இலங்கை – மியன்மார் இடையேயான அசாத்தியமான ஒற்றுமைகள்

இன்லெ லேக்  என்ற இடத்திலிருந்து மியான்மார் தலைநகர் யங்கோன் நோக்கி இரவு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். யங்கோன்னில் இருந்து எழுநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இன்லெ என்ற சுற்றுலா  கிராமம் .  மலைகள் சூழ்ந்த அழகான ஏரியுடன்  கூடிய இடம் , மியன்மாரின் கிழக்குப்புறமாக இருக்கிறது. ரொஹிங்கியாக்கள் வாழும் ராக்கேன் பிரதேசத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தாலும், ஒவ்வொரு பேருந்தையும் நிறுத்தி சோதனை இடுகிறது மியன்மார் இராணுவம். அவர்களின் கண்கள் சந்தேகத்துக்கு இடமான முஸ்லிம்களை தேடுகிறது. முஸ்லீம்களை அவர்களின் முகச்சாயலில் வைத்து ஊகித்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

படம் – wikimedia.org

என்னிடம் வந்த மியன்மார் இராணுவன் , Tourist ஆ என்று கேட்டான், நான் ஆம் என்றேன். அடுத்த கேள்வியை அவன் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, என் கைகளில் கட்டியிருந்த கோயில் நூலை பார்த்துவிட்டு, நீ  இந்து  என்று சொல்லி புன்னகைத்தான். இந்துக்கள் எங்கள் நண்பன் என்று சொல்லி போலியாக சிரித்தான். நானும் சிரித்துக்கொண்டேன். அதே சிரிப்பை இலங்கையிலும் பல இடங்களில் பார்த்த பரீச்சயம் இருக்கிறது.

மற்றுமொரு சமயம், தலைநகர்  யங்கோன்னில் டாக்ஸி ஒன்றில் ஏறினேன். ஓட்டுனர் நாம் இந்தியர்களா, எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டு தெரிந்து கொண்டார். நாம் இலங்கை என்றோம், “அது ஒரு பௌத்த நாடு” என்றார்.  “மியன்மாரிலும்  பௌத்தம் தான், இங்கே இந்துக்கள் , கிறிஸ்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள், அவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் எங்களுடன் நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்த முஸ்லிம்கள்தான் பிரச்சனை, அவர்கள் இந்த  நாட்டினை சேர்ந்தவர்கள் இல்லை, எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறார்கள்” என்று சொல்லும்போதே அவரின் முகம் சிவந்திருந்தது. “அபி ஒக்கம ஏக்க பௌல (நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம் )” வகையான பேச்சுக்களை இலங்கையிலும் நான் நிறைய கேட்டிருக்கிறேன். டிரைவர் சீட்டுக்கு மேலே WIRATU தேரரின் படம் ஒட்டப்பட்டு  இருந்தது. WIRATU தேரர் யார் என்பதற்கு, அவர் ஞானசார தேரரின் நண்பர்  என்ற விவரணம்  போதுமானது.

படம் – ytimg.com

இலங்கையில் கடந்தகாலத்தில் நடந்தது, அல்லது இப்போது நடக்கின்றது போலவே, மியன்மாரில் ஒரு பிரிவினருக்கு மதம் பிடித்திருக்கிறது. அது பேரினவாத மதம். அன்பை, ஜீவகாருண்யத்தை  போதித்த புத்த மதத்தின் பேரால் அந்த மதம் பிடித்திருப்பதை தான் ஜீரணித்து கொள்ள முடியாமல் இருக்கிறது, இலங்கையை போலவே மியன்மாரும் இழந்தவைகள் அதிகம், ஆனால் அது தொடர்பில் அவர்கள் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.

பின்பற்றுவது ஒரே தேரவாத புத்த மதம் என்பதை தாண்டி, அந்த மனிதர்கள், அவர்களின் உடை,  சுபாவம் என்று  இலங்கைக்கும் மியன்மாருக்கும் எத்தனையோ ஆச்சரியமான ஒற்றுமைகள்.  அப்படியான  சில ஒற்றுமைகளை பட்டியலிடுகிறது இந்த பதிவு.

