இலங்கை ஒரு குட்டித் தீவாயினும் இங்கு கொட்டிக்கிடக்கும் ஆச்சர்யங்கள் ஏராளமானவை. இயற்கையாகவே தனக்கென ஒரு தனித்துவத்தை இலங்கை கொண்டுள்ளதன் காரணமாக, சர்வதேச நாடுகளில் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கென வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் அமைந்திருக்கக்கூடிய அம்புலுவாவ சிகரம் இவ்வாறான சிறப்புக்குரிய இடங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
இயற்கை எழில் கொஞ்சும் மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் தான் அம்புலுவாவ சிகரம் அமைந்துள்ளது.
14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நான்காம் புவனேகபாகு மன்னனால் கண்டுபிடிக்கப்பட்ட பாறை மற்றும் மலைத்தொடர்தான் இந்த அம்புலுவாவ மலைச்சிகரம்.
பல்லுயிர் வளங்களைக் கொண்ட இயற்கை மையமாக திகழும் இந்த மலைச்சிகரம் 365 அடி உயரத்திலும் கம்பளை நகரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இம்மலைச்சிகரத்தில் அனைத்து மதஸ்தலங்களும் ஒன்றாக காணப்படுவது தனிச்சிறப்பம்சமாகும்.
இம்மலையின் முழுப்பகுதியும் 80 வகையான தாவர குடும்பங்களும் 200 வகையான தாவர வகைகளும் கொண்ட பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது.
அம்புலுவாவ மலைச்சிகரமானது கிழக்கில் இலங்கையின் மிக உயரமான பீதுருதாலகால மலையினாலும் மேற்குப் பகுதியில் சிவனொளிபாத மலையினாலும் வடகிழக்கில் நக்கிள்ஸ் மலைத்தொடரினாலும் சூழப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்புக்களும், இயற்கை வனங்களும், நீர் நிலைகளும் இம்மலைச்சிகரத்தை சுற்றி அலங்கரிக்கும் அம்சங்களாகும்.
நுழைவாயிலில் அழகிய இரட்டை குளங்கள் மற்றும் தாவர பூங்காக்கள் இம்மலையின் தனித்துவமான அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன.
குளிரான காலப்பகுதியில் இந்த அம்புலுவாவ மலைச்சிகரம் பனியால் மூடப்பட்டு மேகக்கூட்டங்களுக்கு நடுவே காட்சியளிக்கும் தோற்றம் எண்ணற்ற அழகினைக் கொண்டது என்கின்றனர் பயணிகள்.
இதனை மேலும் அழகூட்டுவது அம்புலுவாவ மலைச்சிகரத்தில் உள்ள உருளை அடித்தளத்துடன் கூடிய தூபியும் கவனிப்பு கோபுரமும் தான்.
அம்புலுவாவை மலையுச்சியில் அமைந்துள்ள புத்தர்சிலை அங்குச்செல்லும் அனைவரது கவனத்தையும் தன்னகத்தே ஈர்க்கும் சிறப்பினைக்கொண்டது.
மத்திய மலைநாட்டிற்கு சுற்றுலா செல்ல விரும்புவோருக்கும் இயற்கை பிரியர்களுக்கும் இவ்வாறான இடங்களை பார்வையிடுவது புதிய அனுபவத்தை தருவதோடு வாழ்நாளில் மீட்டுப்பார்க்கும் நினைவுகளாகவும் அமையும் என்பது உண்மை. இவ்வாறான இன்னும் அதிகம் அறியாத சிறப்புமிக்க இடங்கள் நமது நாட்டில் ஏராளம் உண்டு.