பாலங்கள் இல்லாத கொழும்புக்குள் வர உதவிய மூன்று நுழைவாயில்கள்

அந்தக் காலத்தில் கொழும்புக்குள் உட்பிரவேசிக்க இப்போதுள்ள கம்பஹா மாகாணத்திலிருந்து வருவதென்றால் இம்மூன்று நுழைவாயில்களில் ஒன்றினூடாகத்தான் வரவேண்டுமாம். அதுதான் தொட்டலங்க என்று அழைக்கப்படும் பாலத்துறை, இங்குருகொட அந்திய என்று அழைக்கப்படும் செய்ஸ்தான் சந்தி மற்றும் நாகலாகம் வீதிகள் என்ற மூன்று நுழைவாயில்களாம். களனி கங்கையை முத்தமிடும் இந்த மூன்று நுழைவாயில்கள் குறித்து வரலாற்றுக் கதைகள் பல உண்டு. அவற்றில் சுவாரஷ்யமான ஒருசில வரலாற்றுத் தகவல்களைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்…

பேலியகொடையில் இப்பொழுது பாலங்கள் உள்ளன ஆனால் அப்பொழுது?

பேலியகொடையிலிருந்து கொழும்புக்கு வரும் இரண்டு வீதிகளிலும் தற்போது பாலங்கள் அமைந்துள்ளன. ஆனால் பாலங்கள் இல்லாத அந்தக்காலத்தில் மக்கள் கொழும்பு வீதிக்கு வந்த கதைதான் இது… 

கிராண்ட்பாஸ் ஊடாக தெரியும் களனி கங்கையை அடையும் வழி

தொழில்துறை மறுமலர்ச்சி வருவதற்கு முன்னர் பொருட்களை சிறு வள்ளங்களிலும் படகுகளிலும் மாட்டு வண்டிகளிலும்தான் எடுத்து சென்றுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அந்தக் காலத்து கிராமவாசிகளின் கூற்றுப்படி, களனி ஆற்றங்கரையில் கொழும்புக்கு வரும் படகுகள் தரித்து வைக்கப்பட்ட அதாவது கட்டிவைக்கப்பட்ட இடத்தைதான் தொட்டலங்க என்று அழைக்கின்றனராம்.

தொட்டலங்க எதற்கு பிரபலமானது ?

தொட்டலங்கை வெசாக் தொரண்

தொட்டலங்க எனும் பிரதேசம் மிகவும் பிரபலமாவதற்கான காரணம், வெசாக் தினத்தன்று கட்டப்படும் வெசாக் தொரண் ஆகும். அந்தக் காலத்திலேயே இது மிகவும் பிரசித்திபெற்றதாக இருந்துள்ளது. தற்போது 65 வருடங்களையும் தாண்டி இன்னமும் அதே தொட்டலங்கயில் வெசாக் தொரண் கட்டப்பட்டு வருகின்றது.

இஞ்சி தேநீர் கடை?!

இங்குருகடே அந்திய என்று பெயர் வந்ததற்கு ஒரு கதையைச் சொல்கிறார்கள் அந்தக்காலத்தில் வாழ்ந்த மக்கள். தற்போது இங்குருகடே சந்தி என்று அழைக்கப்படும் இந்தப் பிரதேசமானது தொட்டலங்கவிற்கும் கிராண்ட்பாஸிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

இப்போது இங்குருகடே சந்தியின் காட்சி 

இங்கு இஞ்சி சேர்த்து தேனீர் விற்கும் கடை ஒன்று இருந்ததாம். சிங்களத்தில் இங்குரு என்றால் இஞ்சி என்று பெயர். இப்படி இஞ்சி சேர்த்து விற்கப்படும் தேனீருக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாம். அத்தோடு இந்தக் கடை சுந்தரமான இயற்கை ததும்பும் ஒரு கிராமமாகக் காட்சியளித்ததாம்.

ஒரு பக்கத்தில் பெரும் காடாக காட்சியளித்த இந்த இங்குருகடே சந்தியில் பழ மரங்கள் அதிகம் இருந்ததாம். இதில் பெரிய நாவல் மரங்கள் கொய்யா மரங்கள் ஆகியன நிறைந்து காணப்பட்டதாம்.

நாகலோகமா? நாகலாகமா?

நாகலாகம் வீதி குறித்து அச்சம் தரக்கூடிய கதை ஒன்று சொல்கிறார்கள் கிராமவாசிகள். அதாவது களனிப் பகுதியிலிருந்து வந்ததாகச் சொல்லப்படும் ‘நாககோத்திரகாரர்கள்’ எனும் நாக பழங்குடியினர் கொழும்புக்குள் வருவதற்கு இந்த வீதியைப் பயன்படுத்தியதினால் இதற்கு நாகலாகம் வீதி என்று பெயர் வந்ததாக ஒரு புராணக் கதை உண்டாம்.

http://lankapura.com

போர்த்துகீசர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்டபோது அப்போதைய ஆட்சியாளர்கள் போக்குவரத்திற்காக குதிரைகளையும் குதிரை வண்டிகளையும்தான் பயன்படுத்தினர். அவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்திய குதிரைகளுக்கு இளைப்பாறவும் தண்ணீர் அருந்தவும் ஒரு சுத்தமான கிணறு ஒன்றும் இளைபாறும் இடம் ஒன்றும் நாகலாகம் தெருவில் அமைந்திருந்ததாம்.

இந்த கிணறு மிகவும் சுத்தமானதாக இருந்ததாகவும், குதிரைகள் தலையை உள்ளே போட்டு நீர் அருந்தக் கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

சந்திகளினூடாக போக்குவரத்து எப்படி இருந்திருக்கும்?

