப்பதற்கு வராத இந்திய போர்க்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து முதலாளிகளின் சொத்தை பாதுகாப்பதற்கு விரைந்து சென்று சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுகிறது. மேலும் கடத்தப்பட்ட கப்பல்களை விடுவிப்பதற்கு கொடுக்கப்படும் பெருந்தொகையையும் அந்த நிறுவனங்கள் விலையை உயர்த்துவதன் மூலம் ஒன்றுக்கு இரண்டு மடங்காக மக்களிடமிருந்து வசூலித்துக்கொள்ளும். பின் கடற்கொள்ளையர்கள் ஒடுக்கப்பட்டாலும் ஏறியவிலை ஏறியது தான் இறங்கப்போவதில்லை. எனவே இந்த கடற்கொள்ளையும் பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்குத்தான் பயன்படப்போகிறது. 2004 டிசம்பரில் ஏற்பட்ட ஓங்கலை(சுனாமி) ஒரு மிகப்பெரிய உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது. அதுதான் சோமாலிய கடற்கொள்ளைகளை வேட்டையாடக் கிளம்பியதின் பின்னாலும் மறைந்திருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை. பல ஆண்டுகளாக சோமாலியக் கடற்பரப்பில் கொட்டப்பட்டு வந்திருக்கும் நச்சுக்கழிவுகளைத்தான் ஓங்கலை வெளிச்சம் போட்டுக்காட்டியது. சோமாலியக் கடற்பரப்பில் கொட்டப்பட்டுவந்த நச்சுக்கழிவுகள் ஓங்கலையால் கடற்கரையில் குவிந்தன. காரீயம், காட்மியம் போன்ற கழிவுகளும், யுரேனியக் கதிவீச்சுக் கழிவுகளும் மற்றும் மருத்துவ, ரசாயனக்கழிவுகள் என பலவகை நச்சுக்கழிவுகளால் இன்னதென்று தெரியாத புதுப்புது வியாதிகளுக்கும், புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கும் ஆளாகி மாண்டு வருகின்றனர் மக்கள். பல்லாண்டு காலமாக ஏடன் குடாவில் கொட்டப்பட்டுவரும் நச்சுக்கழிவுகளை ஓங்கலை அம்பலப்படுத்தியபோதும் ஊடகங்களில் இந்த விசயம் கவனம் பெறவில்லை. பட்டினிச்சாவுகளின் முதுகுக்குப்பின்னே கொடிய கழிவுகளால் ஏற்பட்ட கோர மரணங்களும் புதைக்கப்பட்டன. இப்போது கப்பல்களுக்கு பெறும் பணையத்தொகை மூலம் சோமாலியக் கடற்கரையை சுத்தப்படுத்தப் போகிறோம் என கடற்கொள்ளையர்கள் அறிவித்திருப்பதால்தான் அது உலகின் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் இந்த அயோக்கியத்தனத்தை ஓங்கலை அம்பலபடுத்தியும் இதுபற்றி எதுவும் கூறாமல் ஊமையாய் இருந்த ஐநா சபை பின்னர் வேறுவழியில்லாமல் நச்சுக்கழிவுகள் கொட்டப்படுவதை ஒப்புக்கொண்டுள்ளது. இப்போதும் ஆட்கொல்லி நச்சுக்களை கொட்டி மக்களை கொன்ற ஏககாதிபத்திய தனியார் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் துணியாத ஐநா சபை கடற்கொள்ளையை ஒடுக்குவதற்கு அந்த ஏகாதிபத்திய நாடுகளிடமே போர்க்கப்பல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறது. 1992ல் உலக நாடுகளிடையே ஒரு உடன்பாடு கையெழுத்தானது. பேசல் என்று அழைக்கப்படும் அந்த உடன்பாடு தகுந்த பாதுகாப்பு ஏற்படுகள் இல்லாமல் உலகின் எந்தப்பகுதியிலும் நச்சுக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட யோக்கிய சிகாமணி நாடுகள்தான் யாருக்கும் தெரியாமல் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் நச்சுக்கழிவுகளை கடலில் கொட்டிக் கொண்டிருந்திருக்கின்றன. அதே யோக்கியசிகாமணி நாடுகள் தான் வெளிப்பட்டுவிட்ட தங்கள் அயோக்கியத்தனத்தை மறைப்பதற்கு கடற்கொள்ளையர்களை தண்டிக்கத் துடிக்கின்றன. மனித மரணத்திலும் லாபம் பெறத்துடிக்கும் இந்த கொலைகார நிறுவனங்களால்தான் தற்போது நச்சுக்கழிவு ஏற்றுமதி வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. இதற்காகத்தொடங்கப்பட்ட நிறுவனங்கள் பணக்கார நாடுகளிடமிருந்து கழிவுகளை இறக்குமதி செய்து ஏழை நாடுகளின் விவசாயிகளை விலைபேசி அவர்களின் விளைநிலங்களில் புதைத்து வருகின்றன. சோமாலியா மட்டுமில்லாமல் நைஜீரியா, கினியா, பிசாவ், ஜீபொடி, செனகல் போன்ற நாடுகளிலும் கொட்டப்படுகின்றன. இந்தியாவிலும் கூட காகித ஆலைக்கழிவுகள் என்ற பெயரில் இக்கழிவுகள் நிலங்களில் புதைக்கப்படுகின்றன. சமீபத்தில் சென்னையில் நடந்த கப்பல் விபத்தும் அதுபோல்தான்.
கதிர்வீச்சு வெளிப்படாமல் புதைப்பதற்கு ஒரு டன்னுக்கு ஆயிரம் டாலர் செலவு பிடிக்குமென்றால், ஏழை நாடுகளின் கடல்களிலும், நிலங்களிலும் புதைப்பதற்கு இரண்டரை டாலர்தான் செலவு பிடிக்கும். லாபம்தானே முக்கியம். ஏழை மக்களின் உயிர் முக்கியமானதா என்ன? நச்சுக்கழிவு கொட்டுதல், உலகம் வெப்பமயமாதல், தண்ணீர்க்கொள்ளை, சூழலை மாசுபடுத்துதல், விண்வெளிக்குப்பைகள் என்று ஏகாதிபத்திய நிறுவனங்கள் உலக மக்கள் மீது திணிக்கும் பிரச்சனைகள் பல. இவைகள் ஏதாவது ஒரு தனி நாட்டுடன் தொடர்புள்ளதென்றோ, சிலபிரிவு மக்களுக்கான பிரச்சனை என்றோ ஒதுக்கிவிட முடியாது. பெருநிறுவனங்களின் பெரும்பசியை உணராதவரை அது தனது அடுத்த இலக்கில் இரைதேடிப் புலம்பெயர்ந்துகொண்டே இருக்கும்.