மன்னர் ராணா கும்பா

நவீன ராஜஸ்தானின் பழமையான பெயர்  ராஜபுட்டானா. இதன் வடமேற்கு எல்லை பாகிஸ்தான், மற்ற இந்திய எல்லைகள் குஜராத், மத்திய பிரதேஷ், உத்தர பிரதேஷ் மற்றும் ஹரியானா. சத்ரிய வம்சத்தில் பிறந்த ராஜபுத்திரர்கள் ஆண்டு வந்த பூமி இது. “மன்னரின் மகன்” இளவரசர்கள் என்று பொருள்படுவதாலும், அவர்கள் ஆண்டு வந்த நிலத்தின் பெயராலும் ராஜபுத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர். மத்திய தெற்கு ராஜஸ்தானில் தொடங்கி மத்திய பிரதேசத்தில் சில பகுதிகள், குஜராத்தில் சில பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு மேவார் என்றழைக்கப்பட்டன. நூற்றாண்டுகளாக இப்பகுதியை ராஜபுத்திரர்கள் ஆண்டு வந்தனர். இவர்களின் தலைநகர் உதய்ப்பூர் என்பதால் உதய்ப்பூர் மன்னர்கள் என்றும், மேவார் மன்னர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்திய மன்னர்களில் இவர்கள் தலைசிறந்த வீரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏறத்தாழ 36 வகையான குலப்பிரிவுகள் ராஜபுத்திர வம்சத்தில் காணப்படுகிறது. ஆங்லேயர்கள் உதய்ப்பூரை அவர்களது நிர்வாக தலைநகராக மாற்றும் வரை 1,400 ஆண்டுகள் ராஜபுத்திரர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் பெயர் சொல்லும்படியான, புகழ்பெற்ற மன்னர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் தான் சிசொதியா குலத்தை சேர்ந்த மன்னர் ராணா கும்பா. இவருடைய ஆட்சிக்காலம் 1433 முதல் 1468 வரை. புகழ்பெற்ற சித்தூர் கோட்டை இவரால் பிரம்மாண்டமாக விஸ்தரித்து கட்டப்பட்டது. ஆரவள்ளி மலைகளின் மேல் ஏழு மைல் அளவில், சுமார் 7௦0 ஏக்கர் பரப்பளவில் பல கோட்டைகள், கோபுரங்கள், கோவில்கள், இரகசிய மறைவிடங்கள் என்று அனைத்து வசதிகளும், எட்டாம் நூற்றாண்டு முதல் நீண்ட நெடிய கட்டுமான வரலாறும் கொண்டது சித்தூர் கோட்டை. ராணி பத்மாவதி, ராணா கும்பா, பிற்காலத்தில் மகாராணா பிரதாப், மீரா பாய் என்று இந்த கோட்டை இந்திய வரலாற்றின் சில முக்கிய கதைகளை தலைமுறைகளாக எடுத்துரைக்கிறது.

ராணா கும்பா அரியணை ஏறுதல்

மேவார் ஆட்சியாளர்களில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு மன்னர் ராணா கும்பா. சிசோதயா வம்சாவளி ராஜபுத்திரரான மஹாராணா மோக்கல் சிங்’கின் மகனாவார். மன்னர் மோக்கல் கண்ணியமானவர் மற்றும் வீரமும் தைரியமும் கொண்டவர். டெல்லி சுல்தான் குஜராத்தின் நாகூரை கைப்பற்ற போரிட்ட பொழுது மோக்கல் அதை வெற்றிகரமாக முறியடித்தார். எனினும் துருதிஷ்டவசமாக நீண்ட காலம் அவரால் மேவாரின் மன்னராக நீடிக்க முடியவில்லை. தன் சொந்த தாய்மாமன்கள் இருவரின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டார். மன்னரின் திடீர் மரணத்தால் மேவார் அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவியது. மன்னரை கொலை செய்த தாய்மாமன்கள் அரியணை ஏற அனைத்து தரப்பிலும் பலமான எதிர்ப்பு கிளம்பியது. வேறு வழியில்லாமல் இருவரும் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறினர்.

