இலங்கையின் வெத்தா எனும் வேடுவ இனத்தவர்

இலங்கையின் பழங்குடியினர் எனக்கருதப்படும் வேடர் சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆரியரின் வருகைக்கு முன்னரே இலங்கையின் ஆதிக்காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன. இலங்கையின் வடமத்திய ,ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மற்றும் தமிழ் இனத்தவருடன் கலந்து தன் அன்றாட வாழ்வியலை கடத்தி வருகின்றனர். 

அனுராதபுரம் ஹெரானிகல பகுதியை சேர்ந்த ‘வன்னியா எத்தோ’ எனப்படும் இலங்கையின் ஆதிகுடி குழந்தைகள்
படஉதவி : serendib.btoptions.lk

இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான புனித மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் பின் குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணை திருமணம் செய்துகொண்டான். பின்பு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததெனவும் அக்குழந்தைகள் வளர்ந்து சிலகாலங்களில் காடுகளில் வாழ்ந்தனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் நம்மப்பட்டு வருகின்றது. நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபின் வழி வந்தவர்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேடர் மொழி

இலங்கையில் இவர்களை சிங்கள மொழியில் ‘வெத்தா’ என்று அழைக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களை “வன்னியலா எத்தோ” Wanniyala-Aetto என்று குறிப்பிட்டுகொள்கின்றனர். இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகிய மக்களிடம் இருந்து வேறுபட்டு காணப்பட்டாலும் அவர்களுடன் கலந்து வாழ்ப் பழகிக்கொண்டதால் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை இவர்கள் பேசிவருகின்றனர். அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் காணப்படுகின்றன எனவும், மொழி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். வேடர்கள் தமது ஊடக மொழியாக தமக்கேயுரித்தான வேடுவ மொழியைக் கொண்டிருந்தனர். இந்த வேடர் மொழியானது இன்று முற்றாக அழியும் நிலையிலுள்ளது. தமது ஊடக மொழியினை கைவிட்டு பிற மொழிகளை கற்க வேண்டிய நிர்பந்தம். சூழ்நிலைக்கேற்ப பிற மொழிகளை இவர்கள் பேசி வந்தாலும், தமது தெய்வ வழிப்பாட்டு சடங்குகளில் தங்கள் வேடுவ மொழியை விட்டுக்கொடுப்பதில்லை.

கலாசாரமும் சடங்கு முறைகளும்
இயற்கையோடு இணைந்து வாழப்பழகிப்போன இவர்கள், இயற்கையையே தன் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். தங்கள் தெய்வங்களுக்கு காட்டில் கிடைக்கும் காய்கள்,கனிகள், தூப வகைகள், தீபங்கள், பூக்கள் என்பவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தமது பாரம்பரிய ஆயுதங்களான ஈட்டி,வில், அம்பு முதலியவற்றுக்கு வழிபாடுகளின் போது மரியாதையை செலுத்திவருகின்றனர். வேடுவ சடங்குகளில் ‘பாட்டுக்காரர் கொட்டு’ எனப்படும் வாத்தியங்கள் வாசிக்கும் பறைக்காரன், கபுறான என்பவர்களுக்கு முக்கிய இடமுண்டு. இவர்களின் சடங்குகளின் போது மூதாதையர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்ட பின்னைரே தெய்வங்களை அழைத்து வழிபடுகின்றனர்.

கரடித் தெய்வம், மாறாத்தெய்வம் முதலியன இவர்களின் முக்கிய தெய்வங்களாகும்.  இவை தவிர இவர்களின் பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் ருதுவாதல் போன்ற எந்தவொரு சடங்களும் மூதாதயர்களின் பாரம்பரிய சம்பிரதாயங்களையே இன்னமும் கடைபிடித்து வருகின்றனர். இவர்களின் நம்பிக்கையில் காகம் கரைதல்,கிளி தலை கீழாக தொங்குதல், பறவைகள் ஒலியெழுப்புதல், தும்மல், நாய்கள் பதறி போய் குரைத்தல், மனைவியின் பொட்டு அழித்தல் போன்ற சம்பவங்கள் நிகழும் போது தாம் நினைத்தவைகள் நடைபெறாது என இவர்களால் நம்பப்பட்டு வருகின்றது.  

வேடுவர்களின் மருத்துவம்
வேடுவ சமூக மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை காட்டில் இருந்தே பெற்று வாழ்வாதாரத்தை பூர்த்திசெய்து வந்துள்ளனர். காடுகளில் கிடைக்கக்கூடிய மூலிகைகளை பயன்படுத்தி கிடைக்ககூடிய மருந்து வகைகளை தங்கள் நோய்களுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். மருத்துவம் செய்பவர்களை ‘பரிகாரி’ என்று இவர்கள் அழைக்கின்றனர். இவர்களின் மருத்துவ முறைகளை வெளிநபர்களுக்கு சொல்வதில்லை, காரணம் இவர்களின் இனம் சாராதவர்களுக்கு அம்முறைகளை கூறினால் இவர்களின் மருத்துவ முறை பலிக்காது என வேடுவ இன மக்களால் நம்மப்பட்டு வருகின்றது.

1970 களில் இலங்கையின் வெத்தா இன மக்கள்
படஉதவி : limaro.lk

இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் நவீன நாகரிகத்தின் வருகை, நரகமயமாக்கல், மக்கள் குடியேற்றம் காரணமாக இவர்களின் இருப்பிடமாக காணப்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. வேட்டையாடுதல், காட்டுத்தேன் எடுத்தல் போன்றவற்றிற்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள காரணத்தால் இவர்களின் பாரம்பரிய தொழில்களை கைவிட்டு தற்போது விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்ளை செய்து வருகின்றனர். இந்நவீனமயமாக்கல் காரணமாக இவர்களின் பாரம்பரிய கலாசார முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இவாறான நிலைமைகளிலும் இலங்கை வேடுவர் சமூகத்தினர் தங்கள் மூதாதையர்கள் பின்பற்றி வந்த வழிபாட்டு முறைகள், உணவு பதனிடும் முறைகள், வாழ்வியல் சடங்கு முறை போன்றவைகளை இன்றளவும் பேணிப் பாதுகாத்து வருவது இவர்களின் தனிசிறப்பு எனலாம். 

Related Articles

Exit mobile version