  1. ஆங்கிலேயன் வந்தான், பிரித்து ஆழ்ந்தான், பகைமையை வளர்த்தான்.

படம் – wildguanabana.com

ரங்கூன் என் உயிரை வளர்த்தது, உயர்ந்தவன் ஆக்கியது. என்று சிவாஜி கணேஷன் நடித்த பராசக்தி படத்தில் ஒரு வசனம் அமைந்திருக்கும். ரங்கூன் அப்படித்தான் இருந்தது அன்று. வந்தாரை வாழவைத்து. உயர்ந்தவன் ஆக்கியது. ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளின் ஆரம்பத்தில் கிழக்கு ஆசியாவிலேயே அதி நவீன நகரமாக ரங்கூன் இருந்தது.

அக்காலத்தில் வாழ்ந்த ரங்கூன் நகரவாசி இப்படி எழுதுகிறார்…” ஆங்கில பெயர்களை தாங்கிய  புதியதான  சினிமா அரங்குகள், tram வண்டிகள், பேருந்துகள், நகரத்தை நிறைத்து இருந்தன. நீங்கள் ரங்கூனில் வாழ்கிறீர்கள் ஆனால், மேல்தட்டு வாழ்வின் சகல வசதிகளும் கிடைக்கப்பெற்ற ஒரு    காஸ்மோபாலிட்டன் வாழ்க்கை முறை வாழ்வதற்கு நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று அர்த்தம். பிரிட்டிஷ் பர்மாவை ஆண்ட ஆங்கிலேயன் தன்னுடைய சொந்த நாட்டில் எதுவெல்லாம் இருந்ததோ அத்தனையையும் பார்த்து பார்த்து செதுக்கிய நகரம் தான் பர்மா. இங்கு ஆங்கிலேயருக்கோ , அவர்கள் வர்த்தகர்களாக, கூலிகளாக  கூட்டிவந்த இந்தியர்களுக்கோ எந்த குறையும் இருக்கவில்லை”

அன்றையகாலத்தில் பர்மா ஒரு  சிங்கப்பூராக இருந்தது என்றால், தென் கொரியாவாக இருந்தது வேறு யாருமல்ல, இலங்கை தான். ஆங்கிலேயரின் செல்ல பிள்ளையாக சகல வசதிகளுடன் இலங்கை இருந்தது. ஆக, பர்மா இலங்கை இரண்டுமே ஒரு காலத்தில் ஆஹா , ஓஹோ என்று நன்றாக வாழ்ந்த நாடுகள் தான்.

  1. இரண்டாவது பெரிய இன குழுமம் தான் முதலாவது டார்கெட்

படம் – pinimg.com

பிழைப்பு தேடி வந்த இந்தியர்கள் கடின உழைப்பின் மூலம் தங்கள் தேடிவந்த செல்வத்தை அடைந்து, உயர்ந்ததொரு வாழ்கையையே கட்டி எழுப்பி இருந்தார்கள். தங்கள் பிறந்த நாட்டை விட மேலானதொரு வாழ்க்கை அவர்களுக்கு கிடைத்ததால் பெரும்பாலானோர் திரும்பிச்செல்லவில்லை. பர்மாவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது, 1910 குடிசனமதிப்பீட்டிற்கு அமைவாக பிரிட்டிஷ் பர்மாவின் இரண்டாவது பெரிய குழுமமாக இந்தியர்கள் மாறி இருந்தார்கள். ரங்கூன் நகரில் மட்டும் பாதிக்கு மேலே இந்தியர்கள்தான். அவர்களுக்கு பர்மீசை விட வசதிகளும் நல்ல தொழில் வாய்ப்புக்களும் இருந்தன. செட்டியார்கழும் பர்மா மக்களுக்கு கடன்களை  கொடுத்து, பின்னர் நிலங்களை கையகப்படுத்திக்கொண்டார்கள்.  இந்தியர்கள் வளர்ச்சியும் ஆதிக்கமும் கடுப்பை கிளப்பியது பர்மா மக்களுக்கு. விளைவு கையில் 170 காசுகளை மட்டும் கொடுத்து 24 மணி நேரத்தில் அனைத்து இந்தியர்களும் கப்பல் ஏற்றி அனுப்பப்பட்டார்கள். தனுஷ் நடித்த அனேகன் படத்தில் இந்த காட்சிதான் இடம்பெற்றிருக்கும்.