பின்னர் ராணா கும்பா அரியணை ஏறினார். ராணா கும்பா அரியணை ஏறும்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. ஆரம்ப காலங்களில் இவர் ஆட்சிக்கு ராவ் ரன்மல் ரத்தோர் என்பவர் துணை நின்றார். ஒரு சில ஆண்டுகள் ராணா கும்பா அரியணையில் தம்மை நிலைப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்டார். மால்வா சுல்தானான மாமூது கில்ஜி மேற்கிந்தியாவில் தங்கள் அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டிருந்தார்.

Crown (Pic: theweddingtiara)

மாமூது கில்ஜி’ யுடனான பகை

தன் தந்தை ராணா மோக்கலை கொலை செய்த இருவரில் ஒருவரான மாஹ்பா பன்வார் மண்டூரில் தஞ்சம் அடைந்ததாக ராணா கும்பாவிற்கு செய்தி வருகிறது. மண்டூர் என்பது மண்டவ்காட் என்றழைக்கப்படும் மால்வா பிரதேசத்தின் ஒரு நிலப்பரப்பு. ராணா கும்பா பன்வாரை கைதியாக தன் நாட்டிற்கு அனுப்பும்படி மாமூதிற்கு தூது அனுப்பினார். மாமூது கில்ஜி அதனை திட்டவட்டமாக மறுத்து விட போர் மேகங்கள் சூழ்ந்தன. ராணா கும்பா தன்னுடைய படைகளை ஒன்று திரட்டி மண்டூரின் மேல் போர் தொடுத்தார். மாமூது கில்ஜி சக்தி வாய்ந்த படைகளுடன் கும்பாவின் படைகளை எதிர்கொண்டார். இரு ராஜ்ஜியங்களும் மண்டவ்காட் போரில் சந்தித்து கொண்ட வருடம் 1440. தீவரமாக நடந்த அந்த போரின் இறுதியில் மாமூதின் படை வேரோடு தரைமட்டமானது. மண்டூர் அரண்மனையை சுத்தி வளைத்தது கும்பாவின் படைகள். வேறு வழியில்லாமல் அங்கிருந்து தப்பித்து குஜராத் நோக்கி பறந்தார் பன்வார். கும்பாவுடன் இணைந்து போரிட்ட ரத்தோரின் படைகள் கில்ஜியின் கோட்டையை கைப்பற்றியது. பணயக்கைதியாக மாமூது கில்ஜி கும்பாவால் இழுத்து வரப்பட்டு சித்தூர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதகால சிறைவாசத்திற்கு பிறகு பிணைய தொகை ஒன்றை பெற்று கில்ஜியை விடுதலை செய்தார் ராணா கும்பா. இந்த போரின் வெற்றியை கொண்டாடும் விதமாக “விஜய் ஸ்தூபி” என்ற ஒன்றை கட்ட துவங்கினார். ஆனால் அதை கட்டி முடிப்பதற்குள் ராணா கும்பா இரு பெரும் போரினை சந்திக்க வேண்டியிருந்தது.

மாமூதின் தொடர் தாக்குதல்கள்

அடிபட்ட பாம்பாக துடித்து கொண்டிருந்த மாமூது சித்தூர் கோட்டை மேல் தொடர் தாக்குதல்கள் நடத்தலானார். பல முறை போரிட்டும் சித்தூர் கோட்டையை மாமூதால் தகர்க்க முடியவில்லை. எனினும் கும்பாவின் அதிகாரத்தில் இருந்த சில பகுதிகளான மச்சிந்தார்கார், பாங்கார், மற்றும் சௌவ்முகா ஆகியவற்றை கைப்பற்றி கொள்கிறார்.

