1962 ஆட்சிக் கவிழ்ப்புச் சதியும் அதன் முறியடிப்பும்

சுதந்திரமடைந்து 15 ஆண்டுகள் கூட முடிந்திராத காலம் அது! அப்போதிருந்த ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை தம் வசப்படுத்திக் கொள்வதற்காக இராணுவத்திலிருந்த சிலரும் காவல்துறையிலிருந்த சிலரும் கூட்டாக முயன்ற அந்தச் சதி, முறியடிக்கப்பட்டது. இலங்கையின் அரசியல் வரவாற்றில், அதிர்வு மிக்க பக்கமாக இருக்கின்றது. 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற இக்கதையை நீங்கள் அறிவீர்களா?

ஆட்சிக்கவிழ்ப்புச் சதி தோல்வி அடைந்ததன் தொடக்கப் புள்ளி..

1962 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அதிகாலையில், கொழும்பு நகரின் காவல்துறை சுப்பிரெண்டண்ட் அதிகாரியான ஸ்டான்லி சேனாநாயக்க, நடைப்பயிற்சியை மேற்கொண்டு கொண்டிருந்தார். அன்று அவருடன் பிரதி காவல்மா அதிபரான சி.சி. திஸாநாயக்கவும் இணைந்து கொண்டிருந்தார். நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, திஸாநாயக்க, ஸ்டான்லியிடம் ஓர் உதவியைக் கோரினார். அன்றைய தினம் இரவில் இரகசியத் திட்டம் ஒன்று அமுற்படுத்தப்படவுள்ளதாகவும், கொழும்பு நகரத்தின் பிரதான காவல் அதிகாரி என்ற வகையில், ஸ்டான்லியின் ஒத்துழைப்பு அதற்கு அவசியம் என்றும் திஸாநாயக்க குறிப்பிட்டார். மேலும், அந்த இரகசியத் திட்டம் என்ன என்பதும் காலிமுகத்திடலில் வைத்து வெளிப்படுத்தப்பட்டது.

நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்த ஸ்டான்லி சேனாநாயக்க, பதற்றமாக காணப்பட்டார். இதனை அவதானித்து விசாரித்த அவரது மனைவி மாயாவிடம், அனைத்து உண்மைகளையும் மறைக்காமல் சொல்லிவிட்டார். இந்த மாயா யார் என்றால், அப்போதைய பிரபல அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமாயிருந்த பட்ரிக் டி சில்வா குலரத்னவின் மகள் ஆவார். இந்த சதித்திட்டத்தை தம் கணவரிடமிருந்து கேள்வியுற்ற உடனேயே, மாயா தமது தந்தை பட்ரிக் டி சில்வா குலரத்னவுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து, ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லிவிட்டார். 1962 ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்புச் சதி தோல்வி அடைந்ததன் தொடக்கப் புள்ளி இது தான்.

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பெரிதும் அதிர்ச்சி அடைந்தார் 

இதனையடுத்து, குலரத்னவால் அப்போதைய காவல்மா அதிபர் வோல்ட்டர் அபேயக்கோனுக்கு, இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து, அப்போது உள்ளகப் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனித்து வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இந்தச் சதித்திட்டம் குறித்த விபரங்கள் கொண்டு செல்லப்பட்டன. பிரச்சினையின் ஆழத்தை நன்கு புரிந்து கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி எஸ். ஏ. திசாநாயக்க, பிரதமர் சிறிமாவோவின் பிரதான ஆலோசகரும் நிதி அமைச்சருமான ஃபீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவுக்கும் (Felix Dias Bandaranaike) இது குறித்து தெரிவித்தார். இதனையடுத்து ஃபீலிக்ஸ் டயஸ் உடனடியாக அலரி மாளிகைக்குப் புறபட்டுச் சென்றார்.

தகவலைக் கேள்விப்பட்ட பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், இலங்கையில் இவ்வாறானதொரு ஆட்சிக்கவிழ்ப்புச் சதி இடம்பெறுமெனவும் பாதுகாப்புத்தரப்பினரே அதில் ஈடுபடுவார்களெனவும் எவருமே கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. தென்னாசிய நாடுகளில், பாகிஸ்தானில் மாத்திரமே அவ்வாறானதொரு நிலமை நிலவிக்கொண்டிருந்தது. சதியை முறையடிக்கும் திட்டங்கள் அலரி மாளிகையில் வைத்து தீட்டப்பட்டன. ஃபீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் நேரடி பணிப்பின் கீழ் அதிவிரைவாக காரியங்கள் நடைபெற்றன.