அந்த நாட்களில் படகுகள் மூலமாகத்தான் கொழும்புக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வரப்பட்டதாம். இதனால் தொட்டலங்கவில் ஒரு படகு கலாச்சாரம் தானாகவே உருவாகியிருந்ததாம். 

நீர்கொழும்பிலிருந்த பொருட்கள் கொண்டுவந்த ஹமில்டன் கால்வாய் வழியாக களனி கங்கை

நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களிலிருந்துதான் கொழும்புக்கு அரிசி, சர்க்கரை, மா, கருவாடு, ஜாடி, கொப்பரா போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துவரப்படுமாம். அவை படகு மூலம் ஹமில்டன் கால்வாய் வழியாக படகுத் தோட்டத்தை தாண்டி களனி வீதி வழியாக ஜாடி கால்வாயை அதாவது தொட்டலங்வை வந்தடையுமாம்.

ஜாடி கால்வாய் 

ஜாடி மீன் சமைப்பதற்கு முன்னரும் பின்னரும் மற்றும் களனி கங்கையில் வீடு போன்ற படகு நிற்கும் காட்சி

ஜாடி என அழைக்கப்படுவது ஒரு வகை கடல் உணவாகும். மீனும் அல்லாத கருவாடும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு உலர்ந்த உணவுதான் ஜாடி. இந்த ஜாடி உணவுக்கு அந்தக் காலத்தில் மக்களிடம் மிகப்பெரிய கேள்வி இருந்ததாம். அதனால்தான் தொடலங்கவை சுற்றியிருந்த நீரோடையை ஜாடி கால்வாய் என்று மக்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.

படகில் கொழும்பு வருவதற்கு 2 சதம்..! 

ஜாடி கால்வாய் அருகே மிகப்பெரிய ரேந்தை சந்தை அதாவது துணிகள் விற்கும் ஒரு சந்தை இருந்ததாம். அங்குதானாம் படகுகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படுமாம். அந்தகாலத்தில் ஒரு படகு கொழும்புக்குள் வருவதற்கு 2 முதல் 3 சதங்கள் அறவிடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியாருக்கு தேவையான பொருட்கள் இங்கிருந்துதான் கொழும்புக்கு வெளியேயோ அல்லது உள்ளேயோ கொண்டுவரப்பட்டுள்ளது. 

இங்குள்ள படகுகளானது பெய்ரா வெவ வரை பயணித்துள்ளது. இந்தப் படகுகளை இயக்க ஒரு நடத்துனர் இருப்பார். அவருக்கு சிங்களத்தில் ‘தண்டலே’ என்று பெயர். தமிழில் இந்தத் தண்டலே என்ற சொல்லுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. இந்த தண்டலேவுக்கு துணையாக நான்கு அல்லது ஐந்துபேர் அந்தப் படகில் இருப்பார்களாம்.

பொருட்களை ஏற்றிக்கொண்டு தொட்டலங்கவிலிருந்து புறப்படும் இந்தப் படகுகள் பல நாட்கள் பயணம் செய்யுமாம். அப்போது அந்தப் படகில் செல்லும் நபர்களுக்கான உணவுகளை அந்தப் படகிலேயே சமைத்துக் கொள்வார்களாம். அதற்கு ‘பாரு பத்‘ என்று பெயராம். பாரு என்றால் படகு, பத் என்றால் சோறு. 

இந்த படகு சோறு மிகவும் பிரபலமாம். கர்ப்பிணிப் பெண்கள் இந்த படகு சோற்றை விரும்பி உண்பார்கள் என்று அந்தகாலத்து ஆட்கள் சொன்னதாக தகவல்கள் உள்ளது. இந்தச் படகு சோற்றில் ஜாடி மீன்களுடன் கொப்பரா சம்பல் இருக்கும்.

கிராண்ட்பாஸ் கால்வாய் மற்றும் களனி கங்கையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி

படகுகள் ஓட்டும் தண்டலே உட்பட அதில் வேலை செய்யும் நபர்கள் நல்ல திடகாத்திரமான உடலுடன் இருப்பார்களாம். அவர்கள் தொட்டலங்கவில் தங்கள் படகுகளை நிறுத்திவிட்டு கள்ளு அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனராம். கொழும்பிலிலேயே தொட்டலங்க பிரதேசம்தாம் ‘கள்ளு’ க்கும் பிரசித்தமாம்.

அந்தக் காலத்தில் தொட்டலங்க கரேஜ் தோட்டத்திற்கு அருகாமையில் நாடக அரங்கம் ஒன்றும் இருந்ததாம். எல்லாளன், துட்டகைமுனு, ரொடி பெண் போன்ற நாடகங்கள் இங்கு அடிக்கடி மேடையேற்றப்படுமாம். அதுமட்டுமன்றி தொட்டலங்க பிரதேசம் பைலா கலையிலும் பிரசித்தம் பெற்றதாக இருந்ததாம்.

1892ஆம் ஆண்டு நிர்வாகப் பணிகள் ஆரம்பித்த  விக்டோரிய பாலம்

படகு பாலத்திற்கு சற்று அருகாமையில்தான் இந்த விக்டோரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் நிர்வாகப் பணிகளை 1892ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ளனர். இரண்டு வழித்தடங்களை கொண்ட இந்தப் பாலமானது அப்போது கலைநுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

இப்படியான பல வரலாற்றுத் தடங்களைச் சுமந்துநிற்கும் தொட்டலங்கை, நாகலாகம் வீதி, இங்குருகடே சந்திகளைப் போல கொழும்பில் நாம் அறிந்த இடங்களின் அறியாத பல வரலாற்றுத் தகவல்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

Related Articles

Exit mobile version