மண்டல்கார் போர்

வருடம் 1442 ஆம் ஆண்டு ராணா கும்பா சித்தூரை விட்டு வெளியேறி தனது படைகளுடன் கரோட்டி என்ற இடத்தினை நோக்கி படையெடுத்தார். ராணா கும்பா மேவாரில் இல்லையென்ற செய்தி மாமூதிற்கு செல்கிறது. இந்த முறை மாமூதின் நோக்கம் வேறானது. பனமாதா கோவில் என்ற ஸ்தலம் கேள்வரா என்ற பகுதியில் உள்ளது. பனமாதா’வின் சக்தியினால் தான் தன்னால் சித்தூர் கோட்டையை தகர்க்க முடியவில்லை என்றெண்ணிய மாமூது அந்த கோவிலை படைகளுடன் சென்று இடித்து தரைமட்டக்கிவிட்டு சித்தூர் கோட்டையை நோக்கி தன் தந்தை ஹூமாயூனுடன் கிளம்பினார். சம்பவங்களை கேள்விப்பட்ட ராணா கும்பா கரோட்டியிலிருந்து மின்னலென திரும்பி வர இரு படைகளும் மண்டல்கார் எனும் இடத்தில் கடுமையாக மோதிக்கொண்டன. அந்த போரில் இருவருக்கும் வெற்றி தோல்வி இல்லை.

வருடம் 1443 மத்தியில் ஒரு மழைக்காலத்தில் மாமூதை நோக்கி ஒரு அதிரடி தாக்குதல் மேற்கொண்டார் ராணா. அதில் தோல்வியடைந்து மத்திய பிரதேசத்தின் மந்து பகுதியில் மாமூது தஞ்சம் அடைந்தார். அந்த வருட இறுதியில் மீண்டும் மாமூது பதில் தாக்குதல் நடத்தினார். இந்த முறை சித்தூர் கோட்டையை தவிர பிற முக்கிய பகுதிகள் மாமூது வசமானது. எனினும் சித்தூர் கோட்டையை தகர்க்க முடியவில்லை.

பனாஸ் போர்

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, வருடம் 1446 அக்டோபர் மாதம் புதியதாக பெரும் படை ஒன்றை திரட்டி மண்டல்கார் பகுதியை கடக்கிறார் மாமூது. ஆனால் அவர்கள் பனாஸ் நதிக்கரையை கடக்கும் பொழுது அவர்களை சந்தித்த ராணாவின் படை மாமூதை மீண்டும் மந்துவிற்கு திருப்புயனுப்பியது. ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்த மாமூது பின்னர் ராணா கும்பாவை நோக்கி படையெடுப்பதையே கைவிட்டார். மால்வா சுல்தானான மாமூது மற்றும் குஜராத்தின் சுல்தான்களை பல்வேறு தருணத்தில் விரட்டியடித்தன் நினைவாக விஜய் ஸ்தூபி எனப்படும் வெற்றி தூண் நிறுவப்பட்டது. சுமார் எட்டு ஆண்டுகளாக பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் நடைபெற்ற பணிகள் வருடம் 1448 ஆம் ஆண்டு நிறைவுற்றது.

War (Represtative Pic: pixabay)

கட்டுமானங்களும் பக்தியும்

ஒன்பது அடுக்கு மாடிகள் கொண்ட இதன் உயரம் 37.19 மீட்டர். அவர் கட்டிய இந்த ஸ்தூபியை கடவுள் விஷ்ணுவிற்கு அற்பனித்தார் என்பதற்கு அதனை சுற்றிய சிற்பங்களே சான்று. தொலைநோக்கு பார்வை கொண்ட மன்னர் கும்பா அதன் மூன்றாம் மாடியில் ஒன்பது முறை “அல்லா” என்றும் எட்டாவது மாடியில் எட்டு முறை “அல்லா” என்றும் செதுக்க ஆணையிட்டாராம். என்றாவது ஒரு நாள் சித்தூர் ஒரு முகலாய மன்னரிடம் வசப்பட்டால் அவர்கள் தூணை சிதைக்காமல் இருக்க இவ்வாறு செய்தார்.

