வரலாற்றை வியக்க வைக்கும் கல்லறைகள் – பிரமிட்

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும் சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல, யாரும் சதமல்ல என்று மண்ணில் உள்ள எதுவுமே நிலையல்ல என்கிறார் பட்டினத்தார். வள்ளுவனோ நெருநல் உளனொருவன் இன்றில்லை என்கிறார். ஆனால் பெயருக்கும், புகழுக்கும் விரும்பி அதை நிலைநிறுத்த வேண்டுமென்ற தீவிரத்தோடு மனித ஆற்றலைப் பல வகையிலும் பயன்படுத்திய கூட்டம் பன்னெடுங்காலமாய் உலகெங்கிலும் இருந்துதான் வருகிறது. அதற்கு சிறந்து உதாரணம் மரித்துப் போன மனித உடல் காலத்தினும் அழியாது  வீற்றிருக்க வேண்டும் என்ற பேராசையுடன் எகிப்து நாகரீகம் கண்டெடுத்த பாரம்பரியச் சின்னமான பிரமிடுகள்.

படம் : wikipedia

உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு. சீனப்    பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக்கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு. இந்த பிரமிடுகளை உருவாகியது யார்?, என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள்?, இந்த புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற,விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலங் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“பிரமிடு” (pyramid) என்றால் பலரும் சொல்வது, அது எகிப்தில் இருக்கும் பெரிய கட்டிடங்கள். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ”மம்மி“ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்கள் அங்கே இருக்கக்கூடும் என்பதுதான்.

ஆனால் இவை மட்டும்தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத்தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்?- என்ற கேள்விகள் சிந்தனைக்குரியவை.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பிரமிடுகளைச் சுற்றி எந்த விதமான மலைகளோ,பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும்தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்த பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள்?, இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள்? என்றுதான் வரலாற்று ஆய்வாளர்களும் , விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில் எங்காவது பூமியைத் தோண்டிக் கற்களை எடுத்து வந்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல மைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.

சஹாரா பாலைவனத்தின் விளிம்பில் கிசா பீடபூமியில் மூன்று தனிமையான பிரமிடுகள் மட்டுமே உள்ளன. ஆனால் நைல் நதியின் பள்ளத்தாக்கில் நீண்டுபோகும் எகிப்தில் எழுபது பிரமிட்டுகள் உள்ளன.அவற்றின் காலத்தில் அவை பெரிய கோயில் வளாகங்களின் மையங்களாக இருந்தன. பெரும்பாலும் எகிப்தியத்துடன் தொடர்புடையது என்றாலும், பிரமிடு வடிவம் முதன்முதலில் பண்டைய மெசபடோமியாவில் மினு செங்கல் கட்டமைப்புகளாகவும், ஜிகுராட்ஸாகவும் பயன்படுத்தப்பட்டது, மேலும் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களும் தொடர்ந்து பயன்படுத்தினர்.

படம் : vox

23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்ட கிரேட் பிரமிடின் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன் முதல் 9 டன் வரை இருக்கிறது. இந்தக் கற்கள் ஒன்றோடொன்று பொருத்தப்பட்டிருப்பதும், ஒரு மயிரிழை அளவு கூட இடைவெளியின்றிக் கட்டப்பட்டுள்ளதும் அதிசயமின்றி வேறென்ன? பிரமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்தி முன்று இலட்சம் டன்.

எகிப்து பிரமிடுகளே மிகவும் புகழ்பெற்றவையும், அறியபட்டவையும் ஆகும். பாறைகளால் கட்டப்பட்ட இவற்றின் மேற்பரப்புகள் வெள்ளைநிற சுண்ணாம்பு கற்களால் பளபளவெனத் தீட்டப்பட்டிருக்கிறது.முகட்டுக்கல் அல்லது சிகரம் கருங்கல் மற்றும் எரிமலைப்பாறையால் ஆனதாகவும், தங்கம் மற்றும் வெள்ளி அல்லது அதன் கலப்பு உலோகத்தினால் பூசப்பட்டதாகவும் இருக்கிறது.

இவற்றைக் கி.மு 2700க்குப் பிறகு கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை கட்டினர். முன்றாம் வம்ச காலத்தில் யோசர் மன்னர் ஆறு மஸ்தபாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் பிரமிடு ஒன்றை கட்டினார். எகிப்தின் பெரிய பிரமிடுகள் கிசா என்ற இடத்தில் உள்ளது. பெரும்பாலான பிரமிட்கள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன. 2008 ஆம் ஆண்டுப்படி, இதுவரை 135 பிரமிட்கள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரமிட்டில் ராஜாவுக்கு தனி அடுக்கு காணப்படுகிறது. இதில் இருந்து வெளிவரும் இரண்டு இணைப்பு பிரமிட்டின் வெளிவரை நீட்டிக்கொண்டிருக்கிறது.