  1. உங்கள் இனம் வேகமாக வளர்கிறதா – நீங்கள் தான் இரண்டாவது டார்கெட்

படம் – bbci.co.uk

இந்தியர்களை துரத்தியபின் பர்மாவில் இந்துக்கள் மிக குறைவே, வெறும் 0.5% தான் இப்போது இருக்கிறார்கள். அவர்கள்  அந்த மக்களோடு  கலந்து விட்டார்கள். மியான்மாரிஸ் மொழியையே பேசுகிறார்கள். இப்போது இருக்கும் இந்தியர்கள் பொருளாதார நிலை மிக மோசமாகவே இருக்கிறது. அதனால் இந்துக்கள் பற்றி இப்போது அவர்களுக்கு  கவலை இல்லை.

மியான்மார் இலங்கையை விட பத்து மடங்கு பெரிய நாடு, ஆனாலும் சனத்தொகை ரீதியாக பார்க்கும்போது அது இலங்கையை விட மூன்று மடங்கு அதிகமான சனத்தொகையை கொண்டிருக்கிறது.  மியன்மாரில் முக்கால் வாசிக்கு மேல் நிலம் காலியாகவே இருக்கிறது, ஆனால்  வந்தேறு குடிகள் என்று  அவர்கள் கூறும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்பெருக்கம் தான், பெரும்பான்மையினரான மியான்மாரிஸ்களை  தூக்கம் இல்லாமல் தவிக்க வைத்திருக்கிறது.

முஸ்லிம்கள்  வளர்ந்து விடுவார்கள், நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள்,  அதிகம் செல்வம் வைத்திருக்கிறார்கள்  என்ற ஆழமான பயமே வன்முறையாக வெளிவருகிறது. ஒட்டு மொத்த ரோஹிங்கியா முஸ்லிம்களையும் நாட்டை விட்டு  துரத்திட நினைக்கிறார்கள்.

இலங்கையிலும் முஸ்லீம் மீதான வன்முறை இதை தவிர்த்து புதிதான  காரணங்களுக்காக நடக்கவில்லை என்பது எனது அனுமானம். இன வன்முறைகளின் போது வர்த்தக நிலையங்கள் முதலில்  தீக்கிரையாக்கப்படுவது ஆழ்மனதில் வக்கிரங்களையே காட்டுகிறது, அது மியன்மார் என்றாலும் இலங்கை என்றாலும் ஒரே மாதிரித்தான் அவர்களின் மனங்களில் பிரதிபலிக்கிறது. மியான்மாரோ , இலங்கையோ பேரினவாதம், சிறுபான்மை இன  குழுக்களை இருக்குமிடம் தெரியாமல் இருந்துவிட்டு போவதையே எதிர்பார்க்கிறது

இரண்டு நாடுகளினதும் நிலைமையும் ஒன்றுதான்

ஐம்பது அறுபது வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் இனங்களுக்கு இடையேயான பகைமை, இரண்டு நாடுகளையுமே  நிறைய பாதித்திருக்கிறது. இனவாதம், பாரபட்ச்சம், நீண்ட போர், அரசியல் ஒற்றுமை இன்மை,  குறுகிய மனப்பான்மை இலங்கையை உலக அரங்கில் மந்தமான நாடாக ஆக்கிய வரலாற்று  அனுபவத்தில் இருந்து பாடம் கற்றிருக்கலாம். அதை விடுத்து

ஐம்பது வருடங்களுக்கு வெளி உலக தொடர்புகள்  அடைக்கப்பட்டு, இருண்ட தேசமாக இருந்த மியன்மார் மீண்டும்  உலகுக்கு அஹிம்சையை போதித்த மதத்தின் பேரால் நடாத்தும் அராஜகம்  மேலும் மோசமான  எதிர்காலத்துக்கே இட்டு செல்லும்.

Related Articles

Exit mobile version