ராணா கும்பா வீரத்தில் மட்டுமல்ல, பிற கலைகளிலும் நாட்டமும் கொண்டவர். அவர் ஒரு ஆன்மீகவாதி, எழுத்தாளர், கவிஞர், இசையை விரும்புபவர், கட்டிட கலையில் வல்லவர் என்று பல பண்முகதிறமை கொண்ட ஒரு ஆளுமை. அவரது உயரமும், ஆஜானுபாகுவான தோற்றமும் காண்போரை கவர்ந்திழுக்கும். அவரது துணிச்சலும், தோல்வியை சந்திக்காத உறுதியையும் கண்டு முகலாய சுல்தான் மன்னர்கள் இவருக்கு “ஹிந்து சுல்தான்” “ஹிந்து சூரத்னா” என்று பட்டம் வழங்கினர். இவர் எண்ணற்ற கோவில்களை கட்டியிருந்தாலும் கும்பா ஷ்யாம் கோவில் என்ற விஷ்ணுவிற்காக எழுப்பபட்ட ஆலயம் பிரசித்தி பெற்றது. பிற்காலத்தில் பகவான் கிருஷ்ணரையே தன் பதியாக நினைத்து மீரா பாய் வழிபட்டது இந்த கோவிலில் தான். ரணக்பூர் என்ற இடத்தில் பல கோவில்களை எழுப்ப நிதியை வாரி வழங்கினார் மன்னர் கும்பா. எழுத்து துறையில் இவர் கீத் கோவிந்த் என்ற நூலிற்கு பொழிப்புரை எழுதியுள்ளார். இசை தொடர்பான நூல்களையும் எழுதியிள்ளார்.

Chittogarh The Largest Fort (Pic: mysteryofindia)

சாதனை சிகரம்

பாதுகாப்பிற்காக மேவார் ராஜ்ஜியத்தில் கட்டப்பட்ட 84 கோட்டைகளில் 32 கோட்டைகள் ராணா கும்பாவால் கட்டப்பட்டது. அதில் சித்தூரில் உள்ள கும்பால்கர் கோட்டையும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 1075 அடி உயரத்தில் உள்ள இந்த கோட்டை உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஆரவள்ளி சிகரங்களின் நடுவில் அடர்த்தியான வனப்பகுதியின் மேல் அமைந்துள்ள இந்த கோட்டை எதிரிகளால் நெருங்க முடியாத ஒன்று என்பதில் ஐயமில்லை.

சீனப்பெருஞ்சுவர் உலகின் நீளமான சுவர் என்று செயற்கைகோள்கள் கண்டது போல் உலகின் இரண்டாவது நீளமான சுவராக ஆரவள்ளி மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள சித்தூர் கோட்டை மதில் சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது 36 கிலோமீட்டர் நீளமும், 15 அடி அகலமும் கொண்டது. ஒரே நேரத்தில் நான்கு குதிரை வீரர்கள் சமமாக இதில் பயணிக்க முடியும் என்பது வியப்பு.

The Wall (Pic: wikipedia)

ராணா கும்பா மறைவு

ராணா கும்பாவிற்கு உதய் சிங், ரைமல் என்று இரு மகன்கள். உதய் சிங் மிக முரட்டு தனமாகவும், அவசர புத்தியுடனும் காணப்பட்டான். ஒரு நாள் ராணா கும்பா எக்லிங்ஜி என்ற சிவன் ஸ்தலத்தில் வழிபாட்டில் இருந்த பொழுது கண் இமைக்கும் நேரத்தில் உதய் சிங்’ கால் கொல்லபட்டார். அப்பொழுது அவருக்கு வயது 35.

Rana Kumbha (Representative Pic: historyunderyourfeet)

மிக குறைந்த வயதில் புகழ் மாட்சியடைந்த ராணா கும்பாவின் இளவயது மரணம் வரலாற்றுக்கு ஒரு பேரிழப்பு. அவரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Web Title: Kumbha of Mewar

Featured Image Credit: wikimedia

Related Articles

Exit mobile version