ஒருவேளை காற்று செல்வதற்கான வழியாக இது இருந்திருக்கக் கூடும் என்று கணிக்கப்படுகிறது. ராணிக்கு என்று தனியாக ஒரு அடுக்கும் இந்த பிரமிட்டுக்குள் அமைந்துள்ளது. இந்த அடுக்கில் இரண்டு சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட்டு, அவை இரண்டு கல் கதவுகளால் மூடப்பட்டுள்ளது. ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பல புதிர்கள் நிறைந்திருக்கும் இந்த பிரமிடின் வரலாற்றுக் கதவை திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

மனித நாகரீகத்தின் அடையாளச் சின்னமாக விளங்கும் ஜிசா பிரமிடுகள் மாபெரும் நைல் நதிக் கரையோரமாக 4000 வருடம் முன்பு கட்டப்பட்டுள்ளது. பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் மிகவும் பழமையானதும், இன்றைய காலம்வரை  அழிந்து போகாமல் நிலைத்து நிற்பதாகவும் உள்ளது.

“ஜிஷா” பிரமிட்டுகள் ஏன் ? எதற்காக கட்டப்பட்டன என்ற வினாவிற்கு சான்றான பதில் இன்றுவரை தெரியாது. ஆனால் பிரமிட்டுகளை கடந்த பல வருடக்கணக்கில் ஆராய்ந்து வரும் தொல்பொருள் ஆராய்ச்சியினர் பலரும் வெளியிட்ட தகவல்கள் மனிதனின் ஆற்றலுக்கு விஞ்சிய விடையமாகவுள்ளது.இவர்களின் கூற்றுப்படி பிரமிட்டுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்ட காலம்   கி. மு 2560 ம் வருடத்தில் இருந்து தொடங்குகிறது.

படம் : hexapolis

ஜீஷா பிரமிடு மொத்தம் 13 ஏக்கர் பரப்பில் பரந்துள்ளது. மகா ஜீஷா பிரமிடின்  அடிப்பரப்பு 1134 அடியாகவும் உயரம் 486 அடி என அமைந்துள்ளது.நான்கு திசைகளில்  முகம் கொண்டுள்ள ஜீஸா பிரமிட்டின் வாசல் வடதிசையில் அமைக்கப்பட்டுள்ளது .இதன் வாசல் 9 அடி சதுரமாக நிலத்தில் இருந்து 150 அடி உயரத்திலும் அமைந்துள்ளது.வாசலில்  இருந்து 324 அடி நீண்ட உள்மனை மூன்று தளங்களில் உள்ள 3மண்டபங்களுக்குச் செல்கின்றது.கட்டிடம் முடிவுற்ற காலம்முதல் புராதன மக்களின் வணக்கத் தளமாக இருந்துள்ளது.மேல் கூறிய சுண்ணாம்பு கற்கள் ஒவ்வொன்றும் 1/100 அங்குல இடை வெளியில் பொருந்தி வைத்துள்ளனர்.ஜீஷா என்பதன் அர்த்தம் அரபு மொழியில் எல்லை என்பதாகும். இதை கட்டுவதற்கு உபயோகித்த கற்களினால் 20 எம்பயர்ஸ்டேட் கட்டிடம் கட்டமுடியும் அல்லது பூமியை சுற்றிவர ஒரு நடைபாதை அமைப்பதற்கு சமம் எனவும் இதன் பிரமாண்டம் வர்ணிக்கப் படுகின்றது.3800 வருடங்களாக உலகின் உயர்ந்த கட்டிடம் என்ற இடத்தை பிடித்திருந்தது.

ஜீசா பிரமிடு மிகச்சிறந்த கட்டிடக்கலை வடிவமைப்புக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். ”பூமி , வானவியல் , வானியற்பியல் , மேம்பட்ட கணிதம் மற்றும் நியூட்டனின் இயந்தரவியல், ஆகியவற்றைப் பற்றிய மிகவும் துல்லியமாக புவியில் அறிவைப் பெறுவதில் அதன் கட்டுமான விவரம் அசாதாரண துல்லியத்தை நிருபிக்கிறது. ஜீசா பிரமிட் புராதன அறிவின் ஒரு களஞ்சியமாக கருத்தப்படுகிறது. கட்டிடவியலாளர்கள் கொண்டிருக்கும் மேம்பட்ட விஞ்ஞான அறிவை இது உணர்த்துகிறது. காலத்தை உணர்தல் பெருங்கனவுதான், பேராசைதான் ஆனால் அதிலும் இத்தனை வரலாற்று சுவாரசியங்கள் தொக்கி நிற்பதுதான் இயற்கையின் வேடிக்கை. தற்போது கடந்த காலத்திய நாகரிகங்களைப் பற்றிய ஒரு துண்டு, துண்டான புரிதல் மட்டுமே உள்ளது. வருங்காலத்தில்  மேலும் பல ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வில் வெளிவரும் என்று நம்புகிறோம். இது நமது மட்டுப்படுத்தப்பட்ட அறிவை மேம்படுத்தும்.

 

 

Related Articles

Exit mobile version