அன்றிரவு வெளிவந்த உண்மைகள்…

ஆட்சிக்கவிழ்ப்பில் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் கனிஷ்ட நிலையில் உள்ள இராணுவ மற்றும் காவல்துறை அலுவலர்களை அவர் உடனடியாக அலரிமாளிகைக்கு தருவித்தார். அவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் ஃபீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தினர். சதித்திட்டத்தை வகுத்த இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் உண்மையான திட்டம் என்ன என்பதுவும், என்ன நடவடிக்கைகளை அன்றிரவு முன்னெடுக்க இருந்தனர் என்பதுவும் வெளிவந்தன.

ஆட்சிக்கவிழ்ப்புச் சதியின் இராணுவப் பாகத்திற்கு Colonel Fredrick C. de Saram தலைமை தாங்கியமை தெரியவந்தது. அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், சிறிமாவோவின் கணவரும் மறைந்த பிரதமருமான S.W.R.D. பண்டாரநாயக்கவின் உறவினரே இந்த Colonel Fredrick C. de Saram. டி.சேரம் உடன் இராணுவத்துணைப்படையின் அதிகாரி Colonel Maurice De Mel ஐயும் இதில் இணைந்திருந்தார். ஆட்சிக்கவிழ்ப்புச் சதியின் காவல்துறைப் பாகத்துக்கு பிரதிக் காவல்துறை மாஅதிபர் சி.சி.திஸாநாயக்க மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை மாஅதிபரான சிட்னி டி.சொய்ஸா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.

ஆட்சிக்கவிழ்ப்பானது, இலங்கை சிவில் சேவையில் கடமையாற்றி வந்த Douglas Liyanage இனால் திட்டமிடப்பட்டதென்பது வெளிப்படுத்தப்பட்டது. சிறிது காலத்துக்கு முன்னரே கடற்படையிலிருந்து விலகியிருந்த Rear Admiral Royce de Mel இதற்கு ஆதரவளித்தாரென கூறப்பட்டது. இராணுவத்தின் 3 ஆவது ரெஜிமென்ட் மற்றும் துணைப்படையின் விமான எதிர்ப்பு ரெஜிமென்ட் உள்ளிட்ட படைப்பிரிவுகள் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையவை எனக் கூறப்பட்டன.

சதியை முறியடிப்பதன் முதலாவது நடவடிக்கை

அலரி மாளிகையிலிருந்து இந்த சதியை முறியடிப்பதன் முதலாவது நடவடிக்கையாக பெத்தேகம தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Neal de Alwis கைது செய்யப்பட்டு, காலி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். இதனையடுத்து, சதிகாரர்களில் ஒருவரான சி.சி. திஸாநாயக்கவுக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பினூடாக சதித்திட்டம் கைவிடப்பட்டதென தெரிவிக்கப்பட்டது. காவல்துறைத் தலைமையகத்தின் இரவு நேரப் பொறுப்பதிகாரியான V.T.Dickman மாற்றப்பட்டு, வேறொருவர் நியமிக்கப்பட்டார்.

அன்றைய தினம் தனது நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு 11.15 அளவில் நாட்டின் அனைத்து காவல்நிலையங்களுக்கும் இந்தச் சதித்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. குற்றப்புலனாய்வுப் பிரிவே இந்த அறிவித்தலைச் செய்தது. அலரி மாளிகையைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக, கடற்படையினரே நிறுத்தப்பட்டனர். பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நேரடி உத்தரவின்படி, திஸாநாயக்க மற்றும் போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரி பெடி ஜோன்பிள்ளை ஆகியோர் அந்த நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவை சிறைக்குள் தள்ள….

28 ஆம் திகதி புதிய நாள் ஒன்று விடிந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கவை அலரிமாளிகைக்குள்ளேயே வீட்டுச்சிறைக்குள் தள்ளி, இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றும் சதி திட்டம் முற்றாக முறியடிக்கப்பட்டது. சதித்திட்டத்தின் சூத்திரதாரிகளான Colonel F. C. de Saram , Colonel Maurice de Mel மற்றும் Rear Admiral Royce de Mel ஆகியோருக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட Colonel F. C. de Saram நேராக அலரி மாளிகைக்கே கொண்டுவரப்பட்டார். Colonel de Melம் கைது செய்யப்பட்டார். ஆனால் Rear Admiral Royce de Mel தலைமறைவானார். அன்றைய நாள் ஞாயிறு மதியம் ரேடியோ சிலோன் வானொலி ஊடாக விசேட செய்தியறிக்கை ஒன்றின் மூலம், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி குறித்தும் அதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்தும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. 

Related Articles

Exit mobile version